Tuesday, 6 September 2016

வஞ்சிக்கப்பட்ட  வ.உ.சி.,

26/10/1936 - தூத்துக்குடி 

மகாஸ்ரீ. கந்தசாமி ரெட்டியார் அவர்களுக்கு 
வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிக்கொடுத்த உயில் சாசன நிருபம்...

ஐயா வணக்கம்... எனக்கும் என் குடும்பத்தாருக்கும் 
கடவுளையும்... தங்களைப்போன்ற உண்மையான 
தேச பக்தர்களையும் தவிர வேறு தஞ்சம் இல்லை..

நான் அதிக காலம் ஜீவித்திருக்க மாட்டேன். 
தாங்கள் முன்னின்று என் குடும்பத்தாருக்கு செய்ய வேண்டிய 
காரியங்களை இதன் கீழே தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்...

எனது கடன்கள் 
தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியாவிற்கு 
ஐந்து மாத வீட்டு வாடகை ரூபாய்.135/=
சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூ.30/=
வன்னியஞ்செட்டியார் எண்ணெய்க்கடைக்கு சுமார் ரூ.30/=
இன்ஸ்பெக்டர் பிள்ளையிடம் வாங்கிய கைமாத்து  ரூ.20/=
சோம்நாத்துக்கு ரூ.16/=
வேதவல்லிக்கு ரூ.50/=

எனது ஆஸ்திகள் 
பம்பாய் எம்பயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் 
ரூபாய் ஆயிரத்துக்கும் 
ஓரியண்டல் லைப் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் 
ரூபாய் ஆயிரத்துக்கும் 
எனது ஆயுளை இன்சூரன்ஸ் செய்துள்ளேன்.
ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் 
ரூபாய் ஐந்நூறு கடன் வாங்கி இருக்கிறேன்.
கடனுக்கும் லாபத்திற்கும் அநேகமாக சரியாகப் போகும்.
மேலும் இரண்டு கம்பெனிகளுக்கும் 
நான் கடைசி பிரிமியம் கட்டவில்லை.

நான் பிறந்த ஒட்டப்பிடாரத்தில்...
பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது..
அதன் மச்சுக்கட்டைகளெல்லாம்  இற்றுப்போய் 
ஆபத்தானநிலையில் உள்ளது.
அதை தாங்கள் புதுப்பித்துக்கொடுத்தால் 
அதில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம்...
ஒட்டப்பிடாரத்தில்...
புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும்...
நஞ்சையில் பதினாறு மரக்கால் நிலமும்..
கீழ்க்காட்டில் 1 3/4 சங்கிலி கரிசல் நிலமும்...
3/4 சங்கிலி கரிசல் புஞ்சை நிலமும்... உள்ளன.
மேற்படி நிலங்கள் பயிர் செய்யும் நிலையில் இல்லை.
நான் மேற்படி நிலங்களை தங்களுக்கு 
ரூபாய் ஐந்நூறுக்கு  கிரயம் செய்து கொடுத்து விடலாமென்று 
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆத்தூர்  பிரமு அம்மாள் ரூபாய் 750க்கு என் மனைவி பேருக்கு 
ஒரு அடமான தஸ்தாவேஜு எழுதிக் கொடுத்துள்ளாள்.
அதை தங்கள் பேருக்கு மேடோபர் செய்து கொள்ளவும்...

இப்பொழுதும்  என்னிடம்  ரூபாய் இருநூறுக்கு 
விலைபோகக்கூடிய  சட்டப்புத்தகங்கள் உள்ளன...
அவற்றை விற்க வேண்டும்...

தாங்கள் செய்ய வேண்டியது...
வறுமையில் வாடும் என் தம்பி மீனாட்சி சுந்தரத்திற்கு 
சாப்பாடு கிடைக்க வழி செய்ய வேண்டும்..
நீங்கள் செய்ய வேண்டிய அவசரக்காரியம் 
ருதுவாயிருக்கிற என் மக்களிருவரில் 
மூத்தவளாகிய செளபாக்கியவதி ஆனந்தவல்லிக்கு 
விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும்...
சரியான மாப்பிள்ளை கிடையாததால் தாமதம்...

செளபாக்கியவதி மரகதவல்லி கலியாணத்தை 
இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து செய்து வைக்கவும்...
என் மனைவி மக்களின் அன்ன வஸ்திர செலவுகளுக்கு 
யாதொரு வழியுமில்லை...
அதற்கொரு நிதி உண்டு பண்ண முயலுகிறேன்...

எல்லாம் வல்ல  இறைவன் அருளால் தாங்கள் 
மேற்கண்ட காரியங்களை  செய்து முடித்து அருள் புரிக...

வ.உ.சிதம்பரம் பிள்ளை
----------------------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
மேலே நீங்கள் படித்தது 
இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனை எதிர்த்து...
மேலைக்கடலில் சுதேசிக்கப்பல் விட்டு...
அதற்காக தனது  பல லட்சம் சொத்து சுகங்களை இழந்த 
கப்பலோட்டிய தமிழன் வ.உசியின் இறுதி சாசன உயிலின் சுருக்கம்.
மேற்கண்ட உயிலை எழுதிய 23  நாட்கள் கழித்து 
18/11/1936ல் வ.உசி உயிர் நீத்தார்..

1912ல் அவர் விடுதலை அடைந்து வந்தபோது...
அவரை வரவேற்க.. சுப்பிரமணிய சிவாவும்... 
சுரேந்திரநாத் ஆர்யாவும் மட்டுமே வந்திருந்தனர்...
காங்கிரசார் ஒருவர் கூட வரவில்லை...
காரணம்...
வ.உசி திலகரின் சீடராகத் திகழ்ந்தார்...
பெரியாரின் குருவாகத் திகழ்ந்தார்..
காங்கிரசின் அடிமைக்கொள்கைகளை எதிர்த்தார்...
காரைக்குடி வந்த போது சிராவயலில் ஜீவாவை சந்தித்தார்...
மாணவர்கள் ராட்டை சுற்றும் காட்சி கண்டு கடும் கோபம் கொண்டார்...
வாளேந்தும் கைகள் ராட்டை சுற்றுவதா?  எனக்கொதித்தார்..
கோவையில் பார்ப்பனர் அல்லாதோர் மாநாட்டை 
தலைமை தாங்கி நடத்தினார்..
சேலம் காங்கிரஸ் மாநாட்டில் சூத்திரன் என்ற சொல்லை 
அரசுக் குறிப்புகளில் இருந்து நீக்க வேண்டும் எனவும்...
அரசு உத்தியோகங்களில் பார்ப்பனர் அல்லாதோருக்கு...
இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் எனவும்...
தீர்மானங்கள் இயற்றினார்...
இது போதாதா... 
எனவேதான் வ.உசி காங்கிரசால் வஞ்சிக்கப்பட்டார்...
விடுதலைக்குப்பின் வறுமையில் உழன்றார்...
மளிகைக்கடை நடத்தினார்...
மண்ணெண்ணெய்க்கடை நடத்தினார்...
அவரது மறைவுக்குப்பின் அவருக்கு சிலை வைக்க 
ம.பொ.சி  முயன்ற போது காங்கிரஸ் கட்சி அதைத் தடுத்தது...
வ.உசி வாழ்ந்த போதும் வஞ்சிக்கப்பட்டார்...
மறைந்த பின்னும் வஞ்சிக்கப்படுகிறார்...

செப்டம்பர் - 5 அவரது பிறந்த தினம்..
ஆசிரியர் தினமும்.. அன்னை தெரேசா தினமும் ...
அவரை மறைத்தாலும்.... 
அவரது தியாகமும் புகழும்..
இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்...

2 comments:

  1. அறிய தவல்கள்,விடுதலைவேள்வியில் சர்வபரி தியாகம் புரிந்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் இறுதிகாலம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது

    ReplyDelete
  2. சூப்பர் வாழ்க அவரது தியகமணபன்மை........

    ReplyDelete