Monday, 13 June 2016

முதல் போன... முதல் தேதி.. 

நமது ஓய்வூதிய விதிகளின்படி முதல் தேதியன்று 
பிறப்பவர்கள்.. அவர்கள் பிறந்த மாதத்திற்கு 
முந்தைய மாதத்திலே பணி ஓய்வு அடைய வேண்டும். 
உதாரணமாக 01/01/1956 அன்று பிறந்தவர்கள் 31/12/2015ல் ஓய்வு பெற  வேண்டும். இது வழக்கமான நடைமுறைதானே.. என நீங்கள் கூறலாம். 

ஆனால் 01/01/1956 அன்று பிறந்த பல மத்திய அரசு ஊழியர்கள்...
பெற்றோர்கள் ஏன் என்னைப் பெற்றார்கள்  முதல் தேதியில்..? என்று மனம் நொந்து உள்ளனர். காரணம்.. 01/01/1956 அன்று பிறந்தவர்கள் 31/12/2015 அன்று பணி ஓய்வு பெற்று விட்டார்கள்.  

7வது ஊதியக்குழு 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 
இந்நிலையில் 01/01/1956 அன்று பிறந்து  31/12/2015 அன்று ஓய்வு பெற்ற தோழர்கள் ஊதியக்குழு பலனை  முழுமையாக அனுபவிக்க முடியாமல் PRE -2016 PENSIONERS என்ற பிரிவிற்குத் தள்ளப்படுவார்கள்.

அதே நேரம்... ஒரு நாள் தாமதமாக 02/01/1956ல்  பிறந்து  31/01/2016ல் ஓய்வு பெற்றவர்கள்  ஊதியக்குழுவின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள். பணிக்கொடை, விடுப்புச்சம்பளம்,ஓய்வூதியம் என அனைத்தும் புதிய சம்பளத்தில் இருக்கும். ஆனால் 01/01/1956 அன்று பிறந்தவர்களுக்கு எல்லாச்சலுகைகளும் பழைய சம்பளத்திலேயே இருக்கும்.   நமது பகுதியில் 01/01/1957 அன்று பிறந்தவர்களுக்கும் 
இதே நிலைதான்...

எனவே 01/01/1956 அன்று பிறந்து 31/12/2015 அன்று ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வாதத்தின்படி 31/12/2015வரை அவர்கள் சம்பளம் பெறுகின்றனர். ஓய்வூதியம் 01/01/2016லிருந்துதான் வழங்கப்படுகிறது. எனவே அவர்களை PRE -2016 PENSIONERS என அழைப்பது நியாயமில்லை என்று குமுறியுள்ளனர்.

முதல் தேதியில் பிறந்த அரசு ஊழியர்கள்  அந்த மாதத்தின் இறுதியில் ஓய்வு பெற அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கான விதிமுறைத்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

இல்லையெனில்... 
உலகமே கொண்டாடும்  ஆங்கிலப்புத்தாண்டில் 
பிறந்த ஊழியர்களுக்கு  இனிமேல் தங்களது  
பிறந்த நாளைக் கொண்டாடவே மனமிருக்காது. 
ஏன் பிறந்தாய் மகனே... முதல் தேதியில்?..
என அவர்களது பெற்றோரும்...
ஏன் பிறந்தாய் அப்பனே... முதல் தேதியில்?...
என அவர்களது பிள்ளைகளும்  கேள்வி கேட்கும் நிலை வரும். 

No comments:

Post a Comment