Saturday 29 February 2020


இனி இல்லை கவலை...

 
ஜனவரி சம்பளம் எப்போது வரும்?
யாருக்கும் தெரியாது...
பிப்ரவரி சம்பளம் எப்போது வரும்?
யாருக்கும் தெரியாது?

மார்ச் மாத சம்பளம் வருமா?
அதுவும் தெரியாது....

ஆனால்..
ஜனவரி 2020ல்...
விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள்..
தங்கள் ஜனவரி சம்பளத்தை 
இன்னும் பெறவில்லை...
அதற்குள்...
இன்று பிப்ரவரி மாத
ஓய்வூதியம் பெற்று விட்டார்கள்.

இதுவரை கையில் வாங்கிய
சம்பளப் பணத்தை விட..
இன்று கையில் வாங்கிய 
ஓய்வூதியம் கூடுதல் தொகை.

ஓய்வூதியம்...
உயர் ஊதியம்...
உயர்வான ஊதியம்..
உயர்வான தோழர் குப்தா.. 
பெற்றுத்தந்த ஊதியம்...

இந்நாளில் மட்டுமல்ல... 
எந்நாளும்...
வணங்குவோம்... வாழ்த்துவோம்...
               ---------------------------------------------------
பாடுபட்ட அனைத்து
இயக்கங்களுக்கும்... தலைவர்களுக்கும்...
BSNL மற்றும் DOT நிர்வாகத்திற்கும்...
அளவில் பெரிய செயலை...
விரைவாக... எளிதாக... சரியாக...
செயல்படுத்த உதவிய 
தொழில்நுட்பத்திற்கும்...
நமது நன்றிகள்... வாழ்த்துக்கள்...            
                ---------------------------------------------------
குறிப்பு:
தற்காலிக ஓய்வூதியம் விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் கடைசியாக
 எந்த வங்கியில் சம்பளம் பெற்றார்களோ அந்த வங்கியிலும்...
GPF வைப்புநிதி தோழர்கள் ஓய்வூதியத்திற்கு எந்த வங்கியைத் 
தேர்ந்தெடுத்தார்களோ அந்த வங்கியிலும் பட்டுவாடா செய்யப்படும்.

Friday 28 February 2020


எஞ்சிய வாழ்வு... எளியோருக்காகட்டும்...
  
மதுரை மண்ணின் புதல்வி...
மகளிர் அணியின் தலைவி...
கொள்கையில் சிவந்த செம்மலர்...
கோபம் கொண்டால் சுடுமலர்...
கண்ணியம் மிக்க தனிமலர்...
கடமையில் உயர்ந்த பணிமலர்...
பாசத்தில் நிறைந்த பனிமலர்..
பண்பில் சிறந்த பரி... மலர்...
கொண்ட கொள்கை சிவக்கட்டும்...
பணிநிறைவுக்காலம் சிறக்கட்டும்...
எஞ்சிய வாழ்க்கை.... மிஞ்சிய ஆற்றல்...
ஏங்கிடும் எளியோருக்காய் மலரட்டும்...
 -------------------------------------------------------------
இன்று 29/02/2020 பணிநிறைவு பெறும்
மாநில மகளிர் அணித்தலைவி
NFTE மாநில உதவித்தலைவர்
அன்புத்தோழியர்....
T.பரிமளம்
அவர்களின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

அன்பு வாழ்த்துக்களுடன்...
NFTE காரைக்குடி மாவட்ட சங்கம்.

பணிநிறைவு வாழ்த்துக்கள்

இன்று 29/02/2020
காரைக்குடி மாவட்டத்தில்  
பணிநிறைவு பெறும்
அன்புத்தோழர்கள்...

S. அருள் குழந்தைச்சாமி
TT/இராஜசிங்கமங்கலம்

N. சுப்பிரமணியன்
OS/காரைக்குடி

M. உலகம்மாள்
TM/இராமநாதபுரம்

ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்.

Wednesday 26 February 2020

செ ய் தி க ள்

சம்பளப்பட்டுவாடா
ஜனவரி மாத சம்பளம் மார்ச் முதல் வாரத்திலும்... 
பிப்ரவரி மாதச்சம்பளம் மார்ச் மாத இறுதியிலும் கிடைக்கும் என பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வருடாந்திர பில்கள் பட்டுவாடா நிகழ்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனாலும் மார்ச் மாதச்சம்பளம் 
மார்ச் மாதமே கிடைக்குமா என்பது சந்தேகமே...
 பொறுமை கடலினும் பெரிது...
-----------------------------------
GFP பட்டுவாடா
விருப்ப ஒய்வில் சென்ற ஊழியர்களின் GPF விண்ணப்பங்கள் 
இன்று 27/02/2020 மாலைக்குள் சம்பந்தப்பட்ட
 DOT அலுவலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இதுவரை ஏறத்தாழ 68ஆயிரம் ஊழியர்களுக்கு நாடுமுழுக்க வைப்புநிதி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
 வைப்புநிதி பட்டுவாடாவில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருப்பது வருத்தத்திற்குரியது. வைப்புநிதி போலவே ஆயுள் காப்பீட்டுத்தொகை பட்டுவாடாவிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது.
 பல்வேறு மாநிலங்களில் ஆயுள் காப்பீடு
 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------
இலாக்காத் தேர்வுகள்
போன்மெக்கானிக், J.E.,. JTO மற்றும் JAO இலாக்காத் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என நிர்வாகம் நமது சங்கத்திடம் உறுதி அளித்திருந்தது. ஆனால் பிப்ரவரி மாதம் முடிவடையும் நிலையில் அறிவிப்பிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே உடனடியாக இலாக்காத் தேர்வு அறிவிப்புக்களை வெளியிட வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------
கூட்டுறவு சங்கப்பிடித்தம்
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் அனைத்துப் பிடித்தங்களும் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கப்பிடித்தங்கள் மட்டும் இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகையை சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளன. சென்னைக்கூட்டுறவு சங்கம் உறுப்பினர்களின் – ASSET சொத்துக்களைக் கடனில் இருந்து கழித்து மிச்சமுள்ள கடன்தொகைக்கு பட்டியல் அனுப்பியுள்ளது. ஆனால் 2019 ஏப்ரல் மாதம் வரை வரவு வைக்கப்பட்ட பிடித்தம் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. 2019 மே மாதம் முதல் ஜனவரி 2020 
வரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை
 கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மதுரை கூட்டுறவு சங்கம் சொத்துக்கணக்கை கழிக்கவில்லை. 
மதுரை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடு கரடு முரடாக 
ஊழியர் விரோதமாக உள்ளது. எனவே ஊழியர்களின் சொத்துக்கணக்கு அவர்களின் கடன் தொகையில் இருந்து கழிக்கப்படவில்லை என்றால் மதுரை கூட்டுறவு சங்கத்தை எதிர்த்துப் போராடுவதைத் தவிர 
வேறு வழியில்லை. தோழர்கள் தயாராகவும்....

பணிநிறைவு பாராட்டு விழா


NFTE தமிழ் மாநில உதவித்தலைவர்
தோழியர். 
T.பரிமளம்
பணிநிறைவு பாராட்டு விழா
 ------------------------------------
27/02/2020 – வியாழன்
மதியம் 12.00 மணி
LEVEL IV மனமகிழ் மன்றம்
தல்லாகுளம் – மதுரை
 ------------------------------------
 வாழ்த்துரை : தோழர்கள்
G. இராஜேந்திரன்
NFTE மதுரை மாவட்டச்செயலர்

G. சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்

V. மாரி
NFTE காரைக்குடி மாவட்டச்செயலர்

M. லட்சம்
NFTE முன்னாள் மாநிலத்தலைவர்

K.சேது
மற்றும் முன்னணித்தோழர்கள்...

 தோழர்களே... வருக...
 அன்புடன் அழைக்கும்
V. பரமசிவம் - கிளைச்செயலர்

Tuesday 25 February 2020


வரி முக்கியமா?  வலி முக்கியமா?

ஓராண்டு காலமாக பட்டினி போடப்பட்டுள்ள
 ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது சங்கம்  தொடர்ந்த  வழக்கின் அடிப்படையில் 30 சத சம்பளத்தை
 உடனடியாக வழங்க வேண்டும் என நிர்வாகத்திற்கு 
சென்னை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.

தமிழ்மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒருமாத சம்பளம் ஏறத்தாழ 8 கோடி ரூபாய் ஆகும். எனவே மூன்று மாதங்களுக்கு 
ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தகாரர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டான் என்ற பழமொழிக்கேற்ப BSNL நிர்வாகம் மூன்று மாதங்களுக்கான நிதி ஒதுக்கினாலும்... குத்தகைப் பூசாரிகள் மூன்று மாத பில்களை பட்டுவாடா செய்ய மறுக்கின்றார்கள். கடலூர், பாண்டிச்சேரி,கும்பகோணம்,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இரண்டு மாத சம்பளமும், மதுரை போன்ற பகுதிகளில் ஒருமாத சம்பளமும் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் இன்னும் பட்டுவாடா நடைபெறவில்லை.

மூன்று மாத சம்பளத்தைப் பட்டுவாடா செய்யக்கோரி ஒப்பந்தகாரர்களிடம் நாம் பேசினால்  பல்வேறு கதைகளை அவர்கள் நம்மிடம் கதைக்கின்றார்கள். GST கட்ட வேண்டும். EPF, ESI கட்ட வேண்டும். எனவே மிச்சமுள்ள பணத்தில்தான் சம்பளம் போட வேண்டும் என கதையளக்கின்றார்கள். எத்தனையோ ஆண்டுகளாக தொழிலாளரை ஏமாற்றி... தொழிலாளர் நலச்சட்டங்களை காலில் மிதித்து.... அரசை ஏமாற்றி வந்த படுபாதக குத்தகைக்காரர்கள் தற்போது அரசு நடைமுறைகளைத் தாங்கள் சரியாக... முறையாகப் பின்பற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர் விடுவது 
வேடிக்கையானது.... கண்டனத்துக்குரியது.

எனவே நமது மாநிலச்சங்கங்கள் மாநில மட்டத்தில் 
உடனடியாகப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 
உரிய தீர்வு கிட்டாத நிலையில் மாநிலம் தழுவிய 
போராட்ட அறைகூவலை விடுக்க வேண்டும்.

அரசுக்கான வரி முக்கியமா?
பற்றியெரியும் அடிவயிற்றின் வலி முக்கியமா?
என்பதை முடிவு செய்தாக வேண்டும்.

Saturday 22 February 2020


அறவழிப்போராட்டம் 

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓராண்டு காலமாக கூலியில்லை....
நிரந்தர ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளமில்லை...
பணியில் உள்ள ஊழியருக்கு GPF வழங்கப்படவில்லை....
கூட்டுறவுக்கடன் பிடித்தம் செலுத்தப்படவில்லை.....
4G சேவை இன்னும் துவக்கப்படவில்லை...
8500 கோடிக்கான கடன் பத்திரங்கள் வெளியிடப்படவில்லை...
முறையற்ற மாற்றல்கள் நிறுத்தப்படவில்லை...
விதி FR-17-A குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்படவில்லை....
இப்படியாக... இல்லை... இல்லை...
என்று சொல்லும் இழிநிலை...
இன்னும் தொடராமல் தடுத்திட...
 -----------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக
நாடு தழுவிய
உண்ணாவிரத

அறவழிப்போராட்டம்

24/02/2020 – திங்கள் – காலை 10 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
 -----------------------------------
NFTE சங்க மதுரை, காரைக்குடி, விருதுநகர் தோழர்கள்
அனைவரும் மதுரையில் திரளாக... உணர்வாகக்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday 19 February 2020


கையெழுத்து இயக்கம்... 
BSNL நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு
ஒருமாத சம்பளம் வழங்கவில்லை...
ஒப்பந்த ஊழியர்களுக்கோ
ஓராண்டு சம்பளமில்லை...
இந்தக் கொடுமை எதிர்த்து
நமது இயக்கங்கள் சென்னை நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்த அடிப்படையில்..
தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி முழுமையாக
ஒப்பந்த ஊழியர் பிரச்சினையைத் தீர்க்காது...
எனவே ஒப்பந்த ஊழியர் பிரச்சினையை
மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல
தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திட
NFTE மற்றும் ஒப்பந்த ஊழியர் 
மாநிலச்சங்கங்கள் அறைகூவல் விட்டுள்ளன.
---------------------------------
BSNL ஒப்பந்த ஊழியர் துயரம் துடைத்திட...
கவன ஈர்ப்பு கையெழுத்து இயக்கம்....
22/02/2020 – உலக சாமானியர்கள் தினத்தில்...
சாமானியத் தோழர்களுக்காக நடைபெறும்.
---------------------------------
கையெழுத்து இயக்கத் துவக்க நிகழ்வு
 ---------------------------------
22/02/2020 – சனிக்கிழமை – மாலை 04.00 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
  ---------------------------------
தலைமை : தோழர். வெ.மாரி
NFTE மாவட்டச்செயலர் – காரைக்குடி
 ---------------------------------

பங்கேற்பு : தோழர்கள்
G. இராஜேந்திரன்
NFTE மாவட்டச்செயலர் – மதுரை

T. பரிமளம்
NFTE மாநில உதவித்தலைவர்

G. சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்

B. முருகன்
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச்செயலர்

B. லால்பகதூர்
NFTE மாவட்டத்தலைவர் – காரைக்குடி

 சிறப்புரை 
தோழர். பழ. இராமச்சந்திரன்
AITUC – துணைப்பொதுச்செயலர்(உள்ளாட்சி)

நன்றியுரை
தோழர். பரமசிவம் - NFTE கிளைச்செயலர்
 ---------------------------------
ஒப்பந்த ஊழியர்கள்... ஓய்வு பெற்ற தோழர்கள்
பணியில் உள்ள தோழர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday 18 February 2020


பட்டினிப் போராட்டம் 

AUAB - அனைத்து சங்க கூட்டமைப்பு
BSNL மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்திடக்கோரி...
24/02/2020 
நாடு தழுவிய
பட்டினிப்போராட்டம்
 ----------------------------------------------------------------
24/02/2020 – திங்கள் – காலை 10 மணி
தல்லாகுளம் தொலைபேசி நிலையம் – மதுரை
 ----------------------------------------------------------------
BSNL நிர்வாகமே...
சம்பளம் நிறுத்தும் சண்டாளத்தனம் நிறுத்து....
ஜனவரி சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்...
உழைத்தவன் கூலியை உரிய தேதியில் வழங்கு...
பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனடியாக செலுத்து...
4G சேவையினை உடனடியாகத் துவக்கிடு...
BSNL  கடன் திரட்டுவதற்கான அரசு உத்திரவாதம் வழங்கிடு...
FR-17(A) விதியின்படி அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்துசெய்...
VRSக்குப்பின்னர் போடப்படும் முறையற்ற மாற்றல்களை ரத்து செய்...

தோழர்களே... அணி திரள்வீர்...

Sunday 16 February 2020


துக்கமல்ல... வெட்கம்...
 

மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில் BSNL தொலைபேசி நிலையத்தில் ATT ஆகப்பணிபுரிந்த தோழர். இராமேஷ்வர் குமார் சோந்தியா 13/02/2020 அன்று அகால மரணமடைந்தார்.

 காரணம் பன்றிக்காய்ச்சலோ.... பறவைக்காய்ச்சலோ அல்ல... கரோனா வைரசை விடக் கொடிய தாக்குதலால் அவர் மரணமடைந்துள்ளார்.

உழைப்பவனின் வியர்வை காயுமுன்னே அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி பேசப்படும் இவ்வுலகில் உழைத்த காசு இரண்டு மாதங்களாக வராத மனஉளைச்சலில் தோழர். இராமேஷ்வர் குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 37 வயதான இளம் தோழர் அவர். 

ஒரு வருட காலமாக சம்பளம் வராத காரணத்தால் நாடு முழுவதும் பல ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில் திண்டுக்கல்லில் சைமன் என்ற
 ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். 

08/02/2020 அன்று கோவை நகருக்கு சுற்றுப்பயணம் வந்த BSNL CMDயிடம் சம்பளம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது தன்னிடம் நோட்டு அடிக்கும் இயந்திரம் இல்லை என்று எகத்தாளமாக பதில் சொல்லி இருக்கின்றார். ஆனால் CMDயிடம் நோட்டு அடிக்கும் இயந்திரத்திற்குப் பதிலாக மனிதன் உயிரைப் பறிக்கும் இயந்திரம் இருப்பதாக நமக்குத் தெரிய வருகின்றது. பல ஒப்பந்த ஊழியர்களின் உயிரைப் பறித்து இப்போது நிரந்தர ஊழியர்களின் 
உயிரையும் நிர்வாகம் பறிக்க ஆரம்பித்துள்ளது.

உலகின் ஆன்மா என்று சொல்லப்படும் இந்திய தேசத்தில் அதன் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வறுமையில் தள்ளப்பட்டு மரணத்தைத் தழுவுவது மாபெரும் அவமானமாகும்.

வறுமை என்னும் அவமானத்தை மறைக்க வக்கில்லாத தன்மானமற்ற அரசு சுவர்களை எழுப்பி தன் மானத்தைக் காப்பாற்ற நினைக்கும்
 இந்த தேசத்தில் மரணங்கள் தொடரவே செய்யும்.

இங்கே...
பேய்கள் ஆள்கின்றன...
பிணங்கள் குவிகின்றன....
இது துக்கமல்ல... தேசிய வெட்கம்...

Friday 14 February 2020


தற்காலிக ஓய்வூதியம்
PROVISIONAL PENSION

விருப்ப ஓய்வில் சென்ற BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவும் சூழல் உள்ளதால் மே 2020 வரை தற்காலிக ஓய்வூதியம் 
PROVISIONAL PENSION வழங்கிட DOT உத்திரவிட்டுள்ளது.

  • விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் LAST PAY DRAWN கடைசி மாத அடிப்படைச்சம்பளத்தில் 50 சதம் ஓய்வூதியம் உரிய IDAவுடன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் மே 2020 வரை வழங்கப்படும்.
  • மே 2020க்குள் நிரந்தர ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் ஊழியர்கள் கடைசியாக சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களது கடைசி மாத சம்பளக் கணக்கை மாற்றக்கூடாது.
  • தற்காலிக ஓய்வூதியம் SBI வங்கி மூலம் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
  • தற்காலிக ஓய்வூதியம் அளிப்பதற்கான விவரங்களை அந்தந்த மாநில நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட DOT அலுவலகங்களுக்கு அனுப்பிட வேண்டும். மாநில நிர்வாகங்களிடமிருந்து உரிய தகவல் பெறப்பட்ட பின்பு DOT தற்காலிக ஓய்வூதியத்தை வழங்கும்.
  • மே 2020 வரையிலான மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 24ந்தேதிக்குள் ஓய்வூதியப் பட்டுவாடா ஆணை  PPO பிறப்பிக்கப்பட்டால் அந்தந்த மாதமே நிரந்தர ஓய்வூதியம் வழங்கப்படும். 24ந்தேதிக்குப் பின்னர் PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் அடுத்த மாதம் நிரந்தர ஓய்வூதியம் SAMPANN மூலம் வழங்கப்படும்.

உதாரணமாக மார்ச் 24ந்தேதிக்குள் ஒரு ஊழியருக்கு PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் மார்ச் மாதமே நிரந்தர ஓய்வூதியம்  SAMPANN மூலம் வழங்கப்படும். மார்ச் 24ந்தேதிக்குப் பின் PPO உத்திரவு பிறப்பிக்கப்பட்டால் மார்ச் மாதம் தற்காலிக ஓய்வூதியமும் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிரந்தர ஓய்வூதியமும் வழங்கப்படும்.

தோழர்களே...
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளங்கள் வழங்கப்படாத நிலையில் ஊழியர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். 

மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில் இராமேஸ்வர் குமார் என்ற ATT சம்பளம் வராத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். 

இது போன்ற நிலையில்...
DOT உடனடியாக தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட உத்திரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. தற்போதுள்ள சூழலில் தற்காலிக ஓய்வூதியம் விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Wednesday 12 February 2020

வருவாய்க் குறைவு

சென்ற நிதியாண்டை ஓப்பிடுகையில் BSNL நிறுவனத்தின் வருவாய்  இந்த நிதியாண்டில் குறைந்துள்ளது. மாநில வாரியான வருவாய் ஒப்பீட்டை CORPORATE அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 2020 வரையிலான மொத்த வருவாயை சென்ற ஜனவரி 2019 வரையிலான வருவாயோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ 2490 கோடி வருவாய் குறைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் ஜனவரி 2019 வரை 15911 கோடியும்... இந்த நிதியாண்டில் ஜனவரி 2020 வரை 13421 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏறத்தாழ 18 சதம் வருவாய் குறைந்துள்ளது. வருவாய் அதிகம் ஈட்டக்கூடிய கேரள மாநிலத்தில் கூட 23 சதம் வருவாய் குறைந்துள்ளது. 23 மாநிலங்களில் வருவாய் குறைந்துள்ள நிலையில் அந்தமான், பஞ்சாப், மேற்கு உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய நான்கு பகுதிகள் சென்ற ஆண்டை விட வருவாய் கூடுதலாக ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜனவரி 2020ல் ரூ.1443 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சம்பளமும் கொடுக்கப்படாத நிலையில் இந்தப்பணம் எங்கே போனது என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

1999 திட்டத்தின் மூலம் பிப்ரவரி மாத வருவாய் கூடுவதற்கான வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் 4G வசதி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பின்பு வருவாய் கூடுவதற்கான கூடுதல் வாய்ப்புள்ளது. ஏனைய அரசுத்துறைகள் BSNL சேவையைப் பயன்படுத்திட மத்திய அரசு வலியுறுத்துமேயானால் நமது வருவாய் உயர வாய்ப்புள்ளது. அதே நேரம் பாதியளவு ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுள்ளதால் செலவினங்களும் கட்டுப்படும். எனவே ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஊழியர்கள் சம்பளம் வழங்குவதில் தடையேதும் இருக்காது என்று நம்புவோம். 

மெல்ல... மெல்ல... வருவாய் உயரும் வரை...
ஊழியர்கள் வெறும் வாயை மெல்லும் நிலையே தொடரும்...

Friday 7 February 2020


பணிநிறைவு விழா 
NFTE – AIBSNLPWA
 இராமேஸ்வரம் NFTE கிளைச்செயலர்
தோழர். B. இராஜன் 
பணிநிறைவு விழா

-------------------------------------------------------------------

09/02/2020 – ஞாயிறு – காலை 10 மணி’
கிருஷ்ணா மகால் – இராமேஸ்வரம்
 -------------------------------------------------------------------
தலைமை : தோழர். ந. நாகேஸ்வரன்
மாவட்டச்செயலர் – AIBSNL PWA

பங்கேற்பு : தோழர்கள்

G. சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்

R. இராமமூர்த்தி
NFTE – கிளைச்செயலர் – இராமநாதபுரம்

C. இராமமூர்த்தி
AIBSNLPWA – கிளைச்செயலர் - இராமநாதபுரம்

P.இராமசாமி
AIBSNLPWA – கிளைச்செயலர் – பரமக்குடி

A.தமிழரசன்
NFTE - கிளைச்செயலர் – பரமக்குடி

A.சந்திரன்
AIBSNLPWA – கிளைச்செயலர் – சிவகங்கை

B. முருகன்
NFTE – கிளைச்செயலர் - சிவகங்கை

K. சுந்தரராஜன்
AIBSNLPWA – கிளைச்செயலர் – காரைக்குடி

M. ஆரோக்கியதாஸ்
NFTE – கிளைச்செயலர் - காரைக்குடி

நன்றியுரை
தோழர். ஜேம்ஸ் வாலன்ட்ராயன்
NFTE  கிளைத்தலைவர் – இராமேஸ்வரம்.

தோழர்களே... வாரீர்...