Saturday, 13 April 2019


அன்று சிந்திய ரத்தம்… 

இந்திய விடுதலை…
கண்ணீரால் பிறந்ததில்லை…
செந்நீரால் விளைந்தது…

1919 ஏப்ரல்13…
ஜாலியன் வாலாபாக்கில்…
வாய்ப்பூட்டு சட்டமாம்…
ரெளலட் சட்டத்தை எதிர்த்து…
இந்துக்கள்… சீக்கியர்கள்…
முஸ்லிம்கள்… கிறிஸ்துவர்கள்…
ஒன்று சேர்ந்து சிந்திய இரத்தத்தில்…
தோய்த்துச் சிவந்தது… பொற்கோவில் நகரம்…
துயரத்தில் சினந்தது இந்திய தேசம்…

நாமார்க்கும் குடியல்லோம்…
நாம் இந்தியாவிற்கு மட்டுமே குடியாவோம் என
கொதித்து எழுந்தனர் இந்திய மக்கள்…
வீணர்கள் தந்த விருதுகளை வீசி எறிந்தனர்…
கவிஞர் தாகூரும்… அண்ணல் காந்தியும்…

100 ஆண்டுகள் ஓடிவிட்டன…
நம்மைக் கொன்று குவித்த டயர்களும்…
நம் குரல்வளை நெறித்த ரெளலட்களும்…
இன்று செங்கோட்டை சிம்மாசனத்தில்…
காட்டிக்கொடுத்தவர்கள் கையிலே அசோகசக்கரம்…
காந்தியைக்கொன்றவர்கள் கையிலே செங்கோல்…

அன்று ஒன்று சேர்ந்து ரத்தம் சிந்தினோம்…
தாய் நாட்டுக்காக… தேச விடுதலைக்காக…
இன்று ஒருவருக்கு ஒருவர் ரத்தம் சிந்துகிறோம்
பாழும் மதத்திற்காக… பாவிகளின் லாபத்திற்காக….

அன்று சிந்திய ரத்தம் போதாதா?
இன்னும் நாம் சிந்த வேண்டுமா?
நமக்கு சிந்தனை வேண்டாமா?

ஏப்ரல் 13 நினைவு கொள்வோம்….
ஏப்ரல் 18ஐ நினைவு கொள்வோம்…
ஏற்றமிகு மாற்றம் பிறக்க…
ஏப்ரல் 18ல் உறுதி கொள்வோம்…

No comments:

Post a Comment