Monday, 29 June 2020


BSNL என்னும் சுரண்டல் மையம்...

BSNL நிறுவனத்தில் தற்போது எல்லாப் பணிகளுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அனைத்துப் பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் BSNL நிறுவனமே
 தனியாருக்குப் போய்விட்ட உணர்வுதான் நமக்கு எழுகின்றது. 

இதன் ஒரு பகுதியாக நமது வாடிக்கையாளர் சேவைமையங்களை  தனியாருக்கு விடுவதற்கானப் பணிகள் மார்ச் மாதம் துவங்கப்பட்டன. ஒரு சில இடங்களில் பிப்ரவரி மாதமே வாடிக்கையாளர் சேவை மையங்கள்  தற்காலிகமாக தனியாருக்கு  விடப்பட்டன. 

 தமிழகத்தில் 179 வாடிக்கையாளர் சேவை மையங்கள்  தனியாருக்கு விடுவதற்காக மாவட்ட நிர்வாகங்களால் பரிந்துரை செய்யப்பட்டன. முதல் நிலை CSC - 3, இரண்டாம் நிலை CSC - 26 மற்றும்  மூன்றாம் நிலை CSC - 150 என தனியாருக்கு கொடுப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டன. தற்போது முதற்கட்டமாக ஏறத்தாழ 60 சேவைமையங்கள் 01/07/2020 முதல் தனியார் வசம் செல்கின்றன.  காரைக்குடி மாவட்டத்தில் 
5 சேவைமையங்களும், மதுரை மாவட்டத்தில் 13 சேவைமையங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. 

தற்போது பல இடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் வாடிக்கையாளர் 
சேவை மையங்களில்  பணிசெய்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்சக்கூலியாக A பிரிவு நகரில் ரூ.629ம்,  B பிரிவு நகரில் ரூ.525ம், C பிரிவு நகரில் ரூ.420ம் ஒப்பந்தக் குத்தகை மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய  OUTSOURCING குத்தகைக்காரர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களிடம் அடிமாட்டு அளவில் கூலியை நிர்ணயிக்கின்றனர். உதாரணமாக காரைக்குடி திருப்பத்தூர் பகுதியில் உள்ள CSCயில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மாதம் 26நாட்கள் பணிசெய்தால் ரூ.10,920/= குறைந்தபட்சக்கூலியாக கொடுக்க வேண்டும். இதுபோக EPF மற்றும் ESI வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய OUTSOURCING குத்தகைக்காரர்  மாதம் ரூ.5000/=மட்டுமே கூலியாக கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இந்தக்கூலி கட்டுபடியாகாது என்று சொன்ன காரணத்தால் அங்கு பலவருடங்களாகப் பணிபுரிந்த திருமதி. லதா என்ற ஒப்பந்த ஊழியர் வேலையை விட்டு நீக்கப்பட்டார். புதியதாக 5000 ரூபாய் சம்பளத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணை பணியில் அமர்த்தியுள்ளார். இதுபற்றி தங்களுக்கு எதுவுமே சம்பந்தம் இல்லை என்று  நமது மனிதாபிமான  நிர்வாகங்கள் கைவிரிக்கின்றன. இவ்வாறாக BSNL சுரண்டலின் மையமாக தற்போது உருவெடுத்து வருகின்றது. 

அனைத்து OUTSOURCING  குத்தகையிலும் இதே நிலைதான். காரைக்குடி தொலைபேசி நிலையத்தில் பழுதுநீக்கும் பணிகளுக்கான OUTSOURCINGல் குத்தகைக்காரருக்கு மாதம் ரூ.1,46,000/= வழங்கப்படுகின்றது. ஆனால் அங்கே 3 ஒப்பந்த ஊழியர்களுக்குத் தலா ரூ.8000/=மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. 
ஏறத்தாழ 1,20,000/= ரூபாய் மாதம்தோறும் குத்தகைக்காரனால் கொள்ளையடிக்கப்படுகின்றது.  இந்தப்பிரச்சினையில் 
நமது அதிகாரிகளின் மவுனம் அவர்களது நேர்மையைப்  பற்றிய கேள்வியை வலுவாக எழுப்புகின்றது. 

ஒரு காலத்தில் சமவேலைக்கு சம ஊதியம் என்று கூலியில் நீதியை நிலைநாட்டி மனித வளத்தின் அடையாளமாக இருந்த நமது நிறுவனம் தற்போது சுரண்டலின் மொத்த அடையாளமாக மாறிப்போனது கொடுமையிலும் கொடுமை. இந்தக்கொடுமைகளை 
எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கைகள் இல்லாமல் 
முடங்கிப்போனது உச்சக்கட்ட கொடுமை. 

BSNLலில் பணிசெய்கின்றோம்... 
அங்கு தொழிற்சங்கமும் நடத்துகிறோம் 
என்று சொல்வதற்கே தற்போது கூச்சமாக உள்ளது.
 ஆனாலும் காலம்  இப்படியே செல்லாது...
மீண்டும் மாறும்... அந்த மாற்றத்தை நோக்கி
நாம் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

No comments:

Post a Comment