Sunday, 3 December 2017

விதியல்ல… சதி….

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே…
அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்…
என்று சொன்ன அண்ணல் நபிகள் நாயகம்
கி.பி. 571ம் ஆண்டு அவதரித்தார்….

இதோ…
அவர் அவதரித்து 1447 ஆண்டுகள் ஆகிவிட்டன…

இன்னும் இந்த நிறுவனத்தில்…
உழைப்பவனின் கூலி… அவனது…
வியர்வை காய்ந்த பின்னும்…
வயிறு காய்ந்த பின்னும்…
உயிர் உலர்ந்த பின்னும்…
உரிய தேதியில் கொடுக்கப்படுவதில்லை…

ஒப்பந்த ஊழியருக்கு…
7ம் தேதி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது விதி…
ஆனால் ஒவ்வொரு மாதமும்
ஒப்பந்த தொழிலாளி தனது சம்பளத்திற்காக
ஏங்கித்தவிக்க வேண்டும் என்பது அவனது விதி…

இது விதியல்ல….
ஒப்பந்தக்காரனும்…. பொறுப்பற்ற நிர்வாகமும்
சேர்ந்து செய்யும் சதி… சதி…. சதி….
என்றுதான் நம் மனது குமுறுகிறது…

காரைக்குடி மாவட்டத்தில்…

HOUSE KEEPING  மற்றும் EOI பணிகளை குத்தகை எடுத்துள்ள
கோவையைச் சேர்ந்த ALERT SECURITY SERVICES
என்ற குத்தகைக்காரர்…
அக்டோபர் மாத சம்பளப்பட்டுவாடாவை
நவம்பர் 20ம் தேதி ஆரம்பித்து…
இதோ இன்னும் முடிக்கவில்லை…
EOI குத்தகையில் இன்னும் சம்பளப்பாக்கி உள்ளது…
காரணம் கேட்டால்…
தனக்கு 2 கோடிக்கு மேல் BSNL நிறுவனத்தில்
பில்கள் பாக்கி உள்ளதாகவும்…
நீங்கள் எங்கு வேண்டுமானாலும்
புகார் செய்து கொள்ளலாம் எனவும் பதில் வருகிறது…

அடுத்தது…
EOI பணிகளை குத்தகை எடுத்துள்ள
சென்னையைச் சேர்ந்த MALLI SECURITY SERVICES குத்தகைக்காரர்…
குத்தகைக்காரர்களுக்குள் குத்து வெட்டாம்…
அதனால் சம்பளப் பட்டுவாடாவில் தேக்கமாம்…
தற்போது தலைமை மாறி… தட்டுத்தடுமாறி…
நவம்பர் 27ம் தேதி சம்பளப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அடுத்தது…
அதிகாரிகளுக்கு நித்தமும்…
சல்யூட் அடித்துச் சலித்துப்போன
காவல் பணி செய்யும் காவலர்கள்
அந்த குத்தகைக்காரர்…
KISHORE THAMBI என்ற கேரள மாநிலத்து குத்தகைக்காரர்…
அவரொரு மலையாள மந்திரவாதி போல….
எங்கிருப்பார்… என்ன செய்வார்… யாருக்கும் தெரியாது…
ஒன்றல்ல… இரண்டல்ல…
ஆகஸ்ட், செப்டம்பர்… அக்டோபர்  என..
தொடர்ந்து மூன்று மாதங்கள்…
சம்பளப் பட்டுவாடா செய்யப்படவில்லை….
நவம்பர் மாதத்தோடு  நான்குமாதங்கள் பாக்கி…
முந்தைய  குத்தகை அக்டோபரோடு முடிவுற…
அடுத்தது… ALERT SECURITYக்கு…
நவம்பர் முதல் குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது…
நரியிடம் தப்பியவன் புலியிடம் மாட்டிய கதை…

அடுத்தது…
RAAGAA TRAILORS என்ற கேபிள் பணிக்கான குத்தகை…
உள்ளூர்க்காரர்…
ஓரளவு ஒழுங்காக பட்டுவாடா செய்து வந்த அவரும்…
இந்த மாதம் சம்பளப் பட்டுவாடாவில் வெகுதாமதம்…
கேட்டால்.. 40லட்சத்திற்கும் மேல் பில்கள் தேக்கம்…
கடன் வாங்கித்தான் சம்பளப் பட்டுவாடா செய்கின்றோம்..
என்ன செய்வது என்று கைகளைப் பிசைகின்றார்…

இதுதான்…
ஒப்பந்த ஊழியர் சம்பளப்பட்டுவாடாவில்…
காரைக்குடியின் கடந்த மாத கண்ணீர்க்கதை….

இது யார் செய்த குற்றம்?…

குத்தகைக்காரர் குற்றமா?
குறட்டை விடும் நிர்வாகத்தின் குற்றமா?
வாழ வழியின்றி… வயிற்றுக்குப் பதில் சொல்ல…
ஒப்பந்த ஊழியராய்ப் பணி செய்வது குற்றமா?

எத்தனையோ கதவுகளைத் தட்டிவிட்டோம்…
எத்தனையோ போராட்டங்களை நடத்தி விட்டோம்…
இன்னும் விடியவில்லை இவர்களுக்கு…

இது விதியா?  இல்லை சதியா?
இதைப் படிப்பவர்களே…. முடிவு சொல்லுங்கள்….

No comments:

Post a Comment