Tuesday 4 April 2017

கருணை அடிப்படை பணியும்… கண்துடைப்பும்…

2016-17ம் ஆண்டிற்கான கருணை அடிப்படை 
பணிநியமனப் பணிகளை செய்து முடிக்குமாறு
மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருணை அடிப்படை பணி வழங்கிட மதிப்பெண் முறையை 
BSNL நிர்வாகம் 2007ல் புகுத்தியது. 
அதிலும் குறைந்த பட்சம் 55 மதிப்பெண்கள் பெற்றால்தான் 
விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 
இல்லையெனில் நிராகரிக்கப்படும். 
சங்கங்கள் எதிர்க்குரல் கொடுத்தாலும் 
மதிப்பெண் முறையை நிர்வாகம் கைவிடவில்லை. 
ஆனால்  அளவீடுகளை மறு ஆய்வு செய்து 
புதிய அளவீடுகளை 01/04/2016 முதல் நிர்வாகம் அமுல்படுத்தியது. 
ஆனாலும் பல இடங்களில்...
புதிய அளவீட்டு முறையும் பின்பற்றப்படவில்லை. 

முந்தைய முறையில்... சொந்த வீடு இருந்தால்
எதிர்மறை NEGATIVE மதிப்பெண் வழங்கப்பட்டது. 
புதிய அளவீட்டில்... சொந்த வீட்டிற்கு 
எதிர்மறை மதிப்பெண் இல்லை. 

ஆனால் காரைக்குடி போன்ற இடங்களில் 
புதிய அளவீட்டு முறை பின்பற்றப்படவில்லை. 
பலமுறை நாம் எடுத்துச்சொல்லியும் பலனில்லை. 
ஏறத்தாழ இருபது விண்ணப்பங்கள் 
காரைக்குடி மாவட்டத்தில் மட்டும் 
கருணை அடிப்படை பணிக்காகக் காத்திருக்கின்றன.

2014ல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில்…
தீவிரவாதிகள் தாக்குதலால் இறந்தவர்கள் மற்றும்
புற்றுநோய்,சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளான 
குடும்ப உறுப்பினர்கள் இருந்தால்…
அளவீட்டு முறையில் 
விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் உச்சிப்புளியில் காலமான 
தோழர்.தங்கம் என்பவரது மகள் தொடர்ந்து
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தாலும் கூட..
தோழர்.தங்கம் குடும்பத்தினரின் 
கருணை அடிப்படை மனு நிராகரிக்கப்படுகிறது.

01/01/2007ல் புதிய அளவீட்டில்…
குறைந்த பட்ச ஓய்வூதியம் 
4400 வரை 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது...
ஆனால் BSNLலில் 
01/01/2007 அன்று குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6500/- ஆகும்.
அப்படியானல் 4400 நிர்ணயம் செய்ய என்ன அடிப்படை?

ஓய்வூதியப்பலன்களில்…
2லட்சம் வரை 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
ஆயுள் காப்பீடே ஒரு லட்சம் வந்துவிடும்…
விடுப்புச்சம்பளம், பணிக்கொடை எல்லாம் சேர்த்து 
2லட்சம் என்று நிர்ணயம் செய்திருப்பது ஏற்புடையதல்ல…
மேலும் இறப்புக்குள்ளாகும் ஊழியர்களுக்கு
வங்கிக்கடன், கூட்டுறவுக்கடன் என 
கடன் மட்டும் பல லட்சங்கள் கட்டாயம் இருக்கும்.
இந்தக் கடன்களை நிர்வாகம் 
கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை…

மாத வருமானம்...
ரூ.1000க்கும் அதிகமாக இருந்தால்
எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது…
இதுவும் ஏற்புடையதல்ல..
இரந்து உயிர் வாழ்பவர்களுக்குக் கூட…
மாத வருமானம் ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும்..

சிலர் கொடிய வறுமையை முன்னிட்டு…
கருணை அடிப்படை பணிக்கு விண்ணப்பித்து விட்டு...
ஒப்பந்த ஊழியராகப் பணி செய்கின்றனர்…
மரணமுற்ற காரைக்குடி தோழர்.சுப்பையாவின் மனைவி
திருமதி.சாந்தி ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிகிறார்…
ஒப்பந்த ஊழியர் பணி என்பது
நிரந்தர வருமானம் உள்ள பணி  என்று
காரைக்குடி நிர்வாகம் வாதிடுகிறது…
எனவே எதிர்மறை மதிப்பெண் வழங்குகிறது…
வேறு வழியின்றிப் போனவர்கள்தான்…
ஒப்பந்த ஊழியராக வேலைக்கு வருகிறார்கள் என்ற
உண்மையை நிர்வாகம் உணர மறுக்கிறது…
இவ்வாறாக பல்வேறு பிரச்சினைகளை 
நாம் சுட்டிக்காட்ட முடியும் என்றாலும்...
நாம் நிர்வாகத்திடம் கோருவது 
இரண்டே கோரிக்கைகள்தான்…

கருணை அடிப்படை பணி நியமனத்தில்…
55 மதிப்பெண் என்பதை 
40 ஆகக்குறைக்க வேண்டும்...

அளவீடுகளில் நியாயமான 
மாற்றங்களைச் செய்ய வேண்டும்…

எல்லாவற்றிற்கும்  மேலாக...
எல்லா மட்டங்களிலும்...
மனிதநேயத்தோடு...
அணுகப்படவேண்டும்...

இல்லையெனில்…
கருணை அடிப்படை பணி என்பது
வெறும் கண்துடைப்பான பணியாகவேப் போய்விடும்…

1 comment:

  1. தோழர் உங்களின் வேதனை தெரிகின்றது. ஆனால் ஆளுமையின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மனிதர்களால் நிற்ணயிக்கபட்ட அதுவும் தவறாக நிர்ணயிக்கபட்ட விதிமுறைகள் மட்டுமெ கண்ணுக்கு தெரிகின்றது...

    ReplyDelete