Friday, 5 August 2016

அதிகாரிகள் சங்கத்தேர்தல் 

அதிகாரிகள் சங்க உறுப்பினர்  சரிபார்ப்புத்தேர்தலுக்குப் போட்டியிட 
10 சங்கங்கள் தகுதி பெற்றுள்ளன. போட்டியில் இருந்து விலக விரும்பும் சங்கங்கள் 10/08/2016க்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ள சங்கங்கள் 

  • AIBSNLEA  - ALL INDIA BSNL EXECUTIVES  ASSOCIATION 
  • AIBSNLOA  - ALL INDIA BSNL OFFICERS  ASSOCIATION 
  • AITE&EA  - ALL INDIA TELECOM EXECUTIVE & ER. ASSOCIATION 
  • ABLEA - ASSOCIATION OF BSNL LDCE EXECUTIVES 
  • BEAB - BAHUJAN EXECUTIVES  ASSOCIATION OF BSNL 
  • BBOA - BHARTHIYA BSNL OFFICERS  ASSOCIATION 
  • BASE (INDIA) - BSNL ASSOCIATION OF SERVING  EXECUTIVES (INDIA)
  • BSNLOA - BSNL OFFICERS  ASSOCIATION
  • SNEA - SANCHAR NIGAM EXECUTIVES ASSOCIATION 
  • TSOA - TELECOM SECTOR OFFICERS  ASSOCIATION 

ஊழியர் சங்கங்களின் எண்ணிக்கை 19
அதிகாரிகள் சங்கங்களின் எண்ணிக்கை 10
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...

Thursday, 4 August 2016

ஒலிம்பிக் - உலகத்திருவிழா 

ஒலிம்பிக்...  உலகத்தின் திருவிழா.. 
மனித வெள்ளத்தின் பெருவிழா..

உலகத்தில் வாய்மையே  வெல்லும்...
ஒலிம்பிக்கில் வலிமையே வெல்லும்...

ஒலிம்பிக்கில்...
கறுப்பும்... வெள்ளையும் கைகோர்க்கும்...
நட்பும்... பகையும்... களம் காணும்...

வெற்றியும்... தோல்வியும் வீரர்க்கழகு...
ஒலிம்பிக்கில் களம் காண்பதே அழகு...

ஒலிம்பிக்.. கிறிஸ்துவுக்கு முன் பிறந்தது...
கிறிஸ்துவுக்குப் பின்னும் வாழ்வது...

உலகம் அழியலாம்...
ஒலிம்பிக் அழியாது...

Wednesday, 3 August 2016

சுட்டுரை சேவை
அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவையில்
வாடிக்கையாளர்கள் சந்திக்கும் குறைகளை TWITTER என்னும் சுட்டுரையின் மூலம் அரசிற்குத் தெரியப்படுத்தும் 
சுட்டுரைசேவையை நமது அமைச்சர் துவக்கி வைத்துள்ளார். 

சுட்டுரையில் சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்
உடனடித்தீர்வு... குறுகிய காலத்தீர்வு..நீண்ட காலத்தீர்வு 
என்று மூன்று வகைப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.

சுட்டுரை என்பது மேல்தட்டு... நடுத்தட்டு மக்களுக்கானது.
அடித்தட்டு மக்கள் வழக்கம் போலவே 
நமது அலுவலகத்திற்கு நடையாய் நடக்கத்தான் வேண்டும். 
அடித்தட்டு மக்களுக்காக  ஆராய்ச்சிமணி போன்ற
பழங்கால நடைமுறையை நடைமுறைப்படுத்துவது சாலச்சிறந்தது.
JTO தேர்வு விண்ணப்பிக்கும் நாள் 

28/08/2016ல் நடைபெறவுள்ள 
2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்களுக்கான 
JTO இலாக்காத் தேர்விற்கு 
இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க
 10/08/2016 கடைசி நாள் 
என  BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோழர்கள் உற்சாகமுடன் தயாராகவும்...

Tuesday, 2 August 2016


வாக்கியப் பஞ்சாங்கப்படி  02/08/2016 காலை 9.23  மணிக்கு 
குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
அனைவருக்குமான பொதுப்பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BSNL  நிறுவனம்
இதுநாள் வரை எட்டாம் இடத்தில் அமர்ந்து நட்டங்களையும்... நற்பெயருக்கு களங்கத்தையும் உண்டுபண்ணிய குருபகவான் 
இனிமேல் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கப்போகிறார்.  இனிமேல் செலவுகள்  குறையும். லாபம் கூடும். 
SIM விற்பனை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை 
மாறி சூடு பிடிக்கும். வாடிக்கையாளர் உறவு மேம்படும். 
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  இதுநாள் வரை தொல்லை தந்த ஓய்வூதியச்சுமை குறைந்து மகிழ்ச்சி உருவாகும். 
ஆனாலும் பங்கு விற்பனை... தனியார்மயம் போன்ற
பயமுறுத்தல்களும் அவ்வப்போது வந்து போகும். 
பொதுவாக இந்தக் குருபெயர்ச்சி நற்பலன்களையே தரப்போகிறது.

பணியாளர்கள் 
பணியாளர்களுக்கு இது முக்கியக்காலக்கட்டமாகும். 
ஒற்றுமையுடன் போராடினால்  போனஸ், மருத்துவப்படி,78.2ல் வீட்டு வாடகை, 2017 முதல் ஊதிய உயர்வு ஆகியவற்றை அடையலாம். ஒற்றுமை நீங்கில் தாழ்வே வந்து சேரும். பதவி உயர்வுத்தேர்வுகளில் தடைகளும்.. தாமதங்களும் வந்து நீங்கும். ஆனாலும் தளராமல் ஊழியர்கள் தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நிறுவனம் உயர,  அதன் மூலம் தங்கள் நிலை உயரப்  பணியாளர்கள் கூடுதலாகப் பணி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களை வசப்படுத்த வேண்டும். 
உண்மையுடனும், நேர்மையுடனும்  உழைத்தால் இந்தக்குருபெயர்ச்சி மட்டுமல்ல... எல்லாக்குருபெயர்ச்சியிலும்  நற்பலன்களைப்பெறலாம்.

அதிகாரிகள் 
அதிகாரிகளுக்கு அனுகூலமான காலமிது. 2017 ஜனவரி முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனாலும் வாங்கும் சம்பளத்தில் பாதியை வட்டியாகவும்... வரியாகவும் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஊழியர்களுடன் விரோதம் பாராட்டாமல்.. அன்பு பாராட்டினால் அவர்களிடம் கூடுதலாக வேலை வாங்க முடியும். மாறாக அதிகாரப்பிரயோகம்  செய்வது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். நிறுவனம் காத்திடும் முயற்சியில் ஊழியர்களுடன் இணைந்து போராட வேண்டிய அவசியம்  உருவாகும்.

ஒப்பந்த ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் அதன் பாதிப்பு இந்தக்குருபெயர்ச்சியிலும் தொடரும். சம்பளம் சரியான தேதிக்கு கிடைக்காது. EPF ESI போன்றவை எட்டாக்கனியாகவே இருக்கும். போனஸ் என்ற வார்த்தை காதில் விழும். கையில் விழாது.  போராட்டங்கள்  மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். 
நல்ல கதை எதுவும் நடக்காது.   ஆனாலும் தோழர்கள்  சோர்வடையத்தேவையில்லை. 2016 செப்டம்பர் 2க்குப் பின் வாங்கும் சம்பளம் உயரும் வாய்ப்புள்ளது.  இதற்காக மற்ற மத்திய சங்கங்களோடு இணைந்து செப்டம்பர் 2ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்து வர கெடுபலன்கள் குறைந்து நல்லவை நடைபெறும்.  

சங்கங்கள் 
ஏழாமிடத்துக்குரு எட்டாமிடத்திற்கு செல்வதால்    சங்கங்களுக்கிடையே ஒற்றுமை எட்டாத இடத்திற்குச் செல்லும். போட்டி... பூசல் அதிகரிக்கும். உள்கட்சிப்பூசல் பூதாகரமாக வெடிக்கும்.  சங்கங்கள்  தனித்தனிக் குழுக்களாக செயல்படும்.  தலைகள் உருளும்.  ஊழல் தலைகளும்... உதவாதப் பெருந்தலைகளும்  நேர்மை வெளிச்சத்தில்  மிரளும். ஊழல்வாதிகள் தலைமையைப் பிடிக்கத்  திட்டம் தீட்டுவர். ஆனாலும் அது தோல்வியில் முடியும். உறுப்பினர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமே கெடுபலன்களைக் குறைக்க முடியும். சங்கத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் அவர்கள் பால்க்காவடி.. பழக்காவடி தூக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கச்சேரிகளில் ஜால்ரா சத்தம் குறைவாக இருப்பது 
கச்சேரியின் இனிமையைக் கூட்டும். 

பரிகாரம் 

உழைப்பு...ஒற்றுமை...நேர்மை...
என்ற குரு மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால்
கெடுபலன்கள் குறைந்து நல்லதே  நடக்கும்...

Monday, 1 August 2016


இலக்கியச்செம்மல்... சம்மேளனச்செயலர் 
தோழர்.ஜெயராமன்
பணி நிறைவு பாராட்டு விழா

06/08/2016 - சனிக்கிழமை - காலை 10 மணி 
 TOWN HALL - கடலூர் 

தலைமை: தோழர்.C.K. மதிவாணன் 

வாழ்த்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - நூல் வெளியீடு 

வாழ்த்துரை 

பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் 
தோழர்.முத்தரசன் 
தோழர்.மகேந்திரன்
தோழர்.திருமலை - AIYF
தோழர்.நல்லக்கண்ணு  

தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்.மாலி 
தோழர்.இரகுநாதன் 
தோழர்.இலட்சுமணன் AITUC 
 தோழர். கு.பாலசுப்பிரமணியன் 

மற்றும் இயக்க  முன்னணித்தலைவர்கள் ....

வாருங்கள்  தோழர்களே...
வாழ்த்துங்கள் தோழர்களே...
JTO தேர்வு கூடுதல்  குழப்பம் 

22/05/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வில்  
2007ல் தேர்வு செய்யப்பட்டு ஜூலை  2008க்குப்பின் பயிற்சி முடித்த  பணியில் சேர்ந்த TTA  தோழர்கள் தற்காலிக அனுமதியுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.  வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் அவர்களது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக  அனுமதியை BSNL நிர்வாகம் ரத்து செய்து 01/08/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.  இது  தேர்வெழுதி ஆவலோடு காத்திருந்த தோழர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

எண்ணித்துணிக கருமம் என்பது வள்ளுவர் வாக்கு...
JTO தேர்வு பிரச்சினையில் எதையும்  எண்ணாமல் துணிந்த
 நிர்வாகத்தின் போக்கு கண்டனத்துக்குரியது.