Monday, 31 October 2016

ஒப்பந்த ஊழியரும்... உரிமை மீட்பும்...

இந்தாண்டு ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும்
 ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. 
போனஸ் அளவு தொகையில் மாற்றம் இருந்தாலும் போனஸ் என்பதை ஒப்பந்த ஊழியருக்கு மறுக்க இயலாது என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தொடர்ந்து போனஸ் பிரச்சினையை தொழிலாளர் நல அதிகாரிகளிடம் இடைவிடாமல் எடுத்துரைத்து அவர்களிடமிருந்து உரிய வழிகாட்டுதல்களை... உத்திரவுகளை தமிழ் மாநிலம் மற்றும் சென்னைத்தொலைபேசி நிர்வாகங்களுக்கு அனுப்பியதில் 
NFTCL சங்கத்தின் பங்கு அளப்பரியது. 

போனஸ் பிரச்சினையைப் போலவே
 சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில்
 கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணி புரியும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டக் கூலியை BSNL நிர்வாகம் வழங்கிட உத்திரவிடக் கோரி சென்னை துணை முதன்மை தொழிலாளர் ஆணையரிடம் NFTCL சங்கம் பிரச்சினையை எழுப்பியிருந்தது. தொடர்ந்து பல சுற்றுக்கள் பேசிய பின் தற்போது Deputy . CLC  அவர்கள் 25/10/2016 அன்று தமிழகம் மற்றும் சென்னை தலைமைப் பொதுமேலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

BSNL நிறுவனத்தில்  ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு திறனுள்ள  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு முரணானது. 

எனவே BSNLலில்  கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணி புரியும்  ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டத்தின்படி அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஒழிப்புச்சட்டம் விதி 
25 (v) (a ) மற்றும் (b)ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  
Deputy . CLC  தெரியப்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 
04/11/2016 அன்று  சென்னையில் நடைபெறும். 
தோழர்.ஆனந்தன்  தலைமையில் நாமும் பங்கு பெறுவோம்.

சமவேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்
 என உச்ச நீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக
 கூறியுள்ள இந்த வேளையில்...
Deputy . CLC அவர்களின் மேற்கண்ட 
தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது.  
BSNL நிர்வாகம் இனியும் தொடர்ந்து 
ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட இயலாது.
NFTCL சுரண்ட விடாது...

தொழிலாளர்கள் விழித்து விட்டார்கள்...
NFTCL தொழிலாளருக்காக எழுந்து விட்டது...

தமிழகத்தில் பத்தாண்டுகள் பின்னோக்கிப் போயிருந்த 
ஒப்பந்த ஊழியர் வாழ்வை மீட்டெடுக்க
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் 
தலைமையில்   பாடுபடும் 
NFTCL ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கும்..
அதன் உணர்வு மிக்க மாநிலச்செயலர் 
தோழர்.ஆனந்தன் அவர்களுக்கும் 
நமது வாழ்த்துக்கள்...

சபாஷ்... ஆனந்தா...
ஊதிய மாற்றக்குழு 

3வது ஊதிய மாற்றக்குழுவை உடனடியாக அமைத்திடக் கோரி 
நமது சங்கங்கள் BSNL நிர்வாகத்தைத் தொடர்ந்து  வலியுறுத்தி வந்தன. ஆர்ப்பாட்டம்... தர்ணா உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் BSNL  நிர்வாகம் ஊதிய மாற்றக்குழு சம்பந்தமாக  அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும்  31/10/2016 அன்று  
விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. 

01/01/2007 ஊதிய மாற்றத்தின் போது   DPE இலாக்கா...
 ஊதிய மாற்றம் சம்பந்தமான வழிமுறைகளை... வழிகாட்டுதல்களை தனது   09/11/2006 தேதியிட்டக்  கடிதத்தில் தெரிவித்திருந்ததாகவும் அத்தகைய வழிகாட்டுதல்கள் தற்போது   DPE இலாக்காவிடமிருந்து வரவில்லையென்றும்.. அதனாலேயே ஊதிய மாற்றக்குழுவை BSNL அமைக்கவில்லை என்றும் மேற்கண்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் DPE இலாக்காவின் வழிகாட்டுதல்கள் மற்றும் DOTயின் ஒப்புதல்  வந்தவுடன் ஊதியமாற்றக்குழு அமைக்கப்படும் எனவும் 
BSNL நிர்வாகம் தனது  கடிதத்தில் தெரிவித்துள்ளது.

 ஒவ்வொரு ஊதிய மாற்றத்திற்கும் வழிகாட்டுதல்கள் வேண்டும் என்ற BSNL நிர்வாகத்தின் மேற்கண்ட விளக்கம் நமக்கு ஏற்புடையதல்ல. 
அதற்கு மாறாக ஊதிய மாற்றக்குழுவை அமைத்து விட்டு அதற்கான ஒப்புதலை  DPE மற்றும் DOTயிடம் கோரியிருக்கலாம். 

இந்திய நாட்டு நிர்வாக நடைமுறையில்...
சாக்கு போக்குகள் என்பது   சகஜமப்பா...
JTO இலாக்காத்தேர்வு செய்திகள் 

11/12/2016 அன்று நடைபெறவுள்ள JTO இலாக்காத்தேர்விற்கு 
விண்ணப்பிக்க கடைசி நாள்   31/10/2016லிருந்து  07/11/2016 என நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தங்களது  விண்ணப்பத்தில்  ஏதேனும் திருத்தங்கள் செய்ய நினைத்தால் 08/11/2016லிருந்து 10/11/2016 வரை செய்து கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------
24/09/2016 அன்று நடந்த JTO இலாக்காத்தேர்விற்கான 
தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் 
கணக்கீடு வந்து சேராததால் தாமதம் என்று கூறப்படுகிறது. 
காலியிடங்களை அறிவித்த பின்புதான் தேர்வுகளே நடைபெறும். 
இது நிர்வாகத்தின் முடமான சாக்குப்போக்கு நிலையாகும். 

இதனிடையே நடந்து முடிந்த தேர்வில் தவறுதலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததை நமது சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு தவறுகளை அலசி ஆராய்ந்து இரண்டு கேள்விகள் தவறு எனவும் தேர்வெழுதியவர்களுக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது. தவறான கேள்விகளைத் தீர்மானித்த நிபுணர் குழுவின் முடிவும் தங்களுக்குத்  தவறாகப்படுவதாக 
நமது தோழர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர். 

Saturday, 29 October 2016

வாழ்க... வளமுடன்...

31/10/2016 -பணி நிறைவு பெறும் 

அருமைத்தோழர் 
S.இராஜேந்திரன் 
அலுலகக் கண்காணிப்பாளர் 
வாடிக்கையாளர் சேவை மையம் 
காரைக்குடி 

பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க
 வாழ்த்துகின்றோம்.

வாழ்த்து சொல்ல: 9442565969

Friday, 28 October 2016

னிய தீபாளி animated deepavali greetings க்கான பட முடிவு  வாழ்த்துக்கள் 

Thursday, 27 October 2016

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் 

27/10/2016 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 
செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் 
அரசின் தவறான முடிவினை எதிர்த்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
ஆகியோர் கூட்டுத்தலைமையேற்றனர்.
SNEA மாவட்டச்செயலர் தோழர்.பாண்டியன் துவக்கி வைத்தார்.
AIBSNLEA சார்பாக தோழர்.நாகராஜன் உரையாற்றினார்.
AIBSNLOA  சார்பாக தோழர்.கணேசன் கருத்துரைத்தார்.
தோழர்.பூமிநாதன் முழக்கமிட...
NFTE கிளைச்செயலர்  தோழியர்.கார்த்திகா நன்றியுரைக்க 
ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நமது துயரோட்டும்..
என்ற உணர்வுடன் கூட்டம் முடிவுற்றது.
இது.. துவக்கமே... தொடர்ந்து இணைந்து  போராடுவோம்...

Tuesday, 25 October 2016

செல் கோபுரங்களை...  செல்ல விடமாட்டோம் 

BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 
65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் என்ற பெயரில் 
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் 
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை... 
BSNLஐக் கூறு போடும்... 
பொதுத்துறை விரோதக் கொள்கையை... 
 வன்மையாகக்   கண்டித்து 
BSNL  அனைத்து அதிகாரிகள் 
மற்றும் ஊழியர் சங்கங்கள் 
இணைந்த  நாடு தழுவிய

கண்டன   ஆர்ப்பாட்டம் 

27/10/2016 - வியாழன் - பகல் 12.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்  - காரைக்குடி.

கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNLஐ ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் 
காரைக்குடி.

Monday, 24 October 2016

ஏற்பும்...மறுப்பும்...

13 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
NFTE தலைமையிலான கூட்டமைப்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டமும்... தர்ணாவும் நடத்தி முடித்துள்ளது. நமது கோரிக்கைகள் மீதான  நிலைபாட்டை BSNL நிர்வாகம்   தனது 21/10/2016 தேதியிட்டக் கடிதத்தில் நமது சங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

ஏற்கப்பட்டவை
  • போனஸ் 2014-15க்கு உத்திரவு வெளியிடப்பட்டு விட்டது. 2015-16க்கான போனஸ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
  • 3வது ஊதிய மாற்றக்குழு அமைப்பது பற்றி DPE மற்றும் DOTயின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • TM பயிற்சி முடித்து காத்திருப்போருக்கான பதவி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. செங்கல்பட்டுப்பிரச்சினை சங்கங்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவெடுக்கப்படும்.
  • விடுப்பைக்காசாக்கும் LEAVE ENCASHMENT வசதி DOT  ஊழியர்கள் போலவே BSNLலில் நியமனம் பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
  • BSNL நியமன ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டம் DOTயின் ஒப்புதல் பெற்று அமுல்படுத்தப்படும்.
  • மருத்துவத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட குழு நவம்பரில் கூடுகிறது. அதன் பின் உரிய திருத்தங்கள் செய்யப்படும்.

மறுக்கப்பட்டவை 
  • 4வது சனிக்கிழமை விடுமுறை என்பது ஏற்புடையதல்ல. வங்கி சேவைக்கும் தொலைத்தொடர்பு சேவைக்கும் மிக வித்தியாசம் உள்ளது.
  • நான்கு கட்டப்பதவி உயர்வில் SC/ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்வெழுதிப் பெற்ற பதவி உயர்வைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது... குறைவான ஊதிய நிலையில் பதவி உயர்வு அளிப்பது போன்றவற்றை பல முறை பேசி விட்டதால் புதிதாகப் பரிசீலிக்க இயலாது.
  • தேக்கநிலை ஊதியம் பற்றி 3வது ஊதியக்குழு முடிவெடுக்கும்.
  • வணிகப்பகுதி உருவாக்கம் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. எனவே சங்கங்களுடன் பேசுவதற்கு அவசியமில்லை.
  • நன்னடத்தை விதி 55 ii (b) பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது.
காலியாகும் காரைக்குடி 

நிலப்பரப்பில் விரிந்து பரந்த 
காரைக்குடித்  தொலைத்தொடர்பு மாவட்டம் 
ஊழியர் எண்ணிக்கையில் 
மிகவும் குறைவான தொகையைக் கொண்டது.  

கணக்கில் குறைந்த காரைக்குடி மீது 
காலன் கண் வைத்து விட்டான் போலும்... 
அக்டோபர் மாதம்.. 
அடுத்தடுத்து இரண்டு தோழர்கள்
அகால மரணம் அடைந்தனர். 

இருவருமே குடிக்கு ஆளாகி இன்னுயிர் நீத்தவர்கள்...
இதோ அடுத்ததாக... மூன்றாவதாக... 
24/10/2016 அன்று...
உச்சிப்புளி தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.ஞானோதயம் TTA என்பவர் 
அகாலத்தில் உயிர் நீத்தார்...
காரணம் வழக்கமானதுதான்... 
குடி காரைக்குடியில் 
மூன்று குடிகளை இம்மாதம் கெடுத்துள்ளது. 
மூவரும் 50 வயதுக்காரர்கள். 
மூவரும் மூன்று சங்கங்களையும் சேர்ந்தவர்கள். 
மூவரும் வாழ வேண்டியவர்கள். 
மூவரும் தங்களது குடும்பத்தை வாழ வைக்க வேண்டியவர்கள். 
இவர்கள் தவிர...
இன்னும் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 
இவர்கள் திருந்துவதற்கான... 
இவர்களைத் திருத்துவதற்கான 
சாத்தியக்கூறுகள் சத்தியமாக இல்லை. 
காரைக்குடி நிலவரத்தைக் கண்டு 
ஆயுள் காப்பீட்டுக்கழகம் அதிர்ச்சியில் உள்ளதாக அறிகிறோம்.

இம்மாதம் இறந்த மூவரையும் தவிர... 
இரண்டு தோழர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். 
பெருங்குடியில் விருப்பம் கொண்ட அந்த இருவரையும் 
அவர்களது குடும்பத்தினர் கட்டாயமாக 
விருப்ப ஓய்வு கொடுக்க வைத்துள்ளனர்.  
இம்மாதம் இயற்கையாக 
இரண்டு தோழர்கள் ஓய்வு பெறுகின்றனர். 

ஆக மொத்தம் அக்டோபரில் 
காரைக்குடியில் எண்ணிக்கையில் ஏழு குறைகிறது. 
ஏழரை குறைய வேண்டும் என்பதே நமது விருப்பம்...

Sunday, 23 October 2016

கோரிக்கை முழக்கப் போராட்டம் 
BSNL ஊழியர்களின் 
11 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
NFTE தலைமையிலான 
  தேசிய ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக 
24/10/2016 - திங்கள் 
நாடு தழுவிய தர்ணா 

பசும்பொன்  தேவர் குருபூஜை  மற்றும்
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் குருபூஜையின் காரணமாக 
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 
கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்...

இன்று 24/10/2016 - திங்கள் மாலை 5 மணிக்கு 
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் 
முன்பு நடைபெறும்.

தோழர்கள் திரளாகக் கலந்து கொள்ளவும்....

Saturday, 22 October 2016

வாய்ப்பூட்டு 

ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக CORPORATE அலுவலகம் 
21/10/2016 அன்று ஒரு உத்திரவை வெளியிட்டுள்ளது.
அதனைப் படித்தவுடன் நினைவுகள் 
1947க்கு முன் சென்று விட்டன...

இந்திய வரலாற்றில் இரண்டு தலைவர்களுக்கு 
அன்றைய பிரிட்டிஷ் அரசு 
வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டிருந்தது...
வடக்கே திலகர்... தெற்கே தேவர்...

இருவருடைய பேச்சையும் கேட்டால் 
இறந்த பிணமும் எழுந்து போராடும் என்று 
இந்திய மக்கள் அந்நாளில் கூறுவார்கள்...

1937ல் சென்னை மாகாணத் தேர்தல் நடைபெற்றது...
காங்கிரஸ் சார்பில்..
இராமநாதபுரத்தில் தேவரும்...
புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தியும்..
விருதுநகரில் காமராஜரும் போட்டியிட்டனர்...
தமிழ்நாடு முழுக்க தேவர் பிரச்சாரம் செய்ய 
காங்கிரஸ் கட்சி அவரைக்  கேட்டுக்கொண்டது...
ஆனால் வெள்ளை அரசோ தேவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருந்தது...

காரைக்குடி கானாடுகாத்தானில் பிரச்சாரக்கூட்டம்... 
தீரர் சத்தியமூர்த்தி தனது  பிரச்சாரத்தைத் துவங்கும் போது 
அங்கு வந்த காவல்துறை அவரைப் பேசவிடாமல் தடுக்கிறது...
தடை உத்திரவு உள்ளதென்றும்... 
மீறிப்பேசினால் சுட்டு விடுவோம் என்றும் எச்சரிக்கிறது..
அகிம்சாவாதியான சத்தியமூர்த்தி அமைதியாக 
அவ்விடத்தை விட்டுப்  பேசாமல்  அகன்று சென்று விட்டார்..

இந்த செய்தியைத் தேவர் கேள்விப்படுகிறார்...
உடனே மறுநாள் அதே கானாடுகாத்தானில்...
பிரச்சாரக் கூட்டத்தைத் தேவர் அவர்கள் கூட்டுகிறார்...
தேவர் பேச்சைக் கேட்டிட தேர்த்திருவிழாவென 
செட்டிநாடு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது...
வழக்கம்போலவே காவல்துறை கெடுபிடி செய்கிறது...

தேவர் மேடை ஏறுகிறார்...
பேச்சுரிமை எங்கள் பிறப்புரிமை...
இதைத்தடுக்க எவனுக்குமில்லை உரிமை...
இதோ... எனது பிறப்புரிமையை 
இந்த மேடையிலேயே நான் நிலை நாட்டுவேன்...
இந்த மேடையிலேயே எனது உரிமைக்காக நான் 
இன்னுயிர்  விடத்தயார்...  
வெள்ளைக்  காவல்துறை அதிகாரிகளே... 
உங்களுக்குத் தைரியம் இருந்தால்...
என் நெஞ்சில் உங்கள் துப்பாக்கிகளால் சுடுங்கள்"...
என அஞ்சாத வீர உரை நிகழ்த்தினார் தேவர் அவர்கள்...
மக்கள் கூட்டம் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஆர்ப்பரித்தது...
காவல்துறை தலை கவிழ்ந்து நின்றது...
தேவரின் தேச பக்தியும் வீரமும் கண்டு 
வாய்ப்பூட்டுச் சட்டமும் வாய் மூடி நின்றது...
இது தேச வரலாறு... பசும்பொன் தேவரின் வரலாறு...

இந்த தேசத்தில்தான்... இந்திய தேசத்தில்தான்... 
விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்...
இன்னும் வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்படுகிறது...

இப்படித்தான் BSNL நிறுவனமும் 
21/10/2016 அன்று 
வாய்ப்பூட்டு ஒன்று போட்டுள்ளது...

BSNL நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களைப்பற்றி 
யாரும் வாயைத்திறந்து பேசக்கூடாது...
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக இருந்தாலும் 
அவர்களுடைய பிரச்சினையை பேசக்கூடாது...
தலமட்ட... மாநில மட்ட..  JCMகளில் 
ஒப்பந்த ஊழியர்களது  பிரச்சினையை எழுப்பக்கூடாது...
எதுவாக இருந்தாலும் ஒப்பந்தக்காரரிடம்தான் பேச வேண்டும்...
என்பதுதான் தற்போது நமது நிறுவனம் 
மனிதநேயமற்றுப் போட்டுள்ள
துருப்பிடித்த பூட்டுச்சட்டம்...

பூட்டிய  பூட்டுக்களை உடைப்பதும்..
மூடிய கதவுகளை திறப்பதும்...
தொழிலாளி வர்க்கத்தின் கைவந்த கலை என்பது 
பாவம்... தேசத்தின் வரலாறு அறியாத 
இது போன்ற உத்திரவைப்போடும் 
அதிகாரிகளுக்கு... தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்...

Friday, 21 October 2016

போனஸ் பட்டுவாடா... 
bonus க்கான பட முடிவு

போனஸ் விரும்பாத... வேண்டாத... ஊழியர்கள் 
24/10/2016க்குள் சம்பந்தப்பட்ட சம்பளப்பட்டுவாடா கணக்கு அதிகாரியிடம் தங்களது விருப்பத்தை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என 
BSNL  நிர்வாகம் தனது  21/10/2016 கடிதத்தில் தெரிவித்துள்ளது.  
எனவே போனஸ் 24/10/2016க்குப்பின்தான் பட்டுவாடா 
ஆகுமெனத் தெரிகிறது. எப்படியும்  29/10/2016க்குள் பட்டுவாடா ஆகலாம்.

2014-15ம் ஆண்டிற்கான போனஸ் 07/10/2016 
அன்று  BSNL  நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. 
 கையடக்க  3000 போனஸ் 15 நாட்கள் ஆகியும்
கைக்கெட்டாதது வருத்தத்திற்கு உரியது.

Thursday, 20 October 2016

ஒப்பந்த ஊழியர் போனஸ் 

காரைக்குடி மாவட்டத்தில் காவல் பணி புரியும்
 ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூபாய்.3300/- 
போனசாகப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 
காவல் பணிக்கான  குத்தகையை  MALLI SECURITY SERVICES என்னும் நிறுவனம்  எடுத்துள்ளது. இதனைப்போலவே HOUSE KEEPING மற்றும் CABLE பணி செய்யும் தோழர்களுக்கும் உடனடியாகப் போனஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட குத்தகைக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மற்ற குத்தகைக்காரர்களும் உடனடியாக போனசை பட்டுவாடா செய்வார்கள் என்று நம்புகிறோம். 
தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தவிர்க்க இயலாதது.

Wednesday, 19 October 2016

போனஸ் பட்டுவாடாப் பணிகளை   இன்று 20/10/2016 ERPயில் முடிப்பதற்கு  சம்பளப்பட்டுவாடா  செய்யும்  கணக்கு அதிகாரிகள்  அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  நிதி ஒதுக்கீடு வந்தபின் போனஸ்  பட்டுவாடா செய்யப்படும். நிதி வந்து விட்டால் இந்த வாரமே  போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமுற்ற தோழர்களுக்கான போனஸ் இந்த மாத சம்பளப்பணியுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
================================================
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் 
இம்மாத சம்பளத்தை 25/10/2016க்குள் 
பட்டுவாடா செய்யக்கோரி நமது மத்திய சங்கம் 
நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
17/07/2016 அன்று நடந்த JAO இலாக்காத்தேர்வில் 
குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 
அதைக் கணக்கில் கொள்ளாமல் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. 
எனவே தேர்வு  முடிவுகளை மீண்டும் பரிசீலிக்குமாறு 
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
================================================
BTEU BSNL சங்கம் NFTE தலைமையிலான தேசிய தொழிலாளர் கூட்டமைப்பில் அணி  சேர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக BTEU BSNL சங்கம் FNTO சங்கத்துடன் அணி சேர்ந்திருந்தது.
================================================
இராஜஸ்தான்  மற்றும்  தெலுங்கானா  மாநிலங்களில்  
DELOITTE  குழு பரிந்துரையின்படி BUSINESS AREA வணிகப்பகுதிகள் அமுலாக்கத்தை மேற்கொள்ள CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.  தமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம்
 ஏப்ரல் 2017ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================================================
அரசு ஊழியர்கள் தங்களது விடுப்பை 300 நாட்களுக்கும் மேலாகவும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என பஞ்சாப் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் நமக்கொன்றும் பலனில்லை. 
மதிக்கப்படாத தீர்ப்புக்கள் நம் தேசத்தில் ஏராளம்... ஏராளம்...
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் 

நாடு முழுவதுமுள்ள 65000 செல் கோபுரங்களை 
தனியாகப்பிரித்து 20000 கோடி மதிப்பீட்டில்..
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் 
மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து 
27/10/2016
BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

BSNL  என்னும் பெரு நிறுவனத்தின் 
வளர்ச்சியைத் தடுக்க முயலும்...
தனி நிறுவன  துணை நிறுவன 
முயற்சியைத் தடுப்போம்...
ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே...

Tuesday, 18 October 2016

கவன ஈர்ப்பு  நாள் காட்சிகள் 

NFTE தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பாக அறைகூவல் விடப்பட்ட 
அக்டோபர் 18 கவன ஈர்ப்பு நாள் கூட்டம் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.லால் பகதூர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான், 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.தமிழ்மாறன், 
கிளைச்செயலர் தோழியர்.கார்த்திகா, 
NFTCL ஒருங்கிணைப்பாளர் தோழர்.முருகன்,
மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர் உரையாற்றினர். 
கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியதாஸ் 
நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
அதிகாரிகள் சங்கத்தேர்தல் 

BSNL நிறுவனத்தில் உள்ள 
அதிகாரிகள் சங்கங்களுக்கிடையேயான 
சங்க  அங்கீகாரத்தேர்தலில் 10 சங்கங்கள் 
இறுதியாக  கலந்து கொள்கின்றன. 

தேர்தல் நடைபெறும் நாள் : 07/12/2016

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 09/12/2016

மொத்த வாக்காளர்கள் : 43738

மொத்த வாக்குச்சாவடிகள் : 511

தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் : 28

வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 வரை 

Monday, 17 October 2016

கவன ஈர்ப்பு நாள் 

2015-16 போனஸ்... 3வது ஊதிய மாற்றம்.. தேக்கநிலை தீர்த்தல் ...
புதிய ஓய்வூதிய திட்டம்... CDA 55 ii (b)ஐ ரத்து செய்தல்.. 
4வது சனிக்கிழமை விடுமுறை... வணிகப்பகுதி மாற்றங்கள்...
மருத்துவத் திட்ட மேம்பாடு.. இலாக்காத்தேர்வுகளில் தளர்வு..
பதவி உயர்வு பாதகங்கள் களைவு... RM ஊழியர்களுக்கு பதவி உயர்வு   

என  பல காலமாக  BSNLலில் தீர்க்கப்படாத 
11 அம்சக்கோரிக்கைகளைத்  தீர்க்கக்கோரி 
தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பாக 
18/10/2016 
நாடு தழுவிய கவன ஈர்ப்பு நாள்

18/10/2016 - செவ்வாய் - மாலை - 05 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்  - காரைக்குடி 

தோழர்களே... வருக...
இரங்கல் இரண்டு 

16/10/2016 அன்று திருப்பத்தூர் 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.செல்லையா 
TTA  அவர்கள்
 உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

17/10/2016 அன்று பரமக்குடி
 தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.தனசேகரன் 
TM அவர்கள் 
உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

குடி... காரைக்குடியில்...
இரண்டு குடிகளைக் கெடுத்துள்ளது.
அடுத்தடுத்த மரணங்களின் சோகம் 
நம்  நெஞ்சைப்பிழிகிறது...
இது முற்றுப்பெற்ற பட்டியல் அல்ல...
பட்டாலும் தொடரும் படுகுழிப் பாரம்பரியம்...

Sunday, 16 October 2016

எளியவர்களின் எழுச்சி மிகு போராட்டம் 
சென்னையில் நடைபெற்ற NFTCL  தொடர் முழக்கப்போராட்டம் 

அக்டோபர் - 15
அன்புத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளில்.. 
வலியவர்கள் வாழும் சென்னை சேப்பாக்கத்தில்... 
எண்ணிக்கையில் அடங்கா எளியவர்கள்...
NFTCL என்னும் பதாகை ஏந்தி...
கடலூர்... காரைக்குடி... பாண்டிச்சேரி...திருச்சி...சென்னை 
என பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்து 
வங்கக் கடலோரம் வர்க்க உணர்வோடு சங்கமித்தனர்...

மாநிலத்தலைவர் தோழர்.மாலி தலைமையேற்றார்...
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் விளக்கவுரையாற்றினார்...
பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்...
மாநிலம் முழுவதுமிருந்து வந்த தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்...

ஒப்பந்த ஊழியர்கள்  தங்களின்  உரிமைகளை.. சலுகைகளை.. 
BSNL  நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றக்கோரி 
உணர்வோடு...  உரிமைக்குரல் எழுப்பினர்...

ஊடகங்கள் படையெடுத்து வந்தன...
ஒப்பந்த ஊழியர்களின் போராட்ட நிகழ்வை 
இடைவிடாமல்  படம் பிடித்துத் தந்தன...

அடையாள அட்டை... உரிய கூலி... உரிய நேரத்தில் கூலி...
வைப்பு நிதி.. மருத்துவ அட்டை.. போனஸ்... என 
எல்லாவற்றிலும் ஏமாற்றத்தையேக் கண்ட...
உழைத்து... உழைத்து... இளைத்துப்போன உள்ளங்களில் 
கோபம் வங்கக்கடலாய்ப் பொங்கியது...

அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் 
மாநிலந்தழுவிய வேலை நிறுத்தமே... 
அடுத்த கட்ட நடவடிக்கை என ஒன்றுபட்ட குரல் ஒலித்தது...

டிசம்பர் 11ல் காரைக்குடியில் நடக்கவுள்ள 
முதல் மாநில மாநாட்டிற்கு முன்...
உரிமைகளை அடைந்திட சூளுரைத்து 
எளியவர்களின் எழுச்சிமிகு போராட்டம் நிறைவுற்றது....

மாநிலம் முழுவதுமிருந்து வந்து  கலந்து கொண்ட தோழர்களுக்கும் 
காரைக்குடி... தேவகோட்டை... திருவாடானை...சிவகங்கை  என 
காரைக்குடி மாவட்டத்தின் சார்பாகக் கலந்து கொண்ட தோழர்களுக்கும் 
நமது வாழ்த்துக்களும்... நன்றிகளும்...

தோழமையுடன்...
சி.முருகன் 
NFTCL  - ஒருங்கிணைப்பாளர் 
காரைக்குடி.

Saturday, 15 October 2016

மாசில்லா...வீணை 
apj abdul kalam rare images க்கான பட முடிவு
அறிவு... அடக்கம்...அன்பு...அதுவே அப்துல் கலாம் 

மாசில் வீணையும் 
மாலை மதியமும் 
வீசு தென்றலும் 
வீங்கிளவேனிலும் 
மூசு வண்டறை...
பொய்கையும் போன்றதே... 
மாசிலா உன் நினைவுகளே...

அறிவுக்கண்ணை சரியாய்த் திறந்தால் 
பிறவிக்குருடனும் கண் பெறுவான்..
என்னும் 
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளுக்கு 
உயிர் தந்த அப்துல் கலாம் புகழ் பாடுவோம்..

அக்டோபர் - 15
அப்துல் கலாம் பிறந்த நாள் 

Friday, 14 October 2016

NFTCL  ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

NFTCL
தேசிய ஒப்பந்த ஊழியர் சம்மேளனம் 
சென்னை மற்றும் தமிழ்நாடு 

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி 
சென்னை சேப்பாக்கத்தில் 
தொடர் கோரிக்கை முழக்கம் 
15/10/2016 - சனிக்கிழமை - மதியம் 02.00 மணி 

சிறப்புரை 
தோழர்.C.K.மதிவாணன் 
பொதுச்செயலர் - NFTCL 

மறுக்கப்படும் உரிமைகள்  மலர்ந்திட...
அடைக்கப்படும் கதவுகள் திறந்திட...
வங்கக்கடலோரம் சங்கமிப்போம்...
கரம் உயர்த்தி வாரீர்... தோழர்களே...

செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகிறார்...
அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ?
ஒரு மருந்து இதற்கில்லையோ?
-மகாகவி பாரதி -
போனஸ்  பட்டுவாடா 

2014-15ம் ஆண்டிற்கான போனஸ் தொகையை  உடனடியாக பட்டுவாடா செய்யுமாறு மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் தனது  14/10/2016 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. 

இதனிடையே மனித வள இயக்குநர் 
போனஸ் தொகையை விட்டுக்கொடுக்குமாறு 
ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அவரது வேண்டுகோளை ஏற்று  
போனசை விட்டுக்கொடுக்க விரும்பும்   ஊழியர்கள் 
அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டு 
சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரியிடம் சேர்க்க வேண்டும். 

Thursday, 13 October 2016

NFTCL அமைப்பு விழா..
NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் சிறப்புரையாற்றுகிறார்...
தோழர்.குணசேகரன் EX.MLA  கெளரவிக்கப்படுகிறார்...
காரைக்குடியில்...
ஒப்பந்த ஊழியர்களுக்காக உண்மையில் பாடுபடும் 
தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
NFTCL  அமைப்பு விழா 07/10/2016 அன்று...
ஒருங்கிணைப்பாளர்  தோழர்.முருகன் தலைமையில் 
உணர்வோடும்... உத்வேகத்தோடும் நடைபெற்றது.

மதுரை மாவட்டப் பொறுப்புச்செயலர் தோழர்.இராஜேந்திரன் 
முன்னாள் மாநிலப்பொருளர் தோழர்.அசோக்ராஜன் 
NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.குணசேகரன் 
ஆகிய தோழர்கள் ஒப்பந்த ஊழியர்களின் நிலை பற்றி... 
நாம் பயணிக்க வேண்டிய தூரம் பற்றி உரையாற்றினர்.

அக்டோபர் -15 சென்னையில் நடைபெறவுள்ள தர்ணாவில் 
தோழர்கள் திரளாகக் கலந்து கொள்வது எனவும்...
மாவட்டத்தில் தேங்கியுள்ள பிரச்சினைகளின் தீர்விற்காக 
அக்டோபர் மூன்றாம் வாரம் போராட்டம் நடத்துவது எனவும்...
NFTCL  மாநில மாநாட்டை 11/12/2016 அன்று 
காரைக்குடியில் நடத்துவது எனவும் முடிவானது.
திரளாகக் கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

NFTCL
மாநில மாநாட்டு வரவேற்புக்குழு 

வரவேற்புக்குழுத்தலைவர் 
தோழர்.குணசேகரன் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
மாவட்டச்செயலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 

வரவேற்புக்குழு செயலர் 
தோழர்.முருகன் 
NFTCL  ஒருங்கிணைப்பாளர் 

வரவேற்புக்குழு பொருளர் 
தோழர்.மாரிமுத்து 
ஒப்பந்த ஊழியர் - காரைக்குடி.

பத்தாண்டு காலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு விட்ட 
ஒப்பந்த ஊழியர்களின்  இழந்த  உரிமைகளை  மீட்போம்...
பொலிவிழந்த   அவர் தம்  வாழ்வை மீட்போம்...
தோழர்களே... அணி திரள்வீ ர்...