துக்கமல்ல... வெட்கம்...
மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில்
BSNL தொலைபேசி நிலையத்தில் ATT ஆகப்பணிபுரிந்த
தோழர். இராமேஷ்வர் குமார் சோந்தியா 13/02/2020 அன்று அகால மரணமடைந்தார்.
காரணம் பன்றிக்காய்ச்சலோ....
பறவைக்காய்ச்சலோ அல்ல... கரோனா வைரசை விடக் கொடிய தாக்குதலால் அவர் மரணமடைந்துள்ளார்.
உழைப்பவனின் வியர்வை காயுமுன்னே
அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி பேசப்படும் இவ்வுலகில்
உழைத்த காசு இரண்டு மாதங்களாக வராத மனஉளைச்சலில் தோழர். இராமேஷ்வர் குமார் தூக்கிட்டுத்
தற்கொலை செய்து கொண்டார். 37 வயதான இளம் தோழர் அவர்.
ஒரு வருட காலமாக சம்பளம் வராத
காரணத்தால் நாடு முழுவதும் பல ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமீபத்தில்
திண்டுக்கல்லில் சைமன் என்ற
ஒப்பந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
08/02/2020 அன்று
கோவை நகருக்கு சுற்றுப்பயணம் வந்த BSNL CMDயிடம் சம்பளம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது
தன்னிடம் நோட்டு அடிக்கும் இயந்திரம் இல்லை என்று எகத்தாளமாக பதில் சொல்லி இருக்கின்றார்.
ஆனால் CMDயிடம் நோட்டு அடிக்கும் இயந்திரத்திற்குப் பதிலாக மனிதன் உயிரைப் பறிக்கும்
இயந்திரம் இருப்பதாக நமக்குத் தெரிய வருகின்றது. பல ஒப்பந்த ஊழியர்களின் உயிரைப் பறித்து
இப்போது நிரந்தர ஊழியர்களின்
உயிரையும் நிர்வாகம் பறிக்க ஆரம்பித்துள்ளது.
உலகின் ஆன்மா என்று சொல்லப்படும்
இந்திய தேசத்தில் அதன் ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வறுமையில் தள்ளப்பட்டு மரணத்தைத்
தழுவுவது மாபெரும் அவமானமாகும்.
வறுமை என்னும் அவமானத்தை மறைக்க
வக்கில்லாத தன்மானமற்ற அரசு சுவர்களை எழுப்பி தன் மானத்தைக் காப்பாற்ற நினைக்கும்
இந்த
தேசத்தில் மரணங்கள் தொடரவே செய்யும்.
இங்கே...
பேய்கள் ஆள்கின்றன...
பிணங்கள் குவிகின்றன....
இது துக்கமல்ல... தேசிய வெட்கம்...
Super
ReplyDelete