Wednesday 31 December 2014

நல் ஒளி பரவட்டும்...நானிலம்  சிறக்கட்டும்...
இனிதாகட்டும்... 2015
கடந்தவையில்.. நடந்தவையில்..
கற்போம்... பாடம்...
கலங்காமல்.. மயங்காமல்..
கடப்போம் இன்னும்  தூரம்...

வருவதை எதிர்கொள்வோம்..
வருங்காலம் வெல்வோம்...

அனைவருக்கும் 
இனிய  2015
ஆங்கிலப்புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள்..
செய்திகள் 

01/01/2015 முதல் IDA  2.2 சதம் உயர்ந்துள்ளது. 
இத்துடன் மொத்த IDA 100.3 சதம் ஆகும். 
IDA இணைப்பிற்கான குரல் 
ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.
============================================================
NFTE உறுப்பினர் சந்தா 
மாதம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
ஜனவரி 2015ல் இருந்து அமுலுக்கு வரும். 
மத்திய சங்கம் ரூ.6/=
மாநில சங்கம்   ரூ.9/=
மாவட்ட சங்கம் ரூ.10/=
============================================================
ஜனவரி மாத GPF மற்றும் விழாக்கால முன்பணம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03/01/2015க்குள் அந்தந்த மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும். 

மாநில நிர்வாகம் 05/01/2015க்குள் விண்ணப்ப விவரங்களை அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அது.. சரி.. போன மாதம் போட்ட GPF என்னாச்சு? என்ற உங்கள் கேள்வி புரிகிறது. இரண்டு  மாத GPFம் சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என்பது கணக்கதிகாரிகளின் பதிலாகின்றது.
============================================================
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு 
10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
 மாநிலச்சங்கம் அறிவித்துள்ளது.
============================================================

Tuesday 30 December 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே...
காந்தியைக் கொன்றதன் மூலம்
இந்து மதத்தை அழிக்க முயலும்
சக்தியை ஒழித்து விட்டேன்.
எனது இந்தச்செயல்
 இந்து தர்மத்தையும்
கீதையின் போதனையையும்
அடிப்படையாகக் கொண்டது
.

-கொடியவன் கோட்சே-

கொடியவன் கோட்சேக்கு
கோவில் எழுகிறதாம்...

கோட்சேக்கு கோவில்..
காந்திக்கு கல்லறை...

இதுதான் காவி இந்தியா..
இன்றைய காலிகளின் இந்தியா...

காவிகளின் கூட்டங்களை சற்று
காது கொடுத்து கேட்டுப்பாருங்கள்...

தேசத்தை நாசமாக்கியவன்  இந்த காந்தி..
தேசத்தை நேசித்தவன் எங்கள் கோட்சே..

இப்படித்தான் காவிகளின் கூட்டங்களில் 
புரட்டர்கள் வரலாற்றை  புரட்டுவார்கள்....

காந்தியின் மீது கல்லடிகள் பல உண்டு..
இந்து தர்மத்தில் ஈடுபாடு  கொண்டவர்..
வருணாச்சிரமத்தை வரித்துக்கொண்டவர்..
தனக்கு மிஞ்சிய தலைவர்களை விரும்பாதவர்..
புரட்சிக்காரர்களை வாழவோ வளரவோ விடாதவர்..
அரிசன முத்திரையிட்டு இந்து மதத்திற்குள் அடைத்தவர்..
இப்படியாக...
காந்தியின் மீது கல்லடிகள் பல உண்டு....

எந்த மகாத்மாவிலும் சில குறை இருக்கும்..
எந்தக் கொடியவனிடமும் ஏதேனும் நிறை இருக்கும்..

குறையொன்றை  சுட்டுவதால் மகாத்மாக்கள்  குன்றுவதில்லை...
நிறையொன்றை இனங்காட்டினாலும் நீசர்கள்  உயருவதில்லை...

அன்று...
பொதுவுடைமைவாதிகள் கோவிலுக்கு எதிரியல்ல....
கோவிலில் நிகழும் கொடுமைக்கு எதிரி என்றார் ஜீவா..
கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என..
பின்னாளில் கலைஞரும் அதனை கதை வசனமாக்கினார்..

இன்று..
ஜனநாயகக்கோவிலிலே கொடியவர்களின் கொடி பறப்பதாலே...
கொடியவர்கள் கோவில்களில் மூலவராகின்றனர்..
இந்த தேசத்தின் மூலவர்கள்  தெருக்களிலே வீசப்படுகிறார்கள்..

மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது 
பண்டித நேரு இவ்வாறு  சொன்னார்..
"இந்து மத வெறியன் ஒருவனால் 
நமது தேசப்பிதா சுட்டுக்கொல்லப்பட்டார்..
இது வரலாறு..

இனி வரலாறு திருத்தி எழுதப்படும்..
"இந்துதர்ம தியாகி கோட்சே..
இந்திய  தேச விரோதி காந்தியின் கதை முடித்தார்...
என்று.. வரலாறு திருத்தி எழுதப்படும்..

அன்றைய தேச நிலை நினைத்து..
கண்ணீர் விட்டு வளர்த்தோம்.. 
கருகத் திருவுளமோ? என்று 
கலங்கினான் பாரதி.. 

இன்றைய 
நாட்டு நடப்பை நினைக்கையிலே....
நாம் கலங்கவில்லை.. மயங்கவில்லை..
நெஞ்சம் கொதிக்கின்றோம்..
கொடியவனுக்கு கோவில் எழுப்பும் 
கொடுமை எதிர்க்கிறோம்..
பாவிகளின் காவிகளின் கொடுஞ்செயல் கண்டிக்கிறோம்..

தேசம் நேசிப்போரே..மனித நேயம் சுவாசிப்போரே..
ஓன்றுபடுங்கள்.. ஓரணியில் திரளுங்கள்..
என அபாயம் எதிர்க்க அழைக்கின்றோம்...

நம் அன்னையை தந்தையை 
அழித்திட ஒருவன் துணியும் போது 
பிள்ளைகள் நாம் உறங்கிடலாமா?...
பிணக்குகள் நமக்குள் கொண்டு வாழ்ந்திடலாமா?...

வீழ்ந்தது போதும்...
வீறு கொண்டு எழுவோம்..
வீணர்களின் இழிசெயல் தடுப்போம்...
வீரமுடன் தேசம் காப்போம்...

Monday 29 December 2014

அப்பாடா...
தோழர்களே...
ஒரு வழியாக ERP மூலம் நிரந்தர ஊழியர்களின் 
டிசம்பர் மாத சம்பளம் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. 
ஊழியர்களுடைய   டிசம்பர் மாத மொத்த சம்பளம், 
பிடித்தம் மற்றும் கையிருப்பு பணம் ஆகிய தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களுடைய அலைபேசிக்கு
குறுந்தகவலாக அனுப்பப்படும்.
இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் 
தோழர்கள் தகவல் தெரிவிக்கலாம். 
சம்பள பட்டுவாடா இன்றைக்கோ நாளைக்கோ நடந்தேறும்.
ஆனால்  இம்மாத GPF பட்டுவாடா..
சென்ற மாத ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடா
ஆகியவை இன்னும் தீர்க்கப்படவில்லை.
ஒரு சில மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு 
நவம்பர் மாதச்சம்பளம்  வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் 
வங்கி அடையாள எண் ஆகியவற்றில் நிகழும் குளறுபடிகளால் 
பில் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படுகின்றது. 
ஆரம்பக்கட்டம் என்பதால் 
இத்தகைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் 
வரும் புத்தாண்டில் இவையெல்லாம் சரிசெய்யப்படும் என்றும்..
நம்பிக்கையுடன் நடக்கும் நாளைக் கழிப்போம்....
செய்திகள்

தேனியில் டிசம்பர் 27,28 தேதிகளில் 
AITUC  மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது. 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி வாழ்த்துரை வழங்கினார். 
தோழர்கள்.குருதாஸ் தாஸ்குப்தா, தா.பாண்டியன், 
இரா.நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

AITUC சார்பாக தர்மபுரி தோழர்.மணி, 
NFTE  சார்பாக தோழர்கள் SS.கோபாலகிருஷ்ணன்,காமராஜ், 
TMTCLU  சார்பாக தோழர் .செல்வம் 
ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். 
நமது இயக்க வழிகாட்டி தோழர்.சேது தலைமையில்
 மதுரை தோழர்கள். இலட்சம்,முருகேசன்,
 காரைக்குடி தோழர்கள்.சேக்காதர் பாட்சா,
லால் பகதூர்,தமிழ்மாறன், மாரி 
ஆகியோர் வரவேற்புக்குழுவில் பணியாற்றினர். 

தோழர்.TM.மூர்த்தி  தமிழ் மாநில AITUC 
பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அவரது பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
========================================================
30/12/2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த NFTE 
தமிழ் மாநில செயற்குழு போக்குவரத்து ஊழியர்கள் 
வேலை நிறுத்தம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
=========================================================
அரசு ஊழியர்களின் வயதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால் அத்தகைய கோரிக்கைகள் 
ஊழியர்கள்  பணிக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் மட்டுமே 
பரிசீலிக்கப்படும் என DOP  இலாக்கா உத்திரவிட்டுள்ளது.  

பிறந்த தேதி சேவைக்குறிப்பேட்டில்  தவறுதலாக எழுதப்பட்டு விட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உரிய ஆவணங்களுடன் முறையீடு செய்தால் மட்டுமே இது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு திருத்தப்பட்ட பிறந்த தேதி ஓய்வுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பதவி உயர்வு போன்றவற்றிற்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
==========================================================
2014-2015 நிதியாண்டில் வைப்புநிதிக்கு வட்டியாக தற்போதுள்ள 
8.75 சத வட்டி விகிதமே தொடரும் என  அரசு உத்திரவிட்டுள்ளது.
==========================================================

Thursday 25 December 2014

AITUC 
தமிழ் மாநில மாநாடு
டிசம்பர் 27-28 - தேனி..
வாழ்த்தரங்கில்...
தோழர்.பட்டாபிராமன் 
தோழர்.C.K.மதிவாணன்
விவாத அரங்கில்... 
தோழர்.SS.கோபாலகிருஷ்ணன் 
தோழர்.காமராஜ் 
தோழர்.செல்வம் 
தோழர்.விஜய் ஆரோக்கியராஜ்..
தோழர்களே.. வருக...

Wednesday 24 December 2014





அனைவருக்கும் 
இனிய  கிறிஸ்துஸ் 
வாழ்த்துக்கள்...
====================================
தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள்..
விழித்திருங்கள்...
ஏனெனில்..
உங்கள் எதிராளியான பிசாசானவன் 
கர்ஜிக்கும் சிங்கம் போல..
எவனை எங்கே விழுங்கலாம்..
என்று வகை தேடி அலைகின்றான்...
டிசம்பர் 24
மாபெரும் மக்கள் தலைவர்களின் 
நினைவு நாள் 
பகுத்தறிவுத் தந்தை பெரியார் பாட்டாளிகளின் தலைவன் MGR 

கருத்தால் மனங்கவர்ந்த  தந்தை பெரியார்..
காட்சியால் மனங்கவர்ந்த மக்கள் திலகம்..
மண்ணை  விட்டுச்  சென்றாலும்...
மனதை விட்டுச்செல்லாத.. 
மக்கள் தலைவர்களின் புகழ் வாழ்க..

Tuesday 23 December 2014

நன்று கருதுவோம்...

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 
VIGILANCE விசாரணையால்
வேலைக்கு  செல்ல இயலாமல் 
வேதனையில் தவித்த சிவகங்கைத்தோழர் 
ஞானமுத்துவிற்கு  நியாயம் கோரி 
இன்று 24/12/2014 காரைக்குடியில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம்...

துணைப்பொது மேலாளர் நிர்வாகம் அவர்கள் 
ஞானமுத்துவிற்கும்  அவர் குடும்பத்திற்கும்  
நன்று செய்வோம் என்று  
நமக்களித்த உறுதிமொழியின் அடிப்படையில் 
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

பக்கவாதம் வந்ததற்கு மொத்த காரணம்..
MARR PT காலத்தில்.. 
மாடாய் உழைத்ததுதான்.. என 
மருத்துவரும் கூறுகின்றார்...
மாடாய் உழைத்தவனை 
ஓடாய் தேய்ந்தவனை 
வீதியிலே விடுவோமா...?

ஞானமுத்துவிற்கு..
சொல் போனது.. கை கால் செயல் போனது..
ஓராண்டுக்கு மேலாக விடுப்பும் போனது...
இல்லறம் காணும் வயதிலே..
இரண்டு பெண் பிள்ளைகள்..
இல்லாமையை விரட்ட வேலை தேடும் மகன்...
இதுதான் அவனது இன்றைய நிலை...

அவனுக்கு...
இன்னும் ஏழரை ஆண்டு பணி இருக்கு..
ஆனாலும் ஏழரையின் பார்வையும் இருக்கு...
பாதகப் பார்வைகள் அகல வேண்டும்..
பலன் தரும் பார்வைகள் வர வேண்டும்..
இதுவே நமது விருப்பம்...

அன்று...
தலைமைப் பொதுமேலாளரிடம்..
தான் செய்த பணிக்காக..
தனித்த பாராட்டு பெற்றவன்...
இன்று.. தவித்து நிற்கின்றான்...
கை கொடுப்பது.. சங்கக்கடமை மட்டுமல்ல..
சம்பந்தப்பட்ட சகலருக்குமான கடமை..

தோழர்களே..
நன்று கருதுவோம்... 
ஞானமுத்துவிற்கு நல்லதே நடக்குமென 
நன்று கருதுவோம்... 
அஞ்சலி 
K .B..
கைலாசம் பெற்ற 
கலைச்சிகரம் 
விண்ணில் பறந்த சினிமாவை 
வீதியில் நடக்க விட்டவன்..

ஒப்பனையைக் கலைத்தவன்...
ஒப்பற்றவர்களை வளர்த்தவன்..

சிறியன சிந்திக்காதவன்..
சீரியலை சிந்தித்தவன்...

மனத்திரை எண்ணங்களை 
சின்னத்திரையில் சித்திரமாக்கியவன்..

இயக்கத்தில் கைலாசம்...
இனிஷியலிலும் கைலாசம்...
கைலாசம் பெற்ற கலைச்சிகரம்...
கை.பாலசந்தர் 
நினைவைப் போற்றுவோம்...

Monday 22 December 2014

டிசம்பர் 23
மறக்க இயலா மாமனிதன்..
தோழர்.வெங்கடேசன் 
நினைவு நாள் 
அய்யருக்கு இணையுண்டோ?
அவர் அன்பிற்கு நிகருண்டோ?
நினைவு நாள் 
புகழஞ்சலிக்கூட்டம் 
23/12/2014 - செவ்வாய் - மாலை 5 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.
-:தலைமை:- 
தோழர்.சி.முருகன் 
மாவட்டத்தலைவர் 

பங்கேற்பு :  தோழர்கள்
பழ. இராமச்சந்திரன் 
அறந்தை சேதுபதி 
இரா.பூபதி 
கா.தமிழ்மாறன் 
க.சுபேதார் அலிகான் 
வெ.மாரி 

பா.லால் பகதூர் 
அ.சேக் காதர் பாட்சா
ம.ஆரோக்கியதாஸ்  

இல.கார்த்திகா 
தேன்மொழி முருகேசன் 
காந்திமதி வெங்கடேசன் 
மற்றும் தோழர்கள்...

அய்யர் புகழ் பாடுவோம்.. 
அன்பின் உயிர்நிலை போற்றுவோம்.. 
வாரீர்.. தோழர்களே..

Sunday 21 December 2014

தனியொருவனுக்கு...
 உணவில்லையெனில்...
அரக்கச்செயல் தடுக்க...
ஆர்ப்பாட்டம்... 
தோழர். ஞானமுத்து சிவகங்கை அருகில் 
ஒக்கூர் தொலைபேசி நிலையத்தில் TM ஆகப்பணி புரிந்து வந்தார்.
உழைப்பவனுக்கு இயற்கை தந்த பரிசு உடல் நலிவு.
பாடு பட்டு உழைத்தவனுக்கு பக்கவாதம் வந்தது.
பேச்சு போனது... மூச்சு மட்டுமே.. மிஞ்சியது..
இலாக்காவில் அவன் ஒரு அடிமட்ட தொழிலாளி...
சமூகத்தில் அவன் ஒரு அடித்தட்டுத்  தோழன்...
தனியொருவன் உழைப்பில் வாழும் ஆதி தமிழ்க்குடும்பம்...

வாயும்  வயிறும் வேறு வேறு என்பார்கள்.. உண்மைதான்..
வாயைக்கட்டிய நோய்,, அவன் வயிற்றைக்கட்ட மறந்தது..  
வாய் அவனுக்கு ஊமையானது... வயிறு அவனுக்கு சுமையானது..
விடுப்பு கரைந்தது... அடுப்பு அணைந்தது...

முடங்கிக்கிடப்பது.. முடிவல்ல,, என்று முடிவெடுத்தான்..
தவழ்ந்து சென்றான்.. தன் அலுவலகம் நோக்கி...
அன்பு கொண்ட  அதிகாரிகள்  அவனை அரவணைத்தனர்..
பக்கவாதம் வந்தவனுக்கு..
பக்கத்துணையாய் அவன் துணைவி நின்றார்..
அலுவலக காரியங்கள் யாவினும் கை கொடுத்தார்...
சம்பளப்பட்டியல்... பணமானது... 
அணைந்த அடுப்பு எரிந்தது.. 
எரிந்த வயிறு அணைந்தது..
வயிறு இதமானதால்.. வாழ்வும்  சற்றே எளிதானது..

இந்நிலையில்...
"அவன் வேலைக்குப்போவதில்லை... 
அவன் மனைவியை வைத்து வேலை செய்து சம்பாதிக்கின்றான்" என..
கொடியவன் ஒருவன் கொளுத்திப் போட்டான்...

துப்புக்கேட்டவுடன்...துப்பறியும் அதிகாரி..
துரிதமாக துப்பு துலக்க..
தூங்கிய பல்லும் துலக்காமல்..
மதுரையில் இருந்து பறந்து வந்தார்...
மோப்ப நாய்  மட்டுமே உடன் இல்லை...
வேட்டை நாயை விட... வேகமாக ஞானமுத்துவை விரட்டினார்...
வீட்டுக்கு உன்னை அனுப்பி விடுவேன் என  மிரட்டினார்..
இரவு 11 மணிக்கு அவனது மனைவி விசாரணை என்ற பெயரில்
தொலைபேசியில் அழைத்து துன்புறுத்தப்பட்டார்...
விருப்ப ஓய்வில் செல்வதற்கு  கட்டாயப்படுத்தினார்கள்..
"எந்த கொம்பனும்.. 
எந்த சங்கமும் உன்னைக் காப்பாற்ற முடியாது" என
துப்பறியும் அதிகாரி முழங்கினார்..
ஞானமுத்து மீண்டும் வீட்டிலேயே முடங்கினான்...
இரண்டு  மாதமாக அவனுக்கு சம்பளம் இல்லை..
எழுதிக்கொடுத்த விருப்ப ஓய்வும்.. வரவில்லை..
இந்நிலையில்.. 
மீண்டும் வீட்டிற்கு சென்று VIGILANCEன் வக்கிர விசாரணை..
உன்னை ஓய்க்காமல் விடமாட்டேன் என VIGILANCE கொக்கரிப்பு..

தோழர்களே... 
இதுவரை நாம் பொறுத்தோம்...
இனியும்.. பொறுப்பதற்கில்லை...

நாம் கேட்கின்றோம்..
ஞானமுத்துவும்.. அவன் மனைவியும்..
இலாக்கா சொத்துக்களை கொள்ளையடித்தார்களா?.
இலாக்காவிற்கு விரோதமாக செயல்பட்டார்களா..?
இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டை சிதைத்தார்களா...?
  
BSNLலில்...பெருக்கோடும் லஞ்சத்தையும் ஊழலையும்..
கட்டுப்படுத்த கையாலாகாத கண்காணிப்பு  அதிகாரிகள்..
பாவப்பட்ட ஞானமுத்துக்களிடம்தான்...
தங்கள்  சட்ட ஞானத்தைக் காட்ட வேண்டுமா?

ஆகப்பெரிய அதிகாரிகளிடம் குவிந்துள்ள அதிகாரம்..
அடிமட்ட ஊழியனின் வயிற்றில் அடிக்க மட்டும்தானா?

தோழர்களே.. சிந்திப்பீர்...
தனியொருவனுக்கு உணவில்லையெனில் 
ஜெகத்தினை அழித்திடுவோம்...என்றான் பாரதி..
இதோ.. நமது கண்முன்னே... 
தனி மனிதனும் அவனது குடும்பமும் ..
அதிகாரிகளின் அரக்கச்செயலால் 
சோற்றுக்கு வகையின்றி.. சொல்லவும் வழியின்றி..
தாங்க முடியா வேதனையில் தவிக்கின்றனர்...

இந்த அநியாயம் கண்டு நாம் சகித்திடுவோமா?
அநீதி கண்டு வெகுண்டெழுந்து...
ஆர்ப்பரித்து போராடாமல்..
அநீதி களைய முடியாது...
இதுவே நமது தாரக மந்திரம்...

வெகுண்டெழுவோம்...
24/12/2014 - புதன்  மாலை 5 மணிக்கு 
காரைக்குடி  
பொதுமேலாளர் அலுவலகம்  முன்பாக
 ஆர்ப்பரிப்போம்....
அநீதி களைவோம்... 
 தோழர்களே..வாரீர்...

Saturday 20 December 2014

அஞ்சலி 
தோழர். சித்து சிங் 
AIBSNLPWA  ஓய்வூதியர்கள் சங்கத்தின் 
துணைப்பொதுச்செயலர்

 தோழர். சித்து சிங் 
அவர்கள் 20/12/2014 அன்று 
டெல்லியில்  மாரடைப்பால் காலமானார்.

டெல்லியில் ஓய்வூதியர்கள் 
நலனுக்காகப்  பெரிதும்  உழைத்தவர்.
78.2 சத IDA இணைப்பு பிரச்சினையில் 
ஒவ்வொரு அதிகாரியையும்
ஒவ்வொரு நாற்காலியையும் 
ஒவ்வொரு நாளும் ஓயாமல் சந்தித்தவர்.

அவரது மறைவு மூத்த தோழர்களுக்கு ஈடில்லா பேரிழப்பு.
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Friday 19 December 2014

ERP செயலாக்கம் 
ERP GO - LIVE 

தமிழகத்தில் 19/12/2014 நண்பகல் 12.00 முதல் ERP  திட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக CGM காணொளி மூலம் ERP திட்டசெயலாக்கத்தைத் துவக்கி வைத்தார். ERP திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் DELOITTEE  குழு அறிக்கை அமலாக்கம் நடைமுறைப்படுத்தப்படலாம். 
எனவே காணொளிகள் மார்கழி மாத பஜனை போல் 
தொடர்ந்து  தமிழகத்தில்  நடைபெறும். 

ERP செயலாக்கத்தை தொடர்ந்து பல நாட்கள் தூக்கம் மறந்த 
நமது அதிகாரிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். 

ஆனால் GPF,விழாக்காலப்பணம்,டிசம்பர் மாத சம்பளம்,
ஒப்பந்த ஊழியரின் நவம்பர் மாத சம்பளம்,
ஓய்வு பெற்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம்
 ஆகியவற்றை நினைத்து நமது தோழர்கள் 
தூக்கம் இழக்க ஆரம்பித்துள்ளனர்.

 ERP திட்டம் GO-LIVE ஆனதற்கு நமது வாழ்த்துக்கள்.
அதே நேரம்  LIFE - GOING  ஊழியர்களின் பட்டுவாடாக்களும் விரைவில் 
GO-LIVE ஆக வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

Tuesday 16 December 2014

 செய்திகள் 

பரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.
===============================================================
பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.
=============================================================
மாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர். 

இனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது 
BSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது. 
ஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை 
மறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
பல காலமாகவே டெல்லியில்  மாற்றல்கள் பணத்தாலும்,பதவியாலும் ரத்து செய்யப்பட்டு வந்தது ஊரறிந்த உண்மையாகும். 
==============================================================
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
=============================================================
22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.
==========================================================
23/12/2014 அன்று  டெல்லியில்   அனைத்து சங்கத்தலைவர்களுக்கும் 
ERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும்  ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
==========================================================
NFTE 
இராமேஸ்வரம் கிளை 
கிளைக்கூட்டம் 

19/12/2014 - வெள்ளிக்கிழமை - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - இராமேஸ்வரம் 

-:விவாதப்பொருள்:- 

  • சீரழிக்கப்படும் BSNL சேவை 
  • திருடு போகும் இலாக்காப் பொருட்கள் 
  • பொறுப்பில்லாத துணைக்கோட்ட அதிகாரி 
  • தலமட்டப்பிரச்சினைகள் 
  • கிளை மாநாடு 
பங்கேற்பு 
தோழர்.சி.முருகன் 
மாவட்டத்தலைவர் 

தோழர்.வெ.மாரி  
மாவட்டச்செயலர் 

தோழர்களே.. வருக..
அன்புடன் அழைக்கும் 
B. இராஜன் 
கிளைச்செயலர் - இராமேஸ்வரம்.
டிசம்பர் 17
ஓய்வூதியர்கள் தினம் 
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்..
கரம் தாழாமல் காத்திடுவோம்...
சிறப்புக்கூட்டம் 
17/12/2014 - புதன்கிழமை - காலை 10 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.

தலைமை 
தோழர்.நாகேஸ்வரன் 
மாவட்டத்தலைவர் - AIBSNLPWA

-:சிறப்புரை:-
தோழர்.இரா.பூபதி 
தோழர்.சி.முருகன் 
தோழர்.கா.தமிழ்மாறன் 
தோழர்.க.சுபேதார் அலி கான் 

தோழர்களே... வருக...
அன்புடன் அழைக்கும் 
பெ.முருகன் 
மாவட்டச்செயலர் 
AIBSNLPWA - காரைக்குடி மாவட்டம்.



Monday 15 December 2014

கார்...காலம்

ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலம்.. கார்காலம்.. 
ஆனால் BSNLலிலோ ஆண்டு முழுவதும்  CAR காலம்.. 
அலுவலக வாயிலில் கார்கள் அணிவகுத்து நிற்கும் கார்கோலம்..
அலுவலகங்கள் முழுவதும் கருவறைகள்.. (CHAMBER)
கருவறை கடவுளர்களை  சுமக்க 
இலக்கு இல்லாமல் காத்து நிற்கும்  
வாடகைப்பல்லக்குகள்..

இராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம்...
BSNLலிலோ
அதிகாரிகளுக்கு  14 ஆண்டுகள்  சுகவாசம்...

இது ஒன்றும் புதிதில்லையே...
இந்த தொடர் அவலத்தை தொட்டுப்பார்ப்பது ஏன்? 
என நீங்கள் கேட்கலாம்... தொடர்ந்து படியுங்கள்... 

12/12/2014 அன்று பரமக்குடி பகுதியின் மூத்த தோழர்.கணேசன் அவர்கள் நம்மை தொலைபேசியில் அழைத்தார்.  

"தோழர்.. பரமக்குடி பகுதியில் உள்ள 3 குட்டி  அதிகாரிகள் இரண்டு  இலாக்கா வாடகைக்காரில் இறைக்கை கட்டி  காரைக்குடிக்கு ஒரே LINKகாக வந்து கொண்டிருக்கின்றார்கள் ..என்ன காரணம்? என்று வினவினார்..

"இன்று 12/12/2014... 
LINKகாக வருகின்றார்கள் என்றால்.. ஒருவேளை...
லிங்கா பார்க்க வந்தாலும் வரலாம்" என்று அவரிடம் பதில் கூறினோம். 
இருந்தாலும் மனதிற்குள் ஒரு  சந்தேகம் அரும்பியது.  
"பிள்ளையாரின் வாகனம்  பிறந்த மேனியாய் அலையாது" 
என்பது பெரியோர் வாக்கு. 
எனவே காரணம் என்னவென்று விசாரித்தோம்.  
பின்புதான் தெரிந்தது..
நமது கடமை உணர்வு மிக்க அதிகாரிகள்  
இலாக்கா வாடகைக்காரில் இலவசமாக பயணித்து
பரமக்குடியில் இருந்து பறந்து காரைக்குடி வந்தது
இலாக்கா பணிக்காக அல்ல.. 
இதந்தரும் அதிகாரிகள் சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக என்று. 

அவர்களின் சங்கப்பற்றை நாம் மெச்சுகின்றோம்.
ஆனால்.. வந்து போன வண்டிச்செலவு 
இலாக்கா கணக்கில் பற்று வைக்கப்படும். 
அதுதான் இப்போது நம்மை உறுத்துகிறது..

அவர்களும்..
அந்தக்காலத்து சந்திரலேகா சினிமா பாணியில்
12/12/2014 அன்று காரைக்குடி STORES  சென்றோம்...
STOREல்  குதிரைக்கு கொள்ளு வாங்கினோம்....
கொள்ளளவு அதிகமாக இருந்ததால்...
கொள்ளை போகும் வாய்ப்பு இருந்ததால்..
ஒன்றுக்கு இரண்டு வண்டியில் வந்தோம்...
ஒன்றுக்கு மூன்று பேராய்  பயணித்தோம்...
என்று  வழக்கமான கணக்கு எழுதி விடுவார்கள்...
பில்களும் வழக்கம் போல் பட்டுவாடா ஆகிவிடும்...
BSNLம் வழக்கம் போல் நட்டமாகி விடும்...

அதிகாரிகளோ.. தொழிலாளர்களோ...
சங்கத்தில் பற்றுக்கொள்வது...
சங்கக் கூட்டங்களில் பங்கேற்பது நிச்சயம் அவசியம்தான்..
ஆனால் தொழிலாளர்கள் தங்களுடைய..
சங்கக் கூட்டங்களுக்கு போகும்போது அவர்களை 
கேள்விகள் கேட்பது.. விடுமுறை மறுப்பது.. என்றெல்லாம் 
தங்களது அதிகாரத்தைக்காட்டும் அதிகாரிகள்..

தங்களுடைய சங்க கூட்டங்களுக்கு 
ஊர் விட்டு ஊர் செல்லும்போது 
பணியிலேயே செல்வது.. பல்லக்கில் செல்வது..
கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இன்றி 
பொய்யான காரணங்களை எழுதி.. 
கார்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது..
என்ற இழிநிலை இன்னும் தொடருவது சரியல்ல..

இன்று... அதிகாரிகள் BSNLலில் 
கை நிறைய.. பை நிறைய.. கைப்பை நிறைய 
சம்பளம் வாங்குகின்றார்கள்..
நல்ல நிலையில் இருக்கும் அதிகாரிகள்.. 
நட்ட நிலையில் இருக்கும் நிறுவனத்தை உறிஞ்சலாமா?

மரத்திலே  பழங்களைப் பறிக்கலாம்...
வேர்களைப்  பிடுங்கலாமா?...
இதுவரை சுகவாசம் அனுபவித்தது போதாதா?
நட்டப்பட்ட நிறுவனத்தை ஒட்டத்துடைப்பது நியாயமா?..


தோழர்களே...
இது வரை அனுபவித்தது போதும்...
இனியேனும் விட்டு விடுங்கள் BSNLஐ..
சுரண்டல் இன்றி... பிடுங்கல் இன்றி... 
சுதந்திரமாக உறங்கட்டும்...BSNL..

Sunday 14 December 2014

மனமகிழ் 
மதுரை மாவட்ட மாநாடு 

மதுரை மாவட்ட மாநாடு 13/12/2014 அன்று
 மதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ்மன்றத்தில் 
தோழர்.முருகேசன் தலைமையில் 
 வந்தோர் மகிழ்ந்திட, 
கலந்தோர் களித்திட,
கேட்டோர் திகைத்திட,  
இனிதே  நடந்து முடிந்தது. 

பொதுமேலாளர் திருமதி.இராஜம், 
மூத்த வழிகாட்டி தோழர்.சேது, 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி,
மாநிலச்சங்க நிர்வாகிகள் மற்றும் 
தோழமை சங்கத்தலைவர்கள் 
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

இரு மனங்கள் இணங்கிப்பேசி  புதிய நிர்வாகிகள்
  ஒருமனதாக தேர்வாகினர். 
ஒரு மனதாக  தேர்வான நிர்வாகிகள் 
ஒரே மனதுடன் செயல்பட நமது வாழ்த்துக்கள். 

மாவட்டத்தலைவர் தோழர்.இராஜேந்திரன் TM,  தலைமையில் 
மாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன், SSO, செயலாக்கத்தில் 
மாவட்டப்பொருளர் தோழர்.செந்தில்குமார், TM, நிதி ஊக்கத்தில் 
மதுரை மாவட்டச்சங்கம் வெற்றி நடை போடட்டும்...

மீன்கொடி மதுரையிலே..
காலையில் எழுந்து மாலையில் மறையும் 
கதிரவன் கொடி காலமெல்லாம் பறக்கும் நிலை மாற்றி... 
காலத்தால் அழியாத செங்கொடி 
சிவக்கொடி பறக்க வாழ்த்துக்கள்...

Friday 12 December 2014

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி மாவட்டத்தோழர்கள்
 15/12/2014 திங்கள்கிழமை முதல் கடன் பெறலாம்.