Sunday, 25 November 2018


தாங்க இயலா துயரம்….

தேவிபட்டினம் தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர். R.நாகராஜன் TELECOM TECHNICIAN
இன்று 25/11/2018 மதுரையில் மரணமடைந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக மழைநேரத்தில்
இருசக்கர வாகனப் பயணத்தின்போது நின்று கொண்டிருந்த 
லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். 
தலையில் காயம் ஏற்பட்டு
மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  

கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது.
மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனை
அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை என்பதால்
தங்களது சொந்த செலவில்
தோழர் நாகராஜன் குடும்பத்தினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மிகுந்த பொருட்செலவு செய்தும்
அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
பணியில் உள்ள BSNL ஊழியர்கள் மரணமுற்றால்
LIC மூலம் ஒரு லட்சம் ஆயுள்காப்பீடு வழங்கப்படுகின்றது.

விபத்து ஏற்பட்டு 15 நாளைக்குள் இறந்தால்
மூன்று லட்சம் இழப்பீடு வழங்கப்படுகின்றது.
தோழர் நாகராஜன் 2 மாதம்  கழித்து இறந்திருப்பதால்
மூன்று லட்சம் இழப்பீடு கூட கிடைக்காது.
LICயுடனான ஆயுள் காப்பீட்டு உடன்பாடு
சுத்தப் பைத்தியக்காரத்தனமான ஒரு உடன்பாடு
என்பதில் எந்தவித சந்தேகமும் நமக்கு இல்லை…

20 லட்சம் கடன் வாங்கிச் செலவு செய்தும்…
தோழர் நாகராஜனின் உயிரைக் காப்பாற்ற முடியாத
அவரது குடும்பத்தினர் மருத்துவப் பில்களை
பட்டுவாடா கோரி சமர்ப்பணம் செய்தால்
ஆயிரத்தெட்டு கேள்விகள் கிளர்ந்தெழும்…
வெந்து போயுள்ள அவரது குடும்பத்தினர்
மேலும் நொந்து நூலாவார்கள் என்பது சர்வ நிச்சயம்…
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவபில் இழுத்தடிக்கப்படும்…
20 லட்சம் பில்லுக்கு 2 லட்சம் பட்டுவாடா செய்யப்படுமா
என்பது கூட கேள்விக்குறிதான்…
நமது கடந்த கால கசப்பான அனுபவங்கள்
அப்படித்தான் சொல்கின்றன….

தோழர் நாகராஜன் வாழ்வில் விதி விளையாடியது…
இனி அவரது மருத்துவ பில்களிலும் விதி விளையாடும்…
எனவே ஒரு விதி விளையாட்டு இல்லாத
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை…
உருவாக்க வேண்டியது நமது கடமையாகின்றது….

கடமை உணர்வும் கண்ணியமும் மிக்கத்
தோழர் நாகராஜனது மறைவு தாங்க முடியாத சோகமாகும்.
தோழர் நாகராஜனது நினைவு என்றும் நம் 
தோழர்கள் நினைவை விட்டு அகலாது.
நமது வேதனை மிக்க அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்…
விபத்தில் இறந்து அகால மரணமடையும்
தோழர்களின் குடும்பங்களுக்கு
உரிய இழப்பீடு  கிட்ட வகை செய்வோமேயானால் 
அதுவே நாகராஜன் போன்ற தோழர்களுக்கு
நாம் செலுத்தும் அஞ்சலியாகும்…

No comments:

Post a Comment