Wednesday 30 April 2014

மே தின.... வாழ்த்துக்கள்....
வளைந்த முதுகு நிமிர்ந்திடு..  இணைந்த கரங்கள் உயர்த்திடு..

இயற்கை தந்தது இருபத்து நாலு  மணி நேரம் ..
இன்னுயிர் நீத்த தியாகிகள் தந்தது எட்டு  மணி நேரம்..
இன்றோ..
எட்டுமணி.. எத்தனையோ இடங்களில் எட்டாக்கனி..
இங்கு..
சமவேலை என்பார்.. சம ஊதியம் என்பார்..
ஆனால்..
சுமை வேலை சொல்வார் .. சுகமற்ற ஊதியம்  தருவார்..
இப்படி...
கிட்டிய உரிமைகள் எட்டிப்போகும் இழிநிலை பாரீர்..
இனி...
மோடிகள் ஆண்டாலும்.. லேடிகள்.. ஆண்டாலும் 
வாடி நிற்பது என்னவோ உழைப்பவனின் வயிறுதான்..
நமக்கும் கீழே வாடுபவர் கோடி...
அவர் வாட்டம் போக்கிட உயர்த்திடு  செங்கொடி...
குடந்தை முன்னாள் மாவட்டச்செயலர் 
தோழர் S.பாஸ்கரன் 
பணிநிறைவு பாராட்டுவிழா 
பாசமிக்க பாஸ்கரன் வாழ்க..
பாரினில் பல்லாண்டு வாழ்க..
அன்புடன் வாழ்த்தும்
காரைக்குடி மாவட்டச்சங்கம் 

Tuesday 29 April 2014

வாழ்க.. வளம்.. பெற்று..
பணிநிறைவு  வாழ்த்துக்கள் 
இன்று 30/04/2014  
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 
அருமைத்தோழர்கள்..

தொப்பை இல்லா தொழிலாளி 
அறுபதிலும் அயராமல்... 
கம்பம் ஏறும் களப்பணியாளி...
ஒரு கொடி.. ஒரு சங்கம் 
என உணர்வோடு பணியாற்றிய 

S.நடராஜன் 
TM/சிவகங்கை 

பணிவான குணம்... 
கனிவான மனம்..
தெளிவான கொள்கை... 
எனப் பணிபுரிந்த 

M.குணசேகரன் 
TM/சிங்கம்புணரி 

கள்ளமில்லா தொழிலாளி..
களைப்பறியா உழைப்பாளி 
கரை மாறாத விசுவாசி 

S.முனியராஜ் 
TM/இராஜசிங்கமங்கலம் 

ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சீராக.. சிறப்பாக.. செழிப்பாக..
மங்காத செங்கொடி போல்..
பட்டொளி வீசி வாழ்ந்திட..
வாழ்த்துகின்றோம்.....
வாழ்க.. வளமுடன்..
NFTE இயக்கத்தின் சொத்து 
தஞ்சைத்தோழர் 

இல.சந்திரபிரகாஷ் 

அவர்கள் 30/04/2014 அன்று 
இலாக்காவில் இருந்து
 பணி நிறைவு பெறுகின்றார்.

இன்று 29/04/2014 தஞ்சையில் 
மாஸ் திருமண மண்டபத்தில் 
பணிநிறைவு விழா நடைபெறுகின்றது.

பல்லாண்டு வாழ்ந்திட..
வையகம் பயனுற வாழ்ந்திட.. 
நமது வாழ்த்துக்கள்..

Sunday 27 April 2014

JAC கோரிக்கைகளும் 
DOT  தலையீடும்..

09/04/2014 அன்று JAC - அனைத்து அதிகாரிகள் ஊழியர்கள் 
சங்க கூட்டமைப்பு மிக நீண்ட நாட்களாக BSNLலில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் மீது விரைந்து முடிவெடுக்கக்கோரி 
DOTயிடம் கோரிக்கை மனு அளித்திருந்தது.  

அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை 
உடனடியாகத் தீர்க்கக்கோரியும் JAC அமைப்பிற்கு 
உரிய பதில் அளிக்கவும் BSNL நிர்வாகத்தை DOT தனது 
21/04/2014ம் தேதியிட்ட கடிதத்தில் பணித்துள்ளது.

Friday 25 April 2014

ஆகப்பெரும் அதிகாரிகளுக்கான 
முழு உடல் பரிசோதனை திட்டம் 
EXECUTIVE HEALTH CHECK UP SCHEME 

BSNLலில் பணி புரியும் பெரிய அதிகாரிகளுக்கான
 முழு உடல் பரிசோதனைத்திட்டம் மேலும் ஓராண்டிற்கு 
01/04/2014 முதல் 31/03/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின்படி..

50 முதல் 55 வயது வரையிலான பெரிய அதிகாரிகள்
(SAG LEVEL AND ABOVE) ஆண்டுதோறும் தனது மனைவியுடன் 
முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

55 வயதை தாண்டியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பரிசோதனை செலவு ரூ.3500/= வரை அனுமதிக்கப்படும்.

55 வயதான PGM/CGM மற்றும்  அதற்கு மேல் பதவியில்  உள்ளவர்கள்  இருதய ஆய்வு மற்றும் உடல் நல  ஆய்வு தனது மனைவியுடன்  ஆண்டுதோறும் மேற்கொள்ளலாம். 
இதற்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 10000/= வரை அனுமதிக்கப்படும்.

அதெல்லாம் சரி..
அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இந்த சலுகைகள் 
மாடாய் உழைத்து மாதந்தோறும் மரிக்கும் ஊழியருக்கு உண்டா? எனில்..
இல்லை என்பதே.. பதிலாகின்றது...

45 வயதைக்கடந்தால் ஆயுளில் ஒரே ஒரு முறை 
அதுவும் நலத்திட்ட அடிப்படையில் ரூ.1500 வரை/= 
முழு உடல் பரிசோதனை அனுமதிக்கப்படுகின்றது. 
ஊருக்கு ஊர் இந்த தொகை மாறுபடும். மனைவிக்கு கிடையாது. 

உடல் நோகாமல் உழைக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இத்திட்டம்..
உடல் நோக உழைக்கும் தொழிலாளிக்கு வழங்கப்படாதது..ஏன்..?
உயிரும் உடலும் அதிகாரிகளுக்கு மட்டும் வெல்லமா..?
இந்த தேசம் வலுத்தவர்கள் மட்டுமே வாழப்பிறந்த தேசமா?..
கேள்விக்குறி போல் முதுகு வளைத்து உழைப்பவனின் கேள்வி இதுவே...

Thursday 24 April 2014

NATIONAL JCM 
தேசியக்குழு கூட்ட  முடிவுகள் 

23/04/2014ல் டெல்லியில்  நடந்த NJCM தேசியக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு 
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர். 
  • JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
  • பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
  • புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
  • 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
  • அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
  • ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
  • TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.

Monday 21 April 2014

மாடாய் உழைத்தாலும்..
மேடாய்.. ஆனதில்லை.. வாழ்க்கை..
மனிதன் மாடாய் உழைப்பதுண்டு..
இங்கோ.. மனிதனே.. 
மாடாகிய..கொடுமை காணீர்..

இது..மகாத்மா பிறந்த மண்..
இங்கே பிறந்த பாவாத்மாக்களின் நிலை பாரீர்..
=============================================

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 
ஒல்லாது வானம் பெயல்.
                                                        -குறள்-

பொய்யை அவிழ்த்து விடும் அரசிலே.. 
வானமும் பொய்த்து விடும்..
என்பது வள்ளுவர் வாக்கு...
சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்..
வெறும் சோற்றுக்கு வந்ததிங்கே பஞ்சம்..


அரசியல்வாதிகள் தெருவையெல்லாம் 
ஆக்கிரமித்து விட்டதாலே..
கழைக்கூத்தாடிகளுக்கு.. இப்போது கஷ்டகாலம்..
குரங்காட்டிகளுக்கு கூடுதல் சிரமம்..

குஜராத்தில் ஓடுது.. குடம் குடமாக..
தேனும் பாலும்.. என்று படித்த சில  பாவிகள்..
உச்சி வெயிலில் உரக்கப்பேசியபோது 
வெயிலை விட மனசு தகித்தது..

குஜராத்தில் என்ன நடக்கின்றது..
சென்று வந்தோருக்குத்தெரியும்..

அன்றொரு நாள்.. குஜராத்தில்...
குரங்காட்டி ஒருவன் வித்தை காட்டிக்கொண்டிருந்தான்..
ஆனால் குரங்கில்லை.. 
அவனது குழந்தையைக் குரங்காக்கி வித்தைகளைச்செய்தான்..
நெருங்கிக்கேட்ட போது நொறுங்கி அவன் சொன்னான்..
குரங்கு வளர்க்கும் செலவில் 
என் குழந்தையை வளர்த்து விடுவேன்"  என்று..
இதுதான் அன்றும் .. இன்றும் ..குஜராத்

மோடிக்களின் காலத்திலே..
முஸ்லிம்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டியது.. 

மோடிக்களின் காலத்திலே
இரயில் எரிந்தது..
வயிறு எரிந்தது..
அடுப்பு மட்டும் எரியவே இல்லை...

அதன் சாட்சிதான் நீங்கள் மேலே காணும் படம்..
எத்தனையோ சின்னங்கள் இந்த தேசத்தில் உண்டு..
இது நம் தேசத்தின் அவமானச்சின்னம்..

சிந்திப்போம்...
அவமானச்சின்னங்களை ஒழிப்போம்...
தன்மானச்சின்னங்களை வளர்ப்போம்...

Sunday 20 April 2014

ஏப்ரல் 21
பாவேந்தர்
பாரதிதாசன் 

நினைவு நாள் 


காலைமுதல் மாலைவரை ஏருழுவர்
              பசியால் மெலிந்து நோயினில் வாடி                 

தோலைமூட ஆடைஏதும் இலையே- உடல்
தூய்மைக்கும் யாதொருவழியுமே இலையே..          

அண்டி வாழ ஒருவீடில்லை. 
பிள்ளைகள் கல்வி அடையவோ வழியில்லை...
மீட்சியும் கண்டதில்லை..
நாளுமே வீழ்ச்சி எனில்..
கோரும் பொதுவாழ்வு தூய்மை பெறுமா? ..
========================================   

பாரதிதாசனின் கவலை தீருமா?..
பாட்டாளிகள் வாழ்வு தேறுமா?..
மாற்றம் என்பதே மனித தத்துவம்..
மாற்று தோழனே..
விரல் மையால்.. உன் 
நிலைமை மாற்று.. தோழனே..

Thursday 17 April 2014

 தேர்தல் களப்பணி

தேர்தல் களம் வெப்பமடைந்துள்ளது. 
நல்லோர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்..
நாடழிக்கும் நயவஞ்சகம் அழிக்கப்பட வேண்டும்..
எனவே.. நமது மூத்த தலைவர்கள் 
பொதுவுடைமைப்பூங்காவில் பூத்த தலைவர்கள் 
ஒப்பற்ற தலைவரும்.. ஒப்பந்த ஊழியர்களின் தலைவருமான  அருமைத்தோழர். ஆர்.கே.,
பம்பரமாய் பணியாற்றுபவரும் பண்பு மிக்கவருமான 
நமது வழிகாட்டி தோழர்.சேது 
ஆகியோர் நாகை,திருப்பூர் பகுதிகளில் 
களப்பணி ஆற்றுகின்றனர்..

நல்லவர்கள் வெல்ல எப்போதும் உறுதுணை செய்யும் 
நமது தலைவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

Wednesday 16 April 2014

TTA பயிற்சிக்கால உதவித்தொகை 

TTA பயிற்சி செல்லும் தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை எழுப்பி வந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கேற்ப STIPEND தொகை வழங்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதன்படி புதிய சம்பள விகிதத்தில் 70 சதமும் அதற்கான IDA வும் பயிற்சிக்கால உதவித்தொகையாக  வழங்கப்படும். 
===============================================================

குழந்தை பராமரிப்பு விடுப்பு 

CHILD CARE LEAVE - மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி 
2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்க இயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
===============================================================
அனைவருக்கும் இலவச SIM 

அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும் என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கை. இதனை அமுல்படுத்தும் முகத்தான் தற்போது வழங்கப்பட்டுள்ள இலவச SIM விவரங்களை மாநில நிர்வாகங்களிடம்  BSNL நிர்வாகம் கேட்டுள்ளது.    
இலவச SIMல்  மாதந்தோறும் ரூ.200/=க்குப்பேசலாம். 

Tuesday 15 April 2014

இரங்கல் 

தேவகோட்டை துணைக்கோட்டத்தில் 
சண்முகநாதபுரம் தொலைபேசி நிலையத்தில் 
 பணிபுரிந்த அருமைத்தோழர். 

L. பிரான்சிஸ், TM 

அவர்கள் நேற்று 15/04/2014 
உடல் நலக்குறைவால் இன்னுயிர் நீத்தார்.

பழுதில்லாமல் தொலைபேசி நிலையங்களைப் பராமரித்தார்..
தனது சரீரத்தைப் பழுதில்லாமல் பராமரிக்க மறந்து மரித்தார்...

நம்பிக்கையோடும், முனைப்போடும் சங்கப்பணியாற்றினார்...
மிகுந்த அன்போடும் உரிமையோடும் தோழர்களிடம் உறவாடினார்..

அவரது இழப்பு இலாக்காவிற்கு,சங்கத்திற்கு,குடும்பத்தாருக்குப் பேரிழப்பு...

நமது மனங்கசிந்த துயரத்தை வெளிப்படுத்துகின்றோம்...

இடைவெளியற்ற இழப்புக்கள்..
இனியேனும்  முற்றுப்பெறட்டும்..

Monday 14 April 2014

செய்திள் 

நமது NFTE  சங்கத்தின் தேசிய செயலக கூட்டம் 22/04/2014 அன்று டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓராண்டு ஆகியும் இன்னும் பல இடங்களில் JCM தலமட்டக்குழு அமைப்பதிலும் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துவதிலும் சிக்கல் தொடர்கின்றது. எனவே BSNLEU  சங்கத்துடன் இணைந்து 
JCM கூட்டங்களை நடத்துவதற்கு NFTE மத்திய சங்கம் மாவட்டசங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது. 
இது போலவே BSNLEU சங்கமும் 
தனது மாவட்ட சங்கங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி கருணை அடிப்படை வேலைக்கான பதவி உருவாக்கம் பின் பற்றப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.  2002 உத்திரவுப்படி நேரடி நியமன பதவிகளில் 5 சதம் கருணை அடிப்படை பணி பதவி உருவாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பதவியை விட விண்ணப்பதாரர்கள் அதிகள் இருந்தால் காத்திருப்போர் பட்டியல் பின் பற்றப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவோரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது எந்த நடைமுறையும் பின் பற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது.

10/06/2013க்கு முன் பணி ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்குமாறு DOT செயலருக்கு அனைத்து சங்கங்களின் அமைப்பு சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது செலவின இலாக்காவில்  
DEPT. OF EXPENDITUREல்  ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பிற்கான கோப்பு ஓய்வெடுத்துக்கொண்டுள்ளது.  

Sunday 13 April 2014

  ஏப்ரல் 14
அண்ணல் அம்பேத்கார் 
பிறந்த தினம் 
மந்தைகள் வாழ்வில்
விந்தைகள் புரிந்த 

அண்ணல் அம்பேத்கார் 
நினைவு போற்றுவோம்..
----------------------------------------------------
சாதிய உணர்வு கொண்டவன்
சாவை நோக்கும் மனநோயாளி..

"தக்கது வாழும்"
தகை சான்றோரின் வாக்கு வழி ..
தமிழ் வாழ..
தமிழ்க்குலம் வாழ..
அனைவருக்கும் 

தமிழ்ப்புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்..

ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை பிறந்த நாள் 

காடு வெளைஞ்சென்ன.. மச்சான்
கையும் காலும்தானே மிச்சம்..

 பாட்டெழுதினான்..
மக்கள் படும் பாட்டை எழுதினான்...

பாட்டளிகளின் கவிஞன்
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளை
நாள்தோறும்.. முணுமுணுப்போம்..

Friday 11 April 2014

நாட்டுக்கு உழைக்கும் நல்லோரை 
நாடாளுமன்றம் அனுப்புவோம்..

காரைக்குடி தொலைத்தொடர்பு  மாவட்டத்தில் இராமநாதபுரம்,சிவகங்கை என இரண்டு நாடளுமன்றத்தொகுதிகள். தற்போது இரண்டிலும் இந்தியப்பொதுவுடைமைக்கட்சி CPI  போட்டியிடுவது மகிழ்வான செய்தி. 
அதனினும் மகிழ்வு இராமநாதபுரத்தில் போட்டியிடும்

தோழியர். உமாமகேஸ்வரி, 

காரைக்குடி இளைஞர் மாநாட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த 
தோழியர்.ரம்யாதேவி, TTA 
அவர்களின் தாயார் என்பதும், 
இராமநாதபுரம்  NFTE முன்னாள் கிளைச்செயலர்
 அருமைத்தோழர். இராமமூர்த்தி JTO அவர்களின் 
அண்ணன் மனைவி என்பதும்  கூடுதல் மகிழ்ச்சி தந்த செய்தியாகும்.

தோழியர். உமா மகேஸ்வரி அவர்களின் ஒட்டு மொத்தக்குடும்பமும்  பொதுவுடைமை இயக்கத்தின் வம்சம் என்பது 
குறிப்பிடத்தக்க  அம்சம் ஆகும்.

மக்களிடம் சென்றபோது..

பாமரர்கள் சொன்னார்கள் 
எங்கள் வாழ்நாள் வறுமை விலகவில்லை..
ஒரு நாள் வறுமை விலக 
நாங்கள் நோட்டுக்கு வாக்களிப்போம்" என்று 

படித்தவர்கள் சொன்னார்கள்..
எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள்..
தேசத்தை விலை பேசியவர்கள்.. எனவே 
நாங்கள் நோட்டாவுக்கு வாக்களிப்போம்" என்று..

ஆனால் பாட்டாளிகள் சொன்னார்கள்...
"நாங்கள் நோட்டுக்கும்  விலை போக மாட்டோம்..
நோட்டாவுக்கும் இரையாக மாட்டோம்:"
நாட்டுக்கு உழைக்கும் நல்லோரை 
நடுத்தெரு மக்களுக்காக
நாள்தோறும் குரல் எழுப்பும் தோழர்களை 
நாடாளுமன்றம் அனுப்புவோம்" என்று 
நம்பிக்கையுடன் உறுதி சொன்னார்கள்..

நாடு நலம் பெற வேண்டும்..
வறியோர் வளம் பெற வேண்டும்..
பாட்டாளிகள் பலன் பெற வேண்டும்..
பொதுத்துறைகள் பெருகிட வேண்டும்..
ஊழல் ஒழிந்திட வேண்டும்..
உண்மை ஒளிர்ந்திட வேண்டும்..

தோழர்களே.. சிந்திப்போம்..
நல்லதோர் சின்னத்திற்கு.. வாக்களிப்போம்..
நாட்டைக்காப்போம்..

Thursday 10 April 2014

இலவச SIM 

அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  
வழங்க வேண்டும் என்பது RJCM மாநிலக்குழு கோரிக்கை. 

தற்போது INDOOR/OUTDOOR உட்பட அனைத்து TM தோழர்களுக்கும் இலவச SIM வழங்கப்படும் என 09/04/2014 அன்று வெளியாகியுள்ள 
RJCM கூட்ட முடிவு அறிவிப்புக்கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற பதவிகளில் உள்ள தோழர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் இலவச SIM வழங்கப்படும். 
இலவச SIM  பெறாத TM தோழர்கள் அதற்கான படிவங்களை நிரப்பி பொதுமேலாளர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

இது போலவே அனைத்து JCM உறுப்பினர்களுக்கும் இலவச SIM  வழங்கிட வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களே நிறைவேற்றலாம் எனவும் 
RJCM கூட்டக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இரங்கல் 

காரைக்குடி RSU  தொலைபேசி நிலையத்தில்
 காவலராகப் பணிபுரிந்த 
தோழர்.ஆரோக்கியசாமி 
10/04/2014 அன்று உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். 

காலையில் பணி முடித்தார்.. 
மாலையில் காலன் அவர்தம் உயிர் முடித்தான். 
ஏறத்தாழ 15 ஆண்டுகள் காவலராக ஒப்பந்த முறையில் பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணி புரிந்தார். ஒப்பந்த ஊழியராக வாழ்ந்து உயிர் நீத்ததனால் ஒரு பலனும் அவரது  குடும்பத்தாருக்கு கிட்டாது. 

அவரது இறப்பை விட இதுவே பெருங்கொடுமை

"ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 
அமுல்படுத்தப்பட வேண்டும்" 
என்பது காரைக்குடி சிறப்பு மாநாட்டுத்தீர்மானம். 

அது நிறைவேற்றப்படும் அன்றுதான் 
தோழர்.ஆரோக்கியசாமியின் 
ஆன்மா அமைதியடையும் . 

Tuesday 8 April 2014

TMTCLU 
தமிழகத் தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி கிளை 

கிளைக்கூட்டம் 

09/04/2014 - புதன்கிழமை - மாலை 05.30 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி 

தமிழ் மாநில சிறப்பு மாநாட்டுத்தீர்மானங்கள் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
தலமட்டப்பிரச்சினைகள்..
மற்றும் இன்ன பிற..

தோழர்களே.. வாரீர்..


தேறுதல் இல்லாத 
BSNLன் தேர்தல்  சேவை 

அஸ்ஸாம்  மற்றும் திரிபுரா மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் நமது BSNL சேவை மிக மோசமாக இருந்ததாக DOT செயலரிடம் தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. 
இன்று 09/04/2014 தேர்தல் நடைபெறவுள்ள மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நமது சேவை மோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய நிலை
 உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்

நாட்டில் உள்ள கட்சிகளை விட 
அவர்களது வேட்பாளர்களை விட 
நமது சேவை மோசமாக போய்விட்டதாக
 கருதப்படுவது  நமது நிறுவன வளர்ச்சிக்கு உகந்ததல்ல. 
நிர்வாகம்,அதிகாரிகள்,ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 
உடனடியாக இணைந்து செயல்பட வேண்டிய தருணமிது. 
அவரவர் பகுதிகளில் தேர்தல் நடைபெறும் இடங்களில் 
நமது சேவை பற்றி கவனம் செலுத்துவோம்.
ஏப்ரல் 8
பிறர் வாழ்ந்திட.. 
பிறப்பெடுத்தவன் .. பிறந்த நாள்..
அன்பெனும் தேன் ஊறித்ததும்பும்
புதுமலர் அவன் பெயர்..
துன்பமென்னும் கடலைக்கடக்கும்
தோணியவன்.. பெயர்..
அவன் பெயரால் வாழ்கின்றோம்..
அவன் பெயர் துதிக்கின்றோம்..




Monday 7 April 2014

TTA பயிற்சிக்கால உதவித்தொகை

BSNLலில் TTAவாக நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை TRAINING PERIOD STIPEND 
பழைய சம்பள விகிதத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றது. 
2007ல் இரண்டாவது ஊதிய மாற்றம் வந்தபின்னும் பயிற்சிக்கால உதவித்தொகை உயர்த்தப்படவில்லை. 

எனவே உடனடியாக 2007 ஊதிய திருத்தத்திற்கு ஏற்றவாறு உதவித்தொகையை உயர்த்தக்கோரி மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

Sunday 6 April 2014

செய்திகள் 

01/04/2014 முதல் 2.1 சத  IDA குறைப்பிற்கான DPE  உத்திரவு 
03/04/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. 
IDA 90.5 சதத்திலிருந்து 88.4 ஆக குறைந்துள்ளது.

BSNLன்  செல் கோபுரங்களைப் பராமரிக்க புதிய நிறுவனம் துவங்குவது தொடர்பாக 21/04/2014 அன்று அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறும். 
இதில் நிர்வாகத்தின் கருத்துக்கள் முன்வைக்கப்படும்.

BSNL - MTNL இணைப்பு சம்பந்தமாக சங்கங்களுடன் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கப்படும் என்று BSNL  நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரயில்வே துறையில் புதிய போனஸ் வரையறையை உருவாக்க அதிகாரிகள் குழுவை இரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது. 
இதற்கு இரயில்வே சங்கங்கள் உடன்படவில்லை.

ONGC நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான சீருடை,சலவைப்படி,தையற்கூலி மற்றும் சிற்றுண்டிப்படி ஆகியவற்றிற்காக ஆண்டிற்கு மொத்தமாக பணப்பட்டுவாடா செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்கான தொகை ரூ.84,332/- ஆகும். 
இது 4 தவணைகளாக பட்டுவாடா செய்யப்படும்.

Thursday 3 April 2014

TMTCLU
உரிமைக்குரல் எழுப்பிய
ஒப்பந்த ஊழியர் மாநாடு..

"வல்லான் வகுத்த தனியுடமை
நீங்கி.. வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"
என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்திலே..
இந்த தேசத்தின் நாசகாரக்கொள்கையால்..
கூலியாய் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரின்
உணர்வு மிக்க மாநாடு காரைக்குடியில் துடிப்புடன் நடந்தேறியது.

தோழர். ஆர்.கே.. தலைமையேற்க
பொதுச்செயலர் தமிழ்மணி அறிக்கை அளிக்க
தோழர். பட்டாபி ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை பட்டியலிட.
தோழர்.மூர்த்தி இன்றைய இழிநிலை அகற்ற ஊழியர்களை திரட்ட..
பொருளர். தோழர்.முரளி பொருள் பொதிந்த உரை நிகழ்த்த..
தோழியர்.மீனாள் சேதுராமன் தலமட்டப்போராட்டங்களை விளக்கிட..
தோழர்.இரத்தினம் இரத்தினச்சுருக்கமாய் ஊழியரது பாடுகளை கூறிட
தோழர்.மணவழகன் மனம் குமுறும் ஊழியர் துன்பங்களை பேசிட....
நமது வழிகாட்டி தோழர்.சேது
மாநில உதவித்தலைவர் தோழர்.லட்சம்
மாநிலச்சங்க நிர்வாகிகள் , மாவட்டச்செயலர்கள் வாழ்த்துரை வழங்க 
தீர்மானங்களை தீர்மானத்துடன் இயற்றிட 
வழி தெரியா ஊழியருக்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த 
தோழர்.ஜெகன் பிறந்த நாளன்று 
"இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து"
என கண்ணதாசன் பாடிய வழியில் 
மாநிலம் தழுவிய போராட்டம் என மாநாடு முடிவெடுக்க 
உரிமைக்குரல் எழுப்பி உணர்வுடன் 
நிறைவுற்றது.. ஒப்பந்த ஊழியர்களின் 
தமிழ் மாநில சிறப்பு மாநாடு..



TMTCLU 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி  தமிழ் மாநில சிறப்பு 
மாநாட்டுத்தீர்மானங்கள் 

  • குறைந்த பட்ச ஊதியம் 10000 வழங்கு..
  • குறைந்த பட்ச ஓய்வூதியம் 3000 வழங்கு 
  • சம்பளத்துடன் வாரவிடுமுறை வழங்கு..
  • விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் வழங்கு..
  • மாதச்சம்பளம் 5ம்தேதிக்குள் வழங்கு 
  • செய்யும் வேலைக்கேற்ற சம்பளம் வழங்கு 
  • மாதந்தோறும் PAY SLIP சம்பள விவரம் வழங்கு 
  • பணிச்சான்று SERVICE CERTIFICATE வழங்கு
  • EPF/ ESI விவரங்களை மாதந்தோறும் வழங்கு..
  • ஆண்டு தோறும் போனஸ் வழங்கு...
  • அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு..
  • அனைவருக்கும் முழுநேரப்பணி வழங்கு..
  • குழுக்காப்பீட்டு முறை GROUP INSURANCE அமுல்படுத்து..
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு நலவாரியம் அமைத்திடு..
  • இறந்தவர்களின் வாரிசுகளுக்கு  பணி கிடைக்கும் வரை ஒப்பந்த ஊழியர் பணி வழங்கு..

Tuesday 1 April 2014


சென்னைக்கூட்டுறவு சங்கத்தேர்தல் 
காரைக்குடியில் 
NFTE வெற்றி 

 01/04/2014 அன்று காரைக்குடியில் நடந்த 
சென்னைக்கூட்டுறவு சங்க RGB தேர்தலில் 
 NFTE வேட்பாளர்களாகப் போட்டியிட்ட 

தோழர். கரு.சேதுபதி, TM,  காரைக்குடி
தோழர். வே . சுப்பிரமணியன், TM, இராமநாதபுரம்

ஆகியோர் வெற்றி பெற்றனர்.

உணர்வோடு வாக்களித்த உள்ளங்களுக்கு நன்றி..

வாக்கு விவரம் 


மொத்தம் பதிவான வாக்குகள் = 211
செல்லாதவை =1
நிகர வாக்குகள் =210


1. KR.சேதுபதி - NFTE - 133

2. V. சுப்பிரமணியன் - NFTE - 130

3. R. செழியன் - BSNLEU - 58

4. R . கண்ணன் - FNTO - 41

5. A . இராஜேந்திரன் - BSNLEU  - 37

6. S. முனியாண்டி  - FNTO - 19