வரி முக்கியமா? வலி முக்கியமா?
ஓராண்டு காலமாக பட்டினி போடப்பட்டுள்ள
ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில்
நமது சங்கம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 30 சத சம்பளத்தை
உடனடியாக
வழங்க வேண்டும் என நிர்வாகத்திற்கு
சென்னை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
தமிழ்மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கான
ஒருமாத சம்பளம் ஏறத்தாழ 8 கோடி ரூபாய் ஆகும். எனவே மூன்று மாதங்களுக்கு
ரூ.25 கோடி
நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தகாரர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சாமி வரம் கொடுத்தாலும்
பூசாரி வரம் கொடுக்கமாட்டான் என்ற பழமொழிக்கேற்ப BSNL நிர்வாகம் மூன்று மாதங்களுக்கான
நிதி ஒதுக்கினாலும்... குத்தகைப் பூசாரிகள் மூன்று மாத பில்களை பட்டுவாடா செய்ய மறுக்கின்றார்கள்.
கடலூர், பாண்டிச்சேரி,கும்பகோணம்,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இரண்டு மாத சம்பளமும்,
மதுரை போன்ற பகுதிகளில் ஒருமாத சம்பளமும் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி
பகுதியில் இன்னும் பட்டுவாடா நடைபெறவில்லை.
மூன்று மாத சம்பளத்தைப் பட்டுவாடா
செய்யக்கோரி ஒப்பந்தகாரர்களிடம் நாம் பேசினால் பல்வேறு கதைகளை அவர்கள் நம்மிடம் கதைக்கின்றார்கள்.
GST கட்ட வேண்டும். EPF, ESI கட்ட வேண்டும். எனவே மிச்சமுள்ள பணத்தில்தான் சம்பளம்
போட வேண்டும் என கதையளக்கின்றார்கள். எத்தனையோ ஆண்டுகளாக தொழிலாளரை ஏமாற்றி... தொழிலாளர்
நலச்சட்டங்களை காலில் மிதித்து.... அரசை ஏமாற்றி வந்த படுபாதக குத்தகைக்காரர்கள் தற்போது
அரசு நடைமுறைகளைத் தாங்கள் சரியாக... முறையாகப் பின்பற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர்
விடுவது
வேடிக்கையானது.... கண்டனத்துக்குரியது.
எனவே நமது மாநிலச்சங்கங்கள் மாநில
மட்டத்தில்
உடனடியாகப் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
உரிய தீர்வு கிட்டாத
நிலையில் மாநிலம் தழுவிய
போராட்ட அறைகூவலை விடுக்க வேண்டும்.
அரசுக்கான வரி முக்கியமா?
பற்றியெரியும் அடிவயிற்றின் வலி
முக்கியமா?
என்பதை முடிவு செய்தாக வேண்டும்.
No comments:
Post a Comment