Tuesday, 16 October 2018


என் சோகக்கதையைக் கேளு…

என் பெயர் R.சுதா
அலுவலகக் கண்காணிப்பாளர் – காரைக்குடி
இப்போது நம்ம பெயருக்கு மட்டும்
ஒன்னும் குறைச்சல் இல்லை….

நான் RTP என்னும் அன்றாடக்கூலியாய் பணிக்குள் அமர்ந்து
11/08/1986ல் தொலைபேசி இயக்குநராய்ப் பணி நிரந்தரம் பெற்றேன்.

தோழர்.குப்தா காலத்தில் SR.TOA பதவி உயர்வு வந்தது…
மொத்த சேவையையும் சேர்த்து முதற்கட்டப்பதவி உயர்வும் வந்தது…
11/08/2002ல் 7100-200-10100 சம்பளவிகிதத்தில் OTBP கிட்டியது.

அதன் பின் நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது…
அப்போதுதான் எனக்கு சோதனை துவங்கியது…

01/10/2004ல் நாலுகட்டப்பதவி உயர்வு பெற்ற
என்னை விட சேவையில் இளையோர்களுக்கு
சம்பளம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது…

எனவே சிலரது ஆலோசனையின்படி
01/10/2004 முதல் நாலுகட்டப்பதவி உயர்வு
பெற விருப்பம் தெரிவித்தேன்…
அங்கேதான் என் சோகம் ஆரம்பமானது…

7100-200-10100 சம்பளவிகிதத்தில் இருந்த நான்
நாலுகட்டப்பதவி உயர்வு என்னும்
பரமபத விளையாட்டில் 6550-185-9325 என்னும்
சம்பளவிகிதத்திற்கு கீழே தள்ளப்பட்டேன்….

உலகிலேயே பதவி உயர்வு பெற்று…
கீழே உள்ள சம்பளத்திற்கு தள்ளப்பட்ட
கொடுமை இங்கு மட்டுமே நிகழ்ந்தது…
எழுத்தர்… இயக்குநர் என்றால்தான் கேட்பார் யாருமில்லையே…

01/10/2011ல் அடுத்த நாலுகட்டப்பதவி  உயர்வு கிட்டியது…
7100-200-10100 சம்பளத்திற்கு இணையான
ரூ.13600-25420 சம்பள விகிதத்தில் சம்பளம் பொருத்தப்பட்டது..

அதாவது 11/08/2002ல்
நான் பெற்ற 7100-200-10100 சம்பளத்தை
01/10/2004ல் இழந்து… மீண்டும்
01/10/2011 அன்று மதுரையை மீட்ட சுதாவாக அடைந்தேன்…

இனிமேல்தான் ஒரிஜினல் சோகம் உருவானது…
01/01/2015ல் ரூ.25040/= அடிப்படைச்சம்பளம் அடைந்து
01/01/2016ல் வெறும் ரூ.380/= ஆண்டு உயர்வுத்தொகை பெற்று
ரூ.25420/- உச்சநிலை சம்பளம் பெற்று தேக்கநிலையை அடைந்தேன்…
01/01/2017ம் ஆண்டு தவறேதும் செய்யாமல்…
தேக்கநிலையால் ஆண்டு உயர்வுத்தொகை இழந்தேன்…

மூன்றாவது ஊதிய மாற்றம் 01/01/2017 முதல்
அமுல்படுத்தப்பட்டால் தேக்கநிலை சற்று தளரும்…
ஆனால் 2016ல் ஆண்டு உயர்வுத்தொகை முழுமையாக அடையாததால்
மூன்றாவது ஊதியமாற்றத்தில் முழுமையாக
ரூ.1000/= அடிப்படைச்சம்பளத்தில் குறையும்…
என் ஆயுள் முழுக்க இதன் பாதிப்பு தொடரும்…

என் போன்றவர்கள் செய்த தவறென்ன?
7100-200-10100 சம்பளத்தில் OTBP பெற்றது தவறா?

01/10/2004 முதல்…
நாலுகட்டப்பதவி உயர்விற்கு விருப்பம் தந்தது தவறா?

என்னைப்போன்றவர்கள் நாடுமுழுக்க ஆயிரம் பேர் உண்டு…
ஆனால் ஒவ்வொருவரும் செய்வதறியாது விழிக்கின்றனர்….

உயர்ந்த பட்ச சம்பளத்தில் இருந்தோரை…
பதவி உயர்வு என்ற பெயர் சொல்லி
கீழ்மட்ட சம்பளத்திற்கு கொண்டு வந்ததென்ன நியாயம்?

என் போன்றோருக்கு நேர்ந்த அநியாயத்தை
அகற்ற வேண்டியது இலாக்காவின் பணியல்லவா?

எண்ணற்ற தோழர்களுக்கு இழைக்கப்பட்ட
அநீதியைக் களைய வேண்டியது சங்கத்தின் கடமையல்லவா?

உழைக்கும் பெண்கள் மாநாடு

AIWWF - AITUC
அனைத்திந்திய உழைக்கும் 
பெண்கள் சம்மேளனம்

அகில இந்திய உழைக்கும் பெண்கள்
தேசியக்கருத்தரங்கம்
 -------------------------------------------------------------------
2018 அக்டோபர் 27…28…29…. 
இராஜா அண்ணாமலை மன்றம்  
சென்னை
 -------------------------------------------------------------------
பங்கேற்பு
தோழியர்.அமர்ஜித் கெளர்
பொதுச்செயலர் – AITUC
மற்றும் தலைவர்கள்….

தோழியர்களே… அணி திரள்வீர்…

Monday, 15 October 2018


முதல் கல்… 

BSNL சொசைட்டியின் ராங் கால்..
என்ற தலைப்பிட்டு தமிழகம் முழுவதும்
முகநூல் மற்றும் Wattsappல்
பரபரப்பாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைக்கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான
வெள்ளனூர் நிலம் விற்கப்பட்டு விட்டது…
பலகோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது…
கூட்டுறவு சங்க அப்பாவி உறுப்பினர்களுக்கு
சொந்தமான சொத்து சூறையாடப்படுகிறது  
என அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியைப் படித்ததில்
நமக்கு ஒன்றும்
ஆச்சரியமோ… அதிர்ச்சியோ இல்லை…
சென்னைக் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் என்பது
காலம் காலமாக நடக்கும் நிகழ்வுதான்…
இப்போது எல்லையற்றுப் போய்க்கொண்டிருக்கிறது….
அவ்வளவுதான்…

ஊழல் புரிபவர்கள்…
பொதுச்சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்…
இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள்
சிக்கி சின்னாபின்னமாகிப்போவார்கள்… என்பது நிச்சயம்…

கூட்டுறவு சங்கப் பிரச்சினையில்
நமக்கு எழுவது ஒரே ஒரு கேள்விதான்…
நமது BSNL நிறுவனத்தில்…
தமிழகத்தில்….
அகில இந்திய அளவில்…
சென்னைக்கூட்டுறவு சங்கத்திடம்…
கையேந்தாத சங்கம் உண்டா?
கையேந்தாத அமைப்பு உண்டா?
கையேந்தாத தலைவர்கள் உண்டா?
சுரண்டி சுகம் காணாதவர்கள் எவரேனும் உண்டா?

பைபிளில் கூறப்பட்டுள்ளது போல…
அப்படி யாரேனும் ஒருவர் இருந்தால்…
அவர்கள் முதல் கல்லை எறியட்டும்…

Wednesday, 10 October 2018


நம்பிக்கையே நமது மூலதனம்
மூன்றாவது ஊதிய மாற்றம் சம்பந்தமாக
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடந்த
ஏழாவது கூட்டம் சற்று ஏழரையாகவே முடிந்துள்ளது.

தேக்கநிலையைத் தவிர்க்க...
NE 4 மற்றும் NE 5 ஊதியவிகிதங்களின் MAXIMUM உச்சபட்சத்தை 
சற்றுக்கூடுதலாக்க வேண்டும் என்ற
ஊழியர் தரப்பு கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே 10/09/2018 அன்று நிர்வாகம் முன்மொழிந்த
சம்பளவிகிதங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தம் நிலவியதால் நிர்வாகத்தின் முன்மொழிவை
ஊழியர் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

சம்பள விகிதம் முடிவுக்கு வந்து விட்டது.
அடுத்த நமது இலக்கு ALLOWANCE என்னும் படிகள் மாற்றம்தான்…
படிகளில் முக்கிய இடம் வகிப்பது வீட்டு வாடகைப்படியாகும்.

6வது சம்பளக்குழுவால் 
30,20,10 சதம் என உயர்த்தப்பட்ட வீட்டுவாடகைப்படி
ஏழாவது சம்பளக்குழுவால்... 
24,16,8 சதம் எனக் குறைக்கப்பட்டது.

A பிரிவு நகரங்களில் 30 சதமாக இருந்த வீட்டு வாடகைப்படி
தற்போது 24 சதம் என 6 சதம் குறைக்கப்பட்டாலும் கூட
புதிய ஊதிய விகிதத்தில் கணிசமான உயர்வைப் பெற்றுத்தந்துள்ளது.

A பிரிவு நகரங்களில்… தற்போது
ரூ.7760/= அடிப்படைச்சம்பளம் பெறும் ஊழியருக்கு
30 சத அடிப்படையில் 
ரூ.2328/= வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படுகின்றது.

தற்போதுள்ள ரூ.7760/= அடிப்படைச்சம்பளம்
ரூ.19000/= என புதிய சம்பளமாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
அப்படியானால் 24 சத அடிப்படையில் வீட்டுவாடகைப்படி
ரூ.4560/= வழங்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள வீட்டுவாடகைப்படியை விட
ரூ.2232/= கூடுதலாகக் கிடைக்கும்.
A பிரிவு மட்டுமல்ல அனைத்துப் பிரிவு நகரங்களிலுமே 
வீட்டு வாடகைப்படி கூடுதலாகவே கிடைக்கும்.

துவக்க நிலை ஊதியமான ரூ.19000/= பெறும்
அடிமட்ட ஊழியருக்கே வீட்டுவாடகைப்படி
மாதம் ரூ.2232/= உயருமானால்…
மற்ற ஊதிய நிலைகளைப் பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.

எனவேதான் நிர்வாகம் வீட்டுவாடகையை
புதிய ஊதிய விகிதத்தில் தர மறுப்பு தெரிவித்துள்ளது.
இதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காலம் காலமாக ஊழியர்கள் வீட்டுவாடகைப்படி
விவகாரத்தில் ஏமாற்றப்படுவது இயற்கையாக நிகழும் ஒன்று.
வீட்டு வாடகைப்படி என்பது ஊழியர் ஒருவர்
ஓய்வு பெறும்போது அவரோடு சேர்ந்து ஓய்வு பெற்றுவிடும்.
ஆனாலும் கூட நிர்வாகம் கண்மூடித்தனமாக இதை மறுத்துள்ளது.
ஊழியர் தரப்பும் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளது.

புதிய ஊதிய விகிதங்களில் ஏற்பட்ட
அமைதியான உடன்பாடு போலல்லாமல்
வீட்டுவாடகைப்படி விவகாரம் சற்று விவகாரமாகவே முடியும்.
ஆனாலும் நாம் நமது குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
நமது ஒற்றுமையான போராட்டங்கள் மூலமே
புதிய ஊதியத்தில் வீட்டுவாடகையை வென்றிட முடியும்.
நம்பிக்கையும்… போராட்டமுமே நமது மூலதனம்….

Tuesday, 9 October 2018


ஒருபோதும்... ஓய்ந்திட மாட்டோம்...

08/10/2018 அன்று டெல்லியில்...
அனைத்து சங்கக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சரின் வாக்குறுதிகள் தண்ணீரில் எழுத்தாய்
தடமற்றுப்போன நிலை பற்றி ஆழ்ந்து விவாதிக்கப்பட்டது.
எனவே நமது ஒன்றுபட்ட போராட்டங்களைத்
தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்திட்டம்

29/10/2018 அன்று நாடெங்கும் நமது கோரிக்கைகளை
ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவருவது…

30/10/2018 அன்று மாவட்டத்தலைநகர்கள் 
மாநிலத்தலைநகர்கள் மற்றும் 
தலைநகர் டெல்லியில் மாபெரும் தர்ணா

14/11/2018 அன்று கோரிக்கை ஊர்வலம் 
மற்றும் கோரிக்கை மனு அளித்தல்.

30/11/2018க்குப் பின் 
காலவரையற்ற வேலை நிறுத்தம் 
 ----------------------------------------------------------------------------
கோரிக்கைகள்
மத்திய அரசே… BSNL நிர்வாகமே…

செல்கோபுரங்களைத் தனியார் பராமரிப்பிற்கு அனுமதிக்காதே..
ஆண்டிற்கு 1800 கோடி வீண் செலவுசெய்யாதே…

டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவின்படி
ITS அதிகாரிகளை  DOTக்குத் திருப்பி அனுப்பு…

மூன்றாவது ஊதியமாற்றத்தை அமுல்படுத்து…

ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…

ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்து…

4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்கீடு செய்…
  ----------------------------------------------------------------------------

தோழர்களே…
ஓயாது கத்தும் கடலில்… 
ஒருபோதும் அலைகள் ஓய்வதில்லை…
மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக 
ஓயாது கத்தும் ஊழியர்களின்...
போராட்டங்களும் ஓய்வதில்லை…

தொடர்ந்து நாம் போராடுவோம்….
நம் உரிமைகளை வெல்வோம்..

ஒப்பந்த ஊழியர் போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக
10/10/2018 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
NFTE – BSNLEU இணைந்து அறப்போர் நடத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று 09/10/2018 
நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 ----------------------------------------------------------------------------
ஆகஸ்ட் மாதச்சம்பளம் 
உடனடியாகப் பட்டுவாடா செய்யப்பட்டது.

செப்டம்பர் மாதச்சம்பளம் 
விரைந்து பட்டுவாடா செய்யப்படும்.

புதிய HOUSE KEEPING குத்தகை 
10/10/2018 முதல் அமுல்படுத்தப்படும்.

3ந்தேதிக்குள் GM அலுவலகத்திற்கு 
வருகைப்பதிவு அனுப்பிட வேண்டும்.

10ம் தேதிக்குள் பில்கள் பரிசீலனை 
செய்யப்பட்டு பட்டுவாடாவுக்கு அனுப்பப்படும்.

போனஸ் வழங்கக்கோரி 
குத்தகைக்காரர்களுக்கு கடிதம் எழுதப்படும்.

போனஸ் வழங்காத பட்சத்தில் 
அவர்களது காப்புத்தொகை கைவைக்கப்படும்.

காவல்பணி செய்யும் தோழர்களின் 
வார ஓய்வு பிரச்சினை சரிசெய்யப்படும்.

பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள EPF தொகை 
பற்றி விளக்கம் கேட்டு முடிவெடுக்கப்படும்.

திறனுக்கேற்ற கூலி வழங்கிட குழு அமைக்கப்பட்டு அதற்கேற்ப முடிவு செய்யப்படும்.

பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் சார்பாக
துணைப்பொதுமேலாளர், உதவிப்பொதுமேலாளர்
மற்றும் துணைக்கோட்ட அதிகாரி(பொது)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகத்தின் அணுகுமுறைக்கு நமது நன்றிகள் பல.

எனவே நமது இணைந்த போராட்டம்
24/10/2018க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Monday, 8 October 2018


கால்கள் பயணிக்கட்டும்
அக்டோபர் 9 
சேகுவேரா நினைவு தினம்
 ----------------------------------------------------------- 
எங்கெல்லாம்
ஒடுக்கப்பட்டவர்களின்
இதயத்துடிப்புக்கள்
கேட்கின்றனவோ…
அங்கெல்லாம்
நமது கால்கள் பயணிக்கட்டும்…

- சேகுவேரா-