Monday 30 June 2014

ஜூலை 8
அறப்போராட்டம் 
நிறைவேறாத விருப்ப மாற்றல்கள்.. 
நீண்ட நாளாய் உறங்கும் பதவி உயர்வுகள் 
ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள்..
ஒழுங்கீனம் மிக்க அதிகாரிகள்...
கோமா  நிலையில் BSNL சேவைகள்..
கோமாளி  நிலையில் நிர்வாகம்..

காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தின் 
உதவாக்கரை போக்கை எதிர்த்து 
அண்ணல் வழியில் 
அறப்போராட்டம் 

ஜூலை - 8 
செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

தோழர்களே..
நிர்வாக மயில்கள் தானாக 
இறகுகள் போடுவதில்லை..
இணைந்த கரங்கள் உயர்த்துவோம்..
இறகுகளை பறித்திடுவோம்..

அணி திரள்வீர்... 
தோழர்களே..
NFTE காரைக்குடி மாவட்ட சங்கம் 

Friday 27 June 2014

JCM  நிலைக்குழு 
STANDING COMMITTEE

26/06/2014 அன்று நடைபெற்ற JCM நிலைக்குழு கூட்டத்தில் பின்வரும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் 
இஸ்லாம் மற்றும் C.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • RM/GRD தோழர்களின்   STAGNATION தேக்கநிலை தீர்வு எட்டப்படவில்லை. எனவே இயக்குனர் HR வசம் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
  • போனஸ் வழங்குவது பற்றி அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் விவாதிக்கப்படும்.
  • 01/01/2007 முதல் சம்பள மாற்ற நிலுவை வழங்குவது பற்றி DOTயிடம் இருந்து பதிலேதும் இல்லாததால் மீண்டும் DOTயை அணுகுவது.
  • ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக DOTக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும்.
  • 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் ஊனமுற்ற தோழர்களுக்கு போக்குவரத்துப்படி மாற்றியமைக்கப்படும்.
  • போட்டித்தேர்வு எழுதி பெற்ற பதவி உயர்வுகளை POST BASED PROMOTIONS  நாலு கட்டப்பதவி உயர்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது  என்ற கோரிக்கையை அதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிசீலனை செய்யும்.
  • 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள் அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவி உயர்வாகப்பெறலாம். இது  TTA/DRIVER மற்றும்   LDC/TOA மாறுதல் செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.
  • SC/ST  தோழர்களுக்கு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்தல் பற்றி குழுவின் பரிந்துரை எதிர்பார்க்கப்படுகின்றது.
  • LTC மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் பற்றி DIRECTOR(HR) உடன் விவாதிக்கப்படும்.
  • BSNLலில் நியமனம் பெற்ற தோழர்களுக்கு ஓய்வூதியப்பலனில் BSNL பங்காக அடிப்படைச்சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 2 சதம் பங்களிப்பு தருதல் சம்பந்தமான பரிந்துரை பற்றி முடிவெடுக்கப்படும்.
  • TM பயிற்சி முடித்து பதவி உயர்வு பெறாத தோழர்களின் நிலை பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை.
  • கருணை அடிப்படை வேலை சம்பந்தமாக மாற்றுத்திட்டங்களை உருவாக்குவது பற்றி சங்கங்களுடன் ஆலோசனை செய்யப்படும்.

Thursday 26 June 2014

செய்திகள் 

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு JAC நமது அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின் தலைமையில் 25/06/2014 அன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் இரண்டு சந்திப்புக்களை 
மீண்டும் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
ஓன்று.... BSNL புத்தாக்கம் பற்றி விவாதிக்க  புதிய அமைச்சரைச்சந்திப்பது.  
இரண்டு... ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக DOT  செயலரை சந்திப்பது.

NFTE கேரள மாநில மாநாடு சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது. புதிய மாநிலச்செயலராக தோழியர்.லத்திகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநிலச்செயலர் பொறுப்பிற்கு ஒரு தோழியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  நமது வாழ்த்துக்கள்.

அனைத்து ஊழியர்களுக்கும் மாதந்தோறும் ரூ.200/= பேசும் மதிப்பிலான இலவச SIM வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் 
வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வில் SSLC என்னும் கல்வித்தகுதியை தளர்த்தவும், எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கும் முறையை விலக்கவும் கோரி நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் அளித்துள்ளது. இதனிடையே தமிழக INTRANETல் வெளியிடப்பட்டிருந்த தேர்வு அறிவிப்பு காணாமல் போயே போச்சு.. காரணம் அறிந்தோர் கூறலாம்.

நடைபெற்ற BSNL BOARD வாரிய கூட்டத்தில் அரசு தரப்பு நியமன இயக்குனர் கலந்து கொள்ளாத காரணத்தினால் JTO/TTA புதிய ஆளெடுப்பு விதிகளுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவேதும் ஏற்படவில்லை.

Wednesday 25 June 2014

காரைக்குடி மாவட்டத்தில்
நிரந்தர ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்களின் 
நீண்ட நாள் நிறைவேற்றப்படாத 
கோரிக்கைகளை வலியுறுத்தி 

NFTE - TMTCLU
இணைந்த  ஆர்ப்பாட்டம்

இன்று 26/06/2014 - வியாழன் 
மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்
 காரைக்குடி.

-:சிறப்பு பங்கேற்பு:-
தோழர். பழ.இராமச்சந்திரன் - AITUC 

குரல் உயர்த்தி கோரிக்கை சொல்வோம்..
கரம் உயர்த்தி உரிமைகள் வெல்வோம்..
வாரீர் தோழர்களே...


சிவகங்கை பகுதியில் 
இன்று வரை ஒப்பந்த ஊழியர்களுக்கு 
கூலி வழங்காத கொடுமையைக் கண்டித்து 

NFTE - TMTCLU 
இணைந்த ஆர்ப்பாட்டம்.

இன்று 26/06/2014 - வியாழன் 
மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் 
சிவகங்கை.

 பங்கேற்பு : தோழர்கள் 

P.இராமசாமி 
TMTCLU மாவட்டச்செயலர் 
S.முருகன் 
NFTE மாவட்டத்தலைவர் 
K.தமிழ்மாறன் 
NFTE மாவட்ட உதவிச்செயலர் 

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே 
கூலி கொடுக்கப்பட வேண்டும் என்றார்..
அண்ணல் நபிகள் நாயகம்..
இங்கோ.. தொழிலாளியின்  
வியர்வை காய்ந்து..
உதிரம் காய்ந்து...
உடலும் காய்ந்து.. 
உயிரும் காய்கின்றது....

மாதம் ஓன்று ஆனபின்னும்
ஒப்பந்தக்காரனுக்கும்...
ஒப்பேறாத நிர்வாகத்திற்கும்..
உடனடியாக கூலி கொடுக்க 
மனம் காய்கின்றது..

காய்ந்த வயிறுகளை ஈரமாக்க..
காய்ந்த மனங்களை...
எதிர்த்து களம் காண்போம்..
வாரீர்.. தோழர்களே... 

Tuesday 24 June 2014

GPF 
வழி மேல் விழிகள்..

இப்போதெல்லாம் நமது தோழர்கள் 
சந்தித்துக்கொண்டால் கேட்கும் முதல் கேள்வி
" தோழரே.. GPF FUND வந்து விட்டதா? என்பதே...

  இப்படித்தான் முதுகுளத்தூர் பகுதியில் இருந்து 
நாளொன்றுக்கு நாலு முறையாவது  போன் செய்யும் 
தோழர்.மலைராஜன் என்பவர் தொலைபேசியில் கேட்டார்..

"சார்.. GPF வந்துவிட்டதா? என்று..
எத்தனையோ கேள்விகளுக்கு எகத்தாளமாகப் பதில் சொல்லத்தெரிந்த நமக்கு ஏனோ.. 
இதற்கு மட்டும் பதிலே சொல்ல முடியவில்லை.

ஆனாலும் சங்கத்தலைவர்கள் 
எதையாவது சொல்லி சாமாளிக்க வேண்டுமே.. 
நம்மிடம் கேள்வி கேட்ட தோழர். மலைராஜனிடம் 
நாம் ஒரு கேள்வி கேட்டோம். 
"தோழர்.மலைராஜன் முதுகுளத்தூர் பகுதியில் 
இன்று மழை வருமா? என்று.. 

அவர் சொன்னார்.."சார் எனக்கு என்ன தெரியும்..
 மழை வருமா?  என்பது வானிலை  ரமணனுக்கே தெரியாத வானத்து ரகசியம் அல்லவா.. 
மேலும் மழைப்பேறும்.. மகப்பேறும்...
மகாதேவனுக்கே தெரியாது என்ற 
பழமொழி உங்களுக்குத் தெரியாதா? 
மழைராஜனுக்கே.. தெரியாத ரகசியம் 
சாதாரண போன்மெக்கானிக் 
மலைராஜனுக்கு எப்படித் தெரியும்? 
என்று  நம்மைத்திருப்பிக்கேள்வி கேட்டார். 

நாம் அவரிடம் சொன்னோம்..
"எப்படி மழை வருவது உங்களுக்குத்தெரியாதோ.. 
அதைப்போலவே GPF வருவதும் எனக்குத்  தெரியாது. 
எனக்கு மட்டுமல்ல இந்தியத்திருநாட்டில் எந்த தலைவருக்குமே 
இது பற்றி உறுதியாக சொல்லத்தெரியாது.. 
இது வரும்.. ஆனால்.. வராது ரகம்..
என்று சொல்லி முடித்தோம்.. 

ஆனால் எதிர்முனையில் எந்த சத்தத்தையும் காணோம். 
பின்புதான் புரிந்தது மலைராஜன் தொலைபேசியைத் துண்டித்து 
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று. 

வாராது வரும் மழை போலவே நேற்று வந்தது GPF. 
பெருவானம் போல் மழை பெய்யும் என்று காத்திருந்தோம்.. 
ஆனால் GPF நிதியோ தூவானம் போல் தூவிச்சென்று விட்டது. 
காரைக்குடி மாவட்டத்திற்கு கேட்டது 50 லட்சம். 
கிடைத்தது 30 லட்சம். 
கன்னடர்கள் காவிரியில் திறந்து விடும் 
டிஎம்சி கணக்காக GPFம் ஆகி விட்டது. 

கடைசியில் 50 ஆயிரம் ரூபாய் வறுமைக்கோடு 
என்று நிர்ணயித்து 50 ஆயிரத்துக்கு கீழே விண்ணப்பித்திருந்தவர்களுக்கு 
நேற்று GPF பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 

50ஆயிரத்துக்கு மேலே கல்யாணச்செலவுக்கும், 
கல்விக்கட்டணத்திற்கும் விண்ணப்பித்தவர்கள் 
வலியோடு வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

நேற்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள்..
அவரது நினைவாக பாடல் வானொலியில் ஒலித்தது.. 

"உன்னைச்சொல்லிக்குற்றமில்லை.. 
என்னைச்சொல்லிக்குற்றமில்லை.. 
காலம் செய்த கோலமடி.. 
கடவுள் செய்த குற்றமடி.." 

Monday 23 June 2014

போன் மெக்கானிக் 
இலாக்காத்தேர்வு 

தமிழகத்தில் 2013ம் ஆண்டிற்கான போன்மெக்கானிக் 50 சத காலியிடங்களுக்கான  தேர்வு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
  • காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
  • இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
  • எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
  • 100 மதிப்பெண்கள். 
  • தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS.
  • பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 37ம் பெற வேண்டும்.
  • SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம் பெற வேண்டும்.
  • கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி 
  • தமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள்: 1413
  • பொதுப்பிரிவு: 1101 - SC-208, ST =104
  • சேலத்தில் மட்டும் காலியிடங்கள் இல்லை..
  • உடல் ஊனமுற்றோர் காலியிடங்கள்: 79
  • வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள்..

தோழர்களே...
                         போன்மெக்கானிக் தேர்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் தமிழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தேர்வு அறிவிப்பால் எத்தனை தோழர்கள் பயன் பெறுவார்கள் என்பது பெரும் கேள்விக்குறி. காரணம் RM/GRD பதவிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. 

                        உதாரணமாக காரைக்குடி மாவட்டத்தில்  80 காலியிடங்கள்.             12 தோழர்கள் RM/GRDயாகப் பணி புரிகின்றார்கள்.  ஆனால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்  ஒருவர்  கூட இல்லை                 என்பது வேதனையான செய்தியாகும். கல்வித்தகுதியைத்தளர்த்தாமல் எத்தனை தேர்வு அறிவிப்பு வந்தாலும் ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை.

Sunday 22 June 2014

செய்திகள் 

மத்திய அமைச்சரவையின் பணி நியமனக்குழு APPOINTMENT COMMITTEE, BSNLக்கு புதிய CMDயாக  முன்மொழியப்பட்ட தற்போதைய இயக்குனர்(CM) திரு.ஸ்ரீவத்சவா அவர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எனவே  MTNL போலவே BSNL நிறுவனமும் 
CMD இல்லாத நிறுவனமாக ஜூன் மாதத்திற்குப்பின் 
காட்சி அளிக்கப்போகின்றது.

VIDEOCON தொலைத்தொடர்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 
11 சதம் முதல் 38 சதம் வரையிலான 
சம்பள உயர்வு தருவதற்கு முடிவு செய்துள்ளது.

வரக்கூடிய BUDGET  வரவு செலவு அறிக்கையில் தொலைத்தொடர்பு சேவைகள் மேம்பாட்டிற்காக கூடுதலாக 7000 கோடி நிதி உதவி அளிக்குமாறு தொலைத்தொடர்பு அமைச்சர் 
நிதியமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும்  5 ஆண்டுகளில் அகன்ற அலைவரிசை BROAD BAND வருமானம் ஏறத்தாழ 8 சதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் தனி இணைப்பில் கிடைக்கும் வருமானம் ARPU குறைந்து வருகின்றது.

Friday 20 June 2014

சேலம்
ஒற்றுமையின் பாலம்

20/06/2014 அன்று சேலத்தில்  
தோழியர்.லைலா பானு அவர்கள்
 தேசியக்கொடியை ஏற்றி வைக்க 
தோழர்.குன்னூர் இராமசாமி அவர்கள் 
சங்கக்கொடியை ஏற்றி வைக்க
 அவையடக்கம் மிகுந்த அவையடக்கத் தெரிந்த  
தோழர்.இலட்சம் அவர்கள் தலைமையேற்க

சேலம் மூத்தவர் தோழர்.இராஜா அவர்கள் 
நீத்தாருக்கு அஞ்சலி உரைக்க
இளையவர் பாலகுமார்
  வந்தோருக்கு வரவேற்புரையாற்ற
சேலத்தின் கூடவே இருக்கும் வேலூர் 
சென்னக்கேசவன் கூடுதல் வரவேற்பு நல்க 

இணக்கம் மிகுந்து இனிமை மிகுந்து 
 பொறுமையோடு ஒற்றுமையின் அருமை காத்து 
நமது தமிழ் மாநில செயற்குழு 
முக்கனியின் சுவை மிகுந்து நடந்து முடிந்துள்ளது.

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள் 
திசை திரும்பிய தேசம், 
திசை மாறாமல் செல்லும் NFTE சங்கம், 
திசை தெரியாமல் நிற்கும் BSNL 
ஆகியவை பற்றி அருமையான சிந்தனைகளை 
செய்திகளை நல்கினார்.

கோவை சுப்பராயன் அவர்கள் 
ஒற்றுமையின் அவசியத்தை உணர்வோடு வலியுறுத்தி 
அதற்காக பாடுபட்ட தோழர்கள்.ஆர்.கே., மாலி
 ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார்.

சம்மேளனச்செயலர் இலக்கியச்செம்மல் தோழர்.ஜெயராமன் அவர்கள் ஒற்றுமையை பிரசவிக்கத் தான் மேற்கொண்ட தவத்தையும் அதனால் பட்ட வலியையும் இலக்கிய வழியில் இன்முகம் மாறாமல்  கூறினார்.

சம்மேளன அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அமைப்பு விதிகளின் அவசியம் கூறி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள்.சேது,ஜெயபால்,தமிழ்மணி ஆகியோர்  ஒற்றுமை பெருகிட உணர்ச்சிப்பெருக்கோடு உரையாற்றினர்.

ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச்செயலர் தோழர்.செல்வம் அவர்கள் 17/07/2014 அன்று சென்னையில்  நடைபெற இருக்கும் ஒப்பந்த ஊழியர் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்தார். 

RJCM செயல்பாடு மற்றும் பணிக்குழு பற்றி 
முன்னணித்தோழர்கள் தங்கள் கருத்துக்களை 
கருத்தாழமுடன் எடுத்துரைத்தனர்.

மாவட்டச்செயலர்கள்,மாநிலச்சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எவ்வித பிரச்சினையுமின்றி பேசி முடித்தனர்.

நிறைவாக அருமைத்தோழர்.ஆர்.கே., அவர்கள் இன்றைய புதிய சூழலில் தொழிலாளர்கள் தங்கள் தொல்லைகள் தீர்ந்திட, நல்லவை நடந்திட  எல்லை கடந்த ஒற்றுமை காக்கவும், தங்களைச் சுற்றியுள்ள குறுகிய எல்லைகளைத் தகர்த்திடவும் அறைகூவல் விடுத்தார்.

பெற்றவர் கை மாங்கனி பெற்றிட
 அவசரமாக உலகைச்சுற்றியவர் உண்டு...
இருந்த இடத்திலேயே பெற்றோரைச்சுற்றி  
மாங்கனி பெற்றவரும் உண்டு...
நமது இயக்கமோ.. மாங்கனி நகரில் 
தன்னையே சுற்றி  ஒற்றுமைக்கனி பறித்துள்ளது.

நீடு வாழ்க...சேலம்..
நிலைத்து வாழ்க..
ஒற்றுமைப்பா(ப)லம்..

Thursday 19 June 2014

தமிழ் மாநில செயற்குழு 
=======================
20/06/2014 
காலை 09.30 மணி 
தமிழ் சங்கம்
சேலம் .
==============================
பங்கேற்பு : தோழர்கள் 

ஆர்.கே.
சேது
பட்டாபி 
 ஜெயபால் 
ஜெயராமன்
தமிழ்மணி 
கோபாலகிருஷ்ணன் 
மற்றும் தலைவர்கள்..

சீரியன சிந்திப்போம்..
சிறியன தவிர்ப்போம்..
வாரீர்.. தோழர்களே..

Wednesday 18 June 2014

ஓய்வூதியம் 
புதிய வழிமுறைகள் 

ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் பெறுவதிலும் 
ஓய்வூதிய உத்திரவு PENSION PAYMENT ORDER என்ற PPO பெறுவதிலும் பெரும் தாமதம் நிலவுகின்றது. தற்போது வங்கிகள்/அஞ்சல் அலுவலகம் மூலமாகவே PPO ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நடைமுறையில் மிகுந்த தாமதம் ஏற்படுவதால் 12/06/2014 அன்று 
ஓய்வூதிய இலாக்காத்துணை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. 

இத்தகைய தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு இனிமேல் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் அலுவலகம் மூலமாகவே ஓய்வூதிய உத்திரவு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு அவர்களுக்குரிய  PPO மற்றும் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட உறுதிமொழிப்பத்திரம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்களிடமிருந்து அனுப்பப்படும். இதன் மூலம் ஓய்வு பெறும் தோழர்களின் பெருமளவு சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Tuesday 17 June 2014

ஜூன் 18
தியாக சீலர் 
கக்கன்
 பிறந்த நாள் 
நேர்மை - தூய்மை -  எளிமை 

அரசியலில் இன்று 
காணக்கிடைக்காத 
நேர்மை 
தூய்மை  
எளிமையின் 
இலக்கணம்...
விடுதலை வீரர் 
திரு.கக்கனின்
பண்புகளைப் போற்றுவோம்...
செய்திள்
==========
அதிகாரிகள் சங்கத்தேர்தல் 

அதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 
10/12/2014 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பதிவு செய்து ஓராண்டுகாலம் ஆகியுள்ள அதிகாரிகள் சங்கங்கள் கலந்து கொள்ளலாம். தேர்தல் நடைபெறும் வரை தகுதியுள்ள சங்கங்களுக்கு உரிய தொழிற்சங்க சலுகைகள் வழங்கப்படும்.
==============================================================
இடைக்கால நிவாரணம் 

மத்திய அரசு ஊழியர்களின் JCM தேசியக்குழு  
 25 சதம் அடிப்படைச்சம்பளத்தில் இடைக்கால நிவாரணமாக 
கோரிக்கை வைத்துள்ளது. குறைந்தபட்ச இடைக்கால நிவாரணமாக  ரூ.2000/= கோரியுள்ளது.
==============================================================
உணவுக்கழகத்தில் மருத்துவ வசதி 

FCI எனப்படும் உணவுக்கழகம் மருத்துவ செலவை இரு வழிகளில் ஊழியருக்கு ஈடு செய்கின்றது. FCIன் தனிப்பட்ட மருத்துவ திட்டத்தின் மூலமும், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலமும் ஊழியரின் மருத்துவ செலவை ஈடு செய்கின்றது. BSNL  ஊழியர்களுக்கும் 
இத்தகைய திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
=============================================================
ஊனமுற்ற ஊழியருக்கான சலுகைகள் 

DOPT இலாக்கா  உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கான சலுகைகள் பற்றி 
வழிகாட்டுதல் தந்துள்ளது.  அதன்படி...

  • ஆண்டிற்கு 4 நாட்கள் சிறப்பு சிறு விடுப்பு.
  • சுழல் மாற்றல்களில் விதி விலக்கு.
  • பிரச்சினைகள் தீர்விற்காக LIAISON OFFICER -  தொடர்பு அதிகாரி..
  • குடியிருப்புக்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை..
என பல சலுகைகளை பட்டியலிட்டுள்ளது..

ஆனால் இதில் ஒன்றுமே 
BSNLலில் அமுல்படுத்தப்படாததுதான்..
வேதனைக்குரியது.

Sunday 15 June 2014

NFTE - TMTCLU
இணைந்த போராட்டம் 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு முடிவின்படி 
நிரந்தர ஊழியர்களின் நீண்ட நாள் 
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி...

சுரண்டப்படும்...
ஒப்பந்த ஊழியர்களின்..
நியாயமான கோரிக்கைகளை 
அமுல்படுத்தக்கோரி 

26/06/2014 - வியாழன் அன்று 
கிளைகள் தோறும் 
நிரந்தர ஊழியர் - ஒப்பந்த ஊழியர் 

இணைந்த 
ஆர்ப்பாட்டம் 

08/07/2014 - செவ்வாய்க்கிழமை அன்று 
நிரந்தர ஊழியர் பங்கு கொள்ளும்

ஒருநாள்
உண்ணாவிரதம் 

15/07/2014 - செவ்வாய்க்கிழமை அன்று
ஒப்பந்த ஊழியர்கள் பங்கு கொள்ளும்.

ஒருநாள் 
அடையாள வேலைநிறுத்தம்..

விழியிருந்தும்  குருடாய்...
வழியிருந்தும் முடமாய்..
செவியிருந்தும்  செவிடாய்...

செயல்படும் காரைக்குடி 
மாவட்ட நிர்வாகத்தை 
தட்டிக்கேட்போம்..

ஒன்றுபடுவோம்.. 
போராடுவோம்..

நிரந்தர ஊழியர் - ஒப்பந்த ஊழியர் 
நலன் காப்போம்..

எழுவீ ர்... தோழர்களே...

Friday 13 June 2014

ஜூன் - 14
எல்லை தாண்டிய போராளி 
சே குவேரா 
பிறந்த நாள் 
எங்கெல்லாம் அடிமைப்பட்டவர்களின்
குரல்கள் கேட்கின்றதோ...
அங்கெல்லாம்.. என் கால்கள் பயணிக்கும்...
அடிமை என்னும் 
தொல்லையைத்துடைத்திட  
தேசம் என்னும் 
எல்லையைக்கடந்தவன்..
மார்க்சிய 
நேசம் கொண்டவன்..
மனிதகுலம் மேல் 
பாசம் கொண்டவன்..

நானிலம் போற்றும் 
நாடோடிப்போராளி 
சேகுவாரா புகழ் ஓங்குக..
======================
சிறப்புக்கூட்டம் 
14/06/2014 - காலை 10 மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி .
============================
சிறப்புரை : பேராசிரியர் 
மு.பழனி இராகுலதாசன்.

தோழர்களே.. வருக..

Thursday 12 June 2014


காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு

14/06/2014 - சனிக்கிழமை - காலை 10 மணி 
NFTE  சங்க அலுவலகம் 
காரைக்குடி. 

பங்கேற்பு 
கிளைச்செயலர்கள்
மாவட்டசங்க நிர்வாகிகள்
மற்றும் 
ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகள் 

சிறப்புரை 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 
தோழர்.சேது 

புரட்சியாளர் சே குவாரா 
பிறந்தநாள்  சிறப்புரை 
பேராசிரியர்.
பழனி இராகுலதாசன் 

தலமட்டப்பிரச்சினைகள்..
தலைவிரிக்கும் ஊழல்கள்..
நிர்வாகச்சீர்கேடுகள்...
மறுக்கப்படும் நியாயங்கள்...
உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள்..

இவை பற்றி  
விவாதங்கள் செய்திடுவோம் 
வீதியில் இறங்கி போராடிடுவோம்..
வாரீர்.. தோழர்களே..

தோழமையுடன்
சி. முருகன்      - வெ .மாரி 
மாவட்டத்தலைவர்    - மாவட்டச்செயலர்.
இரங்கல் 

NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின் துணைவியார் 

திருமதி.ரஷிதா பேகம்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று 12/06/2014 இயற்கை எய்தினார் 
என்ற செய்தி கேட்டு துயர் கொள்கின்றோம்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
சமீபத்தில்தான் தோழர்.இஸ்லாம் அவர்களின் புதல்வி
 உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். 

அடுத்தடுத்த சோகங்களை சந்தித்த 
தோழர்.இஸ்லாம் அவர்களின் துயரத்தில் 
நாமும் பங்கு பெறுவோம்.

Wednesday 11 June 2014

ஜூன் 12
தோழர்.விச்சாரே 
நினைவு தினம் 
NFTEன்  அகத்தியன் 
உருவத்தில் அகத்தியன்..
உள்ளத்தில்  உயர்ந்தவன்.. 
தோழர்கள்..
எண்ணத்தில் நிறைந்தவன்..

செயலில் அயரா தேனீ ...
சொல்லில் தனி பாணி...
எளிய தேர்வு மூலம் 
எத்தனையோ எளியோர்களை...
இளநிலை கணக்கு அதிகாரியாக்கிய 
எழுத்தர் இனத்தின் தலைவன்...

வீழ்ந்தது.. NFTE.. என்னும் எக்காளம் மாற்றி 
எழுந்தது...NFTE ..என இரும்பூதெய்த வைத்த..
வீழாத்தலைவன்.. 
விச்சாரே.. நினைவு போற்றுவோம்...

Tuesday 10 June 2014

செய்திகள் 

அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு JAC   கூட்டம் 
26/06/2014 அன்று டெல்லியில் நடைபெறும்.

குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு CHILD CARE LEAVE குறைந்த பட்சம் 15நாட்கள் எடுக்க வேண்டும் என்பது உத்திரவு. தற்போது இந்த உத்திரவு தளர்த்தப்பட்டுள்ளது. தோழியர்கள் விரும்பிய நாட்கள் விடுப்பு எடுக்கலாம். உத்திரவு 05/06/2014 முதல் அமுலுக்கு வருகின்றது.

தமிழகத்தில் இரண்டு  SR. TOA பயிற்சி வகுப்புகள்   
23/06/2014 மற்றும் 14/07/2014 ஆகிய தேதிகளில் ஆரம்பமாகின்றது. 
பயிற்சிக்காலம் 6 வாரங்கள்.

ஓய்வு பெற்ற BSNL ஊழியர்களுக்கு அவர்கள் வாங்கும் மருந்து மாத்திரை விலையில் அப்போலோ மருந்துக்கடைகள் தள்ளுபடி அளிக்கின்றன. மருந்து வாங்கச்செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச்செல்லவேண்டும். 

MTNLன் CMD 31/05/2014 அன்று ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் இன்னும் புதிய CMD நியமிக்கப்படவில்லை. மன்னன் இல்லாத தேசமாக  CMD இல்லாத நிறுவனமாக MTNL விளங்குகின்றது. புதிய அரசியல் சூழலே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது.

சென்ற நிதியாண்டில் தொலைத்தொடர்பில் 10 சத வருவாய் கூடியுள்ளது. வருவாய்ப்பெருக்கத்தில் IDEA நிறுவனம் முதலிடம் வகிக்கின்றது. 
BSNL 18 மாநிலங்களில் தனது வருவாயை இழந்துள்ளது.

Monday 9 June 2014

தோழியர். குழந்தைமேரி
அற்புதங்களின் சாட்சியம்

மானாமதுரை தொலைபேசி நிலையத்தில் TM ஆகப்பணி புரிந்த தோழியர்.குழந்தைமேரி தோழர்.ஜெகன் நினைவு நாளன்று உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். தோழியர்.மேரியின்
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது அற்புதத்தலைவர் தோழர்.ஜெகனின் நினைவுகளே நெஞ்சில் நிழலாடியது. காரணம்  தோழியர்.குழந்தைமேரி அவர் விளைவித்த
 அற்புதங்களின் ஓர் சாட்சி என்பதே.

அப்போது...

மஸ்தூர்கள் பாவப்பட்ட மனிதர்களாக வாழ்ந்த காலம்.
பரமக்குடி பகுதியில் மஸ்தூராகப்பணி புரிந்த தோழர்.பிச்சை என்பவர் மின்விபத்தில் மரணமுற்றார். தனது இளம் மனைவி இரண்டு குழந்தைகளைத்தவிக்க விட்டு தான் மட்டும் பரலோகம் சென்றார். தோழர்கள் அஞ்சும் பத்துமாக  சேர்த்து வழங்கிய நிதி அஞ்சு பத்து நாட்களுக்கு கூட வரவில்லை. காதல் திருமணம் என்பதால் சுற்றம் யாரும் வீட்டு முற்றம் கூட மிதிக்கவில்லை. குழந்தைகள் நிலை கண்டு அழும் குழந்தையானார் குழந்தைமேரி. அந்த நேரத்தில்தான் மஸ்தூர்களின் சிறப்புக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற இரட்சகனாய் தோழர்.ஜெகன் வந்தார். தோழியரின் துயர் சொன்னோம். வறுமை வலி நீக்க வழி வேண்டினோம். அந்த தோழியரிடம்  "உங்களது கணவர் பார்த்த வேலையை உங்களால் பார்க்க முடியுமா? என்று  தோழர்.ஜெகன் கேட்டார். என் குழந்தைகளைக் காப்பாற்ற எந்தப்பணியும் செய்வேன் என்று அவர் சொன்னார். சரி பார்க்கலாம்  என்று கூறிசசென்றார்.
புதிதாக பொறுப்பேற்றிருந்த தோழர்.தமிழ்மணி அவர்களும் நிச்சயம் தோழியர்.குழந்தைமேரிக்கு நல்வழி பிறக்கும் என கூறிச்சென்றார். நல்லோர் கூற்று நடப்பது நிச்சயம் என்பது நானிலத்து நல்லோர் வாக்கு. நல்லது நடந்தேறியது. மஸ்தூர் இறந்தாலும் வாரிசுக்கு வேலை தர வேண்டும் என்ற உத்திரவு பிறந்தது. தோழியர். குழந்தைமேரி பரமக்குடி துணைக்கோட்ட அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். வயிற்றில் எரிந்த நெருப்பு அடுப்பில் எரிய ஆரம்பித்தது. 

போன்மெக்கானிக் தேர்வு வந்தது. தோழியர் குழந்தைமேரி விண்ணப்பித்தார். வழக்கம்போல் நிர்வாகத்திற்கு குழப்பமும் வந்து சேர்ந்தது. பரிவு அடிப்படையில் பணி புரியும் மஸ்தூருக்கு தேர்வு  எழுத தகுதி உண்டா? என்பதே குழப்பம். குழப்பம் தீரும் முன் தேர்வு  வந்து சேர்ந்தது.  தோழியர்.குழந்தைமேரிக்கு தேர்வு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை. E3/E4 பாராமல் இரவு பகல் பாராமல் உழைத்த அன்புத்தோழர். ஆர்.கே முதல் நாள் இரவு சொன்னார் "அந்த தோழியரை மறுநாள் தேர்வு மையத்துக்கு செல்ல சொல்லுங்கள்... நான் பார்த்துக்கொள்கின்றேன்" என்று. சங்கம் சாதிக்கும் என்ற நம்பிக்கையோடு குழந்தைமேரி தேர்வு மையம் சென்றார். . தேர்வு ஆரம்பித்தது. தேர்வு மணி அடித்தது. குழந்தைமேரி குழப்பமானார். நாங்கள் நம்பிக்கை மணி அடித்தோம். நம்பினோர் கெடுவதில்லை. அழைக்கப்பட்டார் குழந்தைமேரி. "சென்னையில் இருந்து உங்களுக்கு தேர்வு எழுத அனுமதி வந்துள்ளது. நீங்கள் தேர்வு எழுதலாம் என்று சொல்லி கையால் எழுதப்பட்ட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. தேர்வு எழுதினார்.. தேர்ச்சியும் பெற்றார்... மஸ்தூர் என்னும் அன்றாடக்கூலியில் இருந்து மத்திய அரசின் மூன்றாம் பிரிவு ஊழியர் என்னும் போன்மெக்கானிக் ஆக நிரந்தர ஊழியராக வளர்ச்சி பெற்றார்  தோழியர்.குழந்தைமேரி. குழந்தைகளும் பொறியியல் பட்டதாரிகளாக  வளர்ச்சி பெற்றனர். இல்லாமை ஒழிந்தது.. வங்கிக்கடனில் புதிய இல்லம் பிறந்தது. ஆனாலும் பரிதாபம்... பாடுபட்டு உழைத்த அவரை பரலோகம் அழைத்து விட்டது.

குழந்தைமேரி... 
சங்கம் விளைவித்த ஒளிவீசும்  அற்புதங்களின் ஓர் சாட்சி...

அவர் மரித்த அன்று அவரது உறவினர்கள் கேட்டார்கள்.."தம்பி.. இந்த பிள்ளைகளுக்கு BSNLலில் ஏதாவது வேலை கிடைக்குமா? என்று...
கூலி வேலை பார்த்த பிச்சை இறந்தபோது
குழந்தைமேரியிடம் சொன்னோம்.."கட்டாயம் உங்களுக்கு வேலை வாங்கித்தருவோம்" என்று. கூலியின் மனைவிக்கு வேலையும் கிடைத்தது.
இன்று நிரந்தர ஊழியர் மேரியின் பிள்ளைகள் கேட்கின்றர்கள்
"எங்களுக்கு வேலை கிடைக்குமா? என்று.. 
நம்மால் ஏதும் சொல்ல முடியவில்லை..

கனத்த மனதோடு 
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தோம்...
அற்புதங்கள் ஏதுமின்றி..
 வானம் வெறிச்சோடிக் கிடக்கின்றது...

Friday 6 June 2014

ஜூன்  -7
மூன்றெழுத்து மந்திரம் 
தோழர்.ஜெகன் 
நினைவு நாள் 
மாசற்ற மனிதநேயம் 
"உங்களுக்குத்  தொழில் 
இங்கே அன்பு செய்தல்"
என்ற பாரதியின் வரிகளுக்கு
இலக்கணமாக 
வாழ்ந்து 
வையகம் நிலைத்த 
தோழர்.ஜெகன் 
புகழ் பாடுவோம்..
பொதுத்துறை ஊழியர்களுக்கான 
வீட்டு வாடகைப்படி - HRA 
DPEன் விளக்கம் 

2006 மத்திய ஊதியக்குழு  பரிந்துரையின்படி நகரங்கள் 
XYZ என மூன்று வகையாகப்பிரிக்கப்பட்டன. 
இதன்படி 50 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நகரம் 
X என்றும் இதற்கு 30 சத வீட்டு வாடகைப்படியும், 

5 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள நகரங்கள் 
Y என்றும் இதற்கு 20 சத வீட்டு வாடகைப்படியும், 

5 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஊர்கள் Z என்றும்
 இதற்கு 10 சத வீட்டு வாடகைப்படியும் வழங்கப்படும் 
என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து பல பொதுத்துறைகள் பல விளக்கங்களை 
DPE இலாக்காவிடம் கோரி வந்தன. 
தற்போது "2006 ஊதியக்குழு  உத்திரவு அப்படியே 2007ல்  
ஊதிய மாற்றம் பெற்ற அனைத்து பொதுத்துறைகளுக்கும் பொருந்தும்"
 என DPE (DEPARTMENT   OF PUBLIC ENTERPRISES) 
விளக்கம் அளித்துள்ளது. 

Thursday 5 June 2014

சென்னைக்கூட்டுறவு சங்கம் 
25/20 ஆண்டு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை 

சென்னைக்கூட்டுறவு சங்கத்தில் தொடர்ந்து 
25 மற்றும் 20 ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ள
 தோழர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி 25 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு ரூ.4000/= மற்றும் 
20 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு ரூ.6000/= வழங்கப்படும். 
இதற்கான விண்ணப்ப படிவத்தை கூட்டுறவு சங்க  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 06/06/2014 முதல் இந்த தொகை வழங்கப்படும். ஏற்கனவே நிலுவை உள்ள தோழர்களுக்கு அவர்களது நிலுவையில் இந்த தொகை சரி செய்யப்படும்

காரைக்குடி மாவட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் தோழர்கள் 

25 ஆண்டு கால உறுப்பினர்கள் - ரூ.4000/= ஊக்கத்தொகை 
C. இரவிந்திரன் - TM - இராமநாதபுரம் 
V . மாரி - AO - காரைக்குடி 
R . நெப்போலியன் - TTA - காரைக்குடி 
V . கிருஷ்ணமூர்த்தி - TM - பரமக்குடி 

20 ஆண்டு கால உறுப்பினர்கள் - ரூ.6000/= ஊக்கத்தொகை
1.    Paramasivam S – TM/SVA
2.    Veluchamy.V  - TM/PMK
3.    Ayyanar.M  - TM/PMK
4.    Pandi.M  - TM/RND
5.    Adiyaraja.A  - SDE/KKD
6.    Chinnasamy.C – TM/RND
7.    Sudha.R – SR.TOA/KKD
8.    Sarathy.M – TM/RND
9.    Balasubramanian.M – TM/PMK
10. Koorigunarajan.S  - TTA/PMK
11. Usman.S – TM/TPV
12. Arulnathan.K – TM/UCP
13.  Karuppiah.K.L – TM/KKD
14. Chezhiyan R – TTA/KKD
15. Thirukuralappan.C – TM/KKD
16. Muruganandam.S I  - TM/KSV
17. Malairajan K – TM/MUT
18. Sivalingamoorthy K  - TM/RND
19. Kaliammal.S – TM/PMK
20. Murugesanramamoorthy.V – TM/KKK
21. Kannan.A – TM/KKD
22.  Gopinathan.C  - TTA/KKD
23. Chockalingam.S – TM/KKD

மேலும் விவரங்களுக்கு gtecs.in என்ற கூட்டுறவு சங்க இணையதளத்தைப்பார்வையிடவும்.

Wednesday 4 June 2014

காரைக்குடி 
மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 
==============================
14/06/2014- சனிக்கிழமை - காலை 10 மணி 
சங்க அலுவலகம்  - காரைக்குடி.
==============================
விவாதப்பொருள் 

  • அகில இந்திய மாநாடு 
  • மாவட்டம் மற்றும்  கிளை மாநாடுகள் 
  • தலமட்டக்குழு/பணிக்குழு/நலக்குழு 
  • இழுத்தடிக்கப்படும் TM/TTA  மாற்றல்கள் 
  • வஞ்சிக்கப்படும் நாலு கட்டப்பதவி உயர்வுகள் 
  • ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகள் 
  • மறுக்கப்படும் இலவச SIMகள் 
  • மாற்றியமைக்கப்படாத UDAAN/VIJAY/NWOP குழுக்கள் 
  • கண்டுகொள்ளப்படாத தொலைபேசி பராமரிப்பு 
  • அமோக விளைச்சல் அதிகாரிகளின் ஊழல்கள்..
  • உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
  • மற்றும் தேக்கப்பட்டுள்ள பிரச்சினைகள்....                           
தேக்க நிலை உடைத்திட ..
தேவைகளை அடைந்திட ..
கூடுவீர்.. தோழர்களே...