Wednesday, 26 August 2020


மாற்றங்கள் ஏற்றங்களாகட்டும்...

BSNL நிறுவனத்தில் அதிகாரிகள் சங்கங்களுக்கிடையேயான இரண்டாவது சரிபார்ப்புத்தேர்தல் அமைதியாக நடந்து 
முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளன. 

AIGETOA சங்கம் 11930 வாக்குகளைப் பெற்று 
40.23 சதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 
SNEA சங்கம் 11158 வாக்குகளைப் பெற்று 
37.63 சதத்தைப் பெற்றுள்ளது. 
AIBSNLEA சங்கம் 2914 வாக்குகளைப் பெற்று
 மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

ஆளும் BJP அரசுக்கு சார்பான TOA சங்கம் 
அகில இந்திய அளவில் 475 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்துள்ளது.  குறைந்தபட்சமாக அந்தமானில் ஒரே ஒரு வாக்கும் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 84 வாக்குகளும் TOA சங்கம் பெற்றுள்ளது. கேரள மண்ணில் காவி நிறம் புதிதாக வேர் விட்டுள்ளது விந்தையாக உள்ளது. அதேநேரம் தமிழகத்தில் 21 வாக்குகளை மட்டுமே TOA பெறமுடிந்துள்ளது.  காரைக்குடி போன்ற ஒரு சில  இடங்களில் 
SNEA  எதிர்ப்பு உணர்வு கொண்டவர்கள் காவிக்கு இரையாகிப்போனார்கள். அத்தகைய தோழர்கள் சரியான அமைப்பிற்குத் திரும்பி வருவார்கள் என்று நம்புவோம். 

AIGETOA சங்கம் முழுக்க முழுக்க BSNL நேரடி அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்டது. விருப்ப ஓய்வில் செல்லும் 
அளவிற்கு வயதுக்கு  வராத தோழர்களை உள்ளடக்கியது. 
இந்த நிறுவனம் லட்சக்கணக்கான 
மூத்த தோழர்களின் உழைப்பில்...  உதிரத்தில்  உருவானது. 
இன்றைய இளைஞர்கள் நாளைய மூத்தவர்கள்.
  இன்றைய மூத்தவர்கள் நேற்றைய இளைஞர்கள். 
இதனைப் புரிந்து கொண்டு AIGETOA சங்கம் செயல்பட வேண்டும். 
BSNL நலன் மற்றும் தொழிலாளர் நலன் காப்பதிலும், 
பொதுத்துறை விரோத... தொழிலாளர் விரோத
 அரசின் கொள்கைகளை எதிர்ப்பதிலும் 
அனைத்து சங்கங்களுடனும் ஒன்றுபட்டு 
தனது உணர்வை வெளிப்படுத்த வேண்டும். 
பகுத்தறிவு கூடுதலாக இருக்க வேண்டிய  பட்டதாரிகளின்  சங்கச்  செயல்பாடுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வெற்றி பெற்ற சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

Wednesday, 19 August 2020


AIBSNLPWA அமைப்பு தினம்

RETIRED... BUT   NOT    TIRED
ஆகஸ்ட் 20
AIBSNLPWA அமைப்பு தினம்
 -----------------------------------------------
AIBSNL PWA...

மூத்த குடிமக்களை...
தாங்கி நிற்கும் ஊன்றுகோல்...
உரிமை காக்கும் கைத்தடி...

பத்து வயது கடப்பதற்குள்...
லட்சத்தை தொட்ட உறுப்பினர்கள்...
ஆயிரத்தைக் கடந்த அற்புத தீர்வுகள்...
நூற்றைத் தொடும் தலைமை நுட்பங்கள்...

உயிர்ப்போராட்டத்தினும் பெரியது..
உரிமைப் போராட்டம்....

ஓய்வு பெற்றோரின்  உரிமை காக்கும்...
AIBSNL PWA 
வாழ்க... வளர்க...

செய்திகள்

விலைவாசிப்படி  வீழ்ச்சி

விலைவாசிப்புள்ளி வீழ்ச்சியினால் 01/07/2020
 முதல் வழங்கப்பட வேண்டிய IDA 160.7 சதத்திலிருந்து 
0.8 புள்ளிகள் குறைந்து  159.9 சதம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 
2007ல் ஊதிய மாற்றம் பெற்றவர்களுக்கும் இது பொருந்தும். ஜூன் மாதம் பணிநிறைவு பெற்றவர்களை விட ஜூலை மாதம் பணிநிறைவு பெற்றவர்களின் பணிக்கொடை மற்றும் விடுப்புச்சம்பளம் ஆகியவை குறைவாக இருக்கும் என்பது ஏற்புடையல்ல..
===============================================
அதிகாரிகள் சங்கத்தேர்தல்

நாடு முழுவதும் BSNL அதிகாரிகள் சங்கத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.  அகில இந்திய அளவில் மொத்த வாக்குப்பதிவு 93.35  சதமாகும்.  மொத்தமுள்ள 29578 வாக்காளர்களில் 27612 பேர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் வாக்குப்பதிவு 93.4 சதமாகும். கொரோனா காலத்திலும் கூடுதல் வாக்குப்பதிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நாளை முடிவுகள் வெளியாகும்.
===============================================

விடுபட்ட VRS தோழர்களுக்கு பதவி உயர்வு

விருப்ப ஓய்வில் சென்ற சில ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்விற்கு முந்தைய தேதியில் நான்கு கட்டப்பதவி உயர்விற்குத் தகுதி இருந்தும் அந்தந்த மாவட்டங்களால் உத்திரவு வெளியிடப்படாமல் இருந்தது.  அத்தகைய தோழர்களுக்கு உடனடியாக நான்கு கட்டப்பதவி உயர்வை 30/08/2020க்குள் வெளியிட வேண்டும் 
என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================

விருப்ப ஓய்வு தோழர்களுக்கு நிலுவைப் பிடித்தம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு குறிப்பாக RM கேடரில் இருந்து போன்மெக்கானிக் கேடருக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கு  லைன்மேன் பதவி உயர்வு வழங்கப்பட்ட காலத்திற்கான ஆண்டு உயர்வுத்தொகை ஓய்வூதியத்திற்கு மறுக்கப்பட்டது. இதனால் அந்த தோழர்களுக்கு EX GRATIA பட்டுவாடாவில் பிடித்தம் செய்யப்படும் நிலை உருவாகியது. நமது சங்கத்தின் தலையீட்டின் பேரில் அத்தகைய தோழர்களுக்கு நிலுவையில் பிடித்தம் இருக்காது என்பது 
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Monday, 17 August 2020


பொதுத்துறை காப்போம் 


பொதுத்துறை காப்போம்
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
-----------------------------------------------------
18/08/2020 – செவ்வாய் – மாலை 05 மணி
தந்தி அலுவலகம் – மதுரை

-----------------------------------------------------

இடிக்கப்படும் ஆலயங்கள்...
நொறுக்கப்படும் இதயங்கள்...
அழிக்கப்படும் தொழில்கள்...
ஒழிக்கப்படும் தொழிலாளர்கள்...

இந்நிலை அகற்றிட...
இழிநிலை துடைத்திட...

தோழர்களே... வாரீர்...

BSNL  அதிகாரிகள் சங்கத்தேர்தல்
BSNL நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் சங்கங்களுக்கிடையேயான
2வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் 
18/08/2020 அன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. 

பத்து சங்கங்கள் பங்கு பெறுகின்றன. 
நாடு முழுவதும் 30118 அதிகாரிகள் வாக்களிக்க உள்ளனர். 
தமிழகத்தில் 1602 அதிகாரிகள் வாக்களிக்கின்றனர். 

தற்போதுள்ள கொரோனா துயர காலத்திலும்...
 ஊழியர்களுக்கு சம்பளம் கூடப் போட முடியாத அவல நிலையிலும் 
BSNL நிறுவனம் பல லட்சங்களைச் செலவு செய்து
 தேர்தல் நடத்துவது விந்தையான ஒன்று. 
வித்தைகள் பல நடந்த நமது நிறுவனத்தில்
 இப்போது விந்தைகள் மட்டுமே நடைபெறுகின்றன.

 தற்போது அங்கீகாரத்தில் உள்ள SNEA மற்றும் AIBSNLEA சங்கங்கள் தனியார்மய எதிர்ப்பு, ஆளும் BJP அரசு எதிர்ப்பு மற்றும் BSNL நலன் காக்க ஒன்றிணைந்து போராடுவது ஆகியவற்றில் ஊழியர் சங்கங்களுடன் இணைந்து போராடித் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வந்தன. 
இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடருமா?
 என்ற கவலை நமக்கு மேலோங்குகிறது. 

தற்போதைய சூழலில் கொள்கைப்பிடிப்புள்ள
 சங்கங்கள் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே 
BSNL நிறுவனத்தையும், அதிகாரிகள் நலனையும் காப்பாற்ற முடியும். 
ஆளும் அரசுக்கும், நிர்வாகத்திற்கும் ஊதுகுழலாக இருப்போரால் நன்மைகள் விளையுமா?என்ற கேள்வி பிறக்கிறது.  
எதுவரினும் சந்திப்போம்.. 
நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பங்கு    பெறும் சங்கங்கள்

1. AIBSNLEA
2. AIBSNLOA
3. AIGE&TOA
4. AITEEA
5. BAHUJAN
6. BSNLOA
7. BSNL ASE(I)
8. BSNL ESA
9. SNEA
10.TOA

Friday, 14 August 2020

விடுதலைத் திருநாள் 
   நல்வாழ்த்துக்கள்......
தேசம் காப்போம்!

கருத்துரிமை காப்போம்...
கண்ணின் மணியாம்
சுதந்திரம் காப்போம்...

சங்கக்கொடி கம்பங்களில்
தாயின் மணிக்கொடி ஏற்றுவோம்...

தேசபக்த கூட்டம் நாமென்று...
தெருவில் நின்று முழங்குவோம்...

அனைவருக்கும் இனிய...
விடுதலைத் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...
---------------------------------------
மதுரை – காரைக்குடி
அனைத்துக் கிளைகளிலும்
சுதந்திர தினக்கொடியேற்றம்
-------------------------------------------
15/08/2020 - காலை 08 மணி 
தோழர்களே...
தேசபக்தியோடு வாருங்கள்...
தேசியக்கொடியோடு வாருங்கள்...

Thursday, 13 August 2020


ஒப்பந்த ஊழியர் ஊதியமும்... தீர்ப்பும்...

ஒப்பந்த ஊழியர்களின் கூலி கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கொடுமை அனைவரும் அறிந்ததே. இந்தக்கொடுமை எதிர்த்து நமது ஒப்பந்த ஊழியர் சங்கமான TMTCLU அதன் பொதுச்செயலர் தோழர்.செல்வம் அவர்களின் முயற்சியால் வழக்கறிஞரும் நமது தோழருமான N.K.சீனுவாசன் அவர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பலநாள் விசாரணைக்குப்பின் நேற்று 13/08/2020 மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒப்பந்த ஊழியர்களுக்கு 30 சத ஊதியம் வழங்கப்பட்டதாக வழக்கம் போலவே நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சாரப் பொய் சொல்லப்பட்டது. இதைக் கேட்டுக் கேட்டு நீதிமன்ற வளாகக் காதுகள் வழக்கம் போலவே நேற்றும் புளித்துப்போயின.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நமது தரப்பில் 
கீழ்க்கண்ட வாதங்கள் முன் வைக்கப்பட்டன.


  • 30 சத ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவு  BSNL நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை.
  • 30 சதம் போக மீதமுள்ள 70 சத ஊதியமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • EPF மற்றும் ESI போன்றவை ஒப்பந்த ஊழியர்களின் வரவில் முறையாக செலுத்தப்படவில்லை.
  • தொழிலாளர் நல ஆணைய அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் மூலம் முறையான அறிக்கை பெறப்பட வேண்டும்
  • கொரோனா பொதுமுடக்கத்தின் போது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் கொடுமை நிறுத்தப்பட வேண்டும்.

  
மாலையில் நடந்த அமர்வில் மாண்புமிகு நீதிபதி
 அவர்கள் கீழ்க்கண்ட உத்திரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
  • BSNL  நிர்வாகம் ஏற்கனவே நீதிமன்றத்தில் கேட்ட அவகாசமான 8 மாதங்கள் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது. எனவே அனைத்து நிலுவை ஊதியமும் செப்டம்பர் மாதத்திற்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
  • 30 சத பட்டுவாடா செய்யப்பட்ட சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொழிலாளர் நல ஆணைய அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • EPF மற்றும் ESI செலுத்தப்பட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்கண்ட துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
  • பொது முடக்க காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அவர்கள் பணிசெய்த ஒப்பந்தகாரர்கள் ஆகியோரின் விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட வேண்டும்.

தோழர்களே..
வாழ்வு முடங்கிப்போன ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்ந்திட
இந்த பொதுமுடக்க காலத்திலும்...
மனம் தளராது நீதிமன்றம் சென்று நியாயம் பிறந்திடப் பாடுபட்ட
ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்திற்கும்... வழக்கை எடுத்துரைத்து நியாயம் கிடைக்கச்செய்த தோழர். NKS  அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

Sunday, 9 August 2020

பெரும்... பேரிழப்பு

காரைக்குடி மாவட்டத்தின் முன்னணித்தலைவர்
தோழர். சி.முருகன் 
அவர்கள்  கொரோனா என்னும்  கொடிய நோயால் பாதிக்கப்பட்டு  இன்று 10/08/2020 மதுரை  
அரசு மருத்துவமனையில் காலமானார். 
------------------------------------------------------
கரத்தாலும்.. கருத்தாலும்... உயர்ந்த மனிதர்…
கண்ணின் மணியாய் NFTE இயக்கத்தை வளர்த்தவர்… 
கலை இலக்கியத்தில் காலமெல்லாம் தடம் பதித்தவர்.. 
கடைநிலை ஒப்பந்த ஊழியர்களுக்காகப் பாடுபட்டவர்… 
கடைசி நாட்கள் வரையிலும் சேற்றில் உழைத்தவர்… 
கருத்த முருகன் என்று கனிவோடு அழைக்கப்பட்டவர்… 
கருத்த அய்யராக காரைக்குடியில் வாழ்ந்தவர்… 
காலமெல்லாம் பிறருக்காக உழைத்த… 
கண்ணியமிக்க தோழர் முருகனின் மறைவால்...
கண்ணீரில் கரைகிறது காரைக்குடி மாவட்டம்…

Sunday, 2 August 2020


கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை கூட்டுறவு சங்கத்தின்
உலகமகா ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து...
உறுப்பினர் நலம் நாடாத 
உருப்படாத போக்கினைக் கண்டித்து...

தமிழகம் முழுவதும் 
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக

தமிழகம் தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்
 03/08/2020  - திங்கள் மதியம் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி – மதுரை.

கோரிக்கைகள்
  • வெள்ளனூர் நிலம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு...
  • மே 2019ல்  காலஞ்சென்ற இயக்குநர்  குழுவைக் கலைத்திடு...
  • வரவு, செலவு, சொத்து, சுகம் மற்றும் கடன் விவரங்கள் பற்றி அறிக்கை வெளியிடு...
  • இழுத்தடிக்கும் ஈவுத்தொகைகையை உடனடியாக வழங்கிடு...
  • ஈவிரக்கம் கொல்லாதே.... இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏமாற்றத்தை தராதே...
  • தன்னிச்சை வரவு செலவு கணக்குகளை நிறுத்திடு...
  • தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை அளித்திடு...
  • அக்டோபர் 2018 முதல் ஓய்வு பெற்ற மற்றும் விலகிச்சென்ற உறுப்பினர்களுக்கு சேரவேண்டிய தொகையை  உடனடியாக வழங்கிடு...
  • வேண்டியவருக்கு வேண்டியன செய்யும் வெட்கங்கெட்ட செயலை நிறுத்திடு...

தோழர்களே... அணி திரள்வீர்...