Tuesday, 12 September 2017

செல் கோபுரங்கள் தனி நிறுவனம்

BSNL நிறுவனத்தில் உள்ள ஏறத்தாழ 66000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி துணை நிறுவனம் உருவாக்கிட 12/09/2017 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து செல் கோபுரங்களும் அனைத்து நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

கோபுரங்களைத் தனியாக பிரிக்கும் அரசின் 
முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 2016ல் BSNLன் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்த போதிலும் அரசு எதனையும் கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போலவே தற்போதைய அரசு தன்னுடய முடிவில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை. 
அரசின் மோசமான முடிவுகளை மக்கள் எதிர்த்தாலும் 
அரசு எதிர்ப்புக்களைப் பற்றியோ விளைவுகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மோசமான முடிவாக இருந்தாலும் தற்போதைய அரசு அதை மறுபரிசீலனை செய்வதில்லை. போராட்டங்கள் செய்தாலும் துளியும் அலட்டிக்கொள்வதில்லை. தானடித்த மூப்பாக தனது முடிவுகளை அமுல்படுத்துவதில் 
அரசு கண்மூடித்தனமாக உள்ளது.  எனவே செல் கோபுரங்கள் பிரிப்பதைத் தடுப்பது என்பது நமக்கு மிகப்பெரும் சவாலாக அமையும்.  மிகமிகக்கடுமையான போராட்டத்தின் மூலம் நமது எதிர்ப்பைக் காட்டாத வரையில் தற்போதைய அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்யாது என்பதே தற்போதைய நிலவரமாகும்.

இத்தாலியில் 800 ஆண்டு பழமையான பைசா நகரத்து 
சாய்ந்த கோபுரத்தை மேலும் சாயவிடாமல் தடுத்து விட்டனர். 
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து இந்த சாதனையைச் செய்துள்ளனர். அங்கு சாய்ந்த கோபுரங்கள் காக்கப்படுகின்றன. 
இங்கோ நிமிர்ந்த கோபுரங்கள் சாய்க்கப்படுகின்றன. 
அங்கு பாரம்பரியம் காக்கப்படுகின்றது.  இங்கோ பொதுத்துறை என்னும் பாரம்பரியம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. 
அது இத்தாலி…. இதுதான் இந்தியா…

No comments:

Post a Comment