போய் வா நதியலையே…
கவிஞர் நா.காமராசன் |
பூவெடுத்து
மாலை கட்டிக்கொண்டிருந்தேன்…
இடையில்
புல்லறுக்கப் போய்விட்டேன்…
இது கவிஞர் நா.காமராசன்
வரிகள்…
சிறந்த
மரபுக்கவிஞராக உருவாகி…
திரைப்படக்கவிஞராக
உருமாறிய
தன் நிலை பற்றிய
அவரது வேதனை வரிகள் இவை…
நா.காமராசன்…
போர்க்களத்தில்
தமிழ்மொழி காத்த தமிழின் பிள்ளை…
புதுக்கவிதையை
வளர்த்தெடுத்த பாரதியின் தம்பி…
உவமைக்கவிதையின்
ஊற்றான சுரதாவின் சீடன்…
திராவிடத்திற்கும்
பொதுவுடமைக்கும் தோழன்…
இரவெரிக்கும் பரிதியை
ஏழை விறகெரிக்க வீசுவேன்
ஒளிகள் பேசும் மொழியிலே
நான் இருள்களோடு பேசுவேன்…
என ஏழைகளின் இருள் பேசியவர்…
வஞ்சிக் கோமான் விழிகள் சந்திக்கின்ற
வஞ்சிக்கோ மான்விழிகள்…
என உற்சாக உவமை சொல்லியவர்…
அடிவயிற்றுப் புதையலோ
உன் உதையெல்லாம் ஒத்தடமோ
உமிழ்நீர்… இளநீரோ…
எனத் தமிழால் பிள்ளையைத் தாலாட்டியவர்...
நிர்வாணத்தை விற்கிறோம்...
ஆடைகள் வாங்க...
என்று பாலியல் தொழிலாளியின்
பாடுகளைப் பாடல்களாக்கியவர்...
இதோ… மறைந்து விட்டார்…
தமிழை மறந்து விட்டார்…
அவர் மறைந்தாலும்… மறந்தாலும்…
தமிழுலகம்
அவரை மறக்காது…
போய் வா…தமிழலையே…
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா…
No comments:
Post a Comment