Thursday 13 September 2018


 தொடரட்டும்… வரலாறு...

இன்று 14/09/2018 டெல்லியில்  
ஊதியமாற்ற இருதரப்புக்குழுவின்
அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.

சென்ற கூட்டத்தில்
தனது முந்தைய நிலையில் இருந்து
நிர்வாகம்  இறங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்காம் பிரிவு ஊழியர்களின்
அடிப்படைச்சம்பளமான NE-1  ரூ.19000/=  எனவும்
கடைசிச் சம்பளமான NE-12 ரூ.39900/= எனவும்
நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

மத்திய அரசில்
அடிப்படைச்சம்பளம் ரூ.7000/=லிருந்து
ரூ.18000/= என உயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படைச்சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

BSNLலில் அடிப்படைச்சம்பளம் ரூ.7760/=லிருந்து
ரூ.19000/= என முன்மொழியப்பட்டுள்ளது.
இது 2.44 மடங்கு உயர்வாகும்.
நமது கோரிக்கையான 2.57 மடங்கு என்பது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்..
இன்றுள்ள சூழலில் நிர்வாகம் 2.44 மடங்கு
உயர்விற்கு இசைவு தந்துள்ளது மிகப்பெரும் மாற்றமாகும்.

ஊழியர் தரப்பின் ஒன்றுபட்ட  
தொடர் போராட்டங்களும்… 
தொடர் முயற்சிகளுமே
இதற்கு காரணமாகும்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி…
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு
என கவியரசு கண்ணதாசன் பாடினார்.
நாம் நமக்கும் கீழே தேடினால்
ஊதிய மாற்றங்களே நிகழாத பொதுத்துறைகளும்….
சொற்ப உயர்வு பெற்ற பொதுத்துறைகளும்…
ஏராளமாய்த் தென்படும்.
வங்கி ஊழியர்கள் கூட
தங்களது சொற்ப ஊதிய உயர்வை எதிர்த்துப்
போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
என்பது வள்ளுவர் வாக்கு.

இன்றுள்ள அரசியல் சூழலில்….
வினை வலியை மாற்றிட…
வினை வழி செல்லாது…
அனைத்து வழிகளையும்
ஊழியர் தரப்பு வலிமையோடு
எதிர் கொண்டு வருகின்றது.


நிர்வாகம் முன்மொழிந்த
சம்பள விகிதத்தை அடைவது…

அதிகபட்ச ஊதிய உயர்வான…
15 சத ஊதிய உயர்வை அடைவது…

புதிய சம்பள விகிதத்தில்…
வீட்டுவாடகைப்படியைப் பெறுவது…

என்பதுவே… இன்றைய நிலையில்…
சாதாரண ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்..

இதனை அடைய…
நாம் இன்னும் நீண்ட தூரம்
பயணிக்க வேண்டியுள்ளது…
அந்தப் பயணம்…
மிகப்பெரும் சவாலாக நமக்கு விளங்கும்…

ஆயினும் நமது உருக்குப் போன்ற ஒற்றுமை
சவால்களை வென்று காட்டும்
என உறுதியாக நம்புவோம்.

தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியதும்…
சோதனைகளை சாதனைகளாக உயர்த்தியதும்….
நமது வரலாறு…
                     
பொதுத்துறைகளில் ஓய்வூதியம் என்ற
வரலாற்றைப் படைத்தவர்கள் நாம்…

அந்த வழியில்…
நட்டத்தில் நிறுவனம் இயங்கினாலும்…
BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற்றார்கள்
என்ற புதிய வரலாறு
BSNLலில்.. நிச்சயம் படைக்கப்படும்…

No comments:

Post a Comment