Saturday, 26 October 2019

தீபாவளித் திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

தித்திக்கும் தீபாவளி..
இன்றோ..
தித்திக்காத தீபாவளி...

ஒட்டிய வயிறுடன்...
ஒப்பந்த ஊழியர்கள்...

கணக்கும்  நெஞ்சுடன்...
நிரந்தர ஊழியர்கள்...

BSNL 
தழைக்கும்...
நிலைக்கும்...
இதுவே இந்த வருட 
தீபாவளி தித்திப்பு...

வீழ்வது நாமாயினும்...
வாழ்வது நம் BSNL ஆகட்டும்...



அனைவருக்கும் இனிய 
தீபாவளித் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்

Wednesday, 23 October 2019


INDIA NEED BSNL

நீண்ட போராட்டத்திற்குப் பின்
மத்திய அமைச்சரவை 23/10/2019 அன்று
BSNL மற்றும் MTNL நிறுவனங்களின்
புத்தாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தேசத்தின் மாபெரும் மக்கள் சொத்தாகிய
BSNL நிறுவனத்திற்கு வழி பிறந்துள்ளது. ஒளி பிறந்துள்ளது.

“BSNL AND MTNL ARE STRATEGIC ASSETS OF INDIA”
BSNL மற்றும் MTNL இந்திய தேசத்தின்
பெருமைமிகு பழமைமிகு சொத்துக்கள்”
என்று பெருமிதத்தோடு அமைச்சரவைக்கூட்ட
முடிவிற்குப்பின் குறிப்பிட்ட
மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத்
 அவர்களை மனதாரப் பாராட்டுகின்றோம்.

மேலும்..
எக்காரணத்தை முன்னிட்டும்
BSNL மற்றும் MTNL மூடப்படாது எனவும்...
பங்குவிற்பனை செய்யப்படாது எனவும்...
தனியார்மயப்படுத்தப்படாது எனவும்...
உறுதியுடன் தனது உரையில் அவர் தெரிவித்தது
மனம் திறந்து பாராட்ட வேண்டிய செயலாகும்.

இனி நாம்...
விருப்ப ஓய்வில் சென்றாலும் பரவாயில்லை...
நாம் வளர்த்த நிறுவனம்...
நம்மை வளர்த்த நிறுவனம்...
தேசத்தின் சொத்தாக தலைநிமிர்ந்து நிற்கின்றது...
என்ற பெருமையில் நாம் காலம் முழுவதும் மகிழ்வு கொள்ளலாம்...

நிதி அமைச்சகத்தின் உதவியற்ற நிலையைப் புறந்தள்ளி...
உறுதியோடு புத்தாக்கத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த
மத்திய அரசிற்கு நமது நன்றிகளும்... வாழ்த்துக்களும்...

 நல்லாட்சி நாயகன் என்று BJPயால் புகழப்படும் 
அமரர் வாஜ்பாய் காலத்தில்...
BJP அரசின் கொள்கை முடிவால்
 உருவாக்கப்பட்ட பொதுத்துறை BSNL...
எங்கே இதனைக் கொன்று புதைத்து விடுவார்களோ
என்ற அச்சம் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது...
ஆனால் தங்களால் உருவாக்கப்பட்ட பொதுத்துறையை...
தொடர்ந்து பொதுத்துறையாகவே காப்போம் என்ற முடிவு
வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்றாகும்...

அமைச்சரைவையின் ஐந்து முடிவுகள்...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு உடனடியாக 4G அலைக்கற்றை வழங்கப்படுகின்றது. செலவுத்தொகை ரூ.20,140/-கோடி அரசின் நிதியில் இருந்து ஒதுக்கப்படுகின்றது. GST வரித்தொகையான ரூ.3674/= கோடியும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். 4G அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் களத்தில் போட்டியாளர்களைச் சந்திக்க முடியும். கிராமப்புற பகுதிகள் உள்ளிட்டு தேசம் முழுமையும் தரமான சேவையைத் தரமுடியும்.
------------------------------------------
நிர்வாகச்செலவுகளுக்காகவும், முதலீட்டுச்செலவுகளுக்காகவும் தங்களது பழைய கடன்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் ரூ.15,000/- கோடியளவில் மத்திய அரசின் உத்திரவாதம் பெற்ற நீண்டகால பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிக்கொள்ளலாம்.
------------------------------------------
நிர்வாகச்செலவுகளைக் குறைப்பதற்காக 50 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத்திட்டத்தைத் தயாரித்து அறிவிக்கலாம். இதற்காக ஆகும் செலவினமான ரூ.17,169 கோடியையும் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் COMMUTATION போன்ற செலவினங்களையும்  அரசு ஏற்றுக்கொள்ளும். விருப்ப ஓய்வுத்திட்ட அம்சங்களும், நடைமுறைகளும் மேற்கண்ட நிறுவனங்களால் முடிவு செய்யப்படும்.
 ------------------------------------------
தங்களது வளர்ச்சிப்பணிகளுக்கான செலவுகள் மற்றும் ஊழியர் ஓய்வுக்கால செலவுகளுக்காக BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தங்களது அசையாச்சொத்துக்களை பணமாக்கிக்கொள்ளலாம்.
 ------------------------------------------
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் இணைப்பு 
கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
 ------------------------------------------

மேற்கண்ட புத்தாக்கத் திட்டத்தின் மூலம் BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தரமான நம்பகமான தங்களது சேவையை 
தேசம் முழுவதும்... தேசத்தின் மூலைமுடுக்குகள் 
தோறும் வழங்கிட வகை செய்யப்படுகின்றது.
 ------------------------------------------
தோழர்களே..
BSNL ஊழியர்கள் விருப்ப ஓய்வுத்திட்டத்தின் சாரங்கள் என்ன 
என்பதை அறிந்திட மிக்க ஆவலாய் உள்ளனர்
பலர் கால்குலேட்டரும் கையுமாக அமர்ந்துள்ளனர்
இதுவரை விருப்ப ஓய்வு என்பது 
பல துறைகளில் கசப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது
நமது துறையில் அது மிகவும் கவர்ச்சிமிக்க
திட்டமாக இருக்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இருந்த போதும் திட்டத்தை முழுமைப்படுத்திட
வேண்டிய கடமை BSNL நிர்வாகத்திடமே உள்ளது

எனவே இதுபற்றி விவாதிக்க 
இன்று 24/10/2019 மாலை 4.00 மணியளவில்
அனைத்து சங்க கூட்டம் கூட்டப்பட்டுள்ளது
கூட்ட முடிவில் திட்ட அம்சங்கள் வெளியாகும்
விருப்ப ஓய்வைப் பொறுத்தவரை 
NFTE இயக்கம் அதனை எதிர்க்கவில்லை
ஆனால் அது ஊழியருக்குப் பலன் 
அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்
சாதகங்கள் ஏதுமின்றி பாதகங்கள் உண்டானால்
NFTE அதனைக் கடுமையாக எதிர்கொள்ளும்... 
ஊழியர் நலன் காக்க எதிர்த்துப் போராடும்... 
இதுவே நமது நிலை....

Tuesday, 22 October 2019


செய்திகள்

இன்று 23/10/2019 டெல்லியில் நடக்கவிருக்கும்
 மத்திய மந்திரிசபைக்கூட்டத்தில் BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் புத்தாக்கம் பற்றி முடிவெடுக்கப்படலாம் என பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தாக்கம் என்ற பெயரில் ஊழியர்களை வெளியேற்றுவது ஒன்றே முக்கிய முடிவாக அமையும். 
எதனையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
 ------------------------------------------
இன்று 23/10/2019 BSNL ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 ------------------------------------------
ஏழெட்டு மாதங்களாக சம்பளமின்றி தவிக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக குறைந்தபட்சம் 3 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டிருந்தார். அதனடிப்படையில் தமிழகத்திற்கு 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என CORPORATE நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழ் மாநில நிர்வாகம் தனது 22/10/2019 தேதியிட்ட கடிதத்தில் கூறியுள்ளது. எனவே மாவட்ட வாரியாக தேங்கியுள்ள ஒப்பந்த தொழிலாளரின் சம்பளபாக்கி விவரம் கேட்கபட்டுள்ளது. 
அதே நேரம் ஒப்பந்த தொழிலாளரின் சம்பளத்திற்கான 
செலவில் 50 சதம் குறைக்கப்பட வேண்டும் என்ற 
அணுகுண்டையும் தமிழ்மாநில நிர்வாகம் போட்டுள்ளது.
 ------------------------------------------
தமிழகத்தில் 706 தோழர்களுக்கு CONFIRMATION எனப்படும் 
பதவி நிரந்தர விவரம் ERPயில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என தமிழ்மாநில நிர்வாகம் 22/10/2019 அன்று வெளியிட்ட கடிதத்தில் கூறியுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் 15 தினங்களுக்குள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. காரைக்குடியில் மட்டும் 81 தோழர்களுக்கு பதவி நிரந்தர உத்திரவு விடுபட்டுள்ளது. ஊழியர் விவரங்களை HRMSல் இருந்து ERPக்கு மாற்றம் செய்யும்போது  சரிவர செய்யவில்லை என்பது தெரியவருகின்றது. விடுபட்ட தோழர்களில் DOT மற்றும் BSNL நியமன ஊழியர்களும் அதிகாரிகளும், கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற்றவர்களும் அடக்கம். விருப்ப ஓய்வு யானை வரப்போவதை, சேவைக்குறிப்பேடு சரிபார்த்தல், CONFIRMATION உறுதி செய்தல் போன்ற மணியோசை மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

Monday, 21 October 2019


மாவட்டச்செய்தி மடல்

நாலுகட்டப்பதவி உயர்வு

காரைக்குடி மாவட்ட ஊழியர்களுக்கு 01/10/2019 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு உத்திரவு வெளியிடப்பட வேண்டும். 
10 தோழர்களுக்கு இன்னும் CR வரவில்லை. 
14 தோழர்கள் இன்னும் தங்களது அசையாச்சொத்து விவரத்தை 
ERP-ESS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. 
எனவே தகுதியுள்ள மற்ற தோழர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வை முதற்கட்டமாக வெளியிடலாம் என கோரிக்கை விடுத்தோம்.
 இந்த வாரம் நாலுகட்டப்பதவி உயர்வின் முதற்கட்ட உத்திரவு வெளியாகும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 
விடுபட்ட தோழர்களுக்கு அடுத்த கட்டமாக உத்திரவு வெளியிடப்படும். கிளைச்செயலர்கள் விடுபட்ட தோழர்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தவும்.
------------------------------------------------------------------------------------------
பெயரில் பிழைகள்

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள 24 தோழர்களின் பெயர்களில் பிழைகள் இருப்பதாக மதுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  சேவைக்குறிப்பேட்டில் உள்ள பெயரும், PO எனப்படும் BSNL நியமன ஆணையில் உள்ள பெயரும் ஒத்துப்போகவில்லை. எனவே பெயரில் பிழைகள் உள்ள தோழர்கள் தங்களது உண்மைப்பெயரை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அதனையே ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கவும்.

------------------------------------------------------------------------------------------

ஓய்வூதிய விண்ணப்பங்கள்

மதுரை சங்ககால நகரம். 
அதனால்தான் என்னவோ...  
மதுரையில் உள்ள ஓய்வூதியப்பிரிவு 
இன்னும் சங்க காலத்திலேயே இருக்கின்றது.
ஓய்வூதிய விண்ணப்பங்களைக் கையால்தான்
எழுத வேண்டும் எனக் கட்டளை இடப்படுகின்றது. 
கணிணி மூலம் தட்டச்சு செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள். 

இன்னும் இடதுகை விரல்களின் ரேகையைக் கேட்கின்றார்கள். 
இடதுகை ரேகை கல்வியறிவற்ற 
கைநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
ஆனால் மதுரையில் மெத்தப்படித்தவர்களும் கூட 
கைநாட்டு வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. 
இது தேவையற்றது என நாம் சுட்டிக்காட்டியும் கூட 
இன்னும் மாற்றிக்கொள்ளப்படவில்லை. 

தற்போது SAMPANN என அழைக்கப்படும் மென்பொருள் மூலம் ஓய்வூதியப்பட்டுவாடா கணிணி மயமாக்கப்பட்டு விட்டது. 
தற்போது PPO எனப்படும் ஓய்வூதியப்புத்தகத்தில் புகைப்படங்கள் ஒட்டப்படுவதில்லை. புகைப்படங்கள் SCAN எனப்படும் ஊடுகதிர் செய்யப்பட்டு ஓய்வூதிய உத்திரவில் அச்சடிக்கப்படுகின்றது. 
எனவே தற்போது புகைப்படங்கள் இன்ன அளவில்தான் 
இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. 
ஆனால் மதுரையில் புகைப்படங்கள் 
அளவுகோல் கொண்டு அளக்கப்படுகின்றன. 
அரை அங்குலம் வித்தியாசம் இருந்தாலும் 
விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பபடுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள்  
மிகுந்த அதிகாரத் தோரணையில் நடத்தப்படுகின்றார்கள்.

இது சம்பந்தமாக முதன்மைப்பொதுமேலாளர், துணைப்பொதுமேலாளர்(நிதி) மற்றும் 
முதன்மை கணக்கு அதிகாரியோடு விவாதித்துள்ளோம். 
ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். 
DGM(Finance) மற்றும் CAO(Finance) ஆகியோரின்
இதமான அணுகுறையால் நாம் 
மிதமான நிலையிலேயே இருக்கின்றோம்.
அடுத்தகட்ட நிலைக்குச் செல்லவில்லை. 

FNTO சங்கத்தின் சார்பாகவும்... ஓய்வூதிய விண்ணப்பங்கள் அளிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மைதாப்பசை தபால் அலுவலகம், 
எச்சில் பசை தாலுகா அலுவலகம், 
பணப்பசை பத்திர அலுவலகம் 
ஆகியவற்றில் கூட பெரும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. 
எங்கும் கணிணிமயம் வந்து விட்டது. 

மதுரை வணிகப்பகுதி ஓய்வூதியப்பிரிவு மட்டும்
இன்னும் கீழடி சங்க காலத்திலேயே இருப்பது 
ஊழியர்களுக்குப் பெரும் சங்கடமாக உள்ளது.

ஓய்வு பெறப்போகும் ஊழியர்கள் 
ஓய்வூதியப்பிரிவால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் 
அமைதியாக தீர்க்கப்படும் என நம்புகின்றோம்.

பலியாடுகள்...

BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தும்
ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கி விட்டதாகத் தெரிகிறது.
21/10/2019 அன்று CMD கூறியதாக வந்த  தகவலின்படி
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விருப்ப ஓய்வு உள்ளிட்ட
BSNL புத்தாக்கப் பணிகள் அரசால்
இறுதி செய்யப்பட்டு விடும் என்பது தெளிவாகிறது.

மேலும் 17/10/2019 அன்று CMD  மாநிலத்தலைமைப் பொதுமேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட
ஒரு லட்சத்திற்கும் அதிகமான BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சேவைக்குறிப்பேடுகளை உடனடியாக சரிபார்த்து
22/10/2019க்குள் டெல்லித் தலைமையகத்திற்கு
தகவல் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே வணிகப்பகுதி மாவட்ட அலுவலகங்களில் சேவைக்குறிப்பேடுகளை சரிபார்க்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. சேவைக்குறிப்பேடுகளை சரிபார்க்கும் பணி வழக்கமான நடைமுறைதான் என்றாலும் தற்போதைய சூழலில் இது விருப்ப ஓய்வுத்திட்டத்தின் முதல்படி என்றே தோன்றுகிறது.

மேலும் இதற்கு முன்பாக மத்திய  VIGILANCE அதிகாரி
BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத்திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும்  எனக் கடிதம்  அனுப்பியிருந்தார். எனவே விருப்ப ஓய்வை அமுல்படுத்துவதற்கான 
ஆரம்பக்கட்டப்பணிகள் துவங்கி விட்டன என்பதில் சந்தேகமில்லை.
அதிகாரிகள் சங்கங்கள் கூட விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கு முன் பதவி உயர்வுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் 
என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

சம்பளம் வழங்காமை, நிலுவைகள் செலுத்தாமை,
போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நிறுத்தம்,
கடுமையான நிதி நெருக்கடி போன்றவற்றை சந்தித்து
நித்தமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள
BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் விருப்ப ஓய்வுத்திட்டத்திற்கு
மனதளவில் தயாராகி விட்டனர் என்பதை நாம் உணரமுடிகிறது.
களநிலவரம் தோழர்களின் மனக்கலவரத்தையே காட்டுகிறது.

BSNL மறுசீரமைப்பு என்ற பெயரில்...
ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற
தங்களது தந்திர முயற்சியில் அரசும் நிர்வாகமும்
வெற்றி பெற்று விட்டனர் என்றே நாம் கூறமுடியும்.

தற்போதைய புள்ளி விவரங்களின்படி...
50 வயதிற்கு மேல்...
18153 அதிகாரிகள்... 88151 ஊழியர்கள்
என மொத்தம் 106304 தோழர்கள் 
பலியாடுகளாக களத்தில் உள்ளனர்.

இவர்களில் 60சத ஊழியர்கள்  
இன்னும் 3 ஆண்டுகளில் 
இயற்கை ஓய்வில் செல்ல இருக்கின்றார்கள்.
வரும் மூன்றாண்டுகளில் தமிழகத்தில் மட்டும்
ஏறத்தாழ 4000 ஊழியர்கள் 
இயற்கை ஓய்வில் செல்ல இருக்கின்றார்கள்.
பத்தாண்டுகளில் DOTயில் இருந்து வந்த ஊழியர்கள்
முழுமையாக ஓய்வு பெற்று விடுவார்கள்....
நிலைமை இவ்வாறிருக்க...
கட்டாய விருப்ப ஓய்வு என்பது ஊழியர்களுக்கு
இழைக்கப்படும் அநீதியே அல்லாமல் வேறில்லை...

ஆண்டாண்டு காலமாக தங்கள் வாழ்வை
இந்த மத்திய அரசுப்பணியில் அடகு வைத்த தோழர்கள்
இன்று நட்டம் என்ற பெயரில் பலியாடுகளாக ஆக்கப்படுவது
ஏற்றுக்கொள்ளமுடியாத வரலாற்றுக்கொடுமையாகும்.

கட்டாய ஓய்வைத்தடுப்போம்...
விருப்ப ஓய்வைத்தடுப்போம்...
என்ற தேர்தல் நேரத்து முழக்கங்கள்
வெற்று முழக்கங்களாகிப் போனதில் வியப்பில்லை...

ஒப்பந்த ஊழியர் பிரச்சினை.... 
ஓரடி முன்னால்...

19/10/2019 அன்று சென்னையில் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்விற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
NFTE சார்பாகத் தோழர்கள். காமராஜ், நடராஜன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக நிர்வாகத்தரப்பு  சார்பாகவும் 
சென்னை நிர்வாகத்தரப்பு சார்பாகவும் GM,DGM, மற்றும் 
AGM அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்சம்
மூன்று மாத சம்பளம் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியருக்கான சம்பளம் மற்றும் இதர உரிமைகளை அளிக்காமல் வேலையில் இருந்து அவர்களை நீக்குதல் முடியாது.
எனவே முதற்கட்டமாக சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆட்குறைப்பு என்பதை இப்போதைக்கு நிர்வாகம் அமுல்படுத்த இயலாது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 13/11/2019 அன்று
சென்னையில் நடைபெறும். அந்தக்கூட்டத்திற்கு டெல்லி தலைமையகத்திலிருந்து அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

தோழர்களே...
அடுக்கி வைத்த மூட்டையில் அடிமூட்டை எனப்படும்
ஒப்பந்த ஊழியர்களின் நிலை மோசமான நிலையில் இருந்து...
மிகமோசமான நிலைக்கு சமீபகாலமாகத் தள்ளப்பட்டுள்ளது.
பலகட்டப்போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்குப்பின்
தற்போது நடந்த பேச்சுவார்த்தையின் மூலம்

ஒப்பந்த ஊழியர்களுக்கான தீர்வுப்பாதையில்
நாம் ஓரடி முன்னால் சென்றுள்ளோம் என்றே சொல்ல வேண்டும்...
மேலும் தீர்விற்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து நாம்
உறுதியுடனும் முனைப்புடனும் இயங்க வேண்டும்.

Saturday, 19 October 2019


சேமநலநிதிக்குழுக் கூட்ட முடிவுகள்

காரைக்குடி சிறப்பு சேமநலநிதிக்குழுக் கூட்டம் 19/10/2019 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்றது. NFTE சார்பாக சேமநலநிதிக்குழு உறுப்பினர் தோழர்.சங்கரன்,  BSNLEU சார்பாக தோழர்.பூமிநாதன், AIBSNLEA சார்பாக தோழர்.சொக்கலிங்கம் ஆகியோர் 
ஊழியர் தரப்பு பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.


: கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன :

தீபாவளி விழாக்கடன் ரூ.4000/= வழங்கப்படும்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5000/= பரிசாக வழங்கப்படும். 
இதில் ரூ.3000/= ரொக்கமாகவும், 
ரூ.2000/= RECHARGE COUPON எனவும் வழங்கப்படும்.


மரணமுறும் ஊழியர்களுக்கான உடனடி உதவித்தொகை
ரூ. 5000/=ல் இருந்து ரூ.10,000/= ஆக உயர்த்தப்படுகிறது.

மரணமுறும் ஊழியர்களுக்கான மத்திய சேமநலக்குழுவின் 
CWF உடனடி உதவித்தொகை ரூ.15,000/=ல் இருந்து 
ரூ.20,000/= ஆக 19/11/2018ல் இருந்து உயர்த்தப்பட்டது. 
இது காரைக்குடியில் அமுல்படுத்தப்படாமல் இருந்தது. 
தற்போது இது அமுல்படுத்தப்படுகின்றது.

காரைக்குடி மாவட்டம் மதுரை வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டாலும் சிறப்பு சேமநலநிதி அமைப்பு 
தொடர்ந்து தனியாகவே செயல்படும். 

தோழர்.கணேசன் SDE செயலராகவும், 
தோழர்.சுரேஷ் AO பொருளராகவும்,
தோழர்.முத்துக்குமரன், AO தணிக்கையாளராகவும் செயல்படுவார்கள்.

காரைக்குடி தோழர்கள் சேமநலநிதி சம்பந்தப்பட்ட  அனைத்து விண்ணப்பங்களையும் தோழர்.கணேசன் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

செயலர் அலைபேசி : 9486101919
பொருளர் அலைபேசி : 9486101969

விழாக்கடன் பெற விரும்பும் தோழர்கள் உடனடியாக விண்ணப்பத்தை நிரப்பி தங்களது மேலதிகாரியின் கையொப்பம் பெற்று 
தோழர். கணேசன் அவர்களுக்கு 23/10/2019க்குள் அனுப்பி வைத்திட வேண்டும். முதல் 150 விண்ணப்பங்களுக்கு மட்டுமே விழாக்கடன் வழங்கப்படும். விண்ணப்ப படிவ மாதிரி NFTE  மற்றும் 
AUAB காரைக்குடி WATSAPPல் கிடைக்கும். 
கிளைச்செயலர்கள் கவனம் செலுத்திட வேண்டும்.

Friday, 18 October 2019


ஒப்பந்த ஊழியர் பேச்சுவார்த்தை

இன்று 19/10/2019 காலை 11.00 மணியளவில்
சென்னை அண்ணாசாலை தொலைபேசி இணைப்பகத்தில் சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் முன்பாக ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

NFTCL, TMTCLU மற்றும் TNTCWU தொழிற்சங்கப் பிரதிநிதிகளும்....
சென்னைத்தொலைபேசி மற்றும் தமிழக BSNL அதிகாரிகளும்...
சென்னை மற்றும் தமிழகமெங்கும் 
குத்தகை எடுத்துள்ள 21 ஒப்பந்ததாரர்களும்...
இன்று பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்காதது...
ஆட்குறைப்பு என்னும் பெயரில் அவர்களை நடுத்தெருவில் விடுவது...
உள்ளிட்ட பிரச்சினைகள் இன்று விவாதித்து முடிவெடுக்கப்படும்.

தொழிலாளர் ஆணையர் அலுவலகம் 
பல்வேறு சாதக உத்திரவுகளை
ஒப்பந்த ஊழியர்களுக்காக பிறப்பித்தாலும்...
நமது நிர்வாகம் அதனை நடைமுறைப்படுத்துவதில்லை.
இம்முறை பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவை
BSNL நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்...
இல்லையெனில் ஒப்பந்த ஊழியர்களுக்காக அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுப்போராட வேண்டிய அவசியம் உள்ளது.

Thursday, 17 October 2019


உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

 18/10/2019 அன்று நாடு முழுவதும் நடைபெறவிருந்த
BSNL அனைத்து சங்க உண்ணாவிரதப் போராட்டம் 
 நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் 
அடிப்படையில் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 17/10/2019 நடந்த பேச்சுவார்த்தையில்
NFTE, BSNLEU, AIBSNLEA , SNEA, FNTO, BSNLMS, SNATTA, 
ATM BSNL, BSNL OA  மற்றும் TOA BSNL 
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.
காலை 10 மணியளவில் DIRECTOR(HR)
இயக்குநர்(மனிதவளம்) மற்றும் உயர் அதிகாரிகளுடனும்...
மாலை 03 மணியளவில் CMDயுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிரச்சினைகளின் தீர்வில் நிர்வாகம் அளித்த உறுதிமொழிகளின் பேரில்
நமது உண்ணாவிரதப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் உறுதிமொழிகள்
  • செப்டம்பர் மாதச்சம்பளம் 23/10/2019 அன்று வழங்கப்படும்.
  • ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி விரைவில் வழங்கப்படும்.
  • BSNL புத்தாக்கம் குறித்து 23/10/2019ம் தேதி வாக்கில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
  • மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவிற்குப்பின் BSNLக்கு வங்கிக்கடன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.


நிர்வாகத்தின் வேண்டுகோள்
  • சேவைத்தரத்தை உயர்த்த வேண்டும்.
  • செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • வருவாயை உயர்த்த வேண்டும்.


பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது மேலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற செயல்களால் BSNL சேவை முற்றாக முடங்கிப்போயுள்ள நிலை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டப்பட்டது. நிர்வாகம் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளது. மேலும் BSNL நிர்வாகத்தின் வெளிப்படையற்ற தன்மையும்,  நடவடிக்கைகளும், தொழிற்சங்கங்களை மதிக்காத போக்கும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. வருங்காலங்களில் நிர்வாகத்திற்கும் சங்கங்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படும் எனவும், COMMUNICATION GAP எனப்படும் பரிமாற்ற இடைவெளி இனி இருக்காது எனவும் நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட முன்னேற்றங்களின் அடிப்படையில் 18/10/2019 அன்று நடைபெறவிருந்த அகில இந்திய உண்ணாவிரத அறப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 30/10/2019 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும்.

Tuesday, 15 October 2019

அகிலம் மிரளும்
அகில இந்திய வேலை நிறுத்தம் 

ஆளும் மத்திய அரசின்
மக்கள் விரோத...  தொழிலாளர் விரோத
 கொள்கைகளை எதிர்த்து
08 – ஜனவரி - 2020
தேசத்தின் அனைத்து தரப்பு 
மத்திய தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் 
உலகின் மாபெரும் 
வேலைநிறுத்தம்
பத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்...
அனைத்து பொதுத்துறை மற்றும்
மத்திய அரசு தொழிற்சங்கங்கள் ஆதரவு...
20 கோடித் தொழிலாளர்கள் பங்கேற்பு...

மக்களை வதைக்கும்...
மானுடத்தை சிதைக்கும்...
தொழில்களை நசிக்கும்...
தொழிலாளரை மிதிக்கும்...
மக்கள் விரோத...
மானுட விரோத...
தொழிலாளர் விரோத...
மத்திய அரசைக்கண்டித்து...
தோழர்களே... அணி திரள்வீர்...