Monday 29 June 2020

நிறைவான பணி… நெஞ்சம்  மறவாத பணி…

தொன்மைமிகு மதுரையில்…
தொலைத்தொடர்பை வளர்த்தவர்…

ஆற்றல்மிகு அதிகாரியாய்…
BSNL வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்…

30/06/2020 பணிநிறைவு பெறும்…
மதிப்புமிகு முதன்மைப்பொதுமேலாளர்

திருமதி. S.E.இராஜம் ITS

அவர்களின் பணிநிறைவுக்காலம்
அமைதியுடன்…சிறப்புடன்… விளங்க
அன்போடு வாழ்த்துகின்றோம்…

AUAB - அனைத்து சங்க கூட்டமைப்பு – மதுரை
பணிநிறைவு நல்வாழ்த்துக்கள்
30/06/2020 அன்று மதுரை வணிகப்பகுதியில்
பணிநிறைவு பெறும் தோழர்களின்
பணிநிறைவுக்காலம் சிறப்புடன் 
விளங்க வாழ்த்துகின்றோம்.

காரைக்குடி மாவட்டம் : தோழர்கள்…
P. கபிலன், TT/இராம்நாட்
D. கார்மேகம் TT/இராம்நாட்

மதுரை மாவட்டம் : தோழர்கள்…
S.E. இராஜம் PGM/மதுரை
P. ஆனந்த் ஜெயக்குமார் JTO/மதுரை
R. சந்திரசேகரன் DE/மதுரை
V. அக்கினிவீரன் DRIVER/மதுரை
S. சுபாஷ் போஸ் TT/மதுரை
J. ஜோதிநாதன் TT/திண்டுக்கல்

சம்பளம் இல்லை என்ற சங்கடம் இனி இல்லை…
அலுவலகம் என்ற நுகத்தடி இனி இல்லை…
வங்கி, சொசைட்டி, வைப்புநிதி தொல்லை இனி இல்லை…
ஓய்வுபெற்ற தோழர்களே… 
நீங்களே பெரும் பேறு பெற்றவர்கள்…
வாழ்க மகிழ்வுடன்… 
வாழ்க நலமுடன்… வளமுடன்…

BSNL என்னும் சுரண்டல் மையம்...

BSNL நிறுவனத்தில் தற்போது எல்லாப் பணிகளுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அனைத்துப் பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் BSNL நிறுவனமே
 தனியாருக்குப் போய்விட்ட உணர்வுதான் நமக்கு எழுகின்றது. 

இதன் ஒரு பகுதியாக நமது வாடிக்கையாளர் சேவைமையங்களை  தனியாருக்கு விடுவதற்கானப் பணிகள் மார்ச் மாதம் துவங்கப்பட்டன. ஒரு சில இடங்களில் பிப்ரவரி மாதமே வாடிக்கையாளர் சேவை மையங்கள்  தற்காலிகமாக தனியாருக்கு  விடப்பட்டன. 

 தமிழகத்தில் 179 வாடிக்கையாளர் சேவை மையங்கள்  தனியாருக்கு விடுவதற்காக மாவட்ட நிர்வாகங்களால் பரிந்துரை செய்யப்பட்டன. முதல் நிலை CSC - 3, இரண்டாம் நிலை CSC - 26 மற்றும்  மூன்றாம் நிலை CSC - 150 என தனியாருக்கு கொடுப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டன. தற்போது முதற்கட்டமாக ஏறத்தாழ 60 சேவைமையங்கள் 01/07/2020 முதல் தனியார் வசம் செல்கின்றன.  காரைக்குடி மாவட்டத்தில் 
5 சேவைமையங்களும், மதுரை மாவட்டத்தில் 13 சேவைமையங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. 

தற்போது பல இடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் வாடிக்கையாளர் 
சேவை மையங்களில்  பணிசெய்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்சக்கூலியாக A பிரிவு நகரில் ரூ.629ம்,  B பிரிவு நகரில் ரூ.525ம், C பிரிவு நகரில் ரூ.420ம் ஒப்பந்தக் குத்தகை மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய  OUTSOURCING குத்தகைக்காரர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களிடம் அடிமாட்டு அளவில் கூலியை நிர்ணயிக்கின்றனர். உதாரணமாக காரைக்குடி திருப்பத்தூர் பகுதியில் உள்ள CSCயில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மாதம் 26நாட்கள் பணிசெய்தால் ரூ.10,920/= குறைந்தபட்சக்கூலியாக கொடுக்க வேண்டும். இதுபோக EPF மற்றும் ESI வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய OUTSOURCING குத்தகைக்காரர்  மாதம் ரூ.5000/=மட்டுமே கூலியாக கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இந்தக்கூலி கட்டுபடியாகாது என்று சொன்ன காரணத்தால் அங்கு பலவருடங்களாகப் பணிபுரிந்த திருமதி. லதா என்ற ஒப்பந்த ஊழியர் வேலையை விட்டு நீக்கப்பட்டார். புதியதாக 5000 ரூபாய் சம்பளத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணை பணியில் அமர்த்தியுள்ளார். இதுபற்றி தங்களுக்கு எதுவுமே சம்பந்தம் இல்லை என்று  நமது மனிதாபிமான  நிர்வாகங்கள் கைவிரிக்கின்றன. இவ்வாறாக BSNL சுரண்டலின் மையமாக தற்போது உருவெடுத்து வருகின்றது. 

அனைத்து OUTSOURCING  குத்தகையிலும் இதே நிலைதான். காரைக்குடி தொலைபேசி நிலையத்தில் பழுதுநீக்கும் பணிகளுக்கான OUTSOURCINGல் குத்தகைக்காரருக்கு மாதம் ரூ.1,46,000/= வழங்கப்படுகின்றது. ஆனால் அங்கே 3 ஒப்பந்த ஊழியர்களுக்குத் தலா ரூ.8000/=மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. 
ஏறத்தாழ 1,20,000/= ரூபாய் மாதம்தோறும் குத்தகைக்காரனால் கொள்ளையடிக்கப்படுகின்றது.  இந்தப்பிரச்சினையில் 
நமது அதிகாரிகளின் மவுனம் அவர்களது நேர்மையைப்  பற்றிய கேள்வியை வலுவாக எழுப்புகின்றது. 

ஒரு காலத்தில் சமவேலைக்கு சம ஊதியம் என்று கூலியில் நீதியை நிலைநாட்டி மனித வளத்தின் அடையாளமாக இருந்த நமது நிறுவனம் தற்போது சுரண்டலின் மொத்த அடையாளமாக மாறிப்போனது கொடுமையிலும் கொடுமை. இந்தக்கொடுமைகளை 
எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கைகள் இல்லாமல் 
முடங்கிப்போனது உச்சக்கட்ட கொடுமை. 

BSNLலில் பணிசெய்கின்றோம்... 
அங்கு தொழிற்சங்கமும் நடத்துகிறோம் 
என்று சொல்வதற்கே தற்போது கூச்சமாக உள்ளது.
 ஆனாலும் காலம்  இப்படியே செல்லாது...
மீண்டும் மாறும்... அந்த மாற்றத்தை நோக்கி
நாம் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

Friday 26 June 2020

அருட்கொடை – EXGRATIA  பட்டுவாடா


விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு ஜூன் 2020க்குள்
அருட்கொடை – EXGRATIA   முழுமையாகப் பட்டுவாடா செய்யப்படும் என அரசுத்தரப்பு உறுதியளித்திருந்தது. ஆனால் உறுதிமொழி வழக்கம்போல் காற்றில் விடப்பட்டுள்ளது. முதல்தவணையில் 50 சதம் பட்டுவாடா செய்வதற்குப்பதில் 
31.3 சதம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது. 
பெரும்பகுதி தோழர்களுக்கு அவர்கள் வாங்கிய கடனுக்கே சரியாகப் போய்விட்டது. 

தற்போது EXGRATIA பட்டுவாடாவிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
MTNLக்கு 579 கோடியும், BSNLக்கு 3021 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிதி ஒதுக்கீட்டின்படி 22.5 சதமே பட்டுவாடா ஆகும். எனவே இன்னும் 46.2 சதம் பட்டுவாடா பாக்கியுள்ளது. 
நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று கூறப்படுகின்றது. மேற்கண்ட நிதியை ஜூன் 30க்குள் 
பயன்படுத்த வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. 
எனவே EXGRATIA இரண்டாவது தவணை ஜூன் 30க்குள் பட்டுவாடா செய்யப்படும். பட்டுவாடா சார்ந்த அலுவலகப்பணிகள் 27/06/2020 
இன்றைக்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு EXGRATIA பட்டுவாடாவில் அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. மிச்சமுள்ள 46.2 சத அருட்கொடையையாவது 
ஜூலை மாதத்திற்குள் பட்டுவாடா செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்  
என்பதே விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்.

Wednesday 17 June 2020


அதிகாரிகள் சங்கத்தேர்தல்

BSNLலில் இரண்டாவது அதிகாரிகள் சங்கத்தேர்தல் 18/08/2020 
அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தேர்தல் 
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும்.

தகுதியான சங்கங்கள் பட்டியல் அறிவிப்பு செய்யும் நாள் : 13/07/2020

தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள கடைசி நாள் : 17/07/2020

தகுதியுள்ள சங்கங்கள் பட்டியல் அறிவிப்பு செய்யும் நாள் : 24/07/2020

தேர்தல் நடைபெறும் நாள் : 18/08/2020

தேர்தல் முடியும் வரை மாற்றல்கள் இடப்படாது எனவும்...
30/06/2020 வரை அமுல்படுத்தப்படாத  மாற்றல்கள்
நிறுத்தி வைக்கப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரும்..  உலகமும்... நாடும்...நகரமும்... BSNLம் உள்ள நிலையில்
அதிகாரிகள் சங்கத்திற்கு தேர்தல் ஒரு தேவையா?
 என்ற கேள்விதான் நமக்கு  எழுகிறது.

Friday 12 June 2020


NFTE 
இணைய வழி கலந்துரையாடல்
 --------------------------------------------------
NFTE
தமிழ் மாநில சங்க 
இணைய வழி கலந்துரையாடல்…
  -------------------------------------------------- 
13.06.2020–சனிக்கிழமை மாலை 03.00 - 06.00
 --------------------------------------------------

விவாதப்பொருள்

சங்க உறுப்பினர்  எண்ணிக்கை மற்றும் 
புதிய உறுப்பினர் சேர்க்கை

    மாவட்டங்களில் வரவு /செலவு (ஏப்ரல் 2020)
 
        OUTSOURCING பழுது நீக்குதல்
  புதியமுறை சாதக பாதகங்கள்
      
         
சென்னை சொசைட்டி கையெழுத்து இயக்கம் 
மற்றும் 
அடுத்த கட்ட நடவடிக்கை,
 
 பணியில் இருக்கும்  ஊழியர்களின் பணிநிலை…

       வாடிக்கையாளர் சேவை மையங்கள் குத்தகை…
        
 
       BHARAT AIR FIBRE, FTTH மற்றும் விற்பனைப்பிரிவு…

 ஒலிக்கதிர் நிதி…
 
       இன்ன பிற தலைவர் அனுமதியுடன்…

Thursday 4 June 2020


தடுப்புச்சம்பளமான விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற அனைத்து தோழர்களும் விடுப்புச்சம்பளம், வைப்புநிதி, ஆயுள்காப்பீட்டுத்தொகை, அருட்கொடை, மாதாமாதம் தாமதமில்லா ஓய்வூதியம்  என்று அடுத்தடுத்து பணப்பலன்களைப் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். அடுத்த அருட்கொடை பட்டுவாடா எப்போது? என்பதே அவர்களின் இப்போதைய ஒற்றைக்கேள்வி. 

ஆனால் அவர்களோடு சேர்ந்து விருப்ப ஓய்வில் சென்ற சில தோழர்கள் வெளிவட்டார வழக்குகள் மற்றும் இலாக்கா வழக்குகளில் சிக்கியதால் எந்தப் பணப்பலனையும் பெறாமல் வெறுங்கையுடனும், வெறுத்த மனதுடனும் வெந்து நொந்து உள்ளனர். அவர்களுடைய பிரச்சினையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசியதன் விளைவாக 13/05/2020 அன்று BSNL CORPORATE அலுவலகம் உத்திரவிட்டது. 

அந்த உத்திரவின்படி...
மாவட்ட மட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட CCA அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய வைப்புநிதி, அருட்கொடை மற்றும் 
விடுப்புச்சம்பளம் ஆகியவை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்பட வேண்டும். 

ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால்...
சம்பந்தப்பட்ட மாநில தலைமை கணக்கு அதிகாரி மூலமாக டெல்லி தலைமை அலுவலகத்திற்கு சந்தேகங்கள் அனுப்பப்பட வேண்டும்.

மேற்கண்ட உத்திரவு வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதம் முடிவுறவுள்ள நிலையில் இன்றுவரை அவர்களது விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடை ஆகிய பணப்பலன்களைப் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் இன்னும் எங்கும் துவங்கப்படவில்லை. பல உத்திரவுகள் காலையில் டெல்லியில் போடப்பட்டால் மாலையில் மாநிலங்களில் அமுல்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பலருக்கு பலன் தரும் மேற்கண்ட உத்திரவு இன்னும் 
மாநில நிர்வாகத்தால் வழிமொழியப்படவில்லை. 
மாவட்டங்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்யப்படவில்லை.

பல்வேறு தேவைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பாதிக்கப்பட்ட தோழர்கள் பசியுடன் வெறும் இலை முன்னே காத்திருக்கின்றனர். மாநில நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்.
பயிற்சிப் பட்டறை

தோழர்.ஜெகன் நினைவேந்தல்
மேடை முழக்கம் -  வீதி முழக்கம்
பயிற்சிப் பட்டறை
------------------------------------------

07/06/2020 – ஞாயிறு காலை 10 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
------------------------------------------
தலைமை  
தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்
------------------------------------------
துவக்கவுரை  
வெ.மாரி – மாவட்டச்செயலர்
------------------------------------------

மேடை முழக்கம் : பயிற்சியாளர்

தோழர். பழ.இராமச்சந்திரன்

தலைவர் - AITUC
------------------------------------------

வீதி முழக்கம் : பயிற்சியாளர்

தோழர். ந. நாகேஸ்வரன்

மாவட்டச்செயலர் – AIBSNLPWA
------------------------------------------
நன்றியுரை 

தோழர்.ம. ஆரோக்கியதாஸ்

கிளைச்செயலர் 
------------------------------------------
முன்னணித்தோழர்கள்

தவறாது கலந்து கொள்ளவும்...

Wednesday 3 June 2020


செ ய் தி க ள்

மே மாதச்சம்பளம்

பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தைத் தொடர்ந்து தாமதப்படுத்துவது தற்போது BSNLலில் வாடிக்கையாகி விட்டது. 
ஏப்ரல் மாதச்சம்பளம்  மே-22 அன்றுதான் பட்டுவாடா செய்யப்பட்டது. 
இன்னும் மே மாதச்சம்பளம்  பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனிடையே MTNLலில் இன்று 04/06/2020 மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவிப்புக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 
 BSNLலில் பணவரவு தற்போது கூடி வருகின்றது என்று செய்திகள் வருகின்றன. ஆனால் உழைத்தவனின் கூலி எப்போது கொடுக்கப்படும் என்ற செய்தி மட்டும் எங்கும்... எப்போதும் தென்படுவதில்லை.
BSNLலில் சம்பளம் பட்டுவாடா  
என்பது மர்மங்கள் நிறைந்த கதையாக உள்ளது.
-----------------------------------
விலைவாசிப்புள்ளி

அகில இந்திய விலைவாசிப்புள்ளி அளவு குறைவதால் 
ஜூலை 2020 முதல் கிடைக்கவேண்டிய IDA 1.8 அளவு குறையும் 
என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஏப்ரல் 2020ல் 3 புள்ளிகள் உயர்ந்து 329 ஆக உள்ளது. இன்னும் மே மாதப்புள்ளிகள் அறிவிக்கப்படவில்லை. மே மாதத்தில் புள்ளிகள் உயர்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகின்றது. மே மாதத்தில் 4 புள்ளிகள் கூடினால் மட்டுமே IDA குறையாது. 5 புள்ளிகள் கூடினால் மட்டுமே 0.2 அளவிற்கு உயர்வு இருக்கும். 5 புள்ளிகளைக் கூட விடாமல் அரசு பார்த்துக்கொள்ளும். எனவே ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படாத 
IDA வெட்டு உருவாகும் நிலை உள்ளது.
-----------------------------------
மருத்துவப்படி விருப்பம்

மருத்துவப்படி என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டது. OP என்னும் புறசிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அளவுத்தொகை ஒரு மாதம் என்பதில் இருந்து 
15 நாட்களாக பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது. 
ஆனால் வியாதிகளோ பலமடங்கு பெருகி வருகின்றது.

புறசிகிச்சைக்கான மருத்துவப்படி என்பது மாதம் ரூ.1000 என்றும் குறைக்கப்பட்டு விட்டது.  தற்போது கிருமிநாசினி வாங்கவும், கைகழுவவும், முகமூடி வாங்கவும் கூட இந்த 1000 பத்தாது. 
இந்த சிறப்பு வாய்ந்த மருத்துவப்படியைப் பெறுவதற்கான விருப்பக்கடிதங்களை 30/06/2020க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட அலுவலகங்களில் ஓய்வு பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது. 01/04/2019க்குப்பின் ஓய்வு பெற்றவர்களும், ஜனவரி 2020ல் விருப்ப ஓய்வு பெற்றவர்களும், ஏற்கனவே கொடுத்த விருப்பத்தில் மாற்றம் செய்ய நினைப்பவர்களும் மட்டுமே விருப்பக்கடிதங்களைக் கொடுக்க வேண்டும். VRSல் சென்ற தோழர்கள் பலருக்கு இன்னும் ஓய்வூதிய உத்திரவு PPO வெளியிடப்படவில்லை. அத்தகைய தோழர்கள் இன்னும் PPO வரவில்லை என்பதைக் குறிப்பிட்டு
 விருப்பக்கடிதம் கொடுக்கவும்.
-----------------------------------
LIFE CERTIFICATE – உயிர்ச்சான்றிதழ்

இந்தியாவில் தற்போது தொடர்ந்து உயிர் வாழ்வதே பெரிய சாதனைதான். எனவே ஓய்வு பெற்ற தோழர்கள் ஆண்டுதோறும் "உள்ளேன் ஐயா" நாங்கள் உயிரோடு இருக்கின்றோம் என்று உயிர்ச்சான்றிதழ் அளிக்க வேண்டும். 01/02/2019க்குப்பின் ஓய்வூதியப்பட்டுவாடா மின்னணு மயமாக்கப்பட்டு விட்டது. எனவே SAMPANN என்னும் மின்னணு முறையில் ஓய்வூதியம் பெறும் தோழர்கள் அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு கழித்து தங்கள் உயிர்ச்சான்றிதழை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஜூன் 2019ல் ஓய்வு பெற்ற தோழர்கள் ஜூன் 2020ல் உயிர்ச்சான்றிதழ் அளிக்க வேண்டும். அதனை DIGITAL LIFE CERTIFICATE என்னும் மின்னணு முறையில் அளிக்கலாம். தற்போது எல்லா இடங்களிலும்
 COMMON SERVICE CENTRE என்னும் பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. அங்கு சென்று தங்களது ஆதார், வங்கி எண் மற்றும் PPO எண் ஆகியவற்றை அளித்து எளிதாக உயிர்ச்சான்றிதழை சமர்ப்பிக்கலாம். 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக தோழர்கள் நமது அலுவலகம் நோக்கி வரவேண்டிய அவசியமில்லை. தபால் அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டாயமாக தாங்கள் ஓய்வூதியம் பெறும் தபால் அலுவலகங்கள் மூலமாக மட்டுமே உயிர்ச்சான்றிதழை அளிக்க வேண்டும். 01/02/2019க்குப் பின் ஓய்வு பெற்றவர்கள் தபால் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்றால் அவர்கள் SAMPANN மின்னணுத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2020ல் விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் ஜனவரி 2021ல் மட்டுமே உயிர்ச்சான்றிதழை அளிக்க வேண்டும். 
அதுவரை அமைதியாக இருக்க வேண்டும்.

Tuesday 2 June 2020


DA வழக்கு தள்ளுபடி

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 
DA முடக்கப்பட்ட உத்திரவினை எதிர்த்து டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

01/06/2020 திங்கட்கிழமையன்று அந்த வழக்கை விசாரித்த 
டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகள் திருவாளார்கள் விபின் சங்கி மற்றும் ரஜ்னீஷ் பட்னாகர் ஆகியோர் அடங்கிய நீதி இருக்கை DA விதிகள் 1972ன்படி 
அரசுக்கு விலைவாசிப்படியை நிறுத்தி வைக்கும்
 அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும்...
தனது ஊழியர்களுக்கு விலைவாசிப்படியை 
தொடர்ந்து கொடுக்கவோ அல்லது உயர்த்திக் கொடுக்கவோ 
வேண்டிய சட்டரீதியான கடர்ப்பாடு அரசுக்கு இல்லை...

காலச்சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கும் அதிகாரம் 
அரசுக்கு எப்போதும் உண்டு...

ஜனவரி மாத DA நிறுத்தப்படவில்லை...
ஜூலை 2021 வரை தள்ளிமட்டுமே போடப்பட்டுள்ளது...

விலைவாசிப்படி நிறுத்தம் என்பது
சம்பளக்குறைப்பு என்று பொருள்படாது...

குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து விலைவாசிப்படியைப் பெறுவது என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 
ஓய்வூதியர்களின் சட்டரீதியான உரிமையல்ல...
எனவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது 
என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

விலைவாசிப்படி என்பது அரசின் கருணையினால் பிறந்ததல்ல...
மத்திய அரசு ஊழியர்கள் பல காலம் போராடிப் பெற்ற உரிமை...
குறிப்பாக தபால் தந்தி ஊழியர்களுக்கு... 
NFPTE சங்கத்திற்கு பெரும் பங்குண்டு...
ஆனால் போராடிப்பெற்ற உரிமைகள் எல்லாம்
இன்று காற்றில் பறக்கும் நிலை வந்து விட்டது.

விலைவாசிப்படி தொழிலாளரின் உரிமையல்ல...
என்று சொல்லிவிட்டது நீதிமன்றம்.

நாளை ஊதியமும்.. ஓய்வூதியமும்...
உழைப்பவனின் உரிமை இல்லை... 
என்று சொல்லும் காலம் வரலாம்...
எதுவரினும் எதிர்கொள்வோம்...

கறுப்புத் தீ பரவட்டும்... 


பேச்சு கூட பறிக்கப்பட்ட எங்களிடம்
மூச்சு மட்டுமே மிச்சமிருந்தது...
இப்போது...
மூச்சும் பறிபோனது...

இங்கு
சுவாசிக்க கூட
சுதந்திரம் இல்லை...

பொறுத்தது போதும்...
கறுப்புத்தீ பரவட்டும்...

வெள்ளைச்சாம்பல்...
வீழ்ந்து மடியட்டும்...