Friday, 30 September 2016


01/10/2016 முதல் IDA 5.5 சதம் உயர்ந்துள்ளது. 
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 120.3 சதமாகும்.  
பொதுவாக அக்டோபர் மாதங்களில் 
IDA உயர்வு அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டும் அவ்வாறே எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் ஆகஸ்ட் மாத நுகர்வோர் குறியீட்டெண் 
2 புள்ளிகள் குறைந்துள்ளதால் 
ஜூன் மற்றும் ஜூலை மாத புள்ளிகளின் உயர்வின் 
அடிப்படையில்   IDA  5.5 சதம்  மட்டுமே உயர்ந்துள்ளது.
===============================================
BSNL ஊழியர்களின் மாற்றல் கொள்கை உத்திரவை நடுநிலையோடு அமுல்படுத்த வேண்டும் என மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்டங்களில் உண்டாகும்  மாற்றல் பிரச்சினைகளை மாநில நிர்வாகங்கள் உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். அவற்றை மேல் மட்டத்திற்கு தள்ளி விடுவது முறையல்ல என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
===============================================
JTO PHASE-I 10 வார பயிற்சி வகுப்புகள் 
17/10/2016 அன்று சென்னையிலும், ஹைதராபாத்திலும் துவங்குகின்றன. 
மொத்தம் 221 தோழர்கள் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். 
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள். 
இதைப்போன்றே JAO தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கும் 
பயிற்சி வகுப்புகள் உடனடியாக துவக்கப்படவேண்டும் 
என்பது தோழர்களின் எதிர்பார்ப்பு.
===============================================
வைப்பு நிதி பட்டுவாடா அக்டோபர் முதல் வாரத்தில் பட்டுவாடா ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகும் வேளையில் அக்டோபர் மாத வைப்புநிதியும் 
பட்டுவாடா ஆக வாய்ப்புள்ளது.
===============================================
2014-15ம் ஆண்டிற்கான 3000 ரூபாய் போனஸ் வழங்க BSNL நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. BSNL BOARD வாரிய ஒப்புதலுக்குப் பின் உத்திரவு வெளியிடப்படும். இதனிடையே 2015-16ம் ஆண்டிற்கான போனஸ் என்னாச்சு? என்ற கேள்வி ஊழியர்களிடையே எழுந்துள்ளது.
BSNL... 16 வயதினிலே...

01/10/2016 
BSNLக்கு பிறந்த நாள்...

BSNL...
இதயத்தை  பிணைத்தது...
இமயத்தை இணைத்தது...
இணையத்தை வளர்த்தது...

BSNL... 
தரைவழி சேவையை வானுயர உயர்த்தியது...
வானுயர்ந்த  செல்சேவையை... 
எளியோரின் வாயிலுக்கு கொணர்ந்தது..

BSNL...
இலவசங்களை அள்ளித் தந்தது...
ஒரு பைசா செலவில்லாமல் ஊர் சுற்றி வரலாம்...
தரைவழி சேவையில் ஓயாது பேசலாம் உறங்காமல் பேசலாம்...

நம் வாழ்வின் அருமையாம் 
BSNL வளர்த்திடுவோம்..
தேசத்தின் பெருமையாம் 
BSNL  போற்றிடுவோம்..

அனைவருக்கும் 
BSNL உதயதின 
நல்வாழ்த்துக்கள்...
ஒப்பந்த ஊழியர் VDA
விலைவாசிப்படி உயர்வு

01/10/2016 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 
VDA  விலைவாசிப்படி 
கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED LABOUR 

A பிரிவு நகரம்
ரூ.368/- லிருந்து ரூ.374/= ஆக 6 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு 

B  பிரிவு நகரம் 
ரூ.307/- லிருந்து ரூ.312/= ஆக 5 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு

C  பிரிவு நகரம் 
ரூ.246/- லிருந்து ரூ.250/= ஆக 4 ரூபாய் நாளொன்றுக்கு உயர்வு
இசையரசி நூற்றாண்டு விழா 
ms subbulakshmi famous images க்கான பட முடிவு

காரைக்குடி கம்பன் கழகம் 
வழங்கும் 
இசையரசி M.S.சுப்புலட்சுமி 
 புகழிசை  பரவு  நூற்றாண்டு விழா

01/10/2016 - மாலை 6 மணி 
கிருஷ்ணா கல்யாண மண்டபம் 
காரைக்குடி .

 இசை சேர்   தலைமை 
முனைவர். இராம.கெளசல்யா 
மேனாள் முதல்வர் - திருவையாறு இசைக்கல்லூரி 

இசைக்கோலம் 
சங்கீத கலாநிதி -  பத்மபூஷன் 
மதுரை TN.சேஷகோபாலன் 

இசையரசி அளித்தப் பெருங்கொடை 
கம்பன் கவி அமுதம் 
இசைத்தகடு வெளியீடு 

இசை கேட்க...
இசையரசி புகழ் கேட்க 
அனைவரும் வாரீர்...

Thursday, 29 September 2016

வீடு வரை உறவு...
சென்னைக் கூட்டுறவு சங்க நிலத்தில்
கட்டப்பட்டுள்ள மாதிரி வீடு..

வீடு வரை உறவு..
வீதி வரை மனைவி...
காடு வரை பிள்ளை...
கடைசி வரை சொசைட்டி...
வாழ்க... சொசைட்டி... 
வளர்க.. சொசைட்டி...
பணி நிறைவு வாழ்த்துக்கள் 

இன்று  30/09/2016 
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 
தோழர்கள் 
S.இரத்தினம் SDE 
A.இராமராஜ் SDE 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்.
வைப்பு நிதி பட்டுவாடா 

செப்டம்பர் மாத வைப்பு நிதி  விரைவில் பட்டுவாடா 
செய்யப்படும்  என மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.  

எனவே  வைப்புநிதி விண்ணப்பித்தவர்கள் அதனை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அக்டோபர் மாதம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 02/10/2016க்கு மேல் 
விண்ணப்பிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்து  
அக்டோபர் மாத பட்டுவாடா  செய்யப்படும்.

Wednesday, 28 September 2016

இருந்தால் இருந்தோம்... எழுந்தால்..

டெல்லியில் நடைபெற்ற சிறந்த ஊழியருக்கான
விருது வழங்கும் விழாவில் பேசிய நமது இலாக்கா அமைச்சர் 
உடனடியாக BSNL நிறுவனம்...  
ஒரு லட்சம் கிராமப்பஞ்சாயத்துக்களை OFC மூலம் இணைப்பது...
2.5 லட்சம் கிராமங்களை  அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் 
மூலம் இணைப்பது... என்ற பிரதமரின் விருப்பத்தை உடனடியாக 
நிறைவேற்ற வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும் தொலைத்தொடர்பு சந்தையில் தனது பங்கை... 
BSNL நிறுவனம்  தற்போதைய 10.4 சதத்திலிருந்து 
15 சதமாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

அனைத்துப் பழுதுகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். 
இதில் ஏற்படும் தாமதங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது 
என்றும் உறுதியாகக் கூறியுள்ளார். 

BSNL அதிகாரிகளும் ஊழியர்களும் 
திறம்பட பணி செய்ய வேண்டும்.. 
அவ்வாறு பணி செய்ய இயலாதவர்கள் 
விருப்ப ஓய்வில் சென்று விடலாம் 
என்றும் அழுத்தமுடன் கூறியுள்ளார்.

இருந்தால் இருங்கள் ... இல்லாவிட்டால் ஓடுங்கள்  
என்று ஊழியர்களைப் பார்த்து  அமைச்சர் கூறுகிறார்.  
அமைச்சர் என்ற முறையில் அவருடைய பாணி சரிதான். 
ஆனால் இதே பாணியில்...
மக்களும் மந்திரிகளைப் பார்த்து கூறும் காலம் வர வேண்டும். 
இதுவே நமது விருப்பம்.

இருந்தால் இருந்தேன்... எழுந்தால் பெருங்காளமேகம் பிள்ளாய்... 
என்று  தன்னை ஏளனம் செய்தவனைப் பார்த்து 
கவிக்காளமேகப் புலவன் பாடினான்...
தொழிலாளி வர்க்கமும் அப்படித்தான்...
இருந்தால் இருக்கும்... எழுந்தால்...
கோடிக்கால் பூதமடா... கோபத்தின் ரூபமடா...

Tuesday, 27 September 2016

இன்குலாப்... ஜிந்தாபாத்...
1928.. நவம்பர்..
தோழர் பகத்சிங் தனது தோழர்களுடன்...
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்கின்றார்

காங்கிரஸ் மாநாட்டில்...
தலைவர்களின் ஓயாத பேச்சுக்கள்...
உருப்படியில்லாத தீர்மானங்கள்...
நம்பிக்கை தராத நடவடிக்கைகள்...
இளைஞர்களுக்கு அலுப்புத் தட்டுகிறது...
மாநாட்டை விட்டு வெளியே வருகிறார்கள்...
எங்கே செல்வது?

கண்ணிலே காட்சி ஒன்று படுகிறது...
UNCLE TOMS CABIN என்ற
ஆங்கிலத் திரைப்பட விளம்பரம்...
ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துயரை
வெள்ளைத்திரையில் அந்தப்படம் விவரித்தது...
சலிப்பூட்டும்  மாநாட்டை விட்டு... வெளியேறி
உணர்வூட்டும் திரைப்படம் காண 
தோழர்களுடன் பகத்சிங் சென்றார்...

சலிப்பூட்டும் பேச்சுக்கள்...
உருப்படியில்லாத தீர்மானங்கள்...
நம்பிக்கையற்ற நடவடிக்கைகள்...

இன்றும் நாம் இந்த காட்சியைக் காணலாம்...

1929 - ஏப்ரல் 8..
நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திலே..
மோதிலால் நேரு.. முகமது அலி ஜின்னா.. வீற்றிருக்கிறார்கள் ..
இரண்டு மசோதாக்களை நிறைவேற்றும் முகத்தான்
அமைச்சர் அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார்...

ஒன்று...
யாரையும் கைது செய்யலாம்...
விசாரணை இன்றி சிறையில் அடைக்கலாம்.. என்பது..

இரண்டாவது...
தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் 
பறிக்க வகை செய்வது...

இந்த இரண்டு மசோதாக்களையும் எதிர்த்து...
நாடாளுமன்றத்தின் நடுப்பகுதியிலே...
இரண்டு குண்டுகள் வீசப்படுகின்றன... 

யாருக்கும் காயமில்லை...
ஆனாலும் நாடாளுமன்றம் பதை பதைத்து விட்டது...
காவலர்கள் காரணம் புரியாமல் விழிக்கிறார்கள்...
அப்போது அந்தக்குரல்... ஓங்கி ஒலிக்கிறது...
இன்குலாப்... ஜிந்தாபாத்...
அங்கே.. பகத்சிங் கையில் துப்பாக்கியோடு...
கண்ணில் விடுதலை நெருப்போடு..
தன் தோழன் தத் என்ற இளைஞனோடு ..
தன்மான உணர்வோடு கொழுந்து விட்டு நிற்கிறான்..

அன்று அவன் எழுப்பிய முழக்கம்தான்.. 
இன்றும் என்றும் தொழிலாளி வர்க்கத்தின் 
உரிமை கீதம்...
இன்குலாப் ஜிந்தாபாத்... புரட்சி ஓங்குக...
இன்றும் தொழிலாளிக்கு எதிரான சட்டங்கள் 
நாட்டிலே... நாடாளுமன்றத்திலே இயற்றப்படுகின்றன...
ஆனால் வீறுகொண்டு வெடிகுண்டு வீச பகத்சிங்தான் இங்கில்லை...

தொழிலாளி வர்க்க விரோத சட்டத்தை 
எதிர்த்து நாடாளுமன்றத்தை அதிரவைத்த...
மாவீரன் பகத்சிங் நினைவுகளை 
அவன் பிறந்த செப்டம்பர் 28ல் நினைவு கூர்வோம்...

பகத்சிங் பிறந்த தின 
சிறப்புக்கூட்டம் 

28/09/2017 - புதன் மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம்  - காரைக்குடி.

தலைமை: தோழர். இரா.பூபதி

சிறப்புரை : தோழர். 
N.இரவிச்சந்திரன் 
தமிழாசிரியர் - SMS மேல்நிலைப்பள்ளி - காரைக்குடி.

தோழர்களே... வருக...
நியாயம் வெல்லும் 

பரமக்குடி... தமிழகத்தில் சாதி மோதல்கள் நிறைந்த இடம்.
மக்கள் மோதிக்கொண்டாலும் தொலைபேசித்தோழர்கள் 
அன்றும் இன்றும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்...
காரணம்... அய்யர் என்ற அருமைத்தோழர் வெங்கடேசன் 
விதைத்த அன்பென்னும் விதையும்..
அதை உரமிட்டு  வளர்த்து மரமாக்கிய 
இராமசாமி போன்ற தோழர்களின் உழைப்பும்...

ஆனால் அத்தகைய இடத்தில்... 
இன்று சண்டாளன் ஒருவன்  சாதி என்னும் விஷத்தை தூவுகிறான்..
அவனுக்கு நிர்வாகம் குறுக்கு வழியில் மாற்றல் இடுகிறது...

இந்த அநியாயத்தை  எதிர்த்து 
பரமக்குடி தோழர்கள் குரல் கொடுத்தார்கள்...
நிர்வாகத்துடன்  பேச்சுவார்த்தை நடைபெற்றது....

சாதி என்னும் நெருப்பெரித்து...
பரமக்குடியில் அமைதியை சாம்பலாக்கும்...
சக ஊழியர்கள் மீது சாதி என்னும் சாணிவீசும் 
சம்பந்தப்பட்ட ஊழியரின்   கொடுமையை எதிர்த்து...
பாதிக்கப்பட்ட தோழர்களால் கொடுக்கப்பட்டுள்ள  
எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளின் மீது 
பரமக்குடியில் உரிய விசாரணை நடத்தப்பட்டு...
விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 
இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முடிவாகியுள்ளது.

உணர்வோடு போராடிய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்...
அமைதியான தீர்வை எட்டுவதற்கு... 
உதவிட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள்...

நியாயங்கள் நிச்சயம் தோற்காது... காத்திருப்போம்...

Monday, 26 September 2016

காரைக்குடித் துணை நிர்வாகமே..
விதிகளை வீதியில் தள்ளாதே..


DOT  காலத்திலிருந்து...
பதினாறு ஆண்டுகளுக்கும்  மேலாக
பரமக்குடி நகருக்கு பத்துக்கும் மேற்பட்ட TM தோழர்கள்
காத்திருப்போர் பட்டியலில் கவலையோடும்...
கண்ணீரோடும் காத்திருக்கும் வேளையிலே....

காத்திருப்போர் பட்டியலிலேயே இல்லாத ஒரு ஊழியருக்கு..
காரைக்குடி மாவட்டத்  துணை நிர்வாகம்..
கவனிப்பான தரிசனத்தால் .. உந்தப்பட்டு 
கரிசனத்தோடு மாற்றல் உத்திரவை வெளியிட்டுள்ளது...

மேற்கண்ட மாற்றல்...
விதிகளுக்கும் நியாயத்திற்கும்  முரணானது...
சம்பந்தப்பட்ட ஊழியருக்கு எந்த விதமான 
உடல் ஊனங்களும் குறைகளும் கிடையாது...
விற்பனைப் பிரிவில் வேலை செய்து வரும் அந்த ஊழியர் 
வாங்கும் சம்பளத்திற்கு வேலையே செய்யாமல் சுற்றி வந்தவர்...
பரமக்குடி போன்ற சாதிய மோதல் உள்ள இடத்தில்...
தொடர்ந்து சாதிப்பிரச்சினையை கிளப்பி வருபவர்...
பல ஆண்டுகளாக இலாக்கா அனுமதி இல்லாமல் 
வெளி நாட்டிற்கு சென்று பல லட்சங்களை சம்பாதித்தவர்...
சில அதிகாரிகளை சரிக்கட்டி வெளிநாடு சென்ற காலத்திற்கு..
சம்பளமும்... பதவி உயர்வும் சேர்த்துப் பெற்றவர்...
வாசனைக்குப்பிகளாலும்.. VAT69 குப்பிகளாலும்..
பலரை வளைத்துப்போட்டவர்..
இத்தனை பிரச்சினைகளையும் 
நேரடியாகவும்... எழுத்து மூலமாகவும் சுட்டிக்காட்டியும் 
காரைக்குடி மாவட்டத்துணை நிர்வாக அதிகாரிகள்..
அநியாயத்திற்குத் துணை சென்றுள்ளனர்....
சில தகப்பன்சாமிகளின் தான்தோன்றித்தனத்தால் வந்த வினை இது..

எனவே காரைக்குடி மாவட்டத்தில் 
தொழில் அமைதியைக் கெடுக்கும் 
நிர்வாகச்சிறு அதிகாரிகளின் 
நியாயமற்ற போக்கை எதிர்த்தும்...
அநியாயத்திற்கு துணை போகும்
நிர்வாகச்சீர்கேட்டைக் கண்டித்தும்..
காரைக்குடி மாவட்டம் முழுமையும் 

ஒத்துழையாமை இயக்கம்

நியாயங்கள் நிலை நிறுத்தப்படும் வரை 
அநீதி தடுத்து நிறுத்தப்படும் வரை 
ஓயாது நமது போராட்டம்....
தோழர்களே... களம் காண்போம்...
விதிகளைப் புறம் தள்ளி 
ஊழியரை வீதியில் தள்ளிய 
கொடுமை மாற்றுவோம்...

Sunday, 25 September 2016

வீழ்ந்து விட்டோம்... விழாக்களில்...

இந்த மாதம் வைப்பு நிதி வரவேயில்லை.
வைப்பு நிதி ஏன் பட்டுவாடா செய்யப்படவில்லை?
இந்தப்பிரச்சினைக்கு  நிரந்தரத்தீர்வு என்ன?
யாருக்கும் வெட்கமில்லை... யாருக்கும் கவலையுமில்லை...

DELOITTE குழு  பரிந்துரைகளை 
தமிழகத்தில் அமுல்படுத்த விடமாட்டோம் என்று  சொல்லப்பட்டது. 
முதற்கட்டமாக 4 மாவட்டங்கள் இரண்டு வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு தமிழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 
இதைப்பற்றி எந்த வித கருத்தும் இல்லை...
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் கூட குரல் எழுப்பவில்லை. 

புதிய இணைப்புகள் கொடுக்க வகையற்ற இடங்களில் 
TECHNICALLY NOT FEASIBLE இடங்களில்...
புதிய இணைப்புக்கள் கொடுக்கும் பணியை  
குத்தகை மூலம் தனியாருக்கு கொடுக்க நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. இந்த இணைப்புக்கள் மூலம் கிடைக்கும் 
வருமானத்தில் 35 சதம் தனியாருக்கு வழங்கப்படுமாம்.
இதைப்பற்றியும் தமிழ் மாநிலச்சங்கத்தில்... 
எந்தவித கருத்தும் இல்லை. கவலையுமில்லை.

ஆனால் விழாக்கள் மட்டும்...
விறுவிறுப்பாகக் கொண்டாடப்படுகின்றன...
தனி நபர்கள் தலை மேல் வைத்து கூத்தாடப்படுகிறார்கள்..
தவிக்கும் தொழிலாளர்களோ பந்தாடப்படுகிறார்கள்...

மாநில மாநாடுகள்... மாவட்ட மாநாடுகள்... 
கிளை மாநாடுகள்... சிறப்புக்கூட்டங்கள்... 
பாராட்டு விழாக்கள்...கருத்தரங்கங்கள்...
பொன்விழாக்கள்... வைரவிழாக்கள்...
தங்க விழாக்கள்... தகர விழாக்கள்...
முப்பெரும் விழாக்கள்... நாப்பெரும் விழாக்கள்...
என விழாக்கள் வட்டம் கட்டி கொண்டாடப்படுகின்றன...
தொழிலாளர் பிரச்சினையோ கட்டம் கட்டப்படுகிறது...
மாநில மாநாடுகளில் கூட... 
ஊழியர் பிரச்சினையைப் பற்றி பேச இயலவில்லை... நேரமில்லை...

நமது நிலைமையையும்... 
தலைமையையும்  எண்ணிப்பார்க்கும் போது....
கூட்டத்திற் கூடிநின்று 
கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்திற் கொள்ளாரடீ!- கிளியே! 
நாளில் மறப்பாரடீ!
இவர் வாய்சொல்லில் வீரரடி.. கிளியே..
என்ற பாரதியின் வரிகளே நினைவுக்கு வருகிறது...

Saturday, 24 September 2016

இரங்கல் 
திருமதி.மாலதி சுப்பராயன் 
NFTE மாநிலப்பொருளரும் 
கோவை மாவட்டச்செயலருமான 
அன்புத்தோழர். சுப்பராயன் 
அவர்களின் துணைவியார் 

திருமதி.மாலதி 
அவர்கள்  24/09/2016 அன்று 
உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.
துணை இழந்த தோழனின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம்..

காரைக்குடி மாவட்டத்தோழர்கள் 
சார்பாக ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகிறோம்.

Thursday, 22 September 2016

காரைக்குடியில் TMTCLU  கலைப்பு 


மஸ்தூராகப் பணி புரிந்து..
அடிமட்டத் தோழனின் வலிகளை..
வேதனைகளைப் புரிந்தவன் என்ற அடிப்படையில்..
காரைக்குடி TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்க 
மாவட்டச்செயலராக பணி செய்ய உணர்வுடன் சம்மதித்தேன். 
தோழர்.ஆர்.கே.,,அவர்கள் மாநிலத்தலைவராக இருந்ததினால் 
கூடுதல் நம்பிக்கையுடன் பொறுப்பேற்றேன்.

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கூடினோம்...
தீர்மானங்கள் இயற்றினோம்.. தலைவர்களைப் போற்றினோம்...
காலம் பல கடந்தாலும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளில் 
எந்த வித முன்னேற்றமும் இல்லை. 
குறைந்தபட்சம் சம்பளத்தையாவது.. 
உரிய தேதியில் வழங்க வைக்க முடியவில்லை.
அடையாள அட்டை... மருத்துவ அட்டை...
வைப்பு நிதி, போனஸ், எட்டுமணி வேலை என 
எதையுமே நான் பொறுப்பேற்ற சங்கத்தால் 
நிறைவேற்ற இயலவில்லை. 
மாவட்டத்தில் எங்கள் பலத்திற்கேற்ப
நாங்கள் போராடிய போது...
அப்போதைய தமிழ் மாநிலத்தலைமையால்
நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டோம்...
நிர்வாகத்திடம் பொல்லாதவர்கள் என
கொளுத்திப் போடப்பட்டோம்.
TMTCLU என்னும் பெயரிலே ஏதேதோ நடந்தது...
ஊழியர்களுக்கு நல்லதைத் தவிர...

கடலூர்... குடந்தை என  அணி சார்ந்த இடங்களில் 
ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 
ஆனாலும் என்ன செய்ய?
தலைவர்களைப் போற்றிப் புகழ்ந்ததைத் தவிர...

ஒப்பந்த ஊழியரின் நிலை கண்டு...
ஓய்வு பெற்ற பின்னும் நிம்மதி இல்லை...
எனவே செயல்படாத... ஒப்பந்த ஊழியரின் நலனில் 
சிறிதும் அக்கறை இல்லாத TMTCLU என்னும் 
பயனற்ற அமைப்பைக் கலைக்கின்றோம்...
விரைவில் உரிய வழி காண்போம்...

தோழமையுடன் 
சி.முருகன்
TMTCLU - முன்னாள் மாவட்டச்செயலர்.
கண்ணிருந்தும்...

BSNL  அகன்ற அலைவரிசை இணைப்புக்கள் குறைந்து 
வருவதாக  நமது இணையதளத்தில் தகவல் தெரிவித்திருந்தோம். 
இராமநாதபுரத்தில் RSA  ஆகப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த தோழரும்... FNTO சங்கத்தின் மூத்த தலைவருமான அருமைத்தோழர்.இரகுவீர் தயாள் அவர்கள் தனது கவலையை கருத்துப்பகுதியில் தெரிவித்திருந்தார். முற்றிலும் நியாயமான அவரது கவலையை 
நமது தோழர்களின் சிந்தனைக்காக கீழே தருகிறோம்.
=======================================================================

மிக மலிவான விலையில் நமது நிறுவனம் 
அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ள நிலையிலும் 
இணைப்புக்கள் குறைவது கவலைக்குரியது.

திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அதைக்காட்டிலும் கவர்ச்சியாக அல்லது அதற்கு இணையாகவேனும் இருக்க வேண்டும்.
ஆனால் தனியார் 20  MB தரும் அதே வாடகையில் 
நாம் 2 MB என்றால் எப்படி?

சென்னையில் அதே வாடகையில் MB தருகிறார்கள்.
ஆனால் இலவச அழைப்புகள் இரவில் மட்டும்.
தனியார் நிறுவனம் எல்லா அழைப்புகளும் இலவசம் என்கிறதுஇதே வாடகையில்.. இதே வேகத்துக்கு.

நமது இணைப்புகளாவது ஒழுங்காக இருக்கிறதா?
பழுது என்றால் நாம் உடனே விரைகிறோமா?
அப்படியே ஓரிரு இடங்களில் விரைந்தாலும் பழுது நீக்க நம்மிடம்  தேவையான கருவிகள் இருக்கின்றனவா?
எத்தனை ஊர்களில் கேபிள் ரூட் வரைபடம் இருக்கிறது?
எத்தனை JTOக்களுக்குத் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட இடங்களில்  கேபிள் பில்லர்களில் ஸ்பேர் எவ்வளவு?
அதில் பழுதுபட்டது எவ்வளவு என்று தெரியும்?

தல நிலைமைகளை அபிவிருத்தி செய்யாமல்
உயர் மட்டங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளினாலோ ஊழியர்கள் ஊர்வலங்கள் போய் 
மக்களைச் சந்திப்பதாலோ மக்களின் மனம் மாறி விடுமா?

என் உறவினர் கோட்ட பொறியாளராக இருந்து 
ஓய்வு பெற்றவர். அவர் ஆர்வத்தில் போன மாதம் 
சுமார் 50 இணைப்புகளுக்கு கான்வாஸ் செய்து விண்ணப்பித்திருந்தார்.

ஒரு முறை (அது அவரது பத்தாவது நடையாம்) நானும் அவருடன் சென்றேன். அந்த இளநிலை அதிகாரி அலட்சியமாக அந்த ஏரியாவில் கேபிள் இருக்கிறதா என்று லைன்மேன் இன்னும் சொல்லவில்லை. அதனால் இப்போதைக்கு இணைப்பு கொடுக்க முடியாது என்று கூறினார். வந்தவர் ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால்தான் பொறுமையாக பதில் சொல்வதாகவும் இல்லையென்றால்
not feasible report கொடுத்து நிராகரித்திருப்பேன் என்றும் சொன்னார்.  இது  நடந்தது சென்னையில்

மேல் மட்டங்களுக்கு அவர் அளித்த புகார் இன்னும் நிலுவையில் இருக்கிறதுநிலைமை இப்படி இருக்க, மக்கள் நம்மைவிட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பது சிரமம்தான்.

நன்றி...
தோழர்.இரகுவீர் தயாள் - RSA ஓய்வு