Monday 21 October 2019


பலியாடுகள்...

BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தும்
ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கி விட்டதாகத் தெரிகிறது.
21/10/2019 அன்று CMD கூறியதாக வந்த  தகவலின்படி
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விருப்ப ஓய்வு உள்ளிட்ட
BSNL புத்தாக்கப் பணிகள் அரசால்
இறுதி செய்யப்பட்டு விடும் என்பது தெளிவாகிறது.

மேலும் 17/10/2019 அன்று CMD  மாநிலத்தலைமைப் பொதுமேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட
ஒரு லட்சத்திற்கும் அதிகமான BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சேவைக்குறிப்பேடுகளை உடனடியாக சரிபார்த்து
22/10/2019க்குள் டெல்லித் தலைமையகத்திற்கு
தகவல் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே வணிகப்பகுதி மாவட்ட அலுவலகங்களில் சேவைக்குறிப்பேடுகளை சரிபார்க்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. சேவைக்குறிப்பேடுகளை சரிபார்க்கும் பணி வழக்கமான நடைமுறைதான் என்றாலும் தற்போதைய சூழலில் இது விருப்ப ஓய்வுத்திட்டத்தின் முதல்படி என்றே தோன்றுகிறது.

மேலும் இதற்கு முன்பாக மத்திய  VIGILANCE அதிகாரி
BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத்திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்  எனக் கடிதம்  அனுப்பியிருந்தார். எனவே விருப்ப ஓய்வை அமுல்படுத்துவதற்கான 
ஆரம்பக்கட்டப்பணிகள் துவங்கி விட்டன என்பதில் சந்தேகமில்லை.
அதிகாரிகள் சங்கங்கள் கூட விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கு முன் பதவி உயர்வுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் 
என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

சம்பளம் வழங்காமை, நிலுவைகள் செலுத்தாமை,
போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நிறுத்தம்,
கடுமையான நிதி நெருக்கடி போன்றவற்றை சந்தித்து
நித்தமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள
BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கு
மனதளவில் தயாராகி விட்டனர் என்பதை நாம் உணரமுடிகிறது.
களநிலவரம் தோழர்களின் மனக்கலவரத்தையே காட்டுகிறது.

BSNL மறுசீரமைப்பு என்ற பெயரில்...
ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற
தங்களது தந்திர முயற்சியில் அரசும் நிர்வாகமும்
வெற்றி பெற்று விட்டனர் என்றே நாம் கூறமுடியும்.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி...
50 வயதிற்கு மேல்...
18153 அதிகாரிகள்... 88151 ஊழியர்கள்
என மொத்தம் 106304 தோழர்கள் 
பலியாடுகளாக களத்தில் உள்ளனர்.

இவர்களில் 60சத ஊழியர்கள்  
இன்னும் 3 ஆண்டுகளில் 
இயற்கை ஓய்வில் செல்ல இருக்கின்றார்கள்.
வரும் மூன்றாண்டுகளில் தமிழகத்தில் மட்டும்
ஏறத்தாழ 4000 ஊழியர்கள் 
இயற்கை ஓய்வில் செல்ல இருக்கின்றார்கள்.
பத்தாண்டுகளில் DOTயில் இருந்து வந்த ஊழியர்கள்
முழுமையாக ஓய்வு பெற்று விடுவார்கள்....
நிலைமை இவ்வாறிருக்க...
கட்டாய விருப்ப ஓய்வு என்பது ஊழியர்களுக்கு
இழைக்கப்படும் அநீதியே அல்லாமல் வேறில்லை...

ஆண்டாண்டு காலமாக தங்கள் வாழ்வை
இந்த மத்திய அரசுப்பணியில் அடகு வைத்த தோழர்கள்
இன்று நட்டம் என்ற பெயரில் பலியாடுகளாக ஆக்கப்படுவது
ஏற்றுக்கொள்ளமுடியாத வரலாற்றுக்கொடுமையாகும்.

கட்டாய ஓய்வைத்தடுப்போம்...
விருப்ப ஓய்வைத்தடுப்போம்...
என்ற தேர்தல் நேரத்து முழக்கங்கள்
வெற்று முழக்கங்களாகிப் போனதில் வியப்பில்லை...

1 comment:

  1. தாமாக விருப்ப ஓய்வில் செல்வதில் AUAB என்ன பிரச்சினை? தயவுசெய்து பெரியவர்கள் உடனடியாக விளக்கி என்னை தெளிய வைக்கவும்.
    .... இப்படிக்கு
    பலிகடா

    ReplyDelete