Thursday 4 June 2020


தடுப்புச்சம்பளமான விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற அனைத்து தோழர்களும் விடுப்புச்சம்பளம், வைப்புநிதி, ஆயுள்காப்பீட்டுத்தொகை, அருட்கொடை, மாதாமாதம் தாமதமில்லா ஓய்வூதியம்  என்று அடுத்தடுத்து பணப்பலன்களைப் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். அடுத்த அருட்கொடை பட்டுவாடா எப்போது? என்பதே அவர்களின் இப்போதைய ஒற்றைக்கேள்வி. 

ஆனால் அவர்களோடு சேர்ந்து விருப்ப ஓய்வில் சென்ற சில தோழர்கள் வெளிவட்டார வழக்குகள் மற்றும் இலாக்கா வழக்குகளில் சிக்கியதால் எந்தப் பணப்பலனையும் பெறாமல் வெறுங்கையுடனும், வெறுத்த மனதுடனும் வெந்து நொந்து உள்ளனர். அவர்களுடைய பிரச்சினையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்துடன் பேசியதன் விளைவாக 13/05/2020 அன்று BSNL CORPORATE அலுவலகம் உத்திரவிட்டது. 

அந்த உத்திரவின்படி...
மாவட்ட மட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட CCA அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய வைப்புநிதி, அருட்கொடை மற்றும் 
விடுப்புச்சம்பளம் ஆகியவை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு பட்டுவாடா செய்யப்பட வேண்டும். 

ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால்...
சம்பந்தப்பட்ட மாநில தலைமை கணக்கு அதிகாரி மூலமாக டெல்லி தலைமை அலுவலகத்திற்கு சந்தேகங்கள் அனுப்பப்பட வேண்டும்.

மேற்கண்ட உத்திரவு வெளியாகி ஏறத்தாழ ஒரு மாதம் முடிவுறவுள்ள நிலையில் இன்றுவரை அவர்களது விடுப்புச்சம்பளம் மற்றும் அருட்கொடை ஆகிய பணப்பலன்களைப் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் இன்னும் எங்கும் துவங்கப்படவில்லை. பல உத்திரவுகள் காலையில் டெல்லியில் போடப்பட்டால் மாலையில் மாநிலங்களில் அமுல்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பலருக்கு பலன் தரும் மேற்கண்ட உத்திரவு இன்னும் 
மாநில நிர்வாகத்தால் வழிமொழியப்படவில்லை. 
மாவட்டங்களுக்கு உரிய வழிகாட்டுதல் செய்யப்படவில்லை.

பல்வேறு தேவைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் பாதிக்கப்பட்ட தோழர்கள் பசியுடன் வெறும் இலை முன்னே காத்திருக்கின்றனர். மாநில நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம்.

1 comment:

  1. II instalment of Ex-gratia to BSNLVRS 2019 Retirees so far not received 30-06-2020 pl explain.

    ReplyDelete