Thursday 12 March 2020


ஊதியமல்லால் ஓய்வூதியம் இல்லை...

BSNLலில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
தற்போது ஓய்வூதிய உயர்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ஓய்வூதிய உயர்வு என்பது ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்புதான் பரிசீலிக்கப்படும். எனவே பணியில் உள்ள ஊழியர்களின் 
ஊதிய மாற்றம் நிகழ்ந்த பின்புதான்
ஓய்வு பெற்றவர்களின் அடிப்படைச்சம்பளம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் 
என்று 11/03/2020 அன்று நாடாளுமன்றத்தில்
இலாக்கா இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்தப்படுமா?
என்று மக்களவையில் நாடளுமன்ற உறுப்பினர் திரு. P.C.மோகன் அவர்கள் கேட்ட கேள்விக்கு  இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

இலாக்கா அமைச்சரும் கூட இதையே நமது
ஓய்வூதியர் நலச்சங்கத் தலைவர்களிடம்
நேரில் சந்தித்த போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய மாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம் இல்லை.
லாபம் இல்லாமல் ஊதிய மாற்றம் இல்லை.
வருமானம் இல்லாமல் லாபம் இல்லை.
தரமான சேவைகளை அளிக்காமல் வருமானம் இல்லை.
போதிய ஊழியர்கள் இல்லாமல் தரமான சேவைகள் இல்லை...
என்று இது விக்கிரமாதித்தன் கதையாக கடைசி வரை நீளும்....

பல தோழர்கள் தங்கள் வாழ்நாளில் ஓய்வூதிய மாற்றத்தைக்
காணாமலே வானுலகம் சென்று விடுவார்கள்.

பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் எப்போது?
என்பது கண்ணுக்குத் தென்படாத  நிலையே நிலவுகிறது.

எனவே... ஓய்வூதிய உயர்வு கேட்டு
வழக்கு மன்றம் செல்லலாமா? வேண்டாமா? என்று
ஓய்வூதியர்கள் அமைப்புக்களில்...
பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே EXTRA INCREMENT உள்பட
ஏராள வழக்குகள் அகலிகையாக காத்துக்கிடக்கின்றன...

மாதாமாதம் சம்பளத்திற்கே அல்லாடும்
பணியில் உள்ள BSNL ஊழியர்கள்...
தற்போது சம்பள மாற்றம் என்ற கோரிக்கையை
முன்வைத்துப் போராட இயலாத சூழல் நிலவுகிறது...

சம்பள மாற்றம் உடனடியாக சாத்தியம் இல்லை...
எனவே விலைவாசிப்படி இணைப்பு IDA MERGER என்பதை
நாம் வலியுறுத்திப் பெறவேண்டும் என்று
சில அமைப்புக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் அனைத்து
ஊழியர் சங்கங்களும்...
அதிகாரிகள் சங்கங்களும்...
ஓய்வூதியர் அமைப்புக்களும்...
ஒன்றுபட்டு சிந்தித்து...
ஓரணியில் செயல்பட்டால் மட்டுமே...
உருப்படியாக ஏதேனும் செய்ய முடியும்...
ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு...

No comments:

Post a Comment