Monday, 26 August 2019

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்

BSNL நிறுவனத்தின் நிலையும்.. ஊழியர்களின் நிலையும்
கேள்விக்குறியாகி... கேலிக்குரியதாகி உள்ள நிலையில்
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதம் சம்பளம் கொடுக்க வக்கில்லை...
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

வங்கிக்கடன்... சொசைட்டி பிடித்தம்...
வைப்புநிதி மே மாதம் முதல் வரவில் வைக்கப்படவில்லை...
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

மே மாதத்திற்குப் பின் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின்
வைப்புநிதி இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை..
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

வளர்ச்சிப்பணிகள்... மராமத்துப் பணிகள்...
என எல்லாப் பணிகளும் முடங்கிப்போயுள்ள நிலையில்
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?
  
இது நாம் எழுப்பும் கேள்வி அல்ல..
வாக்கு கேட்டு உறுப்பினர்களை நாம் அணுகும் போது
அவர்கள் கோபமாக எழுப்பும் கேள்விதான் இது?
இந்தக் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை...

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை முடக்கி விட்டு
தங்கள் விருப்பம் போல் நிர்வாகம் செயல்படும்
என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 
சங்கங்கள்  நிர்வாகத்தை வலியுறுத்தியதன் விளைவாக
நிர்வாகம் தேர்தலை அறிவித்துள்ளது...

தேர்தலுக்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன...
04/09/2019  அன்று தேர்தல் அதிகாரிகளுக்கான 
சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது
எனவே தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது...

ஏழு தேர்தல்கள் முடிவடைந்துள்ளன...
எட்டாவது தேர்தல் நடைபெறவுள்ளது...
போராடிப்பெற்ற பல சலுகைகள் உரிமைகள்
இன்று எட்டாமல் போன நிலையில்
இன்று எட்டாவது தேர்தல் நடைபெறவுள்ளது...

BSNL உருவாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில்
அதிக காலம் முதன்மைச்சங்கம் என்ற அங்கீகாரத்தில்
15 ஆண்டுகள் BSNLEU  சங்கம் உலா வந்துள்ளது...

இன்று நிறுவனமும் ஊழியர்களும் 
தெருவில் நிற்கும் நிலைக்கு
நிர்வாகமும் அரசும் BSNLEU சங்கமும்
முழுக்காரணம் என்றால் அது  மிகையில்லை...

முதல் ஊதிய மாற்றத்தில் தோழர் குப்தா
குறைந்தபட்ச உயர்வு 1500 பெற்றுத்தந்தார்...
ஆனால் BSNLEU சங்கத்தால்
இரண்டாவது ஊதிய மாற்றத்தில்
குறைந்தபட்ச ஊதிய உயர்வைப்பெற முடியவில்லை
78.2ஐக் கோட்டை விட்டார்கள்...
மூன்றாவது ஊதிய மாற்றம்
இவர்கள் காலத்தில் ஊத்தி மூடப்பட்டு விட்டது...

பல்வேறு சலுகைகள் உரிமைகள்
இவர்கள் காலத்தில் பறிபோய் விட்டன...
பணிப்பாதுகாப்பு கூட இன்று கேள்விக்குறியாகி விட்டது...

இழப்பதற்கு ஏதுமில்லை...
இடுப்பு வேட்டியைத் தவிர..
என்ற நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்...

இந்த நிலை மாறவேண்டும்...
மீண்டும் BSNL  எழ வேண்டும்
ஊழியர் வாழ்வில் மலர்ச்சி வரவேண்டும் எனில்
நாம் என்ன செய்ய வேண்டும்?

பாரதி சொன்னான்...
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்...
இந்த  ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

ஆம் தோழர்களே...
நமது பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்...
நன்று எது என தெளிந்து தேர்வு செய்வோம்...

No comments:

Post a Comment