Tuesday, 1 November 2016

திறனற்றவர்களா?  நாங்கள்?

அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே..
பெரும்புகழ் உமக்கே இசைக்கின்றேன்...
பிரம்ம தேவன் கலையிங்கு நீரே...
விழி எதிர் காணும் தெய்வமாக விளங்குவீர் நீரே...

பாடுபட்டு உழைக்கும் பாட்டாளியை 
தெய்வமென வணங்கினான் மகாகவி பாரதி...

ஆனால் பாரதி வாழ்ந்த இந்த பாரத தேசமோ..
தொழிலாளியை மனிதனாகக் கூட மதிப்பதில்லை...

அன்று எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றான் பாரதி..
இன்று எல்லோரும் இந்நாட்டு குத்தகைக் கூலிகள்...

இந்திய தேசத்தில்... எல்லோருமே திறனற்றவர்கள்...
எல்லோரும் இந்நாட்டு UNSKILLED மனிதர்கள்...

நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது..
இந்தியத் தொழிலாளி வர்க்கம்... 
இன்னும் அடிமைப்பட்டு கிடக்கிறது...

சம வேலைக்கு சம ஊதியம் என்று 
இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது...

ஆனாலும் தொழிலாளிகள் 70 ஆண்டுகளாக 
குறைந்தபட்சக்கூலிக்காகவே போராடி வருகிறார்கள்...

இந்தியத் தொழிலாளிகளில் 97 சதம் குத்தகைக் கூலிகள்...
குத்தகைக்கூலிகளின் சம்பளம் ஆண்டிற்கு 
ஒரு சதம் கூட உயர்வதில்லை என்கிறது புள்ளி விவரம்...
நிரந்தரத் தொழிலாளிகளுக்கு இணையாக உழைத்தாலும்..
அடிமட்டத் தொழிலாளிக்கான சம்பளமே வழங்கப்படுகிறது...

இந்தக்கொடுமையை எதிர்த்து 
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில 
தற்காலிகத் தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் 
சம வேலைக்கு சம சம்பளம் வேண்டுமென வழக்குத் தொடுத்தனர்...

ம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது...
அடிமைத் தனமாகக் கருதப்படும்.... 
அடக்கு முறை...அடக்கி ஆளுதல்...சிறுமைப் படுத்தல்
ஆகியவை போலத்தான் கருதப்படும்... 
என்பது உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பாகும்...

உழைப்பவரின் நிலை கண்ட...
உச்ச நீதிமன்றம் ஆள்வோரின் கன்னத்தில்.. 
ஆவேசமாக ஓங்கி அறைந்துள்ளது...
 
நமது துறையிலும்...
திறமையுள்ள எண்ணற்ற  ஒப்பந்த ஊழியர்கள் 
திறனுள்ள  பணிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள்...
ஆனாலும் UNSKILLED என்ற நாமத்தைச் சூட்டி 
அவர்களுக்கு நாமத்தைப் போடுகிறது நமது நிர்வாகம்...

சம வேலைக்கு சம ஊதியம் என்ற 
அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும்...
அநியாயத்தை எதிர்த்து தொழிலாளிகள் 
ஆவேசம் கொள்ள வேண்டும்... 
அணி திரண்டு போராட வேண்டும்..

திறனற்றவர்கள் அல்ல நாங்கள்...
திறனுள்ளவர்கள் நாங்கள்...
திராணியுள்ளவர்கள் நாங்கள்..
திரண்டெழுவோம் நாங்கள் என்று 
இந்தியத் தொழிலாளி வர்க்கம் 
திண் தோள் தட்டும் காலம்  வெகு தொலைவில் இல்லை...
================================================================== 
வெறுப்புக்குப் பொருள் அன்பு
போருக்குப் பொருள் அமைதி
இல்லையென்பதன் பொருள் ஆம்
நாமோ சுதந்திர மனிதர்களாம்!
இதற்கெல்லாம் பதில் சொல்லாமல்
தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.
எத்தனை கேள்விகள்
எத்தனை முரண்பாடுகள்!
இதற்கு விடை தேடுவோர்
உண்மையைத் தேடுவோர்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது.
கண்ணை இறுக்கும் கட்டுகள் அறுத்து
குருடர்கள் பார்க்கப் போகிறார்கள்.
ஊமைகள் பேசப் போகிறார்கள்
உண்மையைப் பேசப் போகிறார்கள்
பதில் சொல்லாமல் தப்ப முடியாது
காலம் நெருங்குகிறது...
-கறுப்பினப்பாடகி டிரேஸி சாப்மன்-

No comments:

Post a Comment