ஒழிக்கப்படும்... ஒப்பந்த ஊழியர்கள்
சுரண்டலுக்கு எதிராக...
200 ஆண்டுகளுக்கு முன்பே உரிமைக்குரல் எழுந்தாலும்
இன்றும் தொடர்ந்து சுரண்டலுக்கு ஆளாகும்
இனம் ஒப்பந்த ஊழியர்கள்.
அரசால் சுரண்டப்பட்டு
நிர்வாகத்தால் சுரண்டப்பட்டு
ஒப்பந்தக்காரர்களால் சுரண்டப்பட்டு
இறுதியாக சில தொழிற்சங்கங்களாலும்
தொடர்ந்து சுரண்டப்படுபவர்கள் ஒப்பந்த ஊழியர்கள்.
ஆறேழு மாதங்களாக ஊதியம் இல்லை.
நிர்வாகம் மனித நேயத்தோடு அவர்களுக்கு உதவுவதை விடுத்து
நாள்தோறும் மோசமான உத்திரவுகளை வெளியிட்டு
அவர்கள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடுகிறது.
அதன் உச்சக்கட்டம்தான் 30/08/2019 அன்று
CORPORATE அலுவலகம் வெளியிட்டுள்ள உத்திரவு.
அந்த உத்திரவின்படி...
30 சத ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக குறைக்க வேண்டும்...
ஒப்பந்த ஊழியர்களை 3 நாட்கள் மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்..
BSNL நிரந்தர ஊழியர்களால் செய்ய இயலாத வேலைகளில் மட்டுமே
ஒப்பந்த ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்...
தணிக்கை குழு ஒன்று அளித்த அறிக்கையின்படி
மேற்கண்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட உத்திரவைப் படிக்கும்போது...
கோபம் கொந்தளிக்கிறது...
கூடவே குழப்பங்களும் கொப்பளிக்கின்றன...
3 நாட்கள் மட்டுமே ஒப்பந்த ஊழியர்கள்
பணியில் அமர்த்தப்பட்ட வேண்டுமெனில்...
வாரத்தில் 3 நாட்களா?
மாதத்தில் 3 நாட்களா ?
வருடத்தில் 3 நாட்களா என்பது புரியவில்லை.
நிரந்தர ஊழியர்களால் செய்ய முடியாத வேலை...
என்று ஒன்று உள்ளதா என்பதும் தெரியவில்லை...
பெரும்பகுதி ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லாத இடங்களில்தான் பணி புரிகின்றார்கள் என்பது நிர்வாகத்திற்கு தெரியாதா?
30 சதம் ஊழியர்கள் குறைக்கப்பட வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.
BSNLஐ மூடி விட்டு 100 சதம் கூட குறைக்கலாம்.
அதற்கு முன்னால் அவர்கள் உழைத்த காலத்திற்கான கூலியை
நமது நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும்.
அதற்கு வக்கற்றுப் போன நிர்வாகம்
ஆட்குறைப்பு என்று ஓலமிடுவது எந்த விதத்திலும் நியாயமல்ல...
ஒரு CMD... CGM.. சம்பளத்தில்...
குறைந்தது 30 ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.
நிர்வாகம் செலவைக் குறைக்க விரும்பினால்
பல உயர்மட்ட அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பினாலே போதும்.
செய்திப்பத்திரிக்கைகளை கூட
நிறுவனத்தின் செலவில் வாங்கிப் படிக்கும் அதிகாரிகளும்...
தங்களது எந்த செலவையும் சலுகைகளையும் குறைத்துக்கொள்ள விரும்பாத அதிகாரிகளும்.. ஆடிட்களும்
அடிமட்ட தொழிலாளியின் வயிற்றில்
அடிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்...
தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்கள் தொடந்து துன்புறுத்தப்படுவதை
தொழிற்சங்கம் என்ற முறையில் நாம் அனுமதிக்க முடியாது...
மத்திய சங்கமும்... மாநிலச் சங்கமும் உடனடியாக
உச்சக்கட்டப் போராட்டங்களை அறிவிக்க வேண்டும்...
அந்த வகை போராட்டம்
அரித்தால் சொறிந்து கொள்ளும்...
ஆர்ப்பாட்டங்களாக இருக்க கூடாது...
சொகுசு தட்டிப்போன நமது தொழிற்சங்க அரங்கில்...
ஆர்ப்பாட்டங்களே இன்று அதிகபட்ச போராட்டமாக போய் விட்டது.
ஊழியர்களும் ஏதோ பஜனைக்கு வந்து செல்லும் பக்தர்கள் போல
ஆர்ப்பாட்டங்களுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.
எனவே உடனடி உச்சக்கட்டப்போராட்டம்
ஒன்றே ஒப்பந்த ஊழியர் துயரோட்டும்..
மத்திய மாநில சங்கங்கள்
உடனடியாக தலையிட வேண்டும்...
தாமதங்கள் தொடர்ந்தால்
தலமட்டங்களில் அவரவர் வேகத்திற்கும்...
விருப்பத்திற்கும் ஏற்றாற்போல்
போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்து விடும்...
No comments:
Post a Comment