Thursday 28 February 2019


எது வரினும் அஞ்சோம்… நில்லோம்…

ஊதிய உயர்வு கேட்டுப்போராடிய நாம்
இன்று ஊதியம் கேட்டுப்போராடும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்..

முதன்முறையாக…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு…
மாதத்தின் இறுதி நாளன்று சம்பளம் வழங்கும்
நடைமுறை தற்போது தகர்ந்துள்ளது…
காரணம் நிதிப்பற்றாக்குறை என்று சொல்லப்படுகின்றது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
தொடர் போராட்டங்களை நடத்திய நாம்…
இன்று நமது ஊதியத்திற்கே போராட வேண்டிய அவலம்..

இது திட்டமிடப்பட்ட சதிச்செயல்…
இது போன்ற அவலநிலையை உருவாக்கி
ஊழியர்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி
அவர்களை விருப்ப ஓய்வுத்திட்டத்தில்…
அனுப்புவதுதான் அரசின் கொடிய திட்டமாகும்...

இந்த அநியாயத்தை எதிர்த்து…
பிப்ரவரி மாத சம்பளத்திற்கு உரிய நிதி வழங்கக்கோரி
நாடு முழுவதும் இன்று 01/03/2019
ஆர்ப்பாட்டம் நடத்திட
AUAB – அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்நிலை அகற்றிட.. இழிநிலை துடைத்திட…
எதுவரினும் அஞ்சோம்… நில்லோம்… சந்திப்போம்…
என்ற பாரதியின் வரிகளாய்..
எழுந்து ஒன்றாய்ப் போராடுவோம் தோழர்களே….

பணிமுடிப்பு வாழ்த்துக்கள்…

காரைக்குடியில் கணக்கதிகாரியாய்ப் பணிபுரியும்
தோழியர் V.மீனாள் 
AO அவர்கள்
01/03/2019 இன்றோடு BSNL நிறுவனத்தில்
தனது பணியை முடித்துக்கொண்டு 
விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
அவருக்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

இன்னும் ஓராண்டுக்கும் அதிகமாக சேவைக்காலம் இருந்தும்
சரியான தருணத்தில் அவர் விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
அவரைப்போலவே பல தோழர்கள் காத்திருக்கின்றார்கள்.
இத்தகைய மனநிலையை ஊழியர்கள்
மனதில் உருவாக்குவதுதான் மத்திய அரசின்… DOTயின் திட்டம்.

பிப்ரவரி மாதம் சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்ற
இக்கட்டான சூழலில் அவர் விருப்ப ஓய்வில் செல்கின்றார்.
விருப்ப ஓய்வில் செல்லும் போது சம்பளம் கூட
அவர் வாங்காமல் செல்வது வருத்தத்துக்குரியது.
விருப்ப ஓய்வில் செல்லும் அவரோடு
வாழ்த்துக்களை மட்டுமல்ல
வருத்தங்களையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

எத்தகைய சோதனைகளையும் சந்தித்து
அவற்றை சாதனைகளாக மாற்றியமைப்பதுதான் தொழிற்சங்கம்...
நிச்சயம் இந்த அவலநிலையை மாற்றியமைப்போம்…

வாழ்த்து சொல்ல 9486101901...

அறம் தாங்கிய 
அன்புத்தோழன் வாழ்க… 

அறந்தாங்கியில் பணிபுரிந்தான்…
மனதில்…
அறம் தாங்கிப் பணிபுரிந்தான்…

அறந்தாங்கிப் பணிபுரிந்தான்..
மனதில்…
அன்பைத்தாங்கிப் பணிபுரிந்தான்..

செங்கொடி தாங்கி இயக்கம் வளர்த்தான்…
சிந்தனை வளர்த்து செம்மை பெற்றான்…

கொள்கை தாங்கி வலுப் பெற்றான்…
குணம் தாங்கி பெயர் பெற்றான்…

கலை இலக்கியத்தில் கால்பதித்தான்…
கலை இலக்கியப்பெருமன்றத்தில் தடம் பதித்தான்…

விருந்தோம்பலில் இலக்கணம் படைத்தான்…
விரிவான நட்பு வட்டத்தை விரும்பி வளர்த்தான்…

அண்ணாச்சி பொன்னீலனின் இதயம் கவர்ந்தான்…
தன்னாட்சி கொண்ட தன்மான இதயம் படைத்தான்…

தோழமை தாங்கி துயர் துடைத்தான்…
சேதுபதி என்னும் பெயர் படைத்தான்…
 ------------------------------------------------- 
இன்று 28/02/2019 பணிநிறைவு பெறும்
அன்புத்தோழர்… ஆற்றல்மிகு
அறந்தாங்கி சேதுபதி
அவர்களின்
பணிநிறைவுக்காலம்
மண் பயனுற…
மக்கள் பயனுற…
தோழமை பயனுற…
தொண்டர்கள் பயனுற…
இளைத்தோர் பயனுற…
எளியோர் பயனுற…
இனிதே அமைந்திட...
வாழ்வாங்கு வாழ்ந்திட…
மனமார வாழ்த்துகின்றோம்…
 NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்
வாழ்த்து சொல்ல : 9443219288

Wednesday 27 February 2019


பணி நிறைவு வாழ்த்துக்கள்

இன்று 28/02/2019
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும்...

பணியில் அலைகடல்
பணிவில் ஆழ்கடல்
பண்பில் பாற்கடல்..
அன்பில் எழுகடல் ..
அருமைத்தோழியர்
N.பாலா OS/RND
--------------------------------------------

அரிய முத்து
அறிவு முத்து....
அருமை முத்து
இயக்கத்தின் சொத்து..
அன்புத்தோழர்
M.அரியமுத்து JE/RND
இராமநாதபுரம் NFTE கிளைச்செயலர்
--------------------------------------------------------

அன்பில் வலியவன்
அமைதியான எளியவன்..
உருவில் வாமனன்
உள்ளத்தில் உயர்ந்தவன்
K.சாத்தையா TT/RND
--------------------------------------------------------

சோதனைகளை வென்றவன்
சொந்தங்களைத் தாங்கியவன்
கடமையில் கருத்தானவன்
தோழமையில் உயிரானவன்
K.அருள்நாதன் TT/UCP
--------------------------------------------------------

கடமை தவறா
கண்ணியம் மறவா..
கட்டுப்பாடு பிறழா 
அன்புத்தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்...

Monday 25 February 2019


துரோகங்களைத் துடைத்தெறி…

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.

நம்பிக்கை வைத்தவர்
துரோகம் இழைப்பாரேயானால்…
அந்த துரோகி இறந்தவருக்கு சமம்…
என்பது வள்ளுவர் வாக்கு…

மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில்…
முனைப்போடு தோழர்கள் பங்கேற்றனர்.
அன்றாடக்கூலிகளான ஒப்பந்த தொழிலாளரும்..
தங்களது சம்பள இழப்பைப் பொருட்படுத்தாது…
உணர்வோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்…

ஆனால்… வெட்கம்… வெட்கம்… வெட்கம்…
காரைக்குடி மாவட்டத்தில்…
NFTE இயக்கத்தில்…
மாவட்டப்பொருளராக இருந்த…
தோழர்.பாலமுருகன் JE (JTO EXAM APPEARED)
(அவரைத் தோழர் என்று சொல்லக்கூட நாகூசுகிறது…)
போராட்டத்தில் கலந்து கொள்ளாது பணி செய்துள்ளார்…
பணி செய்தது மட்டுமல்ல…
போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும்…
ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கு
வரச்சொல்லி கட்டாயப்படுத்தியும்…
தரமற்ற செயல்களைப் புரிந்துள்ளார்…

தோழர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தும்…
அவர் செவிமடுக்கவில்லை…
சிந்தை உரைக்கவில்லை…

எனவே…. 25/02/2019 அன்று கூடிய
காரைக்குடி NFTE கிளைக்கூட்டத்தில்…
தோழர். பாலமுருகனை
NFTE அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து
நிரந்தரமாக நீக்குவது என்ற தீர்மானத்தை
கிளைத்தலைவர் தோழர்.காதர்பாட்சா முன்மொழிய
கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் வழிமொழிய
கிளைக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.  

ஒரு போராட்டத்தை விமர்சிக்கும் தகுதி
அந்தப் போராட்டத்தில் கலந்து
கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு…
போராட்டத்தில் கலந்து கொள்ளாமல்…
மருத்துவ விடுப்பு எடுத்தவர்களுக்கும்..
மறை கழன்றவர்களுக்கும்…
போராட்டத்தை விமர்சிக்க
எந்தவொரு தகுதியும் அருகதையும் இல்லை…

எனவே அருகதையற்றவர்களை…
இயக்கத்தில் தொடர வைப்பது…
இயக்க நலனுக்கு உகந்ததல்ல…

துரோகங்களைத் துடைத்தெறிவோம்…
துன்மார்க்க செயல்களை உடைத்தெறிவோம்…

குணத்தில் குன்று… குடந்தை வெல்க… 

வீரியம் பெருக்கு..
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமை செய்
வையத் தலைமை கொள்...
என்னும் பாரதியின் வழியொற்றி…

NFTE இயக்கத்தில்…
புதிய ஆத்திசூடியாய்…
குணத்தில் குன்றாய்..
கொள்கையில் விளக்காய்…
முனையிலே முகத்து நிற்கும்
குடந்தை மாவட்டம்..
புதுமை படைத்திட…
புகழ் விரிந்திட…
விழைந்து வாழ்த்துகின்றோம்…

வாழ்த்துக்களுடன்…
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்

Sunday 24 February 2019


அடுத்தது என்ன?

BSNLலில் பிப்ரவரி 18 முதல் 20 வரை…
மூன்று நாட்கள் ஊழியர்கள் அதிகாரிகள்..
ஒன்றுபட்ட உரமான வேலைநிறுத்தம்…
உணர்வோடு நடந்து முடிந்துள்ளது.

ஒன்றுபட்டு உணர்வோடு போராடிய தோழர்களின்
இப்போதைய கேள்வி…  அடுத்தது என்ன?

பிப்ரவரி 28க்குள்…
நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மனுக்கொடுப்பது..
மார்ச் 6 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கிப் பேரணி..
பிரதமர் மற்றும் அமைச்சருக்கு TWITTER மூலம் கோரிக்கை விடுப்பது
என AUAB தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஆனால் போராடிய ஊழியர்களைப் பொறுத்தவரை…
தங்களுக்கான பலன் என்ன? அடுத்து என்ன?
என்பதே ஒரே ஒரு கேள்வியாக உள்ளது…

முன்பு போராட்டங்கள் பலன்களைக் கைமேல் அளித்தன….
இப்போதெல்லாம் போராட்டங்கள்… என்பது
எதிர்ப்புக்களைப் பதிவு செய்யும்
நிகழ்வுகளாக மாறிப்போய்விட்டன..
இதுதான் இந்திய தேசத்தின் இன்றைய நிலைமை…
இது இந்திய தேசத்தின் எல்லாப்பகுதி
தொழிலாளர்களுக்கும்… மக்களுக்கும் பொருந்தும்…

போராட்டம் முடிந்த பின்பு கூட
போராட்ட விளைவுகளைப் பற்றி
அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதுமில்லை…
ஊடகங்கள் மூலமாகவே செய்திகள் தெரிய வருகின்றன…
அத்தகைய செய்திகளையே தோழர்களிடம்
பகிர்ந்து கொள்ளும் சூழல் நிலவுகிறது…

தற்போது  ஊடகங்களில் வந்த செய்திகளின்படி…

தொலைத்தொடர்பு என்பது மக்களுக்கான
அத்தியாவசிய… அவசிய… சேவைப்பகுதி என்பதால்
அரசுத்துறையின் இருப்பு தொலைத்தொடர்பில்
அவசியம் என அரசு கருதுகிறது…
எனவே தொலைத்தொடர்பில்...
அரசு நிறுவனங்களான… BSNL மற்றும் MTNL நிறுவனங்களை
மூடிவிடுதல் என்ற பேச்சுக்கு இடமில்லை…

எனவே BSNL மற்றும் MTNL நிறுவனங்களை
மறுசீரமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது…
இதற்கான திட்டங்களைத் தயார் செய்யவும்…
செலவினங்களைக் கட்டுப்படுத்தவும்…
வருமான உயர்வுக்கு வழிவகுக்கவும்…
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

செலவினங்களைப் பொறுத்தவரையில்…
ஊழியர்களின் சம்பளம் என்பது கூடுதல் செலவினமாக உள்ளது…
எனவே விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்த அரசு விரும்புகிறது…
இதற்காக திட்டங்கள் தயார் செய்யப்பட்டு DOT அனுமதியுடன்…
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படலாம்….

அமைச்சரவைக்கு மிகக்குறுகிய காலமே இருப்பதால்…
புத்தாக்க திட்ட ஒப்புதல்…
விருப்ப ஓய்வு திட்ட ஒப்புதல்…
போன்றவற்றை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க
கால அவகாசம் இருக்குமா என்பது தெரியவில்லை…

எத்தகைய முடிவுகள் வந்தாலும்…
சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது…
பாதகங்களை எதிர்த்துப் போராடுவது…
என்பதுவே தொழிற்சங்க தாரக மந்திரம்…
அந்த திசைவழியில் தொடர்ந்து பயணிப்போம்…
ஊழியர் நலன் காப்போம்…
BSNL வளம் காப்போம்…

கிளைக்கூட்டம்
 NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி கிளை
 சிறப்பு கிளைக்கூட்டம்
 ----------------------------------------------------------------------
25/02/2019 – திங்கள்கிழமைமாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
 --------------------------------------------------------------------------------
-: தலைமை :-
தோழர். அ.காதர்பாட்சா கிளைத்தலைவர்
 ----------------------------------------------------------------------------------
ஆய்படு பொருள்
அகில இந்திய போராட்டம்ஆய்வு
அமைப்பு நிலை
தலமட்டப்பிரச்சினைகள்
இன்னபிற

தோழர்களேவாரீர்

அன்புடன் அழைக்கும்…
ம.ஆரோக்கியதாஸ் - கிளைச்செயலர்

Thursday 21 February 2019


கிளைக்கூட்டம்
 N F T E
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
இராமநாதபுரம் கிளை
 ------------------------------------------------------------------------------
சிறப்பு கிளைக்கூட்டம்
 -------------------------------------------------------------------------------
23/02/2019 – சனிக்கிழமை – மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
 -----------------------------------------------------------------------------
 -: தலைமை :-
தோழர். R.இராமமூர்த்தி கிளைத்தலைவர்
 -------------------------------------------------------------------------------
ஆய்படு பொருள்
அகில இந்திய போராட்டம் – ஆய்வு
கிளை மாநாடு
மாவட்டச்செயற்குழு
பணி நிறைவு பாராட்டு விழா
இன்ன பிற…
 ----------------------------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
வெ.மாரி - மாவட்டச்செயலர்
பா.லால்பகதூர் - மாவட்டத்தலைவர்
-------------------------------------------------------------------------------
தோழர்களே… வாரீர்…

அன்புடன் அழைக்கும்....
 M.அரியமுத்து - கிளைச்செயலர்

உலக தாய்மொழி தினம்

சிறப்புக்கூட்டம்
 22/02/2019 – வெள்ளிக்கிழமை
மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…
சிறப்புரை : பேராசிரியர்
பாகை கண்ணதாசன்
 தோழர்களே… வருக…

Wednesday 20 February 2019


BSNL - MTNL  சீரமைப்பு 

இன்று 21/02/2019 DCC எனப்படும்  
DIGITAL COMMUNICATIONS COMMISSION
(முந்தைய TELECOM COMMISSION)
தொலைத்தொடர்பு ஆணையம் டெல்லியில்
கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

DCC தொலைத்தொடர்பில் கொள்கை முடிவெடுக்கும் 
அதிகாரம் படைத்த உச்சக்கட்ட அமைப்பாகும்.
எனவே இந்தக் கூட்டம் மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது. 

இன்று நடைபெறும் DCC கூட்டத்தில்
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள்  பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்  என தெரிகிறது.

BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அவற்றில்…
ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது… 
அதன் மூலம் 2019-20 நிதியாண்டில் சுமார் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது…

விருப்ப ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் 
மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது…

4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது…

காலியாக உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை
வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது…
போன்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.

இது தவிர… சீரமைப்பு சம்பந்தமாக
DOT தனது பங்காக சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..

அவற்றில்…
ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின்
மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால்…
மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் 
ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET போன்ற நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம்
சம்பளச் செலவினங்களை பரவலாக்குவது…

நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,  
நிதி ஆதாரங்களை  உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் கடன் கோருவது….போன்ற ஆலோசனைகளை DOT முன்வைத்துள்ளது.

இன்றைய DCC கூட்டத்தில்…
BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்…

BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில்
4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில்
இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் பெறப்படும்.

எனவே இன்று நடைபெறும் DCC கூட்டம் 
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காக போராடியும் மூன்று நாட்கள்
வேலைநிறுத்தம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை
அரசிற்கு மிக வலுவாக தெரிவித்துள்ளதால்..

இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகளை நிதானத்தோடு மேற்கொள்ளும் 
என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து செல்… துணிந்து செல்… 

நாடு முழுவதும் நமது மூன்று நாள் வேலைநிறுத்தம்
மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
உணர்வோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்….

கண்ணிருந்தும் குருடாய்.. காதிருந்தும் செவிடாய்..
DOT அதிகாரிகளும்… இலாக்கா அமைச்சரும்…
சற்றும் கூட சட்டை செய்யாது மவுனம் காத்து நின்றனர்.

எனவே இன்று 20/02/2019 கூடிய 
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு கீழ்க்கண்ட முடிவுகளை 
அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.
 ---------------------------------------------------------------------------------------
அடுத்த கட்ட நடவடிக்கைகள்

06/03/2019 அன்று பிரதமர் அலுவலகம் 
நோக்கி மாபெரும் பேரணி..

28/02/2019க்குள் அனைத்து MPக்களையும் 
சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

பிரதமர் மற்றும் இலாக்கா அமைச்சருக்கு 
TWITTER மூலம் கோரிக்கை விடுத்தல்..

இலாக்கா அமைச்சரை விரைவில் 
சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தல்...
  -------------------------------------------------------------------------------------
தோழர்களே…
அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்…
நமது நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம்…