Monday, 30 November 2015

இலையுதிர்க்காலம் 
 
கார்த்திகையில் கனமழை...
ஐப்பசியில் அடைமழை...
ஆனால் இனி BSNLலில்
தொடர்ந்து ஓய்வு மழைதான்...
 
இந்த இலாக்காவின் வளர்ச்சிக்கு
தளர்ச்சியின்றி பாடுபட்ட
நமது மூத்த தோழர்கள்..
இனி தொடர்ந்து பணி நிறைவு பெற இருக்கின்றார்கள்..
 
குறைந்த தொழில் நுட்பத்தில்...
குறைந்த சம்பளத்தில்...
குறைந்த சலுகைகளில்...
குறைந்த வசதிகளில்... 
நிறைந்த பணி செய்தவர்கள் அவர்கள்...
பணி நிறைவு பெறவிருக்கும்  
அவர்களை  மனதார வாழ்த்துவோம்...
 
வரும் 5 ஆண்டுகளில் 
ஓய்வு பெறப்போவோர் எண்ணிக்கை...
 
வருடம்       எண்ணிக்கை 
2016........    13406
2017........    14622
2018..........  16784
2019........... 18392
2020............17551
 
மொத்த எண்ணிக்கை... 80755
கருத்தினில் நிறைந்த.. கடலூர் 
மாவட்டசெயலர்கள் கூட்டம்..

ஆழி சூழ் கடலூரிலே..
தமிழ் மாநில மாவட்டச்செயலர்கள் கூட்டம்
மாநிலத்தலைவர் தோழர்.இலட்சம் அவர்கள் தலைமையில்..
மாநில பொறுப்புச்செயலர் தோழர்.முரளி...
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி..
சம்மேளனச்செயலர்கள்  
தோழர்கள்.ஜெயராமன்,  SS.கோபாலகிருஷ்ணன்...
அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர்.காமராஜ்,
மாநிலப்பொருளர் தோழர்.அசோக்ராஜ்,
மூத்த தலைவர் தோழர்.சேது ஆகியோர் பங்கேற்பில்
27/11/2015 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

அவுரங்கபாத் மத்திய செயற்குழு முடிவுகள் விளக்கப்பட்டன.
வேலூர் தமிழ் மாநில மாநாட்டிற்கு திட்டமிடப்பட்டது.
எதிர்வரும் ஊழியர் சங்கத்தேர்தலை
எதிர்கொள்ள.. தொடர்ந்து வெல்ல.. உறுதி எடுக்கப்பட்டது.

மழையில் மிதந்தாலும்..
புயலில் தவித்தாலும்...
வெயிலில் வாடினாலும்...
சங்கம் இடும் கட்டளையை 
சளைக்காமல்.. சலிக்காமல்...செய்து முடிக்கும்..
தோழர்களின்  உணர்வுகளை முடுக்கும்...
கடலூர் மாவட்டச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

Sunday, 29 November 2015

 
BSNL 2018ல் நிகர லாபம் பெறும் என்று
தொலைதொடர்புத்துறை அமைச்சர்
நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
சென்ற நிதியாண்டில்  2014-15ல் 
 நமது நிறுவனம் 27,242கோடி  வருமானமும் 
672 கோடி OPERATIVE PROFIT எனப்படும்
கூட்டு லாபமும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
================================================
SR.TOA, TTA மற்றும் PM  கேடர்களில்
RULE 8 எனப்படும் வெளிமாற்றல்கள்
அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
16/10/2015 அன்று நடைபெற்ற
JCM  தேசியக்குழுக்கூட்டத்தில்
RULE 8 மாற்றல்களுக்கு தடையேதும் இல்லை
என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே அதனை தனி விளக்க உத்திரவாக
மாநில நிர்வாகங்களுக்கு அனுப்பிட
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
நாலு கட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்குவதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு தனது அறிக்கையை இன்னும் நிர்வாகத்திற்கு அளிக்காமல் உள்ளது. எனவே அதனை விரைவு படுத்திட நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.  
================================================
வங்கிகளைப் போலவே நமக்கும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டதாக கூறி போலியான டுபாக்கூர் உத்திரவு ஒன்று நம்மிடையே வலம் வந்தது. BSNLலில் எத்தனையோ பணிகள் இருக்கும்போது தங்களது பொன்னான நேரத்தை இது போன்ற வீண் செயல்களில் தோழர்கள் செலவிடுவது வருத்தத்திற்குரியது.
================================================
2016 புத்தாண்டிற்கான
நாட்காட்டி மற்றும் நாட்குறிப்புகளை  
(தமிழில் சொல்வதென்றால்... காலண்டர் மற்றும் டைரி )
அச்சிட்டு வெளியிட BSNL  தலைமை அலுவலகம்
மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
================================================
கருணை அடிப்படையிலான பணிகளுக்கு மரணமுற்ற ஊழியரின் மகன் அல்லது மகள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. மேலும் சொந்த வீடு இருந்தால் எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு கருணைப்பணிக்கான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்து
புதிய மதிப்பெண் நடைமுறையை அமுல்படுத்திட
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுத
தற்போது SSLC கல்வித்தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
GR'D மற்றும் RM பதவிகளில் SSLC படித்த தோழர்கள் மிக மிகக்குறைவு. எனவே மேற்கண்ட கல்வித்தகுதியை சிறப்பு அனுமதியாக ஒரு முறை தளர்த்தி அனைவரும் தேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்கக்கோரி
நமது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Thursday, 26 November 2015

திப்பு மிக்க... மன்னவன் திப்பு...

உலக வரலாறு ஒரு சிலரையே மாவீரன் என்கிறது...
அந்த வரிசையில்...வரலாறு போற்றும்
மதிப்பு மிக்க மன்னவன் மாவீரன் திப்பு ஆவான்...
 
தேசத்தந்தையைக்கூட  அவமதிக்கும் இந்த தேசத்தில்...
ஒரு இஸ்லாம் மன்னனை.. இந்திய தேசத்தின் மதவாதிகள் 
இன்று இகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை...
 
ஆனால்.. ஒரு அரும்பெரும் மன்னனின்.. மனிதனின்
அரிய பண்புகளை நாம் அறிந்து கொள்வது அவசியம்...
 
ஔரங்கசீப்  50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்...
திப்பு 50 ஆண்டுகள் கூட  வாழவில்லை...
ஆனாலும்  1000 ஆண்டுகளில் யாரும் செய்யாத 
அரிய பணிகளைத்தன் ஆட்சியில் செய்தார்...
 
பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்..
எதிரியாக இருந்தாலும்...
அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்பது
திப்புவின் ஆழமான கொள்கை...
பிணையக்கைதிகளிடம் தவறுதலாக நடக்க முற்பட்ட 
தளபதி மக்பூல்கானை தானே சுட்டுக் கொன்றார்...
 
வெள்ளையரை வாளும்.. வேலும் கொண்டு
எதிர்க்க இயலாது என்பதை உணர்ந்து 
நவீன பீரங்கிகளையும்.. துப்பாக்கிகளையும்...
ஏவுகணைகளையும் உருவாக்கினார்..
திப்புவின் ஏவுகணை தொழில் நுட்பம்
மேலை நாட்டவர்களுக்கே பாடம் சொன்னது...
 
திப்புவின் கஜானா காலியாகி
பொருளாதார பற்றாக்குறை வந்தபோது...
மது விற்பனைக்கு அனுமதி அளிக்க 
திப்புவின் மந்திரி ஆலோசனை சொன்னார்...
"கஜானாவை விட மக்களின் நலனே முக்கியம்..  
ழுக்கமே பிரதானம்...என்று கூறி 
மது விற்பனைக்கு மறுப்பு தெரிவித்தார்...
இன்றைய அம்மாக்கள் உணர வேண்டிய செய்தி இது...
 
வெள்ளையர்கள் கஞ்சா பயிரிட அனுமதி அளித்த போது 
திப்பு தனது ஆட்சியில் கஞ்சா பயிரிட தடை விதித்தார்...
 
அனாதையான இளம்பெண்களை கோவிலுக்கு
தேவதாசியாக்கும் முறைக்கு தடை விதித்தார்...

தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் முறையைத் தடை செய்தார்.
அரசாகவே இருந்தாலும் கூலி கொடுக்காமல்
யாரிடமும் வேலை வாங்கக் கூடாது என ஆணையிட்டார்...
வரதட்சிணைக்கு எதிராக சட்டம் இயற்றினார்...
கீழ் சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற
கொடுமையை மாற்றி  அவர்களை மேலாடை அணிய வைத்தார்..

கோவில்களுக்கும்.. அந்தணர் மடங்களுக்கும்... மசூதிகளுக்கும் 
ஆண்டு தோறும் நன்கொடை வழங்கினார்...

இராணுவத்தில் பணிபுரிவோருக்கு இலவச நிலம் வழங்கினார்...
தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு சொந்தமாக நிலம் கொடுத்தார்...
உழுபவருக்கு நிலத்தை சொந்தமாக்கினார்...

வெள்ளையரை போரில் மட்டும் எதிர் கொள்ளாது...
வணிகத்திலும் எதிர் கொண்டார்...

14 இடங்களில் வணிக மையங்கள் அமைத்தார்..
20 வணிகக்கப்பல்களை அலைகடலில் மிதக்க விட்டார்..
துருக்கி வரை துணிந்து சென்று  வணிகம் செய்தார்..

பணப்பயிர் உற்பத்தியை ஊக்குவித்தார்..
பட்டுப்பூச்சி வளர்ப்பை உண்டாக்கினார்..
பெங்களூரில் லால்பாக் என்னும் தாவரவியல் பூங்கா உருவாக்கினார்...
கிருஷ்ணசாகர் அணைக்கட்டிற்கு அடிக்கல் நாட்டினார்...

விவசாயிகள் தவறு செய்தால் தண்டனை கொடுக்காமல் 
மல்பெரி மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என
தண்டனை முறையை மாற்றினார்.

படையெடுப்பின் போது எதிரி நாட்டு மக்களிடம்
இரக்கமுடன் நடக்க உத்திரவிட்டார்..
குழந்தைகளுக்கும்.. முதியவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்தார்...
விவசாயிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்தார்..

இவ்வாறாக அவரது சாதனைகளை நாம் பட்டியல் இட்டால்
அது அனுமன் வாலை விட அதிகம் நீளும்...

இவை யாவற்றுக்கும் மேலாக..
மனித நேயத்தை விதைத்தார்...
மத நேயத்தை போற்றினார்..

சிவகங்கையின் வேலு நாச்சியாரைத்தன்
சொந்த சகோதரியாகப் போற்றினார்..
ஆயிரம் படை வீரர்களும்.. பீரங்கிகளும் அளித்து
வெள்ளையனை விரட்டிட உதவினார்...
வேலு நாச்சியார் அடைக்கலமாக திண்டுக்கல்லில் இருந்த போது..
அவரது குல தெய்வமான
இராஜ இராஜேஸ்வரியை வழிபட முடியாமல் வருந்திய போது..
திண்டுக்கல் கோட்டையிலே
இராஜ இராஜேஸ்வரிக்கு கோவில் அமைத்து 
வேலு நாச்சியாரின் பக்திக்கு பாதை அமைத்தார்..

மருது சகோதரர்கள் மதி மயங்கி..
வெள்ளையனிடம்  நட்பு கொண்டபோது..
வெள்ளையனின் நண்பர்கள் எனக்கு எதிரிகள் என்று அறிவித்து 
மருது சகோதரர்களின் மயக்கத்தை விரட்டினார்...

ஆற்காடு நவாபு.. ஹைதராபாத் நிஜாம்..
தொண்டைமான்.. திருவிதாங்கூர் மன்னர்   போன்ற
துரோகிகளால்  காட்டிக் கொடுக்கப்பட்டு...
தனியொரு மனிதனாகவே போராடி வீழ்ந்தார்...

இன்று அவரது வாரிசுகள்
ரிக்ஸா ஓட்டியும்.. டீக்கடை நடத்தியும் 
வாழ்க்கை நடத்துகின்றார்கள்..

அவரது புரட்சிகர ஆட்சியின் சாதனைகளை 
நன்றியோடு நினைவு கூற வேண்டிய இந்திய சமுதாயம் 
மதம் என்னும் தோல் போர்த்தி..
அவரை இந்துக்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது
கொடுமையிலும் கொடுமை...

வரலாற்றைப் புரட்டும் பாவிகளின்
காவி முகங்களை கிழிப்போம்...
மனித நேயத்தோடு வாழ்ந்து மறைந்த
மாவீரன்களை மதிப்போம்...

Wednesday, 25 November 2015

வாழ்க... வளமுடன் 
திருமண வரவேற்பு விழா 
 
சம்மேளனச்செயலர் 
தோழர்.ஜெயராமன்
அவர்களின்  புதல்வி  திருநிறைச்செல்வி.
 
கிருத்திகா -முத்துவேல் 
திருமண வரவேற்பு விழா..
 
27/11/2015 - வெள்ளி - மாலை 6 மணி 
சுபலட்சுமி திருமண மண்டபம் 
கடலூர்.
 
தமிழும்.. கலையும் போல்  தழைத்து வாழ...
மணமக்களை மனதார வாழ்த்துகிறோம்..
 
வாழ்த்துக்களுடன்...
NFTE  தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் 
காரைக்குடி.
NFTE 
தமிழக மாவட்டச்செயலர்கள் கூட்டம் 
மற்றும் சிறப்புக்கருத்தரங்கம் 
 
27/11/2015 - வெள்ளி - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம்  - கடலூர்.
 
 • மாநில மாநாடு 
 • அவுரங்காபாத் மத்திய செயற்குழு முடிவுகள் 
 • மற்றும் இன்ன பிற...
 
தலைவர்கள் பங்கேற்பு...
சிறப்பு சிறுவிடுப்பு...
 
தோழர்களே.. வாரீர்...
அஞ்சலி 
 
நிலக்கோட்டை பொன்னம்மா..
அரசியலில் நேர்மையின் சின்னம்..மா
உன்னோடு போனதம்மா..
 எளிமையும் நேர்மையும்..
மண்ணோடு...மண்ணம்மா ..

Monday, 23 November 2015

நவம்பர்  - 24
சம்மேளன தினம் 

NFPTE 
சம்மேளன தின சிறப்புக்கூட்டம் 
24/11/2015 - செவ்வாய்  - காலை  10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி.
----------------------------------------------------------------------------
சம்மேளன தின சிறப்புக்கூட்டம் 
மற்றும் 
தோழர்.வீர.ஆறுமுகம் - TTA 
பணி நிறைவு பாராட்டு விழா
--------------------------------------------------------
மாலை 05.00 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
--------------------------------------------------------
சிறப்புரை 
தோழர். சேது 
தோழர். ஆர்.கே.,
தோழர்களே... வருக...
ஓரடி முன்னால்...

இன்று 23/11/2015 
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளின் கோரிக்கைகள் மீது   
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

பல்வேறு பிரச்சினைகளில் நிர்வாகம் 
சாதகமான நிலை எடுத்துள்ளதால் 
நமது 24/11/2015 உண்ணாவிரதப்போராட்டம் 
விலக்கிக்கொள்ளப்பட்டது. 

அடிமட்ட ஊழியர்களின் நியாயமான 
கோரிக்கைகள் தீர்விற்கு வழி வகுத்த 
அருமைத்தோழர்.ஆர்.கே., 
TMTCLU மாநிலச்செயலர் தோழர்.செல்வம்,
தமிழ் மாநிலச்சங்கம், 
தமிழ் மாநில நிர்வாகம் மற்றும் 
காரைக்குடி மாவட்ட   நிர்வாகத்திற்கு 
நமது நன்றிகள் பல...

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்வில் 
தொடர்ந்து நம்மோடு இணைந்து செயல்பட்ட 
BSNLEU சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக...

பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 • பல்வேறு மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போல் மாதம் 26 நாட்கள் ஊதியம் நடைமுறைப்படுத்தப்படும்.
 • மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 • 2016 பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
 • மாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கப்படும்.
 • இந்த மாதம் ESI மருத்துவ அட்டை வழங்கப்படும். 
 • அடையாள அட்டை டிசம்பரில் வழங்கப்படும்.
 • வைப்புநிதி UAN  வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 • பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதி EPF WITHHELD AMOUNT  ஜனவரி 2016க்குள் ஊழியரின் கணக்கில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
 • மரணமுற்ற தோழர்.ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
 • நிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் தனியாகப் பணி செய்யும் தோழர்களுக்கு எட்டு மணி நேரப்பணி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
 • தேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கப்படும்...


தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான 
சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு..
மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் கூலி...
அவரவர் செய்யும் பணிக்கேற்ற சம்பளம்...
சிறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு...
கேபிள் பணி செய்யும் தோழர்களுக்கு கூடுதல் சம்பளம்...
காவல் பணி செய்வோருக்கு WATCH AND WARD சம்பளம்...
போன்ற கோரிக்கைகள் மீது எந்தவித முன்னேற்றமும் இல்லை..
இவை யாவும் தங்களது  நிர்வாகத்தின் 
அதிகார வரம்புக்குட்படாதவையாக  
மாவட்ட நிர்வாகம் கருதுகிறது..
ஆயினும் அடிப்படையான 
ஒரு சில பிரச்சினைகளில் தீர்வை எட்டியுள்ளதால் 
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் பின்னடைவை எட்டாமல்
ஓரடி முன்னேறியுள்ளது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

தோழர்களே...
கைக்கெட்டிய  உரிமைகளுக்காக மகிழ்வு கொள்வோம்...
கைவராப்பலன்களுக்காக  கவலை கொள்ளோம்...
காலம் கனியும் போது களம் காண்போம்... 
ஒப்பந்த ஊழியர் நலம் காப்போம்...

Sunday, 22 November 2015

வெளிச்சம் காணா வேர்கள்...

ஓரிரு தினங்களுக்கு முன்பு...
உள்ளூரில் நண்பன் ஒருவனின் 
அகால மரணத்திற்கு சென்று  விட்டு..
தோழர்களுடன் அரசுப்பேருந்தில்.. 
காரைக்குடி திரும்பிக்கொண்டிருந்தோம்...

வரும் வழியிலேயே... நமது தோழர் ஒருவருக்கு..

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல்...
குறைந்த ரத்த அழுத்தம் உருவாகி  உடல் நலிவு ஏற்பட்டு விட்டது...

உடனே.. திருவாடானை கிளைச்செயலர்..

தோழர்.பாலமுருகனிடம் தொடர்பு கொண்டோம்.
திருவாடானையிலேயே இறங்கி விடுமாறும்..
அங்குள்ள அரசு மருத்துவமனையில் 
சிகிச்சை பெறலாம் என்றும் சொன்னார்..

அரசு மருத்துவமனை என்றாலே பலருக்கு அலர்ஜிதான்....
ஆனாலும் ஆபத்தான கட்டமாக இருந்ததால்
திருவாடானையிலே இறங்கி விட்டோம்..
ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்...
மருத்துவர் பணி முடித்திருந்தாலும்...
நமக்காகவே காத்திருந்தார்...
பாதிக்கப்பட்ட தோழரின் நாடித்துடிப்பை சோதித்தார்...
நாடித்துடிப்பே தென்படவில்லை என்றும் 
நாற்பதுக்கு கீழே போய்விட்டதென்றும் கூறி விட்டு
அவசர அவசரமாக முதலுவி சிகிச்சையில் ஈடுபட்டார். 

இரண்டு மருத்துவர்கள்... மூன்று செவிலியர்கள்...
கடமையுணர்வோடு செயல்பட்டு.. 
நாடித்துடிப்பைச்சீர்செய்து  நலம் பெற வைத்தனர்.

மருத்துவருக்கு நன்றி தெரிவித்தோம்..

அவர் சொன்னார்.. 
"நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை... 
இதோ  இவருக்கு நன்றி  செலுத்துங்கள் என்று..
நம் தோழர்  ஒருவரைக் குறிப்பிட்டுக் கூறினார்"

மருத்துவர்  மேலும் தொடர்ந்தார்.. 

"நான் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்..
மகாதேவன் போன் செய்து...
அவசரமாக எங்கள் தோழருக்கு  சிகிச்சை அளிக்க வேண்டும் 
என கேட்டுக்கொண்டதால் நான் காத்திருந்தேன்....
காரணம்... 
மகாதேவன்.. காலையும் மாலையும் 
அரசு மருத்துவமனைக்கு வந்து 
BSNL சேவை சரியாக உள்ளதா? என நித்தமும் 
எங்களை கேட்டு விட்டுத்தான் BSNL அலுவலகம் செல்வார்...
ஏதேனும் பழுது என்றால் பறந்து வந்து சரி செய்வார்...
இங்கு பழுது என்பது சில நிமிடங்களே இருக்கும்...
எனவே அத்தகைய கடமை உணர்வுள்ள 
ஒரு தோழர்.சொன்னதால்தான் 
நான் பணி முடித்தும்... 
மதிய உணவு உண்ணாத நிலையிலும் 
இங்கே காத்திருந்தேன்" என்று சொன்னார்.

அவர் அளித்த சிகிச்சையை விட 
அவரது பேச்சைக்கேட்டதும்... 
நமது நாடித்துடிப்பு உற்சாகமாக ஓடத்துவங்கியது...

தோழர்களே...

யார்? இந்த மகாதேவன்...
ஆறு இலக்கத்தில் சம்பளம் பெறும் அதிகாரியா?
ஐந்திலக்கத்தில் ஊதியம் பெறும் ஊழியரா?
SDEயா? JTOவா? TTAவா? போன் மெக்கானிக்கா?
இல்லை.. தோழர்களே...இல்லை...
அவர்... ஒரு ஒப்பந்த ஊழியர்...

மாதம் மூவாயிரம் மட்டுமே சம்பளமாகப் பெற்று 
சாதாரண வாழ்க்கை நடத்தும் அடிமட்ட ஊழியன்..
தன் இளம்பருவத்திலே இருந்து..
இங்கு பணி புரியும் சாதாரண மனிதன்...
ஆனாலும் கடமை உணர்வு தவறாமல்..
BSNL தழைக்க தன் உழைப்பை சிந்தும் தோழன்..

இவனைப்போன்றவர்கள்தான்...

இந்த நிறுவனத்தின் இன்றைய வேர்கள்...
இவர்கள் வெளிச்சம் காண்பதில்லை...
இவர்களின் வேதனைகள் யாருக்கும் புரிவதில்லை..
ஆனாலும் வேர்களாக நின்று 
இந்த நிறுவனம் தாங்கும் 
இவர்களை நெஞ்சாரா வணங்குகிறோம்...

தோழர்களே...
ஆதி இரத்தினேஸ்வரர் 
அருள் புரியும் திருவாடானையில்...
அரசு மருத்துவமனையின் அற்புதம் தெரிந்தது...
அடிமட்ட ஊழியனின் அர்ப்பணிப்பும் புரிந்தது...

அர்ப்பணிப்பு மிக்க...மகாதேவன் போன்ற 
வெளிச்சம் காணாத.. வேர்களின் விடியலைத்தான்..
தொடர்ந்து இங்கே தேடிக்கொண்டிருக்கின்றோம்...
ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்விற்காக 
24/11/2015 சம்மேளன தினத்தன்று காரைக்குடியில்
 தோழர்.ஆர்.கே.., அவர்கள் தலைமையில் 
உரிமை மீட்பு உண்ணாவிரதத்திற்கு அறிவிப்பு செய்திருந்தோம். 

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக 
மாநில நிர்வாக அதிகாரிகளை சந்தித்ததின் அடிப்படையிலும்..
மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரிலும்..
 இன்று 23/11/2015 காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் 
பிரச்சினைகளுக்கு தீர்வு பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

ஒப்பந்த ஊழியர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல...
அவர்கள் நம் வீட்டுப்பிள்ளைகளே.. 
என்ற மனிதநேய உணர்வோடு 
பிரச்சினைகள் அலசப்படும் போது.. 
அவர்களின் கண்ணீரும் துடைக்கப்படும்.

நியாயங்களும்... தர்மங்களுமே... சட்டமாகின்றன...
ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் நியாயங்கள்..
 நிலை நிறுத்தப்படும் என நம்புகிறோம். 

Friday, 20 November 2015

வாழ்த்துக்கள் 
இன்று 21/11/2015 
பெங்களூருவில் துவங்கும் 

AIBSNLPWA 
அகில இந்திய BSNL 
ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 

அகில இந்திய மாநாடு 
வெற்றி பெற வாழ்த்துகிறோம்...

Tuesday, 17 November 2015

வார ஓய்வும்.. வரலாற்று உண்மைகளும்..

உலகம் ஒரு சேர விழித்ததில்லை...
உலகம் ஒரு சேர உறங்கியதில்லை...
ஓயாத உலகில்...
ஓய்வின்றி  நடக்கும் ஒரே நிகழ்வு
ஓய்வு ஒன்றுதான்...

மதம் ஓய்வை  விதியாக்கியுள்ளது...
மனிதம் ஓய்வை உரிமையாக்கியுள்ளது...

அந்தோ... BSNLலில் மட்டும்..
உழைக்கும் தொழிலாளிக்கு ஓய்வளிப்பதில்
விதி விளையாடுகிறது...
சட்ட விதி சதிராடுகிறது...
கெட்ட சதி தலைவிரித்தாடுகிறது...

நினைவலைகள்...
இராமேஸ்வரம்  கடலலைகளை நோக்கிப் பயணிக்கிறது...
வெள்ளையர்களிடமிருந்து விடிவு பிறந்த காலம்..
ஆனாலும் கொள்ளையர்களிடமிருந்து...ஏது விடிவு காலம்?

அன்று...
இராமநாதபுரம் பகுதியில்..
தரை மேல் பிறந்து தண்ணீரில் பிழைத்த மீனவர்கள்
நாள் முழுக்க.. வாரம் முழுக்க.. மாதம் முழுக்க..
நடுக்கடலில் மீன் பிடித்து தண்ணீரில் மிதந்தார்கள்..
ஓய்வு என்பதே இல்லாமல் கண்ணீரில் மிதந்தார்கள்...

அன்று.. அவர்கள் கரம் உயர்த்தி
குத்தகைக்காரர்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்கள் ஞாயிறு சர்ச்சுக்கு செல்ல வேண்டும்...
முஸ்லிம்கள் வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு செல்ல வேண்டும்..
இந்துக்கள் செவ்வாயன்று தங்கள் குலசாமிகளைக் கும்பிட வேண்டும்...
எனவே.. குத்தகைக்காரனே..
எங்களுக்கு வார ஓய்வு கொடு...

கேட்டவர்கள் மீனவர்கள்...
கேட்க வைத்தது.. யார்?
நம் மீனவர் சங்கம்...
இந்தியப் பொதுவுடைமைக்கட்சி...
அதன் தியாகத்தலைவர்கள்...
மங்களசாமி.. RH.நாதன்.. கூத்தக்குடி சண்முகம்...
மு.கல்யாண சுந்தரம் மற்றும் தலைவர்கள்..

கேட்டவுடன் சும்மா கொடுப்பானா?  குத்தகைக்காரன்?

சிலுவை சுமந்த பங்குத்தந்தையை படகு சுமக்க..
துடுப்பு போடும் படகில் உடுக்கோடு பூசாரியும்...
அலை தாங்கும் படகில்.. ஆலிம்ஷாவும்..
ஈரக்கடலில் இறைவனை வேண்டி.. நடுக்கடலில்...
அர்ச்சனையோடு.. போதனையும்..
அல்லாவிடம் தொழுகையும்  நடத்தினார்கள்..

இந்த ஏமாற்று வித்தை எதிர்த்து..
கொதித்தனர்.. மீனவர்கள்...
மண்டபம் கடற்கரையில்..
தோழர்.மங்களசாமி.. RH.நாதன் தலைமையில்
மாபெரும் மறியல் போராட்டம்...
நூற்றுக்கணக்கானோர் கைது...
மதுரை மத்திய சிறையில் அடைப்பு...

மீனவர்களுக்கு புத்தி சொல்ல..
சாமியார்களும்.. பாதிரியார்களும்
சிறைக்கும் அழைத்து வரப்பட்டனர்...
தோழர்களால் சாமியார்கள் துரத்தி அடிக்கப்பட்டனர்...
காவல் துறை தடியடி...
ஏராளமானோர் மீது பொய் வழக்கு...
சிறையில் தோழர்.RH.நாதனை பாம்பு கடிப்பு...
என எத்தனையோ சோதனைகளுக்குப்பின்...
தோழர்களின் அயராத போராட்டத்திற்குப் பின்
மதுரை சிறைக்கதவு திறந்தது...

இராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில்..
மீனவர் சங்கத்தலைவர்கள்... குத்தகைக்காரர்கள்...
காவல் துறை... மீன்வளத்துறை அதிகாரிகள் என
முத்தரப்பு பேச்சு வார்த்தை... நடந்தது...
வார ஓய்வு உறுதியானது...
வாழ்வில்  ஓய்வென்பது உரிமையானது...
கடல் மீன்களின் கனவு நனவானது...

தோழர்களே...
உரிமை என்பது உதிரம் சிந்திப் பெற்றது...
ஒவ்வொரு காலத்திலும்.. 
ஒவ்வொரு பகுதியிலும்..
உரிமைக்கான போராட்டம் 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

வார ஓய்வு என்னும் வாழ்நாள் உரிமையை...
அர்ப்பணிப்போடு.. அயராது போராடி...
 நம் முன்னோர் பெற்ற அற்புத உரிமையை.. 
அற்பக்காரணங்கள் கூறி சில 
அற்பங்கள் பறிக்க முயலுவதைக் காணும் போது.. 
அடிமட்ட ஊழியரின் 
அடிவயிற்றில் அக்னி மூளாதா?
போராட்டக்கனல் பெரு நெருப்பாய் மாறாதா?

அதற்கான களமே... காலமே..
நவம்பர் - 24
நெஞ்சில் கனல் ஏந்தி..
கையில் தணல் ஏந்தி.. 
வாரீர்.. தோழர்களே...
வாழ்த்துக்கள் 

இன்று 17/11/2015 விருப்ப ஓய்வில் 
பணி நிறைவு பெற்றுள்ள 

தோழர். M.இராஜேந்திரன்  
TM - இராமேஸ்வரம் 
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்.

விருப்ப ஓய்வில் செல்ல...
உடல் தொந்திரவு... 
உள்ளத்  தொந்திரவு... 
அதிகாரத்  தொந்திரவு... 
கடமையில் தொந்திரவு...
கடன்காரன்  தொந்திரவு ...
என எத்தனை.. எத்தனையோ.. காரணங்கள்...

காரணம் எதுவாயினும்...
ஓய்வு என்பது மனிதனுக்கு..  
ஒப்பற்ற கொடையாகும்...

ஓய்வு என்னும்.. 
ஒப்பற்ற கொடை பெற்ற 
தோழர்.இராஜேந்திரன்...
 வாழ்க... வாழ்க...

நமது மத்திய சங்கம் 
BSNL நிர்வாகத்தைச் சந்தித்து 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை விவாதித்துள்ளது.
 • 2010ம் ஆண்டிற்குப்பின் JAO இலாக்காத் தேர்வு நடைபெறவில்லை. எனவே உடனடியாக காலியிடங்களைக் கணக்கிட்டு  JAO தேர்வை அறிவிக்க மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த கேடர்கள் மூன்றாம் பிரிவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 • 78.2 சத IDA  சம்பள நிர்ணய அடிப்படையில் வீட்டு வாடகைப்படி HRA வழங்கிட BSNL  நிர்வாகத்தை மத்திய சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 • நிராகரிக்கப்பட்ட கருணை அடிப்படையிலான விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்கவும், விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை  அளிக்கவும் மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 • தொழிற்சங்கங்கள் CORPORATE  அலுவலகத்தில் அதிகாரிகளை  சந்திப்பதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது  01/12/2015 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
 • கேடர் பெயர்மாற்றக்குழுவின்  பரிந்துரையை மீண்டும் BSNL நிர்வாகக்குழுவிற்கு  அனுப்பிட மத்திய சங்கம்  வலியுறுத்தியுள்ளது.
 • புதிய இணைப்புக்கள் கொடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் கேபிள்கள் இல்லாத நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
மாவட்ட மாநாடு 
தள்ளிவைப்பு 

நவம்பர் 24 - 2015
சம்மேளன தினத்தன்று
 நடைபெறவிருந்த NFTE 
காரைக்குடி மாவட்டச்சங்க மாநாடு 
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக 
தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டுத்தேதி பின்னர்  அறிவிக்கப்படும்.

Monday, 16 November 2015

கோபக்கைகள்  உயரட்டும்..
கோரிக்கைகள்  தீரட்டும்...

நவம்பர் 24  - காரைக்குடி 
ஒப்பந்த ஊழியர் 
உரிமை மீட்பு
உண்ணாவிரதப்போராட்டம் 
14 அம்சக் கோரிக்கைகள் 

BSNL மாவட்ட நிர்வாகமே...
 • சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு வழங்கு...
 • குறைந்த பட்சக்கூலி குறித்த தேதியில்  மாதந்தோறும் வழங்கு..
 • EPF...ESI.. நலச்சட்டங்களை அமுல்படுத்து....
 • வைப்புநிதி EPF  UNIVERSAL ACCOUNT NUMBER வழங்கு...
 • பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள  EPF... வைப்புநிதியை ஊழியர்கள் கணக்கில் செலுத்து.. 
 • மாதந்தோறும் சம்பளப்பட்டியல் WAGE SLIP வழங்கு..
 • அடையாள அட்டை வழங்கு..
 • தேசிய விடுமுறைக்கு சம்பளம் வழங்கு.. சம்பளத்துடன் கூடிய சிறு விடுப்பு CL வழங்கு..
 • இறந்து போன ஒப்பந்த ஊழியரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கு...
 • ஆண்டு தோறும் போனஸ் வழங்கு...
 • காவல் பணி செய்வோருக்கு உரிய கூலி வழங்கு..
 • கேபிள் பணி செய்வோருக்கு வேலைக்கேற்ற கூலி வழங்கு..
 • மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த கூடுதல் சம்பளம் வழங்கு...
 • கழிவறை சுத்தம்  மற்றும் துப்புரவுப்பணிகளை  குத்தகைக்கு  விடாதே...

Sunday, 15 November 2015

ஒப்பந்த ஊழியர் உரிமை மீட்புப்போராட்டம் 

AITUC 
அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ்

NFTE 
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் 

TMTCLU 
தமிழகத் தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 

இணைந்த 
ஒப்பந்த ஊழியர்  
உரிமை மீட்புப் போராட்டம் 

24/11/2015 - செவ்வாய் - காலை 10 மணி 
BSNL  பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

ங்கேற்பு...

TMTCLU 
தோழர்.ஆர்.கே.,
 மாநிலத்தலைவர் 

தோழர்.செல்வம் 
மாநிலச்செயலர் 

தோழர்.குடந்தை விஜய் 
மாநிலப்பொருளர் 

AITUC 
தோழர்.குணசேகரன் - MLA 
சட்டமன்ற உறுப்பினர் 

தோழர்.பழ.இராமச்சந்திரன் 
மாநிலக்குழு உறுப்பினர் 

தோழர்.கார்வண்ணன் 
மாவட்டச்செயலர் 

NFTE
தோழர்.சேது 
சிறப்பு அழைப்பாளர்

தோழர்.இலட்சம் 
மாநிலத்தலைவர் 

தோழர்.சென்னக்கேசவன் 
மாநிலச்செயலர் - பொறுப்பு 

மற்றும் முன்னணித்தோழர்கள்... 

ஆண்டுக்கணக்கில்... அல்லல்படும்... அவதிப்படும்... 
ஒப்பந்த ஊழியரின் துயர் தீர்க்க...
தோழர்களே.. உரம் கொண்ட நெஞ்சினாய்..
உறுதி கொண்டு வாரீர்....வாரீர்...

தோழமையுடன்  அழைக்கும்...
வெ .மாரி                                                     சி.முருகன் 
NFTE மாவட்டச்செயலர்                        TMTCLU மாவட்டச்செயலர்

Saturday, 14 November 2015

தீபாவளி வலமும்... 
தீராத அவலமும்...

                                  தீபாவளி அன்று தோழர்களை, நண்பர்களை, உறவுகளைச் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்வு தருவதாகும். அன்று அதிகாலை பெட்ரோல் பங்கில்  பணி புரியும் தோழர்.சுப்பையாவை சந்தித்தோம். போனஸ் வாங்கியாகிவிட்டதா? என்று கேட்ட போது..  "ஆமாம் தோழர். நேற்றுத்தான் 6000 ரூபாய் கொடுத்தார்கள்.. இது INDIAN OIL நடத்தும் பெட்ரோல் பங்க். எனவே ஒரு மாத சம்பளமான 5500 உடன் இனிப்புக்கு 500 சேர்த்து 6000 போனசாக கொடுத்தார்கள்" என்றார்.  பெட்ரோலை விட வேகமாக மகிழ்ச்சி மனதில் பற்றியது.  அதன் பின் டீக்கடைப்பக்கம்  சென்றோம்.

டீக்கடையில் வேலை செய்யும் தோழர்.காளியப்பன்  3000 ரூபாய் போனசும், 1 கிலோ இனிப்பும் கிடைத்ததாக சொன்னார். செய்தியும் இனித்தது.. டீயும் இனித்தது.

மளிகைக்கடையில் பணிபுரியும் தோழர்.இராமுவை  பேருந்து நிலையம் அருகில்  சந்தித்தோம். 3500 போனசோடு புதுத்துணியும் பெற்றுக்கொண்டு ஊருக்கு செல்வதாகக் கூறினார். மளிகை மல்லிகையாய் மணத்தது.  

அந்தவாக்கிலேயே.. சினிமாக்கொட்டகையில் பணி புரியும் தோழர்களை பார்க்க நேரிட்டது. ஒரு மாத சம்பளத்தை அதாவது 5000 போனசாகக் கிடைத்ததாக மகிழ்ந்தார்கள். நல்ல சினிமா பார்த்த மாதிரி இருந்தது.

நகராட்சியில் பணி புரியும் துப்புரவுத்தொழிலாளர்களை சந்தித்து கைகுலுக்கினோம். போனஸ் என்னாச்சு? என்றபோது.. குத்தகைக்காரனுக்கு கமிசன் கட்டுபடியாகவில்லையாம்.. ஆனாலும் ஆளுக்கு 3000 முன்பணம் தந்து விட்டதாகவும்.. அதை மாதாமாதம் 500 வீதம் பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறினார்கள்.  நகராட்சி என்றாலே குப்பைதான்.. இருந்தாலும் பரவாயில்லை.. குப்பையிலும் குண்டுமணி...

நகராட்சிக்கு எதிரேதான் நமது அலுவலகமாயிற்றே..  செல்லும் வழியிலேயே காலணி சீர் செய்யும் தோழர்.முத்தப்பனைப்  பார்த்தோம். வாழ்த்து சொல்லி விட்டு  100 ரூபாயை  அன்பின் அடையாளமாய் கொடுத்தோம். வேண்டாம் என்று மறுத்தார். பாக்கெட்டில் வைத்து விட்டு பறந்து சென்றோம் நமது அலுவலகத்திற்கு. 

நமது அலுவலகத்திலே கருத்த உருவமும்.. கசங்கிய உடையுமாய் நமது ஒப்பந்த ஊழியர் நின்றிருந்தார். மத்தாப்பாய் மனசுக்குள் இவ்வளவு நேரம் பொங்கிய மகிழ்ச்சி... அவரைப் பார்த்ததும் புஸ்வாணமாய் போய் விட்டது. 

நமக்கே தெரியும் எந்த குத்தகைக்காரனும் ஒப்பந்த ஊழியருக்காக ஒத்தைப்பைசா கூட இந்த ஆண்டு போனசாக தரவில்லை என்பது.  "என்ன தோழர் குத்தகைக்காரன்தான் போனஸ் தரவில்லை... உங்களிடம் வேலை வாங்குபவர்களாவது ஏதேனும் கொடுத்தார்களா? என்று கேட்டோம். "சார்.. நாயாக நாங்கள் இங்கே வேலை பார்க்கிறோம்.. ஆனால் நாய்க்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இங்கில்லை" என்று வேதனையுடன் சொன்னார்.

மேலும்.." போனஸ் தான் கொடுக்கவில்லை...இந்த மாதம் சம்பளத்தையும் குறைத்து விட்டார்கள்.. சார்.. காந்தி பிறந்த நாளுக்கு கூட சம்பளம் தரவில்லை. இந்த மாதம் உயர்ந்துள்ள DA கூடப்போடவில்லை.  இருபது நாள் சம்பளம்தான் தந்துள்ளார்கள். ஒப்பந்தக்காரரிடம் கேட்டால் எங்களிடம் எதுவும் கேட்காதே.. கணக்கு அதிகாரிகளைப் போய்க்கேள்.. அவர்கள் என்ன சொல்கிறார்களோ... அதைத்தான் நாங்கள் போட முடியும். இல்லையென்றால் எங்கள் பில்லை சுழித்து விடுவார்கள்" என்று சலிப்புடன் கூறுகிறார். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை".. என்று கண் கலங்கினார்.

"ஆத்திரமும்..ஆங்காரமும் அணுகுண்டாய் நம் மனசுக்குள் வெடித்தது. " 
"கவலைப்படாதீர்கள்..காலம் இப்படியே போகாது.. நிச்சயம் மாறும்.. மாற்றுவோம்"  என்று சொல்லி விட்டு இருநூறு ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டு.. கறி வாங்க மறந்து விட்டு.. கனத்த மனதுடன்  வீடு சென்றோம்.

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கச்சொல்லி...
அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி தரச்சொல்லி...
EPF...ESI.. நலத்திட்டங்களை அமுல்படுத்தச்சொல்லி...  
துணைப்பொதுமேலாளர் நிர்வாகத்தைப் பலப்பல முறை 
BSNLEU மற்றும் NFTE   மாவட்டச்செயலர்கள் 
கூட்டாகச்  சென்று விவாதித்தோம்... தோம்..தோம்..

காளை மாட்டில் பால் கறக்கவும்...
கல்லில் நார் உரிக்கவும்....
எங்களால் முடியவில்லை...

இம்முறை கணக்கு அதிகாரிகளிடம் விவாதிக்க மனமில்லை...
காரணம்.. அவர்கள் கணக்குப் போட்டு... கணக்காய்ப் போட்டு.. 
காரியத்தைக் கச்சிதமாக திசைதிருப்பிக் கவிழ்த்து   விடுவார்கள்...

வேறு என்னதான் செய்வது?
கண்ணிருந்தும்.. கொடுமையைக் கண்டிருந்தும்..
உயர்த்தக்கரம் இருந்தும்... உரிமை கேட்க  குரல் இருந்தும்.. 
நாம் வாளா இருப்போமா?
சட்டங்களும்.. விதிகளும் 
உழைப்பாளிகளுக்கு சாதகமாக இருந்தும்.. 
அதை சட்டை செய்யாமல் இருப்பதுதான் நிர்வாகமா?
ஒப்பந்த ஊழியர்கள் ..
ஆகப்பெரும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தாலும்..
அன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்டு... துன்பப்பட வேண்டுமா?
அதிகாரிகளின் அலட்சியத்தால்... அவர்கள் வாழ்வு அழியவேண்டுமா

இல்லை... தோழர்களே.. இல்லை...
மாபெரும் தலைவர்கள் உயர்த்திப்பிடித்த 
செங்கொடியோடு.. இதோ.. போர்க்கொடியையும்..
இன்று நாம்  உயர்த்தி விட்டோம்..


விழியற்றவர்களுக்கு... ஒளியேற்றிய...
NFTE சம்மேளன தினத்தன்று 
24/11/2015..  காரைக்குடியில்...
அருமைத்தோழர்.
ஆர்.கே.,
அவர்கள் தலைமையில் 
உறிஞ்சப்படும் தொழிலாளரின்
 உரிமை மீட்பு உண்ணாவிரதம்...

அடிமட்ட ஊழியரின்.. இன்னல் களைந்திட..
அண்ணல் வழியில்.. அறவழியில்.. போராடுவோம்...
கோப வெள்ளமாய்ப் பொங்கி வாரீர்.. தோழர்களே...