Monday, 8 June 2015

ஒப்பந்த ஊழியர் போராட்டம் 
ஒத்திவைப்பு 
====================================================

10/06/2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த
 ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்விற்கான போராட்டம் 
ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

08/06/2015 அன்று நிர்வாகத்துடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்
 மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 
12/06/2015 அன்று நடைபெறும்.
================================================


நேற்று.. இன்று.. நாளை.. 
========================
காரைக்குடி மாவட்டத்தில் 
நேற்று  08/06/2015 வரை மே மாத சம்பளம்
 பட்டுவாடா செய்யப்படவில்லை. 

இன்று 09/06/2015 சம்பள பட்டுவாடா 
நடைபெறவில்லை என்றால்

நாளை 10/06/2015  
 போராட்டம் நிச்சயம் நடைபெறும்.

Sunday, 7 June 2015

NFTE - TMTCLU
BSNLEU - TNTCWU
இணைந்த சிறப்புக்கூட்டம்
===================================
08/06/2015 - திங்கள் 
மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.
===============================================
சென்னை செல்ல... நம் துன்பம் வெல்ல.. 
திட்டமிடுவோம்... திரட்டிடுவோம்...
வாரீர்... தோழர்களே...
===============================================

.

ஜூன் 7
தோழர்.ஜெகன் 
நினைவு தினம் 

ஜூன் 7 
தோழர்.ஜெகன் நினைவு தினம் 
சென்னையில்  தமிழ் மாநிலச்சங்க அலுவலகத்தில் 
உள்ளன்போடு நமது தோழர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
மூத்த தோழர்.சிவில் ஆறுமுகம் தலைமையில் 
தோழர்கள்.குமாரதாஸ், காரைக்குடி மாரி 
சங்க அலுவலக காப்பாளர் தோழர்.கார்த்தி 
தோழர்கள்.ரஞ்சித், கிஷோர் மற்றும் 
STR தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜெகன் வழி சொல்வோம்..
ஜெகன் வழி செல்வோம்.... 

Thursday, 4 June 2015

ஏட்டுச்சுரைக்காய் 

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" 
என்பது முன்னோர் மொழி..

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் 
முழுக்க முழுக்க அது உண்மையாகின்றது...

ஒப்பந்த ஊழியர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும் 
அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் 
என்ற குரல் தற்போது ஆங்காங்கே ஓங்கி ஒலிக்கின்றது..

எப்போதெல்லாம் சங்கங்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினையை 
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனவோ அப்போதெல்லாம் 
மேல்மட்ட நிர்வாகங்கள்  உடனடியாக ஒரு காகித உத்திரவை கீழ்மட்டங்களுக்கு அனுப்பிவிட்டு தங்கள் கடமையை முடித்துக்கொள்கின்றன. ஆனால் அவற்றில் ஓன்று கூட 
இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இன்று பல அத்தியாவசியப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு 
BSNL செயல்பாட்டை மேம்படுத்த முடியாது. 
பல ஆண்டுகளாக போக்கிடமற்று 
இங்கே பணிபுரியும் அவர்களும் 
தங்களுக்கு 
பணி நிரந்தரமோ..
உயர்  ஊதிய மாற்றமோ..
பதவி உயர்வோ கேட்கவில்லை...

கேட்பதெல்லாம் 
உரிய தேதியில் குறுகிய சம்பளம்.. 
அடையாள அட்டை.. 
மருத்துவ வசதி... 
EPF  பணத்தை  அவர்கள் கணக்கில் போடுவது.. 
ஆண்டுக்கு ஒரு முறை போனஸ்.. 
இவ்வளவே...

ஆனால் அவர்கள் மாதச்சம்பளத்திற்கே
இங்கே மன்றாட வேண்டியுள்ளது.
ஆகப்பெரும் அதிகாரமிக்க அதிகாரிகளும் 
பாரம்பரியமிக்க தொழிற்சங்கங்களும் உள்ள 
இந்த துறையில் அடிமட்ட ஊழியர்கள்
மாதச்சம்பளம் பெறவே  மன்றாடும் நிலை மிக மிக அசிங்கமாகும்.

குத்தகைக்காரன் குரங்குகள் போல 
மாவட்டம் விட்டு மாவட்டம் தாவித்திரிகிறான்..
அவனை ஒழுங்குபடுத்த ஏதும் வழி இல்லை...
குத்தகையை முறைப்படுத்த வேண்டும்..
முறையான குத்தகைக்காரரை தேர்வு செய்ய வேண்டும்..
தற்போது அனைத்தும் மையப்படுத்தப்படுகின்றது..
மாநிலம் முழுக்க ஒரே குத்தகையை மையப்படுத்தலாம்..

சம்பளம் வங்கிக்கணக்கில் போடப்படுகின்றதா..
சரியான தொகை சரியான நபருக்கு செல்கிறதா...
EPF.. ESI பிடித்தங்கள் முறையாக செலுத்தப்படுகின்றதா  என..
கணக்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்..

குட்டி குட்டி அதிகாரிகள் 
குத்தகைக்காரனிடம் கையேந்தும் இழிநிலை மாற வேண்டும்..

நான் உன்னிடம் வேலை மட்டுமே வாங்குவேன்...
நீ சம்பளம் எப்படியாவது வாங்கிக்கொள் 
என்று அதிகாரிகள் கூறும் அசிங்க நிலை அகல வேண்டும்..

மேல்மட்ட அதிகாரிகளும் தலமட்ட அதிகாரிகளும்..
தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்..மனமுவந்து 
இந்த பிரச்சினை தீர தங்கள் பங்கை செலுத்த வேண்டும்..

இந்த பிரச்சினையை மாநில நிர்வாகம்...
அவ்வப்போது ஓரக்கண்ணால்  பார்ப்பதை விட 
மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தை இதற்காகவே கூட்டி 
அவர்களுடைய பிரச்சினைகள் தீர வழி காண வேண்டும்.
உத்திரவுகளை நடைமுறைப்படுத்தாத 
மாவட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..  

அது விடுத்து மேல்மட்டத்திலிருந்து கடிதங்கள்  அனுப்புவதும்..
கீழ்மட்டங்கள்  கதைகள் சொல்வதும் 
கவைக்கு ஆகாது... கறிக்கு ஆகாது...

Wednesday, 3 June 2015

வாழ்க.. மணமக்கள்.. வளமுடன்.. நலமுடன்... 

இன்று 04/06/2015 
கடலூர் நெல்லிக்குப்பத்தில் 
மணவிழா  காணும் 

TMTCLU  மாநிலச்செயலர் 
தோழர்.செல்வம் 
அவர்களின் செல்வங்கள் 
எல்லா செல்வங்களும் பெற்று 

ஆல்போல் தழைத்து 
அருகு போல் வேரோடி 
அரும்பெரும் வாழ்வு
  வாழ்ந்திட 
அன்புடன் வாழ்த்துகிறோம்.

NFTE - TMTCLU  
காரைக்குடி மாவட்டச்சங்கங்கள் 
செய்திகள் 

இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தியதையொட்டி 
ஜூன் 15 முதல் நாடு தழுவிய இலவச ஊர்சுற்றும் 
ROAMING வசதியை  BSNL அறிவித்துள்ளது. 
---------------------------------------------------------------------------------
2014-15ம் நிதியாண்டில் BSNLன் வருமானம் 2.1 சதம் உயர்ந்துள்ளதாக இலாக்கா மந்திரி கூறியுள்ளார். பின்னோக்கிச்செல்லும் நிலையிலிருந்து BSNL முன்னோக்கி அடியெடுத்து வைப்பதாக 
அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------

2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 
25 நகரங்களை தரம் உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு,கோவை ஆகிய நகரங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்காக இருந்தாலும் 01/04/2015ல் இருந்துதான்
 பணப்பலன் ஊழியர்களுக்கு கிடைக்கும். 
---------------------------------------------------------------------------------
வருமான வரித்தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே உள்ள 
விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய விண்ணப்பங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும்.
---------------------------------------------------------------------------------
விலைவாசிப் புள்ளிகளின் உயர்வையொட்டி ஜூலை 2015 முதல்  1.6  முதல் 2 சதம் வரை  
IDA  உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------
4G சேவை வசதியை  அடுத்த ஆண்டு துவக்குவதற்கு 
BSNL  திட்டமிட்டுள்ளது. இதற்காக 39000 கோடி அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். AIRTEL நிறுவனம் ஏற்கனவே 23 நகரங்களில் 
இந்த சேவையை துவங்கி விட்டது. RELIANCE நிறுவனம் 
அடுத்த மாதம் துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE  மற்றும் போனஸ்குழுக்கூட்டங்களை உடனடியாக கூட்டக்கோரி 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------
ஆந்திர மாநில அரசு 01/07/2013 முதல்  தனது ஓய்வூதியர்களுக்கு 
43 சத ஓய்வூதிய உயர்வை அறிவித்துள்ளது. 
02/06/2014 முதல் நிலுவை வழங்கப்படும். 
---------------------------------------------------------------------------------
BSNLலில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு  78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கான குறிப்பு DOT நிதிப்பிரிவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின் 
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.  
--------------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, 2 June 2015

டும்.. டும்.. டும்..

இதனால் சகல மாவட்டங்களுக்கும் 
அறிவிப்பது என்னவென்றால்...

ஒப்பந்த ஊழியர்களின்... 

சம்பளம் உரிய தேதியில் வழங்கப்பட  வேண்டும்.. 
EPF கண்டிப்பாக கட்டப்பட வேண்டும்.. 
ESI மருத்துவ அட்டை வழங்கப்பட வேண்டும்.. 
அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.. 
போனஸ் வழங்கப்பட வேண்டும்.. 
நலச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.. 
CORPORATE உத்திரவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்..

வேறென்ன.. வேண்டும்...
இந்த அறிவிப்பைக் கேட்டு.. 
ஜூன் 10 போராட்டம் நடக்காமல் இருக்க வேண் டும்.. டும்.. டும்..  

இப்படிக்கு 
மாநில நிர்வாகம் - சென்னை.