Tuesday, 31 March 2015


ஒப்பந்த ஊழியர்கள் சங்க
 மாநிலச்செயற்குழு 
02/04/2015 - கடலூர்

பங்கேற்பு : தோழர்கள்  
 • ஆர்.கே 
 • பட்டாபி 
 • தமிழ்மணி 
 • சேது 
 • ஜெயபால் 
 • கோபாலகிருஷ்ணன் 
 • காமராஜ் 
 • செல்வம் 
மற்றும் முன்னணித்தலைவர்கள்...

ஒப்பந்த ஊழியனே...

உரிமைக்காக போராட ...
உன்னிடம் உதிரமும் இல்லை...
உரிய சலுகைக்காக போராட..
வியர்வைத்துளிகளும் இல்லை...

சிந்திவிட செந்நீரும் இல்லை... 
கண்களில் கண்ணீரும் இல்லை..

இருப்பது உன் இதயம் மட்டுமே...
இதயத்தை இரும்பாக்கு...
ஒற்றுமையில் உருக்காகு..

இழப்பதை அடைந்திட...
இன்னும் பெற்றிட...
இயக்கத்தை வலுவாக்கு.. 

ஒப்பற்ற...
NFTE இயக்கத்தைப் போற்று..
உப்பற்ற சப்பற்ற..
உன் வாழ்க்கையை மாற்று...
காரைக்குடி கம்பன்  திருநாள் 
ஏப்ரல் 1 முதல் 4 வரை...
கம்பன் புகழ் போற்றுவோம் 
கன்னித்தமிழ் வணங்குவோம்

காரைக்குடி கம்பன் விழா 
01/04/2015 - 04/04/2015

 • நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் 
 • கோவிலூர் ஞான தேசிக சுவாமிகள்  
 • நீதியரசர். இராமசுப்பிரமணியன் 
 • கவிமாமணி வள்ளி முத்தையா 
 • பேராசிரியர். சரசுவதி இராமநாதன் 
 • பேராசிரியர். யாழ். சந்திரா 
 • பழ.கருப்பையா 
 • நர்த்தகி நடராஜ் 
 • சுகிசிவம் 
மற்றும் எண்ணற்ற ஆன்றோர்கள்... சான்றோர்கள்...

கம்ப ரசம் பருக.. வாரீர்...
காலம் வென்ற தமிழ் போற்ற.. வாரீர்...

Monday, 30 March 2015

செய்திகள்

JCM தேசியக்குழுக் கூட்டம் 28/04/2015 
அன்று டெல்லியில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ERPயில் சில  ஊழியர்களின் பதவியின் பெயர் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது சாதிப்பிரிவு குறிப்பிடப்படவில்லை. மேலும் அவர்களது வீட்டு  முகவரி  முழுமையாக இல்லை. இத்தகைய  குளறுபடிகள் 30/04/2015க்குள் சரி செய்யப்பட வேண்டும் என 
BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு   உத்திரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA  வழங்குவதற்காக 
2007க்கு முன் ஓய்வு  பெற்றவர்கள் மற்றும் 
 01/01/2007 முதல் 09/06/2013 வரையிலும் பணி ஓய்வு பெற்ற 
தோழர்களின் எண்ணிக்கையை  DOT கோரியுள்ளது.
---------------------------------------------------------------------------------
25000 கோடி முதலீட்டில் BSNL விரிவாக்கத்திட்டங்கள் 
இன்னும் 3 ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் 
என BSNL CMD செய்தியாளர்களிடம் அறிவிப்பு.
---------------------------------------------------------------------------------
7வது ஊதியக்குழு தொழிற்சங்கங்களை சந்தித்து உரையாட ஆரம்பித்துள்ளது.  JCM தேசியக்குழு தலைவர்கள்  தங்களது கோரிக்கைகளை 7வது ஊதியக்குழு முன் வைத்துள்ளனர்.
ஊதியக்குழு தனது அறிக்கையை 
2015  இறுதிக்குள் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
நீடுழி... வாழ்க 
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

இன்று 31/03/2015 
காரைக்குடி மாவட்டத்தில்
 பணி நிறைவு பெறும் 

வெள்ளத்தில் பிழைத்தவர் 
உள்ளத்தில் நிறைந்தவர் 
அருமைத்தோழர் 
R.பிரகலாதன் 
TM - திருப்புவனம் 

அன்புத்தோழியர் 
S.விசுவாசமேரி 
AGM(CSC) - காரைக்குடி 

அன்புத்தோழர் 
M.நாராயணசாமி 
TM - ஒக்கூர் 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
எந்நாளும் நன்னாளாய்...
ஏற்றமிகு பொன்னாளாய் 
அமைந்திட வாழ்த்துக்கள்...

Friday, 27 March 2015

சீரோடும்.. சிறப்போடும்.. வாழட்டும்..
சீனா.. தானா.. 
பணி நிறைவு நாள் 31/03/2015

தோழர்.சிவசிதம்பரம்
பட்டுக்கோட்டை

அறுபதிலும் இளமை.. 
ஆரம்பம் முதல் இனிமை... 
அதுதான்  சிவ சிதம்பர ரகசியம்.. 

பட்டுக்கோட்டையின் கட்டுத்தறி அவர் 
பாட்டாளி வர்க்க  கலைவாணர் அவர்...

களை கட்டிய மனிதர் அவர்..
களைகளையும்.. அன்போடு..
கட்டிக்கொள்ளும் தோழர் அவர் ...

கூட்டு  உறவில் நாட்டம் கொண்டவர்..
கூட்டுறவிலும் நன்மை செய்தவர்..
கூடி வாழ்ந்தால்  கோடி நன்மை...
கொள்கை  கொண்டவர்..

இளகிய இதயம் கொண்டவர்...
இலக்கியத்தில் ஈடு கொண்டவர் ...
இதயம் அறுபட்டாலும்.. 
இயக்கத்தொடர்பு  அறுபடாதவர்..

செங்கொடியை நேசித்தவர்..
ஜெகனை  சுவாசித்தவர்..
குப்தாவை நித்தமும் பூஜித்தவர்..

செங்கொடியும் வீரமும் போல்.. 
ஜெகனும் அன்பும் போல்... 
குப்தாவும் தியாகமும் போல்.. 
நெடிய காலம் நீடுழி வாழ்க...

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

நேற்று 27/03/2015 காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
பிப்ரவரி மாத சம்பளத்தை வழங்கக்கோரியும் 
வரும் மாதங்களில் குறித்த தேதியில் சம்பளத்தை பட்டுவாடா செய்யக்கோரியும் காலையில் போராட்டம் துவங்கியது. 

பகல் 12 மணிக்குள் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டு அவ்வாறே பட்டுவாடா செய்யப்பட்டது.

நமது தோழர்கள் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் ஒரு சில வங்கிகளில் சம்பளம் இன்னும் வரவு வைக்கப்படவில்லை. 
இன்று அனைத்து தோழர்களுக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும்.

மார்ச் மாதச்சம்பளம் 07/04/2015க்குள் வழங்கப்படாவிட்டால்
 08/04/2015  அன்று போராட்டம் நடைபெறும். 
ஒவ்வொரு  மாதமும் பிரதி  7ந்தேதி சம்பளம் வழங்கவில்லை என்றால் 
ஒவ்வொரு  மாதமும் பிரதி  8ந்தேதி போராட்டம் நடைபெறும். 

ஒப்பந்த ஊழியர்களுக்காக  
ஒவ்வொரு மாதமும் 
நிச்சயிக்கப்பட்ட போராட்டம்  
நிச்சயம் நடைபெறும்.

Thursday, 26 March 2015

 தகவல் தொழில் நுட்பச்சட்டம் 66(A )

காலாவதியானது கைப்பூட்டுச்சட்டம் 

இந்தியத் தகவல் தொழில் நுட்பச்சட்டம் பிரிவு 66(A ) 
2008ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

இப்பிரிவின் கீழ்..
இணைய தளங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் 
 • ஒருவரது மனதைப் புண்படுத்துகிறது 
 • தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது...
 • அவமானப்படுத்துகிறது...
என்று ஒருவர் புகார் அளித்தால் இணையதளங்களில் கருத்துக்கள் வெளியிட்டவர்களைக் கைது  செய்ய மேற்கண்ட சட்டம் வழிவகுத்தது..

அந்த சட்டத்தின் கீழ்...
 • பால் தாக்கரே மரணத்தின்போது கருத்துக்கள் வெளியிட்டதற்காக இரண்டு பெண்கள் மும்பையில் கைது செய்யப்பட்டனர்...
 • உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் ஆசம்கான் என்பவரைப்பற்றி கருத்து வெளியிட்டதற்காக 12ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டான்.
இது போல் பல்வேறு சம்பவங்கள் 
நமது பெருமைமிகு.. பொறுமைமிகு.. 
பாரத தேசத்தில் நடந்தேறின. 
இந்த கைப்பூட்டுச்சட்டத்தை எதிர்த்து 
பல்வேறு தோழர்கள் வழக்குத் தொடர்ந்தனர். 

தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்து 
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் நாரிமன் 
ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். 
மேற்கண்ட சட்டம் கருத்துச் சுதந்திரத்துக்கு
முற்றிலும் எதிரானது என நீதிபதிகள் கூறியுள்ளனர். 

 • மன அமைதி கெடுகிறது
 • எரிச்சல் உண்டாகிறது 
 • தர்ம சங்கடமானது 
 • ஆட்சேபகரமானது 
என்ற வார்த்தைகளைக் கூறி ஒருவரைக் கைது செய்வது முற்றிலும் ஜனநாய விரோத செயல் என்றும் காவல்துறை இதைக் கையில் எடுத்துக்கொண்டு தனிமனிதர்களை தங்கள் விருப்பம் போல் கைது செய்ய வழி வகுக்கும் என்றும்  அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்று இளைய தலைமுறையினர்தான் இணைய தளங்களை முற்றிலும் பயன்படுத்துகின்றனர்.  மேற்கண்ட சட்டம் அடுத்த தலைமுறையை அடக்கி வைப்பதற்கான செயலாக இருந்தது...

மேற்கண்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் 
கருத்துச் சுதந்திரத்தின் கைவிலங்கை ஒடித்துள்ளது...
இளைய தலைமுறையின் 
கருத்துப் பூங்காவை 
கருப்பு வெள்ளாடுகள் 
காலி செய்ய விடாமல் வேலி போட்டுள்ளது...
நமது வாழ்த்துக்கள்..

இந்த நேரத்தில்...
காரைக்குடி NFTE மாவட்டச்செயலர் 
தனது இணையதளத்தில் 
 • ஆட்சேபகரமான 
 • எரிச்சல் உண்டாகிற 
 • தர்மசங்கடமான 
 • மனதைப் புண்படுத்துகிற 
கருத்துக்களை வெளியிடுகிறார். 
அவரை அடக்கி வைக்கவும் என 
நமது மாநில நிர்வாகம்...
இந்திய தேசத்தின் 
இறையாண்மையைக் காப்பாற்றிட..
இரண்டு எச்சரிக்கைக் கடிதங்களை 
நமது மாநிலச்செயலருக்கு.. 
அடுத்தடுத்துக் கொடுத்ததையும்..
நாம் அன்புடன்  நினைவு கூர்கின்றோம்...

வாழ்க... ஜனநாயகம்..
வளர்க... கருத்துச் சுதந்திரம்...

Monday, 23 March 2015

அறப்போர் 

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். 
உரிய தேதியில் சம்பளம் இல்லை...
சட்டரீதியான சலுகைகள் இல்லை..

காரணம்...
தொழிலாளரை சுரண்டிப் பிழைப்பதற்காகவே 
அவதாரம் எடுத்துள்ள குத்தகைக்கரர்களும்..
அவர்கள் போடும் சிறு.. சிறு...
எலும்புத்துண்டுகளுக்காக 
ஏங்கி நிற்பவர்களுமே...

தற்போது காரைக்குடியில் 
MALLI SECURITY என்ற குத்தகைக்காரனுக்கு 
இலாக்கா விதிமுறைகளை மீறி 
தற்காலிக ஏற்பாடு என்னும் பெயரில் 
குத்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த MALLI SECURITY  கடந்த இரண்டு வருடங்களாக 
இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதியில் 
காவல் பணிக்கு குத்தகை எடுத்து...
காவல் பணி செய்யும் ஊழியர்களிடம் 
மாதம் 1000 ரூபாய் கூலியைக்  குறைவாக கொடுத்து 
கொள்ளையடித்துக் கொண்டிருப்பவன்...
இதனை நாம் சுட்டிக்காட்டியும் 
வழக்கம் போல் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை...
அத்தகைய குத்தகைக்காரனுக்கு 
HOUSE KEEPING குத்தகையை விதிமீறி 
கொடுத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்... சென்ற பிப்ரவரி மாத சம்பளம் 
இம்மாதம் 26/03/2015க்குள்  
MALLI SECURITY மூலம் வழங்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

நமது கோரிக்கை...

 • ஏற்கனவே காவல் பணிகளில் கடந்த இரண்டு வருடங்களாக குறைத்துக்கொடுக்கப்பட்ட கூலியை திருப்பித்தரவேண்டும்...
 • தற்போதைய குத்தகையில் உரிய கூலி கொடுக்க வேண்டும்...
 • EPF,ESI,BONUS உள்ளிட்ட சலுகைகளை தவறாது கொடுக்க வேண்டும்..
 • நிர்வாகம் ஒத்துக்கொண்டபடி பிப்ரவரி மாத சம்பளத்தை 26/03/2015க்குள் வழங்க வேண்டும்..
 • வருகின்ற மாதங்களில் சம்பளத்தை 5ந்தேதிக்குள் வழங்க வேண்டும்..
ஒத்துக்கொண்டபடி 26/03/2015க்குள் 
சம்பளம் வழங்கவில்லை என்றால் 
27/03/2015 முதல் 
அறப்போர் 
துவக்க தோழர்களே.. தயாராவீ ர்...

Sunday, 22 March 2015

அவன்தான் மனிதன் 
மார்ச்  23
மாவீரன் பகத்சிங் 
நினைவு நாள் 
1931 மார்ச் 22...
லாகூர் சிறை அதிகாரி தோழர். பகத்சிங்கை சந்திக்கிறார்.
பகத்சிங் அமைதியாக "அரசும் புரட்சியும் " என்ற 
தோழர் லெனின் எழுதிய புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறார்.
"உங்களுக்கு மார்ச் 24 தூக்குத்தண்டனை..
உங்களது இறுதி ஆசை என்ன? என்று சிறை அதிகாரி கேட்கிறார்.

"நான் பிபியை சந்திக்க வேண்டும்..
அவர்கள் கையால் உண்ண வேண்டும்"  என்கிறார் பகத்சிங்.

பிபி என்றால் பஞ்சாபி மொழியில் வளர்ப்புத்தாய் என பொருள்.

"உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்புகிறேன்" 
என சிறை அதிகாரி கூறுகிறார்.
"வீட்டிற்கு வேண்டாம்... 
பிபி இங்கேதான் இருக்கின்றார்கள்" என்கிறார் பகத்சிங்.
இங்கேயா? என ஆச்சரியத்துடன் கேட்கிறார் சிறை அதிகாரி...
ஆம்.. இங்கே துப்புரவுத்தொழில் செய்யும்
போகாவைத்தான் நான் சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்...

போகா என்னும் பெயருடைய 
சிறையில் துப்புரவுப்பணி செய்யும் 
பெண்மணி அழைத்து வரப்படுகிறார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை...
பகத்சிங்கைப் பார்த்து கேட்கிறார்...
"நீங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போரிடுபவர்...
உங்களை பார்ப்பதே எனக்குப்பெருமை...
இந்த எளிய பெண் உங்களுக்கு என்ன செய்ய இயலும்...
மேலும் என்னை வளர்ப்புத்தாய் என கூறியுள்ளீர்கள்...
என்னால் எதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை" என்கிறார்.

பகத்சிங் அவரைப் பார்த்து
" அன்னையே... 
நான் குழந்தையாக இருந்தபோது 
எனது தாய் எனது மலத்தை எடுத்து சுத்தப்படுத்தினார்.
இப்போது... இந்த சிறையில்...
எனது மலத்தை நீங்கள்தான் சுத்தப்படுத்துகின்றீர்கள்..
எனவே எனது தாய்க்குப்பின் 
நீங்களே எனது வளர்ப்புத்தாய்"
என்று கூறுகின்றார்..

மேலும் அவரைப்பார்த்து 
" இந்த வளர்ப்புத்தாயின் 
கையால் சமைத்த உணவை 
நான் உண்ண வேண்டும்... 
இதுவே எனது இறுதி ஆசை
என்றும் கூறுகிறார்.

கேட்டதும்.. 
கண்ணீர் பெருக்கெடுக்கிறது போகாவுக்கு...
"நிச்சயம் நாளை மாலை 
உணவுடன் உங்களை  சந்திக்கிறேன்" என 
உள்ளம் பொங்கிய உணர்வுடன் கூறிச்சென்றார்.. போகா..

1931 மார்ச் 23 மாலை...
கையில் உணவுடன்..
கண்ணில் ஈரமுடன்..
தனது பணிக்கு சிறைக்கு வந்தார் போகா..

பகத்சிங் இருந்த சிறைக்கதவு திறந்து கிடந்தது...
அன்று காலையே அவர் தூக்கிலிடப்பட்டார்...
காலம் நேரம் தவற மாட்டோம் என்று கூறும் கயவர்கள்... 
ஒருநாள் முன்னதாகவே பகத்சிங்கை தூக்கிலிட்டனர்...

செய்தி கேட்டவுடன்...
உணவுப்பாத்திரமுடன் 
உணர்வற்று விழுந்தார் போகா...

அன்று லாகூர் சிறையை 
போகா தண்ணீரால் கழுவவில்லை..
தனது கண்ணீரால் கழுவினார்..

அடிமை விலங்கொடிக்க இன்னுயிர் நீக்கும்  நிலையிலும்..
அடித்தட்டுப்  பெண்மணியிடம் 
அன்பு செலுத்தி...
அன்னையாய் அவரை நெஞ்சில் வரித்து...
அன்புடன் உணவு கேட்ட...
அவன்தான் மனிதன்... 
அவன்தான் மாவீரன்..
அவன் நினைவைப்போற்றுவோம்..
அவன் பாதையில்  என்றும் பயணிப்போம்...

Friday, 20 March 2015

செய்திகள் 

 • அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு  IMMUNITY FROM TRANSFER..  மாற்றலில் விதிவிலக்கு அளிக்கும் உத்திரவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் நமது தலைவர்களிடம் உறுதியளித்துள்ளது.
 • 14/04/2015 அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாள்  விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு மருத்துவப்படி வழங்குவதற்கு நிர்வாகம் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிலையில்,  தற்போது அவர்களுக்கு WITH VOUCHER முறையில் செலவாகும்  தொகையின் விவரத்தை BSNL நிர்வாகம் கேட்டுள்ளது.
 • அனைத்து மாவட்ட GMகளும் தங்கள் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து BSNL மேம்பாட்டிற்கான வழிமுறைகளை விவாதித்து உரிய அறிக்கை அளிக்க  BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
 • DOTயில் இருந்து BSNLக்கு வழங்கப்படும் நிதிச்சலுகை இன்னும் வராமல் இருப்பது குறித்து நமது சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 • 2018-19ம் நிதியாண்டில் லாபம் பெறும் நிறுவனமாக BSNL மாறிவிடும் என நமது CMD கூறியுள்ளார். இந்த ஆண்டு 5 சத வளர்ச்சியும் 29000 கோடி வருமானமும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும் 4800 கோடி செலவில் 27000 செல் கோபுரங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட PHASE VII திட்டம் ஜூன் 2015க்குள் இறுதிப்படுத்தப்பட்டு விடும் எனவும் கூறியுள்ளார்.
 • தமிழகத்தில் மீத்தேன் திட்டம் நடைமுறைப்படுத்த  GREAT EASTERN ENERGY CORPORATION LTD., என்ற  தனியார் நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து புதுப்பிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஆயினும் மீத்தேன் திட்டம்  நிறுத்தப்படும் என்று அரசு அறுதியிட்டு  கொள்கை முடிவாக அறிவிக்கவில்லை.
முதுமை கொல்வோம்.. 
உரிமை வெல்வோம்..

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பை 
உடனே வழங்கக்கோரி 

தலைநகர் டெல்லியில்.. 
மாநிலத்தலைநகரங்களில்.. 
மாவட்டத்தலைநகர்களில்.. 

13/05/2015 அன்று 
A I B S N L P W A 
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள்
 நலச்சங்கத்தின்  சார்பாக 

நாடு தழுவிய தர்ணா

மூத்தோரை ஏமாற்றும் மத்திய அரசின் 
முறையற்ற செயல் எதிர்ப்போம்..

உரிமை வெல்ல போராடும் 
நம் மூத்த தோழர்களுக்கு..
ஊன்றுகோலாய் நின்றிடுவோம்..

Thursday, 19 March 2015

ஆண்டவரே... மன்னியும்..

ஆண்டவரே மன்னியும்...
இது அன்றாடம் தேவாலயங்களில்
திருப்பலிகளில் கேட்கப்படும் வார்த்தை அல்ல...

துறவு கொண்ட ஒரு தூய உள்ளத்தின் 
துன்பம் பொறுத்த வார்த்தைகள்...

வங்கம்...
ஆன்மீகத்தின் அடையாள பூமி...
பெண்களை காளியின் அடையாளமாய் கண்ட... 
மனைவியையும் அன்னையாய் பார்த்த... 
இராமகிருஷ்ண பரமஹம்சர்...

சகோதர.. சகோதரிகளே...
இந்த இரட்டைச்சொல்லால்..
இந்திய தேசத்தின் ஆன்மாவை 
உலகுக்கு அடையாளம் காட்டிய 
வீரத்துறவி விவேகானந்தர்..

வெள்ளையனை விரட்டியடிக்க 
வளைக்கரங்களை வாளேந்த வைத்த 
வீரத்தலைவர் நேதாஜி..

தாகூர்... அரவிந்தர்...என 
வணக்கத்திற்குரிய மகான்கள்  பலர் 
வந்துதித்த பூமி வங்க பூமி...

இன்றோ..
வரலாற்றில்... மறையாத பங்கம் 
வந்து சேர்ந்துள்ளது வங்கத்திற்கு...

அன்புணர்வு கொண்ட ஒரு அன்னையை..
வன்புணர்வு செய்துள்ளது..
வன்முறைக்கும்பல்...

மனமும் உடலும் காயப்பட்ட நிலையிலும் 
மருத்துவமனையில்... 
தன்னை மானபங்கம்  செய்தவர்களை 
ஆண்டவரே... மன்னித்தருளும் 
என மன்றாடியுள்ளார்...

மக்களைப்பெறாவிட்டாலும்.. துறவு கொண்ட..
மணிமேகலையையும்... கவுந்தியடிகளையும்..
மாதா என அழைத்த மாண்பு நமக்குண்டு...
மகளை அம்மா என அழைக்கும் பண்பு நமக்குண்டு..

ஆனால் இன்றோ..
ஆறறிவு மறந்த மனித மிருகங்கள் 
ஆறையும் விடுவதில்லை...
அறுபதையும் விடுவதில்லை...

ஒரு துறவியை துன்புறுத்திய செயல்..
எழுபதைக் கடந்த ஒரு பெண்மணியை  
வன்புணர்வு செய்த செயல் 
இனவெறியை மிஞ்சிய 
ஈனவெறியாகும்...

ஒட்டு மொத்த உலகமும் 
நம் மேல் உமிழ்ந்துவிட்டது...
ஒட்டு மொத்த தேசமும்..
தலை கவிழ்ந்து நிற்கிறது...

காயப்பட்ட அன்னையோடு 
கரம் கோர்த்து நாமும் மன்றாடுகிறோம்..
"ஆண்டவரே.. இவர்களை.. மன்னியும்"

Wednesday, 18 March 2015

மென்பொருளாயினும் 
மெய்ப்பொருள் காண்பதறிவு 
E R P 
ERROR  RECURRING  PROGRAM 

தோழர்களே...
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது பழமொழி.
அது முற்றிலும் ERP விவகாரத்திற்குப் பொருந்தும்.
நல்லா இருந்த HRMSஐ கழற்றி விட்டார்கள்.
நாசம் பெருகும் ERPஐக்  கொண்டு வந்தார்கள்...
காலம் காலமாக நாம் உருவாக்கி வைத்த விதிகள்
காற்றிலே பறந்து விட்டன.
சாப்ட்வேர் வைத்ததே இப்போது சட்டமாகிப் போச்சு.
பல்வேறு விவகாரங்கள் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால்
இது பல் முளைக்கும் பருவம்
TEETHING PROBLEM என்று கூறுகின்றார்கள்.
நமக்கோ பல் விழும் பருவம் .
எனவே  தாங்க  முடியவில்லை பல் வலியை...
ஒன்றா.. இரண்டா... 32 ஆச்சே...

எனவேதான் தமிழ் மாநிலச்சங்கம்
தமிழகம்  தழுவிய 
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை
19/03/2015 அன்று நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

நமது ஆர்ப்பாட்டம் வழியாக நாம்..
நமது வலிகளைச்  சொல்லிடுவோம்.
நல்ல வழிகளை நிர்வாகம் திறக்கட்டும்...

ERP  இம்சைகளில் சில...

UNIONS, CONTRACTORS,SUPPLIERS, LANDLORDS 
ஓய்வு பெற்றவர்கள்... மரித்தவர்கள்..
மரித்தவர்களின் வாரிசுகள்.. .என 
ERP யில் எல்லோரும் VENDORகளே...
எனவேதான் 
ஒப்பந்த ஊழியரும் ஒப்பந்தகாரனும்..
ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர்.

ஓய்வு பெறப்போகும் தோழர்களின்

LAST PAY CERTIFICATE - LPCயில் 
SUPERANNUATION என்பதற்குப் பதிலாக 
RESIGNATION என்றே உள்ளது. 
பொருத்தமற்ற தனியார் நிறுவன சொல்லாடல்கள் பல  
ERPயில் அப்படியே காப்பியடிக்கப்படுகின்றன...

ERPயில் தற்போது இடைக்கால பில் பட்டுவாடா 

Supplementary bill என்பதே கிடையாது.. 

GPF விண்ணப்பம் ERP மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும் என கூறினார்கள். ஆனாலும் இன்று வரை வெள்ளைப் பேப்பரில்தான் விண்ணப்பம் செல்கிறது. GPF இருப்புக்கணக்கு என்பது  துரும்பாய் இளைக்கிறது.  மனம் இரும்பாய் கணக்கிறது.


ஓய்வு பெறும் தோழர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் அன்றே விடுப்புச்சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இது மிகுந்த தாமதத்திற்கு உள்ளாகிறது. மரணமுறும் தோழர்களின் குடும்பங்களுக்கு மறுகணமே  விடுப்புச்சம்பளம்  வழங்கப்பட்டு அவர்களின் துயர் சிறிதேனும் குறைக்கப்பட்டது. ஆனால் ERPயில் ஓய்வூதியத்திற்குப்   பின்புதான் விடுப்புச்சம்பளம் வருகின்றது. 

ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது இலாக்கா கடன்கள் ஏதுமிருந்தால் அவரது பணிக்கொடையில் GRATUITY யில் பிடித்தம் செய்யப்படும். ஆனால் ERPயில் விடுப்புச்சம்பளத்தில்தான் பிடித்தங்களை செய்ய வேண்டும் என SOFTWARE சண்டித்தனம் செய்கிறது.

ERP நடைமுறைக்கு வந்த பின் மருத்துவ பில்கள் மிகுந்த தாமதத்திற்குள்ளாகி விட்டன. பணியில் உள்ள ஊழியர்கள் ERPயை பயன்படுத்தி பில்களை அனுப்புகின்றனர். ஓய்வு பெற்றோருக்கு வழியில்லை.

காசளர்களுக்கு CONVEYANCE  ALLOWANCE போட முடிவதில்லை. பயணப்படி, LTC ஆகியவற்றின் நிலையும் இதுதான்.

ஒரு எழுத்தர் விண்ணப்பிக்கும் விடுப்பு GM அனுமதிக்கு செல்கிறது. இது MAPPING செய்வதில் வந்த கோளாறு. இது சரி செய்யப்பட வேண்டும். மேலும் விடுப்புக்கணக்கு விடை காண முடியாத பிணக்காக சிலருக்கு உள்ளது.

ஊழியர்களின் சொந்த விவரங்கள், பணிக்கால விவரங்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ஆகியவை மனம் போன போக்கிலே ERP யில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வருமான வரி, தொழில்வரி போன்ற வரிப்பிடித்தங்களில் 
வரிக்கு வரி குழப்பம் விளைகிறது.

கடன்களைப் பொருத்தவரை கடன் முடிந்த பின்னும் பிடித்தம் தொடர்கிறது. இது போலவே LIC, PLI  போன்ற ஆயுள் காப்பீடுகள் முதிர்வடைந்தாலும்    பிடித்தங்கள் மீண்டும் தொடர்கிறது.  நம்மை ERP க்கு ரொம்ப பிடித்துப்போனதே காரணமாகும்.

சங்கப்பிடித்தத்தில் எந்த சங்கத்தை சேர்ந்தவர் என்ற குறிப்பு இல்லை. யாதும் சங்கம் யாவரும் உறுப்பினர் என்பது பின்பற்றப்படுகிறது. மனமகிழ் மன்ற பிடித்தங்களில் ADDITIONAL RECOVERY  கூடுதல் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

தோழர்களே...
ERP இம்சைகளை இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். கடைசியில் சலிப்புத்தான் மிஞ்சும்.

அதெல்லாம் சரி ... 
பல ஆயிரம் கோடிகளைக்கொட்டி 
இந்த ERP நடைமுறைக்கு வந்துள்ளதே...
ஒரு பிரயோசனமும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது..
ERPயிலும் பலன்கள் உண்டு... 
அதே சமயம் அவஸ்தைகளும் உண்டு...
பலன்கள் பெருக வேண்டும்... 
அவஸ்தைகள் குறைய வேண்டும்...
இதுவே நமது எதிர்பார்ப்பு...

நாம் தொழில்நுட்பத்தை நிச்சயம் வரவேற்கிறோம்...
ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளை
சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இல்லறமே நல்லறம் என்றார் வள்ளுவர்...
அந்த இல்லறத்துணை கோளாறாக அமைந்து விட்டால் 
நல்லறம் நரகமாக மாறி  விடும்...
அதே நிலைதான் ERP யிலும்...


எனவே நாம் அன்றாடம் 
அல்லல்படும் பிரச்சினைகளை 
நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்ட 
இன்று 19/03/2015 காலை 
காரைக்குடி  பொதுமேலாளர் அலுவலகம் 
முன்பு கூடிடுவோம்.. 
வாரீர்... தோழர்களே...
பாலுக்கு வழியில்லை...
காரைக்குடி முத்துமாரியம்மன் 
பால்குடத்திருவிழாவில்
BSNL தோழர்கள் பக்த கோடிகளின் பசியாற்றும் காட்சி 

பாலுக்கு  வழியில்லை... என 
பசியின் கொடுமை கூறினார் 
பாட்டாளிகளின் தோழர் ஜீவா..

அவர் வாழ்ந்த செட்டிநாட்டு மண்ணிலே..
இன்று பாலுக்கு வழியில்லை..
ஆம்.. தோழர்களே...
ஆறாய்ப் பெருகி ஓடும் பாலுக்கு 
அம்மன் ஆலயத்தை விட்டு 
விலகிச்சென்று வெளியேற வழியில்லை...

காவல் தெய்வம் மாரியம்மனுக்கு...
பக்திப்பெருக்கால் பக்தர்கள் பால் பெருக்கி 
குடம் குடமாய் கொட்டியதால் 
கடந்த ஒரு வாரமாக 
காரைக்குடியில் பாலாறு 
கரைபுரண்டு ஓடுகிறது...
காரைக்குடி மஞ்சளாடை கட்டி 
மங்களக்குடியாகிப் போனது...

அலுவலகத்தில் இல்லாத  அரவம் 
சர்ப்பக்காவடிகளில் படமெடுத்தது ...

எங்கும் கூட்டம்... ஏகப்பட்ட கூட்டம்...
பாவம் நேற்று மரித்துப்போன 
ஓய்வு பெற்ற தலைமை எழுத்தர்
M.அருள் மட்டும் தனிமையில்  கிடந்தார்...
அம்மன் அருள் பெற...
அனைவரும் சென்று விட்டதாலே...
அமரர் அருள் தனிமையானார்..
காலம் நேரம் தவறாத அவர்...
நேரங்கெட்ட காலத்தில் தவறி விட்டார்..
நமக்கு அமரர் அருளை மட்டுமே 
பார்க்க முடிந்தது...
அம்மன் அருள் கிட்டவில்லை...
ஒரு நாளைக்கு ஒரு அருள்தானாம்...

அம்மன் அருளுக்குத்தான்வழியில்லை...
அலுவலகம் செல்லவும்   நமக்கு வழியில்லை...
அன்பு கொண்ட நமது தோழர்கள்..
அலுவலக வாயிலிலே...
அன்னதானம் செய்து..
அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தார்கள்...

சங்க கூட்டத்தை விட
சந்தோசமாக நமது தோழர்கள் 
சளைக்காமல் அறப்பணி செய்து கொண்டிருந்தார்கள்...

அஞ்சு ரூபா சங்கத்திற்கு கொடுக்காதவர்கள் கூட 
அம்மனுக்கு ஆயிரம் கொடுத்ததாக கேள்வி...
அதையெல்லாம் பார்த்தால் கதை நடக்காது...
அன்னதான வரிசையில் நாமும் ஐக்கியமானோம்...

நாடாள்வோருக்கு நல்ல புத்தி பிறக்க 
நல்லறம் வளர... 
நாடு செழிக்க... 
நலிந்தோர்  வாழ்வு நலம் பெற..
நமது துறை மேம்பட.. 
ERP  இம்சைகள் தீர...
நாமும் அம்மனை 
நமது பங்குக்கு வேண்டிக்கொண்டோம்..

வழியெங்கும் மஞ்சளாடை கட்டி 
பக்த வெள்ளம் கரை புரண்டு சென்றது..

எங்கோ ஒரு ஓரத்தில்..
சிவப்புத்துண்டு போட்ட ஒருவர் 
யாருமே எதிரே இல்லாத நிலையில்...
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை 
நார் நாராக கிழித்துக்கொண்டிருந்தார் ...
பாவம்...
கேட்பதற்கு நாதியில்லை.. 
ஏன் நாமேயில்லை..

Monday, 16 March 2015

IMMUNITY FROM TRANSFER 
சங்க நிர்வாகிகளுக்கு மாற்றல் விதிவிலக்கு 

BSNLலில் அங்கீகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் 
இரண்டாம் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு மாற்றலில் இருந்து விதிவிலக்கு அளித்து BSNL நிர்வாகம் ஏற்கனவே உத்திரவிட்டிருந்தது. அதில் கூடுதல் திருத்தங்கள் செய்து 13/03/2015 
அன்று மேலும் உத்திரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி 
 • அங்கீகரிக்கப்பட்ட  முதல் மற்றும் இரண்டாம் சங்கங்களின் செயலர்,உதவிச்செயலர்  மற்றும் பொருளாளர் ஆகியோருக்கு மாற்றலில்  இருந்து விலக்கு அளிக்கப்படும். 
 • அங்கீகார காலமான 25/04/2013 முதல்  24/04/2016 வரை  இந்த   விலக்கு அளிக்கப்படும்.
 • மேற்கண்ட சலுகை அகில இந்திய சங்கம் , மாநிலம் மற்றும் மாவட்டச்சங்கங்களுக்கு  பொருந்தும். கிளைகளுக்கு இச்சலுகை இல்லை.
 • சங்கம் மாறினாலும்  இச்சலுகையை ஒரு முறை மட்டுமே அனுபவிக்க முடியும். மாற்று சங்கங்களுக்கு சென்று மறுபடியும் இச்சலுகையை அனுபவிக்க முடியாது. 
 • மாவட்ட மட்டத்தில் ஒரு முறை அனுபவித்தால் மறுமுறை மாநில அளவில்தான் சலுகையை அனுபவிக்க  இயலும்.

அதிகாரிகள் சங்கங்களுக்கான மாற்றல் விதிவிலக்கு உத்திரவில் மேற்கண்ட சலுகை அங்கீகார காலம் முழுமையும் செல்லும் என நிர்வாகம் கூறியிருந்தது. தற்போது இது ஊழியர் சங்கங்களுக்கும் பொருந்தும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

Sunday, 15 March 2015

மாறினால் மாறட்டும்...


காரைக்குடியில் 14/03/2015 அன்று மாவட்டச்செயற்குழு நடைபெற்றது. 

மாவட்டத்தில் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் மண்மூடிக்கிடக்கின்றன.  
காரணம் மண்ணின் மைந்தர்களான துணைப்பொதுமேலாளர் (நிர்வாகம்)  மற்றும்  உதவிப்பொதுமேலாளர் (நிர்வாகம்) 
DGM(ADMIN)  & AGM(ADMIN)  ஆகியோரின் அலட்சியப்போக்கே...

மேலும் நிர்வாக அதிகாரிகள் 
மிக நீண்ட காலம் அப்பதவிகளில் இருப்பதால்
தானடித்த மூப்பு தானாகவே வளர்ந்து விட்டது.

அதிலும் உதவிப்பொதுமேலாளர் 
உதவிகரமற்ற மேலாளராக மாறிப்போனது  கண்டும் .. 
பாரபட்சத்துடன் செயல்பட்டு... 
பல்வேறு பிரச்சினைகளை கிடப்பில் போட்ட நிலை கண்டும்...
ஈர நெஞ்சோடு அணுகவேண்டிய பிரச்சினைகளை 
ஈவிரக்கமின்றி கையாளும் கொடுமை  கண்டும்  
மனம் மிக வேதனை கொண்டது மாவட்டச் செயற்குழு.

கேள்விக்குறி போல்  முதுகு வளைந்து பணிவிடை செய்யும் 
ஒப்பந்த ஊழியர்களின் துன்பங்களை துயரங்களை  
துளியளவும் ஏறிட்டுப் பார்க்காத அழுத்தம் கண்டும்   
வருத்தம் கொள்கிறது செயற்குழு.

தோழர்களே...
இனி வருத்தப்பட்டு  பாரம் சுமப்பதில் பலனில்லை. 
மாறாக நிர்வாகத்தை எதிர்த்து நிற்பதே 
பிரச்சினைகள்  தீர்விற்கான வழியாகும்.

மாவட்ட நிர்வாகம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்...
இல்லையேல்.. தீர்வுக்குத்தடையாக இருக்கும் 
அதிகாரிகளை மாற்ற வேண்டும்..

நம்மைப் பொருத்தவரை..
தனி நபர்களை மாற்ற வேண்டும் என்பது நமது கொள்கையல்ல..
மாறாக அவர்கள் தாங்களாகவே மாறிக்கொள்ள வேண்டும்...
தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நமது நிலை..

ஆனாலும்  மாற்றம் என்பது 
அவர்களது அணுகுமுறையில் இல்லையெனில்..
"மாறினால் மாறட்டும்... இல்லையேல் மாற்றுவோம்"
என்னும் பாடல் வரிகளை நாம் பின்பற்றுவதை தவிர வழியில்லை..

தோழர்களே...
ஏராளமான  பிரச்சினைகள் இங்கே தேங்கிக் கிடக்கின்றன.
ஓரிரண்டை உங்கள் கவனத்திற்கு 
ஒரு சோற்றுப்பதமாய் சுட்டிக்காட்டுகிறோம்...


பாவத்தின் சம்பளம்  மரணம்...என்பார்கள்
அப்படி மரித்த ஊழியர்களின் விடுப்புச்சம்பளமோ..
எட்டு மாதம் ஆகியும் எட்டாக்கனியாய் உள்ள எட்டிக்காய் நிலை..

தோழர்.சங்கர், TM மரித்து மாதம் பத்து ஆகியும்
ஈமக்கிரியை செய்ய  வழங்கப்படும் சேம நல நிதி  உதவித்தொகை
வருடத்திதிக்கு கூட வந்து   சேராத கொடுமை...

தோழர்.பிரான்சிஸ் TM இறந்து ஆண்டு ஒன்று ஆகியும்
அவரது ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு நீக்கத்திற்கான  APPEAL
அவரைப்போலவே கல்லறையில் உறங்கும் காட்சி...

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தோழர்.ஞானமுத்துவின்
விருப்ப ஓய்வு  விண்ணப்பம்
நாள் பட்ட   வாதங்களினால் (DISCUSSION)
வாதம் வந்து கிடக்கும் அவலம்...

ஓய்வு பெற்ற தோழர்களுக்கும் ...
சிவலோக பதவி அடைந்த  தோழர்களுக்கும்  கூட 
நாலு கட்டப்பதவி இன்னும் வழங்கப்படாத  கொடுமை...

மேலும்..
நாள்பட்ட மாற்றல்கள்
நாற்பதுக்கும்  மேலே தேங்கிக்கிடக்கும் நாலுகட்டப்பதவி உயர்வுகள்...
TTA தோழர்களுக்கு பணி நிரந்தர ஆணை... 
TTA பயிற்சிக்கால உதவித்தொகை நிலுவை..
ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடித்தல்..
தற்காலிகப்பணி நீக்க காலத்தை முறைப்படுத்துதல்..
பதவி இருந்தும் TM பணியில் அமராத நிலைமை...
என பலப்பல பிரச்சினைகள் தேங்கிக்கிடக்கின்றன.

ஊழியர்களையும் அவர்களது  பிரச்சினைகளையும்
நம்மை விட நன்கு தெரிந்த
நமது நிர்வாக அதிகாரிகள்
நமது கூற்றுக்களில் உள்ள உண்மைகளை  உணர்ந்து
அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றோம்.

நமது கூற்று  அவர்கள் கண்ணை மறைக்கலாம்...
நம்மை கூற்றுக்கு இரையாக்க அவர்கள்   துடிக்கலாம்..
அதை விட
நமது கூற்றில் உள்ள உண்மைகளை..
அதில் பொதிந்து கிடக்கும் ஊழியர் துன்பங்களை 
ஒரு கணமேனும் சிந்திக்க வேண்டும்..
அதனை தீர்த்திட வேண்டும்..
இதுவே நமது வேண்டுகோள்...
அஞ்சலி 

பொதுவுடைமை இயக்கத்தின் 
மூத்த தலைவரும் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான 

தோழர்.கூத்தக்குடி சண்முகம் 
அவர்கள் 
15/03/2015 அன்று காரைக்குடியில் 
உடல் நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.
நமது அஞ்சலியை  உரித்தாக்குகின்றோம்.
இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
இந்தியாவில் கோட்சேக்கு  சிலை
எந்த அரசுப்பதவியும் வகிக்காத  அண்ணல் காந்திக்கு 
இந்தியாவின் தேசத்தந்தை என்ற காரணத்தால்  
இங்கிலாந்தில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.மகாத்மாவைச்  சுட்டுக்கொன்ற 
மாபாதகன் கோட்சேவுக்கு..
மதவெறியர்களால்   
 இந்தியாவில்  சிலை எழுப்பப்பட்டுள்ளது.

                           வாழ்க... பாரத மணித்திருநாடு...

Wednesday, 11 March 2015

செய்திகள்

இன்று 12/03/2015 கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 21&22
 வேலை நிறுத்த அறிவிப்புக்கடிதம் BSNL நிர்வாகத்திடம் அளிக்கப்படுகின்றது. அதனையொட்டி நாடு முழுக்க நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 கூட்டமைப்பு சார்பில் நடைபெறுகின்றது.
================================================================
நலிவடைந்த நிலையில் உள்ள 65 பொதுத்துறைகளில் 
5 பொதுத்துறைகளை மூடுவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் கனரக தொழில் அமைச்சர் கேள்வி நேரத்தில் கூறியுள்ளார். இவற்றில் MTNL, AIR INDIA மற்றும் HMT ஆகிய பிரபலமான நிறுவனங்களும் அடங்கும். ஏனைய நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து தொழில் வாய்ப்பை இழந்த நிலையில் சென்ற ஆண்டு லாபம் காட்டியுள்ள MTNL நிறுவனமும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது கேள்விக்குறியது. BSNL மற்றும் MTNL  இணைப்பிற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பு இருக்கலாம்.

 நேரு உருவாக்கி வைத்ததை மோடி மூடுவாராக...
==============================================================

26/02/2015 அன்று கூடிய BSNL BOARD வாரியகூட்டத்தில் 
DELOITTEE குழுவின் அறிக்கையை அமுல்படுத்த 
ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

 சேவை மேம்பாடு, NETWORK பேணுதலை தனியாருக்கு விடுதல், 
விற்பனை மற்றும் சந்தைப்பகுதியை விரிவு படுத்துதல்,
ஊழியர் எண்ணிக்கையை சரி செய்தல் மற்றும்
 திறமைக்கேற்ற வெகுமதி அளித்தல்
 போன்றவற்றை நடைமுறைப்படுத்த 
உரிய திட்டங்களை வகுக்கக்கோரி நிர்வாகக்குழுவை 
BSNL BOARD கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது. 
ஏற்கனவே நிர்வாகம் DELOITTEE குழு பரிந்துரையால் 
ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என உறுதி அளித்துள்ளது. 
உறுதிமொழியை நிர்வாகம்  உறுதியாக கடைப்பிடிக்குமா 
என்பது போகப்போக தெரியும்.
============================================================
TRAI  முடிவின்படி மார்ச் 2015 முதல் IUC கட்டணம் ஒழிக்கப்படுவதால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச SIMக்கு 
தனியார் தொலைபேசியை அழைப்பதற்கான வசதி தரப்பட வேண்டும் 
என  நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
============================================================