Thursday 18 March 2021

 கற்போம்... நிற்போம்... 

BSNL ஊழியர்களுக்கான இலாக்காத் தேர்வுகளை ONLINE என்னும் கணிணி வழியில் நடத்திட நிர்வாகம் உத்தேசித்துள்ளதாகவும், அது சம்பந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறும் அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம் நிர்வாகம் 16/03/2021 அன்று கருத்து கேட்டிருந்தது.

ONLINE தேர்வு ஏற்புடையதல்ல என்று நமது NFTE சங்கமும் BSNLEU சங்கமும் நிர்வாகத்திற்கு பதில் அளித்துள்ளன. இப்போதெல்லாம் நிர்வாகம் சங்கங்களின் கருத்தைக் கேட்பதோடு சரி. அதனை அமுல்படுத்துவதில்லை. எனவே இலாக்காத் தேர்வு விவகாரத்தில் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதனைப்  பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது விருப்ப ஓய்விற்குப் பின் அதிகமாக தங்கிப்போன... தேங்கிப்போன கேடர் ATT கேடராகும். பெரும்பான்மையான தோழர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள். 50 வயதிற்கு உட்பட்டவர்களும், 50ஐத் தொட்டவர்களுமாக இருந்ததினாலும், அதிக சேவைக்காலம் இல்லாத காரணத்தினாலும் பல தோழர்கள் விருப்ப ஓய்வில் செல்ல இயலவில்லை. 

இதில் அதிகமான தோழர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்கள். SSLC என்னும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ATT தோழர்கள் TT கேடருக்கு தேர்வு எழுத முடியும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே TT தோழர்கள் JE கேடருக்குத் தேர்வு எழுத முடியும். ஆனால் தற்போது பணியில் உள்ள பல தோழர்கள் குறிப்பிட்ட கல்வித்தகுதி இல்லாதவர்கள். 

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ATT ஊழியர்களில் 2 பேர் மட்டுமே SSLC தகுதி உள்ளவர்கள். நாளை தேர்வு நடைபெற்றால் இரண்டே இரண்டு பேர் மட்டுமே காரைக்குடியில் விண்ணப்பிக்க முடியும். மதுரை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ATT தோழர்கள். ஐந்து பேர் கூட SSLC தகுதி உள்ளவர்களா? என்பது சந்தேகமே. எனவே தற்போது பணியில் உள்ள தோழர்கள் கட்டாயம் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும். பல ஆயிரம் செலவழித்து ANDROID போனை உபயோகிக்கும் நமது தோழர்கள் சில நூறு செலவு செய்து சிரமம் பார்க்காமல் படித்து தங்களது கல்வித்தகுதியை உயர்த்த வேண்டும் என்ற சிந்தனை நமது தோழர்களுக்கு அறவே இல்லாதது வருத்தமானது. 

குறிப்பாக ATT தோழர்கள் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டு அடுத்த கட்ட கேடரான TT கேடருக்குத் தங்களை உயர்நிலைப் படுத்தவில்லை என்றால் அவர்களது வருங்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். காரணம் E-OFFICE என்னும் மின்னணு அலுவலக நடைமுறையை ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நமது CMD அறிவுறுத்தியுள்ளார். கோப்புகளே இல்லாத அலுவலகம் என்பதுதான் நிர்வாகத்தின் இலக்காக உள்ளது. கோப்புகளே இல்லாவிட்டால் GROUP D கேடருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுகிறது. தற்போது சிலர் காவல் பணி செய்து வருகின்றனர். 

எனவே ATT கேடரில் உள்ள ஊழியர்களை உடனடியாக உயர்நிலைப்படுத்த வேண்டியது சங்கங்களின் கடமையாகும். மத்திய அரசில் MTS எனப்படும் பல்திறமை கேடர்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. நாம் GROUP Dக்களை ATT என்று பெயர் மாற்றம் செய்திருக்கின்றோம். ஆனால் அவர்களது சம்பளம் மற்றும் பதவி உயர்வு, தேக்கநிலை என எந்தப்பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

உடனடியாக ATT தோழர்கள் தங்களது கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

கல்வி கரையில... கற்பவர் நாள் சில என்பது பழமொழி. கற்பதற்கு வயது காலம் நேரம் பொருட்டல்ல.

கற்போம்... நிற்போம்...

அண்ணல் அம்பேத்கார் இதைத்தான் நமக்கு அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment