Monday, 8 September 2014

NFTE 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு 

13/09/2014 - சனிக்கிழமை - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்.

-:தலைமை:- 
தோழர். சி.முருகன் 
மாவட்டத்தலைவர் 

விவாதப்பொருள் 

  • இழுத்தடிக்கப்படும் மாற்றல்கள்...
  • இருட்டடிக்கப்படும் பதவி உயர்வுகள்..
  • தேங்கும் தனிமனித பிரச்சினைகள்... 
  • தூங்கும் மேல்மட்ட உத்திரவுகள்...
  • மனம் நோகும் மருத்துவபில் பிரச்சினைகள்...
  • தினம் நோகும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
  • சீர் கெடும் தலமட்ட நிர்வாகம்...
  • பேர் கெடும் BSNL  சேவை...
  • JAC கூட்டுக்குழு போராட்டம்...
  • மாவட்ட மாநாடு... 
  • அகில இந்திய மாநாடு...
  • மற்றும் கிளை மாநாடுகள்...

முகவை மாநகரில்...
சந்திப்போம்....  சிந்திப்போம்.... 
வாரீர்...தோழர்களே...

தோழமையுடன்....

சி.முருகன்                                             வெ.மாரி 
மாவட்டத்தலைவர்                           மாவட்டச்செயலர்

Sunday, 7 September 2014

JAC 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
போராட்டம் 

போனஸ்,ஊதிய முரண்பாடு,ஊதிய நிலை தேக்கம் உள்ளிட்ட 
முக்கிய 30 அம்சக்கோரிக்கைகளில் மெத்தனம் காட்டும் நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு 
நாடு தழுவிய போராட்டம்.

23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
டெல்லித்தலைநகர் 
மாநிலத்தலைநகரங்கள் மற்றும் 
மாவட்டத்தலைநகரங்களில் 
 தர்ணா 

30/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 11 மணி முதல் மதியம் 01 மணி வரை 
இரண்டுமணி நேர 
வெளிநடப்பு.

அப்படியும் நிர்வாகம் 
அசையவில்லை என்றால் 
நவம்பர் 2014ல் 
ஒரு நாள் வேலை நிறுத்தம்.

கேளாச்செவிகளைக் கேட்க வைப்போம்...
பாராமுகங்களைப் பார்க்க வைப்போம்...
தயாராவீ ர்...தோழர்களே...

Friday, 5 September 2014

ஓணம் திருவிழா 

மூன்றடி மண் போதுமென்றான் வாமனன்...
காணி நிலம் வேண்டுமென்றான் பாரதி..
மூவுலகும் வேண்டுமென்றான் மனிதன்..

ஆனாலும் அனைவரும்  
ஆடி அடங்குவதென்னவோ..
 ஆறடியில்தான்...

மயிலையில்  மக்கள் மனம் மகிழ்ந்து 
ஓணம் கொண்டாடியதை..
திருஞான சம்பந்தர் 
மகிழ்வோடு பாடியுள்ளார்..

மயிலையில் இருந்து மலையாளத்திற்கு 
மாற்றலில் சென்று விட்ட ஓணத்தை 
நாமும்  மகிழ்வுடன் கொண்டாடுவோம்...

அனைவருக்கும் 
இனிய ஓணம் 
திருவிழா நல்வாழ்த்துக்கள்..
நடையாய்.. நடந்து...

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு
 போக்குவரத்துப்படியை குறைந்த பட்சம் ரூ.1000/= என்று உயர்த்தி 11/07/2014 அன்று BSNL நிர்வாகம் உத்திரவிட்டது. 

காரைக்குடி மாவட்டத்தில் இந்த உத்திரவை அமுல்படுத்தக்கோரி  
நடக்க முடியாத நமது தோழர்கள் கணக்கு அதிகாரியிடம் 
நடையாய் நடந்து இப்போதுதான் பெற்றுள்ளனர். 

இதில் JTO  போன்ற பதவிகளில் உள்ள தோழர்களுக்கு எந்த பலனும் இல்லை. காரணம் ஏற்கனவே அவர்கள் ரூ.1000/= பெற்று வருகின்றனர். 
NE-11 சம்பள விகிதத்தில் உள்ள தோழர்கள் மாதம் ரூ.950/= போக்குவரத்துப்படியாக பெற்று வந்தனர். 
அவர்களுக்கு ரூ.50/= மட்டுமே உயர்ந்துள்ளது.  

NE-11 சம்பள விகிதத்திற்கு கீழே உள்ள ஊழியர்கள் ரூ.400/= பெற்று வந்தனர். அவர்களுக்கு மட்டுமே 
ரூ.1000/=  உயர்வு என்பது பலனுள்ளதாக உள்ளது. 

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு சலுகைகளை அளிப்பதில் மிகுந்த மனிதாபிமானத்துடன் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும். 
கொடுக்கும் சலுகையிலும் குறைவானவர்களுக்கே 
பலன் கிட்டுவது போல் கொடுப்பதும்... 

சாமி வரம் கொடுத்த பின்பும் 
பூசாரிகள் இழுத்தடிப்பதும்.. 

யார் ஊனமுற்றவர்கள்?
 என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றது...

Thursday, 4 September 2014

செய்திகள் 

விழாக்காலம் நெருங்குவதால் உடனடியாக BSNL  ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3500/= போனஸ் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்திற்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
25/09/2014 அன்று டெல்லியில் JCM தேசியக்குழுக்கூட்டம் 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
BSNL  மற்றும் MTNL நிறுவனங்களின் இணைப்பை 
ஜூலை 2015க்குள் அமுல்படுத்த DOT  திட்டமிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA 
இணைப்பை உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
19/09/2014 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
நடத்த AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் 
அறைகூவல் விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ஓய்வூதிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி ஓய்வு பெற்ற தோழர்களின் பணிக்கொடை GRATUITY  வழக்கு முடியும் வரை வழங்கப்படுவதில்லை. ஜார்க்கண்ட் மாநில அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இத்தகையதொரு வழக்கில்  பணிக்கொடையை நிறுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில் 
பணிக்கொடை வழக்கம்போல் நிறுத்தப்படும் எனவும் 
BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

பணிக்கொடை என்பது ஓய்வு பெறும் ஊழியர்களின் உரிமை. 
இதில் வம்பு வழக்குகளுக்கு வேலையில்லை.
 தவறுக்குத்தண்டனை என்பது வேறு. 
ஆண்டாண்டு காலமாக பார்த்த பணிக்கு
 பணிக்கொடை வழங்குவது என்பது வேறு. 
மத்திய அரசின் ஊழியர் விரோதமான 
இத்தகைய  ஓய்வூதிய விதிகள் திருத்தப்பட வேண்டும். 

Wednesday, 3 September 2014

மதுரை மாற்றல் பிரச்சினை 
மாநிலச்செயலர் உண்ணாவிரதம் முடிவு 

மதுரை மலைப்பகுதி மாற்றல் பிரச்சினையில் 
இரண்டு தோழர்கள் மலையில் இருந்து 
மதுரை நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டதால் ..

04/09/2014 அன்று சென்னையில் நடைபெற இருந்த 
மாநிலச்செயலரின் உண்ணாவிரதம் 
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஈரோடு பணிக்குழு பட்டறையின் போது 
தொடர்ந்து தொலைபேசியில் மாநிலச்செயலருடன்   
பேச்சுவார்த்தை நடத்தி 
இணக்கமான முடிவிற்கு உதவிய 
மாநில நிர்வாகத்திற்கும்..
போராட்டத்திற்கு முன்பே உத்திரவிட்டு 
அமைதி காக்க உதவிய 
மதுரை நிர்வாகத்திற்கும் நமது நன்றிகள்.

Tuesday, 2 September 2014

பயன்மிகு 
பணிக்குழுப்பட்டறை 

02/09/2014 அன்று ஈரோட்டில் பணிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை பயன்மிகு வகையில் சிறப்புடன் நடந்தேறியது. 
தோழர்.இலட்சம் தலைமையேற்றிட ஈரோட்டுத் தோழர்கள்.யாசின்,பழனிவேலு 
ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். 
ஈரோட்டுச்சிந்தனையாளர்  தோழர்.மாலி அவர்கள் சிந்தனையைத்தூண்டும் நல் துவக்கவுரையாற்றினார். 
தோழர்.குமார் இலாக்காவின் இன்றைய 
பிரச்சினைகளை விரிவுபட எடுத்துரைத்தார். 

தனது தந்தையாரின் மறைவையொட்டி நமது CGM கலந்து கொள்ள இயலவில்லை. எனவே கூடுதல் பொறுப்பு வகிக்கும் சென்னைத்தொலைபேசி CGM தனது நம்பிக்கை தரும் 
நல்வாழ்த்துக்களை நமக்குத் தெரிவித்திருந்தார். 

ஈரோட்டுப்பொதுமேலாளர் திரு.வெங்கடசுப்பிரமணியன் 
தனது வாழ்த்துரையில் பணிக்குழுவின் முக்கியத்துவம் 
குறித்து சிறப்புடன் உரையாற்றினார். 

புதுமைச்சிந்தனையாளர் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள்  
நமது தேசத்தில் மக்கள் முதலீடு மங்கி வருவதையும்,  தனியார் முதலீடு தங்கு தடையின்றி பொங்கிப்பெருகுவதையும், இதனைக்கவனத்தில் இருத்தி  தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டிய 
அவசியத்தையும் அருமையாக எடுத்துரைத்தார். 

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பணிக்குழு உறுப்பினர்கள் 
தங்களது மாவட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர். 

அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
அகில இந்தியச்செயலர் தோழர்.ஜெயராமன், 
மூத்த வழிகாட்டிகள் தோழர்கள்.ஜெயபால்,சேது 
ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

மாநிலப்பொருளர். தோழர்.அசோகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். 

உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பினை நடத்தி வரும் ஈரோட்டுத்தோழர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப்பரிசினை வழங்கியும்,
 மலைவாழ் மாணவர்களின் அடிப்படைத்தேவைகளுக்காக 
நிதி உதவி வழங்கியும் தங்கள் ஈர நெஞ்சினை வெளிப்படுத்தினர். 

BSNL வளர்ச்சிக்காக பணிக்குழுவை செம்மைப்படுத்திடும் 
முயற்சியைத் துவக்கி  வைத்த 
நமது தமிழ் மாநிலச்சங்கத்தை வாழ்த்துவோம். 

மிகச்சிறப்பாக பட்டறையை நடத்தி முடித்த
 ஈரோட்டுத் தோழர்களைப் பாராட்டுவோம்...