Wednesday 30 March 2016

போனஸ் குழுக்கூட்டம் 

30/03/2016 அன்று டெல்லியில் 
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது. 
நிர்வாகத்தரப்பில் PGM(SR) GM(RESTR) மற்றும் GM(PER) 
ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊழியர் தரப்பு சார்பாக..
நமது அகில இந்தியத்தலைவரும், 
தேசியக்குழு ஊழியர் தரப்புத்தலைவருமான 
தோழர்.இஸ்லாம் அகமது கலந்து கொண்டார். 

BSNLEU  தரப்பு உறுப்பினரான 
தோழர்.அபிமன்யு கலந்து கொள்ளவில்லை. 
பாவம்... அவருக்கு போனசை விட 
பல முக்கிய வேலைகள் இருந்திருக்கலாம். 

நிர்வாகத்தரப்பில் குறைவான தொகை போனசாக முன் வைக்கப்பட்டது. போனஸ் தொகையின் அளவு நமக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் 
நமது உரிமையான போனசை 
நாம் போராடிப்பெற்ற போனசை 
நாம் ஆண்டாண்டு காலம் பெற்ற போனசை..
நிர்வாகம் மறுக்கவே இயலாது என்றும்...
ஊழியர்களுக்கு கொடுத்தே தீர வேண்டும் என்றும்..
உணர்வோடு.. உறுதியோடு... 
தனது  வாதத்தை தோழர்.இஸ்லாம் முன் வைத்தார். 

போனஸ் குழு தனது பரிந்துரையை 
நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிக்கும். 
அதன் பின் உரிய முடிவெடுக்கப்படும்.

போனஸ் நமது உரிமை...
போராடி... வாதாடிப் பெறுவது நமது கடமை...
ஒதுங்கி நின்று... ஓரங்கட்டுவது மடமை...
கனரா வங்கி - BSNL 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கனரா வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  • ஒப்பந்தம் 31/12/2016 வரை அமுலில் இருக்கும்.
  • தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
  • தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 11.65 சதம். 
  • வட்டி விகிதம் மாறும் தன்மை கொண்டது. (FLOATING)
  • நாலு சக்கர வாகனக்கடனில் மகளிருக்கு 0.05 சத வட்டி சலுகை அளிக்கப்படும்.
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

இன்று 31/03/2016 காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் அன்புத்தோழர்கள் 

D. வசந்தகுமார் 
STS/முதுகுளத்தூர் 

V.சேகராஜ் 
TM/இராமநாதபுரம் 

S.முருகன் 
TM/பரமக்குடி 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Tuesday 29 March 2016

காற்றினில்... கலந்தான்... கார்த்தி...


ஊண் எரிந்து.. உயிர் பிரிந்து.. 
காற்றினிலே கலந்து விட்டான்..
ஜெகன் இல்லத்துச்  செல்லப்பிள்ளை..
நம் அன்புத்தோழன் கார்த்தி...

தேவகோட்டை கண்ணங்குடியில்..
ஒப்பந்த ஊழியனாய்ப் பணி செய்தான்..
ஒண்ட இடமின்றி...ஒதுங்க வழியின்றி...
கண்ணங்குடி தொலைபேசி நிலையத்தில் கண்ணயர்வான்...

அன்பு செய்தால்..அடங்கி நடப்பான்..
அநியாயம் கண்டால்..அடங்க மறுப்பான்..

ஆதலின்...
ஈரமற்ற ஒரு அதிகாரியால்.. சூடு பட்டான்...
அலுவலகத்தில் உறங்க விடாமல்... 
தெருவிலே நிறுத்தப்பட்டான்...

கண்ணங்குடி...
மேல்குடிகளுக்கு மட்டுமே இடம் தரும்..
கீழ்குடிகளுக்கு...   
உள்ளத்திலும் இடம் தராது...
இல்லத்திலும் இடம் தராது...

கண்ணங்குடியிலே கண்ணுறங்க வழியின்றி... 
கண்ணீர் சிந்தியவனை..
கரம் நீட்டி அழைத்துக்கொண்டது...
சிந்தாதிரிப்பேட்டை ஜெகன் இல்லம்...

ஜெகன் இல்லத்திலே....
காவல் பணியை கருத்துடன்  செய்தான்..
ஏவல் பணியை இன்முகத்துடன் ஏற்றான்..

ஓரிரவு உறங்கிட இடமின்றி தவித்தவன்...
ஓராயிரம் இரவுகள்  நம் தோழர்கள்... 
நிம்மதியாய் உறங்கிடப் பணி செய்தான்...

ஜெகன் இல்லத்தில்...
பணிவை விதைத்தான்...
அன்பை வளர்த்தான்...
ஐயா  என்னும் அடிமைச்சொல் மறந்தான்...
தோழா என்னும் உரிமைச்சொல் பகன்றான்..

தலைவர்களின் அன்புக்கு ஆளானான்..
தோழர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானான்...

தனிமையில் கார்த்தி தவிக்கலாகாது...
வள்ளியோ.. தெய்வானையோ...
வாகாய் ஒருத்தியை இவன் வசப்படுத்துவோம்...
வாழ்வை வளப்படுத்துவோம்...என்றெண்ணி 
இருந்த வேளையிலே....
இதயத்தில் செய்தியும்...
இடியாய் விழுந்தது... 

நேற்றிருப்பார்... இன்றில்லை..
என்னும் நிலையாமை சொல்லி...
உறங்குவது போலும் சாக்காட்டில்...
உறங்கி விட்டான் நிரந்தரமாய்...

கார்த்தி...
காற்றிலே கலந்து விட்டான்...
நம் மூச்சிலே நுழைந்து விட்டான்...
மூச்சிலே அவன் நுழைந்து விட்டதனால்..
நம் மூச்சு வரை அவன் பேச்சிருக்கும்...
நம் பேச்சில் என்றும் அவன் நினைவிருக்கும்...

Saturday 26 March 2016

இரங்கல் 

ஓய்வூதியர்கள் சங்கத்தலைவர் 
அருமைத்தோழர் க.முத்தியாலு அவர்களின் 
அன்புத்தாயார்  
உடல் நலக்குறைவால் 
இயற்கை  எய்தினார். 

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகிறோம்.
நல்லடக்கம் கரூரில் நடைபெறும்.

Friday 25 March 2016

தோழர்.இஸ்லாம் வருகையும்... 
இனிய நினைவுகளும்...
காரைக்குடி தேர்தல் பிரச்சார  துவக்க விழா காட்சிகள்...

தோழர்.இஸ்லாம், தோழர்.காமராஜ்,
மாவட்டத்தலைவர் தோழர்.சுந்தர்ராஜன் 

தோழர்.இஸ்லாம் அவர்களுடன்
நமது தோழர்கள் இன்பச்சிரிப்பு 
தோழர்கள் .விஜயரெங்கன், இராம்சேகர்,சேது,
காதர்பாட்சா மற்றும் சுந்தர்ராஜன்  
பரிவு அடிப்படை பணி நியமனம் பெற்ற தோழியர்கள்
தோழர்.இஸ்லாம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 

பணி நிறைவெய்தப்போகும்
 தோழர்களுக்கு பாராட்டு 

AITUC தலைவர் தோழர்.PLR 
கோஷத்தில் கொள்கை சொல்லும்
AIBSNLPWA தோழர்.நாகேஸ்வரன் 
பாட்டாலே நாம் படும் பாடு  சொன்ன 
பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் 



நெஞ்சை அள்ளும்  உரை தந்த
தஞ்சையின் நடராஜன்...

மொழியாக்கம் செய்த தோழர்.காமராஜ் 

நிறைவுரை செய்த மாவட்ட உதவிச்செயலர்
தோழர்.தமிழ்மாறன் TTA 

நன்றியுரை நிகழ்த்திய தடகள  வீராங்கனை
தோழியர்.கார்த்திகா, TTA மற்றும் தோழியர்கள்.

Thursday 24 March 2016

78.2 ஆர்ப்பாட்டம் 

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக 
78.2 சத IDA  இணைப்பை வழங்கக்கோரி 
AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 
24/03/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தின் 
முன்பாக நடைபெற்றது. ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர்.பூபதி தலைமை வகித்தார்.
NFTE  மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
AIBDPA மாவட்டச்செயலர் தோழர்.சுப்பிரமணியன் 
ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

தோழர்.நாகேஸ்வரன் கோரிக்கை முழக்கம் எழுப்பி 
78.2 இணைப்பின் இன்றைய நிலை பற்றி விளக்கவுரையாற்றினார்.
AIBSNLPWA மாவட்டச்செயலர் தோழர்.முருகன் முன்னிலை வகிக்க 
TMTCLU மாவட்டச்செயலர் தோழர்.முருகன் நன்றியுரைத்தார்.

கொளுத்தும் வெயிலிலும் நம் தோழர்கள் கோரிக்கை முழக்கம் 
எழுப்பியது கோரிக்கையின்பால் உள்ள உறுதியை வெளிப்படுத்தியது.
இப்போதே 33 மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் 
78.2 இணைப்பை 78 மாதங்கள் ஆனாலும் விடமாட்டோம் 
என்ற உறுதியுடன் கூட்டம் நிறைவுற்றது.

Wednesday 23 March 2016

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 

மூன்று மாதங்களாக முடிவுக்கு வராத
யூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்
 மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 
நமது மத்திய சங்கத்திற்கு நன்றிகள் பல.

மக்கள் நலக்கூட்டணியில் 
கேப்டன் இணைந்த காட்சி போல் 
BSNL - UNION BANK OF INDIA ஒப்பந்தம் 
ஊழியர்களுக்கு மகிழ்வைத்தந்துள்ளது.


  • ஒப்பந்தம் 01/01/2016 முதல் 31/12/2016 வரை அமுலில் இருக்கும்.
  • தனி நபர்க்கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.
  • தனி நபர்க்கடன் வட்டி விகிதம் 12.15 சதம்.
  • பெண்களுக்கு 0.25 சதம் வட்டியில் சலுகை.
வங்கியில் கடன் பெற்ற ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் அவர்களது   குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் வங்கியின் கடனைக் கட்டியபின்புதான் அனுப்பப்பட வேண்டும் போன்ற கடுமையான விதிமுறைகளை யூனியன் வங்கி கூறியதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லை. தற்போது அது போன்ற விதிமுறைகள் இல்லாமல் ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. ஆயினும் கடன் பெறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் இருக்கக் கூடாதென 
புதிய கட்டுப்பாட்டை யூனியன் வங்கி விதித்துள்ளது. 

கடன்காரன் என்பவன் கட்டுப்பாடு மிக்கவனாக 
கரைச்சல் இல்லாதவனாக இருக்க வேண்டும் என
  யூனியன் வங்கி கருதுவதாகத்தெரிகிறது.
வாழ்க.. ல்லாண்டு... 
தோழர். ஆர்.கே அவர்கள் 

மார்ச் 23 அன்று பிறந்தார்...
போராடுவதற்காகவே  வாழ்ந்த ஒரு புரட்சியாளனை..
தன் சொல்லால்... செயலால்.. நினைவு கூர்ந்தார்...

அச்சத்தை அடியோடு வேரறுத்தார்..
போராட்டத்தில் உச்சத்தை வரையறுத்தார்..

ஆயிரமாயிரம் பணிகளை...
ஆற்றலுடன் செய்து முடித்தார்...

காத்திருக்கும்  கடமைகளையும்...
காலத்தே செய்து முடிப்பார்...

பணிகள் தொடரட்டும்..
பயணங்கள் வெல்லட்டும்...
பல்லாண்டுகள் வாழட்டும்.....

வாழ்த்துகிறோம்...நாங்கள்...
வாழ்க.. வாழ்க.. வாழ்க..

Tuesday 22 March 2016

மார்ச்...23
இவர்கள்தான்...இளைஞர்கள்... 

மாவீரர்கள் பகத்சிங்  சுகதேவ்  இராஜகுரு 
இருபது வயதில்.. 
மணமேடை காணவில்லை...
மங்கலநாண் பூணவில்லை..

தூக்குமேடையில் துயில் கொண்டார் 
தூக்கு  கயிற்றில் தூளி கண்டார்... 

இந்தியத் தாயின் விலங்கொடிக்க 
இருபது வயதில் இன்னுயிர் நீத்த..
இறவாப்புகழ் இளைஞர்களை..

இன்றைய தேசத்தின் இளைஞனே..
இதயத்தில்  நினைத்திடு...
இமைகளில்  நனைத்திடு...

Monday 21 March 2016

எல்லோரும்...எல்லாமும்...பெற வேண்டும்...







இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் 
சிலர் கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார் 
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்
அந்த மூடரை யார் உலகில் பொறுத்திருப்பார்?
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்...

கண்ணதாசன் பாடிய காலம் மலரட்டும்...

இருந்தது இழந்த நிலை ஒழிய..
இல்லாமை இல்லா நிலை வளர... தோழர்..
இஸ்லாம் பேசுகிறார்... காரைக்குடியில்...

கண்ணதாசன் மணி மண்டபம் நோக்கி...
அணி திரண்டு வாரீர்.. தோழர்களே...

Sunday 20 March 2016

ஏக்கமும்... தேக்கமும்... 


BSNLலில் பணி செய்யும் ஊழியர்களுக்கு 
10/06/2013ல் வழங்கப்பட்ட 78.2 சத IDA இணைப்பு... 
அதற்கு முன் ஓய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு 
இன்னும் வழங்கப்படவில்லை...
ஆயிரம்  நாட்கள் உருண்டோடி விட்டன..
ஆயினும் இன்னும் 78.2 மூத்தோர் வசப்படவில்லை..

AIBSNLPWA தொடர்ந்து 
இப்பிரச்சினையை வலியுறுத்தி வருகிறது...
இடைவிடாமல் விரட்டியும்...
இதோ.. அதோ... என மாரீச மானாய்..
78.2 ஓடிக்கொண்டே இருக்கிறது...

பெங்களூர் அகில இந்திய மாநாட்டிற்குப்பின் 
எப்படியும் 78.2 கைவசப்படும் என 
தோழர்கள் காத்திருந்தனர்...

ஆனால்... பாராளுமன்ற வளாகத்தில்..
தேநீர் நேரத்தில் இலாக்கா அமைச்சரைச் 
சந்தித்த தோழர்.நம்பூதிரியின் சந்திப்பால்
பிரச்சினை மேலும் இழுபறியாகிவிட்டது...

எனவே 78.2 சத IDA இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
நாடு முழுவதும் 
மாவட்ட, மாநிலத்தலைநகரங்களில்..
24/03/2016 அன்று 
கண்டன ஆர்ப்பாட்டம் 
நடத்திட AIBSNLPWA ஓய்வூதியர்கள் நலச்சங்கம் 
அறைகூவல் விடுத்துள்ளது.

தோழர்களே...
நேற்று இன்று நாளை என 
நாட்கள் கடத்தப்பட்டாலும்...
என்றேனும் ஒரு நாள் வென்றெடுப்பார் 
நம் தோழர்கள் தங்கள் நியாயமான கோரிக்கையை...

மூத்தோர்களின் நியாயமான போராட்டத்திற்கு 
நாமும் உறுதுணை செய்வோம்... உடன் நிற்போம்...
கம்பன் கலகம் 

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க..
இள மஞ்ஞை என  அன்னம் என மின்னும்... 
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்...

அடடா...
சூர்ப்பநகை நடந்து வரும் சூப்பர் அழகை
கம்பன்  கவிதை ரசம் சொட்ட விளக்கும் 
வார்த்தைகளுக்கு ஈடில்லை... இணையில்லை...

எனவேதான்...
பத்தாயிரம் கவிதை 
முத்தாக அள்ளி வைத்த 
சத்தான கம்பனுக்கு 
ஈடு இன்னும் 
வித்தாகவில்லை என்று பாடு 
என்று கம்பன் புகழ் பாடினான் கண்ணதாசன்...

அந்த கம்பனின் புகழ் பாடும் பூமி காரைக்குடி...
78 ஆண்டுகளாக காரைக்குடி கம்பன் கழகம்..
கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்த்து  வருகின்றது...
தமிழக இலக்கிய மேடைகளில்...
காரைக்குடி கம்பன் கழகத்திற்கு தனியிடமுண்டு...

ஒவ்வொரு வருடமும் 
பங்குனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று 
தொடங்கும் கம்பன் விழா 
மகம்,பூரம்,உத்திரம் என்று 3 நாட்கள்  
காரைக்குடியிலும்...
கம்பர் மறைந்த அத்த நட்சத்திரத்தில் 
கம்பன் சமாதி அமைந்திருக்கும் நாட்டரசன்கோட்டையில் 
நான்காம் நாள்  அத்தத்திருவிழாவாகவும் நடைபெறும்...

77 ஆண்டுகள் இடையறாமல் 
கம்பன் கழகத்தால் நடத்தப்பட்ட கம்பன் விழா
78ம் ஆண்டான இந்தாண்டு இரண்டாகிப் போனது...
காரணம் காரைக்குடியில் கம்பன் கழகத்தில் கலகம்...

சோறுடைத்த சோழ நாட்டுக் கம்பன்
சோத்துக்கு  வழியற்று.. 
செட்டிநாட்டுக்கு  வந்து  செத்தான் என்பது  வரலாறு..

ஆனால் கம்பன் பெயர் தாங்கிய கழகங்களுக்கு 
கோடிக்கணக்கில் சொத்து...
எனவே கழகத்தில் கலகம் பிறந்து விட்டது...
கழகங்களில் கலகம் என்பதுதானே 
தமிழக கழக  வரலாறு...

இந்தாண்டு 
மார்ச் 21 முதல் 24 வரை நான்கு நாட்கள் 
கம்பன் விழா - இரண்டு விழாக்களாக..
கம்பன் மணிமண்டபத்திலும் 
கிருஷ்ணா மணிமண்டபத்திலும் 
ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது...

சகாயம் 
கனிமொழி 
வைரமுத்து 
அப்துல் காதர் 
த.ச.இராஜாராம் 
சாலமன் பாப்பையா 
தா.கு.சுப்பிரமணியன் 
கோவிலூர் மடாதிபதி
குன்றக்குடி  அடிகளார்  
சிலம்பொலி செல்லப்பனார் 
மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் 


என இரண்டு கழகத்திலும் 
தமிழ் பேச தாராளமாய் அறிஞர்கள் 
காரைக்குடி வருகிறார்கள்..

நமக்கென்ன?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் 
இலக்கியக் கூத்தாடிகள் 
இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம்...

காரைக்குடியில்.. 
கம்பன் கலகக்கொண்டாட்டம்...
ஒரு கல்லில்  இரண்டு கனிகள்...
கண்டு களிக்க.. வாருங்கள்..தோழர்களே...

Friday 18 March 2016

Displaying 001.jpgDisplaying 001.jpg
காரைக்குடியில் 
தோழர்.இஸ்லாம் பேசுகிறார்...

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி மாவட்டம்.

சிறப்புத் தேர்தல் 
பெருந்திரள் கூட்டம் 

22/03/2016 - செவ்வாய் - காலை 10 மணி 
கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

சிறப்புச்சொற்பொழிவு 

தோழர்.இஸ்லாம் அகமது 
NFTE  அகில இந்தியத்தலைவர்.

 மற்றும் தலைவர்கள் 

தோழர்களே... 
இயக்கத்தின் தடந்தோள்களே...
இணைந்த கரங்கள் உயர்ந்திட 
இழந்த உரிமைகள் அடைந்திட .
முதன்மைச் சங்கமாய் NFTE  நிமிர்ந்திட..
வாடிய நம்  வாழ்வு மீண்டும் மலர்ந்திட..

அணி திரண்டு வாரீர்...

nfte bsnl logo க்கான பட முடிவு
நமது சின்னம்
இணைந்த கரங்கள் 
தோழர்.இஸ்லாம்
 தமிழகத்தில்  சுற்றுப்பயணம் 

நமது அகில இந்தியத்தலைவர் 
அருமைத்தோழர் 
இஸ்லாம் அகமது அவர்கள் 
தமிழகத்தில் தேர்தல் 
சிறப்புக்கூட்டங்களில் பங்கேற்கின்றார்...

22/03/2016 - செவ்வாய் - காலை 10 மணி  - காரைக்குடி.
22/03/2016 - செவ்வாய் - மாலை 5  மணி  - மதுரை .

23/03/2016 - புதன் - நண்பகல் 01.00 மணி - திருச்சி 
23/03/2016 - புதன் - மாலை 05.00 மணி - விழுப்புரம் 
24/03/2016 - வியாழன் - மாலை 03.00 மணி - சென்னை...

இணைந்த கரங்களை வலுப்படுத்த வரும்..
இணையற்ற தலைவர் இஸ்லாம் அவர்களின் 
கருத்துரை கேட்க... அணி திரண்டு வாரீர்...

nfte bsnl க்கான பட முடிவு
நமது சின்னம் இணைந்த கரங்கள் 
RULE- 8  மாற்றல்கள் 

TTA, TM மற்றும் SR.TOA  தோழர்கள் பலர் 
அடுத்த மாவட்டத்திற்கும், சிலர் அடுத்த மாநிலத்திற்கும் 
விதி 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பித்திருந்தனர். 
ஆனால் அவர்களது விண்ணப்பங்கள் அனுப்பப்படாமல் 
அந்தந்த மாவட்டங்களிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தன.

இப்பிரச்சினை JCM தேசியக்குழுவில் எழுப்பப்பட்டு 
விண்ணப்பங்கள் உடனடியாக அனுப்பப்பட 
வேண்டுமென  கோரிக்கை எழுப்பப்பட்டது. 

தற்போது டெல்லி BSNL நிர்வாகம் இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் மாநில நிர்வாகங்களுக்கு  09/03/2016 அன்று கடிதம் அனுப்பியுள்ளது.  அதன்படி...

  • மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை மாநில மட்டத்திற்கு உரிய குறிப்புகளுடன் அனுப்ப வேண்டும்.
  • மாநில நிர்வாகங்கள் காத்திருப்போர் பட்டியலைத் தயாரித்து அதனடிப்படையில் மாற்றல்களை அமுல்படுத்த வேண்டும்.

  • தங்கள் குடும்ப சூழல் காரணமாக மாற்றலுக்கு விண்ணப்பித்த பெண் ஊழியர்களின் மாற்றல்கள் பரிவு அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்.

காரைக்குடி மாவட்டத்தில் நீண்ட நெடு நாட்களாக 
விதி 8 மாற்றல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. 
குறிப்பாக குடும்ப சூழல் காரணமாக மாற்றல் கேட்டிருந்த 
மகளிர் தோழியர்களின் விண்ணப்பங்கள் கூட பரிசீலிக்கப்படவில்லை. 
தற்போது வெளி வந்துள்ள உத்திரவின் அடிப்படையில் தேங்கிக்கிடக்கும் விண்ணப்பங்கள் மேல்மட்டங்களுக்கு அனுப்பப்படும் என நம்புகிறோம்.

இப்பிரச்சினையை JCM தேசியக்குழுவில் 
எழுப்பிய நமது சங்கத்திற்கு நன்றி.

Thursday 17 March 2016

எட்டுத் திக்கும்..  வெற்றி முரசு ...
பொதுச்செயலர் தோழர்.C.சிங்  மற்றும்
SEWA அகில இந்தியத்தலைவர் தோழர்.பெருமாள் 

தொட்டது துலங்கும் சேலம்...
துவக்கத்தை மிளிர வைத்து...
நல்முடிவை  மலர  வைக்கும் சேலம்...

மே மாத வெற்றிக்கு...
மார்ச் மாதமே...
கட்டியம் கூறிய சேலம்...

இலட்சியத் தலைவர்
இலட்சத்தின் தலைமையில்...
வெற்றிக்கனி பறிக்க...
வீறு கொண்டு எழுந்த  சேலம்..

பகுத்தறியும் தோழர் 
பட்டாபி வழியில்...
வரலாறு படைத்திட...
வழி சொன்ன சேலம்...

ஆறு முறை கூட்டணி அமைத்து...
ஆறுதல் இழந்த தலைவர்கள்..
ஆவேசம் கொண்ட  சேலம்...

மாற்றம்... முன்னேற்றம்... சொன்ன  PEWA..
முடியட்டும்.. விடியட்டும்... சொன்ன TEPU...
விழித்தெழு .. விடியல் படைத்திடு.. என்று சொன்ன SEWA..
முக்கனியாய் இணைந்து மூன்று சங்கங்களும்..
இணைந்த கரங்களில் இணைந்திடுவோம்...
இழந்த உரிமை மீட்டிடுவோம்...என 
இணைந்த கரங்களுக்கு வலு சேர்த்த சேலம்...

குணக்குன்று குடந்தை ஜெயபால்.. 
கொள்கைக்குன்று மதுரை சேது...
முத்தான தலைவன் முத்தியாலு 
கடலூரின்  காவியத்தலைவன்  ஜெயராமன்..
பாண்டியின் பாசமிகு அசோகராஜன்..
புதுவைத்தலைவன்  புதுமைத்தலைவன் காமராஜ்..
கோவைத்தலைவன் கோபாலகிருஷ்ணன் 
ஈரெழுத்து இமயம் தோழர்.ஆர்.கே 
பொதுச்செயலர் சந்தேஷ்வர்சிங்..  என..
உணர்வு மிக்கத்தலைவர்கள்..
உரமிக்க செய்தி சொன்ன சேலம்...

ஏமாந்தது போதும்...
இதுவரை இழந்தது போதும்..
ஏழாவது தேர்தலில்
இறக்கிடுவோம் தலைக்கனம்..
அதுவரை நான் ஓய்வறியேன்... உணவறியேன்..
என தோழர். ஆர்.கே.,  சூளுரைத்த சேலம்...


கனியினும் கனிவாய் உபசரித்து..
இதயக்கனியாய் எல்லோர் 
இதயத்திலும் இடம் பிடித்த சேலம்...

வளங்கள் பதினாறும்  பெற்றிட 
வளமான வாழ்வு உற்றிட..
வரிசை எண் 16ல் 
வாக்களிக்க உறுதி கொண்ட சேலம்...

உரிமை காக்கும் சங்கம்...
உணர்வு மிக்க சங்கம்...
வாழ்வு தந்த சங்கம்...
வளங்கள் தந்த சங்கம்... 
வற்றாத ஜீவநதி NFTE
முதன்மைச் சங்கமாய் ஆக்கிட 
உறுதி பூண்ட சேலம்...

வாழ்க...வளர்க... சேலம்...
வளமிக்க எதிர்காலம்  மலர்க..