Wednesday, 7 June 2017

மரந்தான்… மறந்தான்
ஜூன் 5 அன்று காரைக்குடி GM அலுவலகத்தில் மரம் நடும் காட்சி...
உலகச்சுற்றுச்சூழல் தினம்  
ஆண்டு தோறும் ஜூன்  5
அன்று கொண்டாடப்படுகிறது….

05/06/2017 அன்று 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
துணைப்பொதுமேலாளர் திரு.குமார் அவர்களின்
முனைப்பால் மரக்கன்றுகள் நடப்பட்டன…
நமது வாழ்த்துக்கள்….
 ------------------------------------------------------------------------------
வைரம் பாய்ந்த மரங்களைப் பற்றி
கவிஞர் வைரமுத்துவின்
சில வைர வரிகளைப் படிப்போம்…

மரந்தான்மரந்தான்
எல்லாம் மரந்தான்…
மறந்தான்மறந்தான்
மனிதன் அதை மறந்தான்…

மரம்
சிருஷ்டியில் ஒரு சித்திரம்..
பூமியின் ஆச்ரியக்குறி
நினைக்க நினைக்க...
நெஞ்சு ஊறும் அனுபவம்...

விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்...
சிரிப்பை ஊற்றி வைத்த இலைகள்..
உயிர் ஒழுகும் மலர்கள்..
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் நமக்கு…

மனிதன் தோன்றும் முன்
மரம் தோன்றிற்று..
மரம் நமக்கு அண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்கள்..

மனித ஆயுள்..
குமிழிக்குள் கட்டிய கூடாரம்..
மரம் அப்படியாவளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது அதுவேதான்...

மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால் முற்றுப்புள்ளி
மரம்...
இருக்கும் வரை பூப்பூக்கும்..
இறக்கும் வரை காய் காய்க்கும்..
வெட்டி நட்டால் கிளை மரமாகுமே..
வெட்டி நட்டால் கரம் உடம்பாகுமா...

மரத்தை அறுத்தால் 
ஆண்டு வளையம் வயது சொல்லும்..
மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைத்தான் உறுப்பு சொல்லும்..

மரத்திற்கும் வழுக்கை விழும்..
மறுபடி முளைக்கும்..
நமக்கோ… 
உயிர் பிரிந்தாலும்... மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றே ன்றறிக...

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய்ச்
சலவை செய்வது?...

மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கே போய்…
மனுச் செய்வது?...

மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்
ஏதப்பா ஏரியும் கண்மாயும்..

பறவைக்கும் விலங்குக்கும்
மரம் தரும் உத்தரவாதம்
மனிதர் நாம் தருவோமா?

ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகிப்பது
மரங்களின் மீது தான்...

மனிதனின் முதல் நண்பன் மரம்
மரத்தின் முதல் எதிரி மனிதன்..
--------------------------------------------------------------------------------
மரத்தின் அருமை…
மரமண்டைகளுக்குப் புரியுமா?
மரங்களை நடுவோம்
மரங்களை நாடுவோம்… 

No comments:

Post a Comment