Thursday, 13 May 2021

ரமலான் நல்வாழ்த்துக்கள்...


பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

என்றார் வள்ளுவப் பெருந்தகை...

பிணியற்ற மக்கள்...

குறையாத செல்வம்...

குன்றாத வேளாண்மை...

குறைவற்ற மகிழ்ச்சி...

கவலையற்ற காவல்... 

வள்ளுவன் சொன்ன எதுவுமே

இந்த தேசத்தில் இன்றில்லை.... 

இந்நிலை மாறட்டும்...

பாரத தேசம் உயரட்டும்....

சகோதரத்துவ நேசம் வளரட்டும்.... 

அனைவருக்கும்

புனித ரமலான்  நல்வாழ்த்துக்கள்

Monday, 10 May 2021

 விழிகளில் வெள்ளம்...

தோழர். சந்திரகாந்தன்

கொரோனா என்னும் மூடக்கிருமி...

அறிவார்ந்த பல ஆளுமைகளை காவு கொண்டு விட்டது... 

அந்த வரிசையில்....

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற மாநில உதவித்தலைவரும்...

இராமநாதபுரம்.... சிவகங்கை பகுதிகளில்

கலைஇலக்கியப் பெருமன்றத்தை வளர்த்தவரும்

சிறந்த சிந்தனையாளரும்... எழுத்தாளரும்....

தொழிற்சங்கவாதியும்.... பொதுவுடைமைவாதியுமான

தோழர் சந்திரகாந்தன் 

அவர்களை கொரோனா என்னும் கொள்ளை நோய்

அவரது சிந்தனையை... செயல்பாட்டை நிறுத்தி விட்டது. 

09/05/2021 அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில்

தோழர் சந்திரகாந்தன்

தனது மெல்லிய சிரிப்பை..

மானுடம் சார்ந்த சிந்தனையை நிறுத்திக்கொண்டார். 

மிகவும் பிற்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து...

மதுரையில் படித்து...

படிக்கும்போது பொதுவுடைமைச்சிந்தனையில் தோய்ந்து...

வங்கிப்பணியில் சேர்ந்து...

தொழிற்சங்கத்தில் பணிசெய்து....

கலை இலக்கியத்தில் தன் காலம் முழுவதும் செலவிட்டவர்

தோழர் சந்திரகாந்தன்... 

தோழர் ஜெயகாந்தனை தன் காலம் முழுவதும் போற்றி வந்தார்...

தொடரும் என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்...

வயதில் இளையவர்களோடும்.... மூத்தவர்களோடும்...

அடிகளாரோடும் ... அறிவு சான்ற ஆன்றோர்களோடும்....

BSNL மற்றும் அஞ்சல் தோழர்களோடும்...

மிகவும் நெருக்கமான தோழமை பூண்டிருந்தார்... 

சிறந்த படைப்பாளியாக... படிப்பாளியாக...

நடமாடும் நூலகமாக... பல்கலைக்கழகமாக அவர் திகழ்ந்தார்....

அவரது மறைவு கலை இலக்கியத்திற்கு ஆகப்பெரும் இழப்பு... 

வைகையில் வெள்ளம்...

என்பது அவர் எழுதிய நாவல்....

இன்றோ....

அவரை நினைக்கையிலே....

நம் விழிகளில் வெள்ளம்...

 ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு

 01/04/2021 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 

VDA என்னும் விலைவாசிப்படி உயர்ந்துள்ளது.

அதற்கான உத்திரவு CLC முதன்மைத் தொழிலாளர்

ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

A பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.645/= 

(639ல் இருந்து 645 ஆக நாளொன்றுக்கு ரூ.6/= உயர்வு) 

B பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.539/= 

(534ல் இருந்து 539 ஆக நாளொன்றுக்கு ரூ.5= உயர்வு) 

C பிரிவு நகரம்  UNSKILLED பிரிவு...

ரூ.431/= 

(427ல் இருந்து 431 ஆக நாளொன்றுக்கு ரூ.4/= உயர்வு) 

இன்று ஒப்பந்த ஊழியர்களை BSNL நிறுவனத்தில் இருந்து முற்றாக குறைப்பதற்கான வேலை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. எங்கும் குறைந்தபட்சக் கூலி வழங்கப்படுவதில்லை.

மதுரை போன்ற B பிரிவு ஊர்களில் 539/= ரூபாய் குறைந்தபட்சக்கூலி. ஆனால் ரூ.400/=மட்டுமே வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.139/= சுரண்டப்படுகின்றது. மாதம் நான்காயிரத்துக்கும் மேல் ஒப்பந்த ஊழியர் வயிற்றில் அடிக்கப்படுகின்றது. 

காரைக்குடி போன்ற C பிரிவு ஊர்களில் ரூ.431/= குறைந்தபட்சக்கூலி. ஆனால்  நாளொன்றுக்கு ரூ.300/=மட்டுமே வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ரூ.131/= வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ.நான்காயிரம் வரை அவர்களது கூலி குறைக்கப்படுகின்றது.

நிரந்தர ஊழியர்களுக்கு 

உரிய தினத்தில் சம்பளம் வழங்குவதில் அலட்சியம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு 

உரிய கூலியை வழங்குவதில் அலட்சியம்.

காலமும்... சூழலும்...இயற்கையும்...

அரசிற்கும்... நிர்வாகத்திற்கும்...

அதிகாரிகளுக்கும் சாதகமாக உள்ளது.

இந்நிலை ஒருநாள் நிச்சயம் மாறும்...

Thursday, 6 May 2021

கொரோனா துயர் துடைப்பு நிதி

BENEVOLENT FUND 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுழன்று அடிக்கின்றது. BSNL ஊழியர்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படும் ஊழியர்களின் துயர் துடைக்க இன்று 06/05/2021 நிர்வாகத்துடன் அனைத்து சங்கத் தலைவர்களின்  காணொளிக்கூட்டம் நடைபெற்றது. NFTE  சார்பில் பொதுச்செயலர் தோழர். C.சிங் மற்றும் அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு GM PERSONNEL திரு. R.K. கோயல்

அவர்கள் தலைமை வகித்தார்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 கொரோனா கொடிய தொற்றால் உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்திற்கு உதவிட நன்மை நிதிக்குழு 

BENEVOLENT FUND ஏற்படுத்தப்படும்.

---------------------------------------------------------

அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் GR’D முதல் CMD வரை ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்க வேண்டும்.

---------------------------------------------------------

அதே அளவு நிதியை நிர்வாகம் தன் பங்காக வழங்கிடும். 

---------------------------------------------------------

பணியில் இருக்கும் போது கொரோனாவால்            மரணமுறும் ஊழியர் குடும்பத்திற்கு ரூபாய் 

பத்து லட்சம் நிவாணர நிதியாக வழங்கப்படும்.

---------------------------------------------------------

பணியில் இருக்கும் போது கொரோனா கொடிய நோயால் மரணமுறும்  ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்.

---------------------------------------------------------

பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.

---------------------------------------------------------

BSNL நேரடி நியமன ஊழியர்களின் EPF உள்ளிட்ட ஓய்வூதியப்பலன்கள் தாமதமின்றி ஊழியர்களின் கணக்கில் செலுத்தப்படும்.

---------------------------------------------------------

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு நிர்வாகம் செலுத்திடும் பங்களிப்புத் தொகை CONTRIBUTION  உயர்த்தப்படும். 

---------------------------------------------------------

மேற்கண்ட யாவும் இன்று நடைபெற்ற கூட்ட முடிவுகளாகும்.

இவை யாவும் BSNL வாரியத்தின் முன்பாக விரைவில்  

ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படும்

BSNL வாரியத்தின் ஒப்புதலைப் பொறுத்து 

அவை நடைமுறைப்படுத்தப்படும்.

Tuesday, 4 May 2021

ஒப்பற்ற ஒப்பந்த ஊழியர் தீர்ப்பு

ஜனவரி 2019 முதல் அக்டோபர் 2019 வரை சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் TMTCLU சங்கம் சார்பாகவும்...TNTCWU சங்கம் சார்பாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டது. 19 மாதங்களுக்குப் பிறகு 28/04/2021 அன்று வழக்கு ஒப்பந்த ஊழியர்களுக்கு மிகவும் சாதகமாக இறுதி முடிவு பெற்றுள்ளது.

வழக்கில் மிகவும் போற்றப்பட வேண்டியவர் மாண்பமை நீதிபதி திரு.சுரேஷ்குமார் அவர்கள். அவரது மனிதாபிமானமிக்க முடிவுகளால் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட்டுள்ளது.

கொடிய கொரோனா காலத்திலும் கூட இந்த வழக்கில் 10 விசாரணைகள் செய்யப்பட்டு இடைக்காலத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

21/01/2020.... 06/03/2020... 22/09/2020... 16/10/2020... 05/11/2020...

07/01/2021.... 22/03/2021... 09/04/2021... 21/04/2021... 28/04/2021

ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

நீதிமன்ற உத்திரவின்படி...

BSNL நிர்வாகம் ரூ.35 கோடியே 40 லட்சம் ரூபாயை தொழிலாளர் ஆணையரின் சிறப்புக் கணக்கில் செலுத்தியது.

நீதிமன்றத்தால் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்ட தொழிலாளர் ஆணையர் மூலம்...

13/11/2020 அன்று தீபாவளிக்கு முன்பாக..

1857 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.6,10,15,236/= வழங்கப்பட்டது.

03/04/2021 அன்று... 2875 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 8,35,72,158/= வழங்கப்பட்டது.

20/04/2021 அன்று... 4670 ஒப்பந்த ஊழியர்களுக்கு 

ரூ. 20,48,63,574/= வழங்கப்பட்டது.

இதுவரை ரூபாய். 32,07,51,841/= சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

543 ஊழியர்களின் வங்கிக்கணக்கு விவரங்கள் சரியில்லை என்று சொல்லி ரூ. 2,86,99,127/= SBI வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இவை போக இன்னும் ரூ.45,48,776/= தொழிலாளர் ஆணையரின் வங்கிக்கணக்கில் மிச்சம் உள்ளது.

இந்நிலையில்...

28/04/2021 அன்று இந்த வழக்கின்

இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு முடிவுற்றுள்ளது.

இறுதித்தீர்ப்பின்படி...

விடுபட்ட 543 ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் சரிசெய்யப்பட்டு பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

மிச்சமுள்ள 45 லட்சம் ரூபாயை உடனடியாக BSNL நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த அவசியமில்லை. இன்னும் விடுபட்டவர்கள் இருந்தால் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும். ஆறு மாத காலத்திற்குப்பின் ஏதேனும் பணம் மிச்சமிருந்தால் BSNL நிறுவனத்திற்கு திருப்பி அளிக்கப்பட வேண்டும்.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஊழியர்களது EPF மற்றும் ESI போன்றவை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

EPF மற்றும் ESI  கணக்கில் பணம் செலுத்திய பின்பு ஒப்பந்தகாரர்களுக்கு பில் பட்டுவாடா நிலுவை இருந்தால் மேலும்  ஒரு மாத கால அவகாசத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

BSNL நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 15ந்தேதி பட்டுவாடா செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 6 சத வட்டியுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

வழக்கறிஞர் திரு N.K.சீனிவாசன் எழுப்பிய போனஸ் சம்பந்தமாக...ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் BSNL நிறுவனத்துடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா கொடிய காலத்தைக் கணக்கில் கொண்டு ஊழியர்களுக்குத் தொடர்ந்து பணி கொடுக்க வழிவகை உள்ளதா என BSNL நிறுவனம் முயற்சிக்க வேண்டும். 

ஒப்பந்த ஊழியர்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒப்பற்ற தீர்ப்பாகும். தீர்ப்பு நல்கிய மாண்பமை நீதிபதி அவர்களுக்கும்.... அயராது வாதாடிய வழக்கறிஞர்களுக்கும்.... ஒப்பந்த ஊழியர் சங்கங்களுக்கும்...BSNL நிறுவன அதிகாரிகளுக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்....

Friday, 30 April 2021

மேதின நல்வாழ்த்துக்கள்....


கொடிது கொடிது...

கொரோனா கொடிது...

அதனினும் கொடியது...

உழைப்பவனின் வறுமை... 

கொரோனாவை விரட்டு...

வறுமை என்னும்

கொடிய நோயை விரட்டு....

நோய்களைப் போக்காத...

அதிகாரப் பிணிகளை அகற்று...

அனைவருக்கும் புரட்சிகர

மேதின நல்வாழ்த்துக்கள்....

--------------------------------------------------------------

மேதின கொடியேற்றம்

01/05/2021 – சனிக்கிழமை – காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

ஆறாது... மனம்....

NFTE  இயக்கத்தில்

ஒருமுகமாக செயலாற்றிய

மாநில உதவித்தலைவர்

ஆற்றல்மிகு தோழர்

கரூர் ஆறுமுகம் 

அவர்கள் மறைந்து விட்டார்.

திருச்சி மாவட்டச்சங்கத்தின்

கரூர் பகுதி தளபதியாக செயல்பட்டார்.

பணியில் உள்ள தோழர்கள்...

பணிநிறைவு பெற்ற தோழர்கள்...

ஒப்பந்த ஊழியர்கள் என

எல்லாத்தரப்பு தோழர்களுக்கும்

தோள் தந்து உதவினார்.

கரம் உயர்த்தி உரிமை வென்றார்...

தனது கருத்துக்களை

அழுத்தம் திருத்தமாக...

ஆணித்தரமாக சபைகளில் எடுத்துரைப்பார்...

மாநில மாநாட்டுப்பணிகளில்

முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திகொண்டிருந்தார்...

யாருக்கும் அவர் அடிபணிந்ததில்லை...

யாரைக்கண்டும் அவர் அஞ்சியதில்லை...

ஏப்ரல் 30ல் பணிநிறைவு...

ஏப்ரல் 29ல் மறைவு...

கொரோனாவை விடக் கொடிய செய்தி இது...

 

இன்று...

இயக்கங்களில் வெற்றிடங்கள்

வேகமாகப் பரவி வருகின்றன...

தோழர் ஆறுமுகம் நம்மிடையே இல்லை...

ஆனால் அவர் விட்டுச்சென்ற பணிகளும்...

அவரது கனவுகளும்... லட்சியங்களும்....

நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன...

அவர் உயர்த்திப்பிடித்த செங்கொடி

உயர... உயரப் பறக்க வேண்டும்...

உழைப்பாளர் தினமாம் மேதினத்தில்

ஒவ்வொரு ஊரிலும் செங்கொடி ஏற்றும்போது...

அருமைத்தோழர் ஆறுமுகத்தை நினைவு கூர்வோம்...

அவருக்கு நம் இதயம் கனத்த அஞ்சலி....