Sunday, 8 September 2019

தேர்தலும்... தேறுதலும்...

8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கு 
இன்னும் 6 நாட்களே உள்ளன. 
தொழிற்சங்க சரிபார்ப்புத் தேர்தல் என்பது 
கடலில் மீன் பிடிப்பதல்ல.  குட்டையில் மீன் பிடிப்பது. 
பிடித்த மீன்களையை திருப்பி திருப்பி பிடிக்க வேண்டும். 
கூடவே தவளைகளையும் பிடிக்க வேண்டும். 
சாதனைகள்... வாக்குறுதிகள்... தேர்தல் அறிக்கைகள்...
குற்றச்சாட்டுக்கள்... கோபதாபங்கள்... 
என இந்திய நாட்டுத் தேர்தலுக்கான அனைத்து சாயல்களும் 
நமது தேர்தலிலும் எதிரொலிக்கின்றன. 

மற்ற தேர்தல்களை விட 
இந்த தேர்தல் வேதனை தரும் தேர்தலாக உள்ளது.
நிரந்தர ஊழியர்கள்  மீது  விருப்ப ஓய்வு.. கட்டாய ஓய்வு... 
ஓய்வு பெறும் வயதைக் குறைத்தல்... 
ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்காமை... 
என்று பல்வேறு தாக்குதல்கள்...

ஒப்பந்த ஊழியர்கள் மீது 
ஆறேழு மாதங்களாக சம்பளம் வழங்காமை... 
30 சத ஆட்குறைப்பு... 
வேலை நேரக்குறைப்பு என்று தாக்குதல்கள்..

ஊழியர் முகங்களில் 
வேதனையும் துயரமும் ததும்பி  நிற்கின்றது.
இத்தகைய சூழலில்... 
சம்பளமே இல்லாத நிலையில்.. 
ஊழியர்களிடம் வாக்கு கேட்கவும்... 
தேர்தல் திருவிழாக்களை நடத்தவும்... 
மனம் கூசுகிறது.  கூனிக்குறுகுகிறது...

எனவேதான் காரைக்குடி மாவட்டத்தின் நான்கு பகுதிகளில் 
பிரச்சாரம் என்று செய்வதை விட பிரச்சினைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தோம். 

சிவகங்கையில் உணர்வோடு 
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  
ஆனால் சிவகங்கை... இராமநாதபுரம் மாவட்டங்களில் 
செப்டம்பர்... அக்டோபர் மாதங்கள் பதட்டம் நிறைந்த மாதங்களாகும். 
செப்டம்பர் மாதம் பரமக்குடியில் 
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமும்... 
அக்டோபர் மாதம் கமுதியில்  
பசும்பொன் தேவர் குருபூஜையும் நடைபெறுவதால் 
மாவட்டம் முழுமையும் 144 தடையுத்திரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே போராடுவதற்கு கூட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

தோழர்களே...
தந்திரம் நிறைந்த நிர்வாகமும்... அரசும்..
மிக மோசமான தாக்குதல்களை ஊழியர்கள் மீது நடத்தி வருகிறது..
ஒன்றுபட்டிருந்த சங்கங்களை 
தேர்தல் மூலம் பிளவுபடுத்தி மோதவிட்டுள்ளது. 
தேர்தல் களத்தில் தற்போது மோதிக்கொண்டிருக்கும் நாம் 
தேர்தலுக்குப் பின் 
ஊழியர்களுக்காக... BSNL நிறுவனத்திற்காக... 
ஊழியர்களது  வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக... 
மீண்டும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே தேர்தல் காலத்தில்... களத்தில்... 
வசவுகளைத் தவிர்ப்போம்...
கசப்புகளைக்  குறைப்போம்... 
தேர்தல் BSNL  ஊழியர்களுக்கு... 
தேறுதல் தரும் நிகழ்வாக அமைய வேண்டும்...

தேர்தலுக்குப் பின் ஊழியர்கள்
தொழிற்சங்கங்களிடம் எதிர்பார்ப்பது
அவர்களது தேறுதலைத்தான்...  

No comments:

Post a Comment