Tuesday 28 February 2017

அழியட்டும்...காமராஜ்ஜியம்..


தலையிருக்க வாலாடக்கூடாது என்பார்கள்…
ஆனால் தமிழக NFTEயில்...
தலை மட்டுமே ஆடுகிறது...
அதுவும் ஓவராக…

NFTE TAMILNADU என்ற பெயரில் 
Wattsapp குழு ஒன்று தமிழகத்தில் 
தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்டது..
GROUP ADMIN - குழு நிர்வாகியாக
மாநிலத்தலைவர் காமராஜ் என்றிருந்தது…
மாநிலச்செயலருக்கோ எடப்பாடி நிலை…

தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்ட குழுவில்
காமராஜ் தன் இஷ்டம் போல் 
செய்திகளைப் பரப்பினார்…
மாநிலச்செயலர் எப்போதாவது
ஆமென் மட்டும் சொல்வார்…

திண்டுக்கல்லில்.. 
மதுரை மாவட்டச்செயலருக்கே தெரியாமல்...
மாநிலத்தலைவரும் செயலரும் கூட்டம் நடத்தினார்கள்..
காமராஜின் Wattsapp குழுவில் இதுபற்றி
நமது கண்டனத்தை தெரிவித்தோம்…

நீக்குதல் மட்டுமே தெரிந்த காமராஜ்..
உடனே Wattsapp குழுவை விட்டு நம்மை நீக்கினார்…
நீக்குப்போக்கு இல்லாதவனின் நீக்கும்..
நிலைபாடு நமக்கு புரிந்ததுதான்…
எனவே இது பற்றி 
நமது தோழர்கள் யாரும் கவலை கொள்ளவில்லை…

திடிரென… 27/02/2017 அன்று 
மீண்டும் கருணை உள்ளத்தோடு
காமராஜ் நம்மை Wattsapp குழுவில் இணைத்தார்…

நிச்சயமாக மானமுள்ளவர்கள் 
அந்தக்குழுவில் இருக்க வாய்ப்பில்லை...

எனவே நமது கண்டனத்தை தெரிவித்து விட்டு
Wattsapp குழுவை விட்டு வெளியேறி விட்டோம்…

தமிழக NFTEயில்...
காமராஜ்ஜியம் கண்மண் தெரியாமல் 
ஆட்டம் போடுகிறது…
இது நிச்சயமாக அழிவுக்குத்தான்… 
என்பது ஊழியர்களுக்குத் தெளிவு…
AITUC – NFTCL கையெழுத்து இயக்கம்
Image may contain: 10 people, people standing
கையெழுத்து இயக்கத்தின் நோக்கங்கள் பற்றி
 எடுத்துரைக்கும் தோழர்.PLR மற்றும் தோழர்.இரவி 
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி
AITUC – NFTCL சார்பில் காரைக்குடியில்
26/02/2017 அன்று  பேரவைக்கூட்டம்
மிக எழுச்சியாக நடைபெற்றது.

AITUC துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தலைவர்
தோழர்.முருகன் தலைமையேற்றார்..
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.முருகன்
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.முருகன்
NFTCL செயல்தலைவர் தோழர்.மாரி
NFTCL மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து
NFTCL மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர்
AITUC போக்குவரத்து தலைவர் தோழர்.மணவழகன்
AITUC கட்டுமான சங்கத்தலைவர் தோழர்.சிவசாமி
AITUC பல்கலை ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தலைவர் தோழர்.சண்முகம்
AITUC உள்ளாட்சி துணைப்பொதுச்செயலர் தோழர்.PLR
ஆகிய தலைவர்கள் பங்கேற்க

AITUC துணைப்பொதுச்செயலர் தோழர்.இரவி சிறப்புரையாற்றினார்.
நூற்றுக்கணக்கான துப்புரவுத்தொழிலாளிகள் கலந்து கொண்டனர்
உட்கார இடமில்லாததால் இருக்கைகள் அகற்றப்பட்டு
தரையிலே தோழர்கள் அமர்ந்து தலைவர்கள் உரையைக் கேட்டனர்
கையெழுத்து இயக்கத்தை 
செய்து முடித்திட 30 குழுக்கள் அமைக்கப்பட்டன
குழு ஒருங்கிணைப்பாளராக தோழர். PLR செயல்படுவார்..
சிவகங்கை மாவட்டம் முழுமையும் 50000 கையெழுத்துக்கள் பெறவும்
ஏப்ரல் 11 கோட்டை நோக்கிய பேரணிக்கு 
1000 பேர் திரளவும் உற்சாகமுடன் முடிவு எடுக்கப்பட்டது

குப்பையாய்ப் போனவர்களின்.. 
பின்னால் சென்று நாமும்.. 
குப்பையாய் போவதை விட..
குப்பையை அள்ளும் அடிமட்ட 
ஊழியனுக்குப் பணி செய்வது சாலச்சிறந்தது...

ஆம்... தோழர்களே...
NFTEயில் பணி செய்வதை விட...
NFTCLலில் பணி செய்வது நிறைவளிக்கிறது

Monday 27 February 2017

வாழ்க...நிறைவுடன்...

இன்று 28/02/2017
பணி நிறைவு பெறும் அருமைத்தோழர் 
S.சுவாமிநாதன் 
PS - காரைக்குடி
அவர்களின் பணி நிறைவுக்காலம்

சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்
வங்கி ஊழியர்கள் போராட்டம்
சீர்திருத்தம் என்ற பெயரிலே வங்கித்துறையை சீரழிக்கும்
மத்திய அரசின் முடிவை எதிர்த்து…
முதலைகள் முழுங்கிய வாராக்கடன்களை
முழுமையாக வசூல் செய்யக்கோரி…
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி….
பணமதிப்பிழப்பு பிரச்சினையின் போது… மணிக்கணக்காக
பணிபுரிந்தோருக்கு மதிப்பூதியம் வழங்கக்கோரி..

வங்கி ஊழியர்கள் இன்று 28/02/2017 
ஒரு நாள் நாடு தழுவிய 
அடையாள வேலைநிறுத்தம்..
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்….
நியாயம் வென்றது…

தோழர்.அந்தோணிச்சாமி  
காரைக்குடியில் பணிபுரிந்து...
மதுரைக்கு மாற்றலில் சென்ற எழுத்தர்..

மதுரையிலே சாதி என்னும் பெயரில் விதி விளையாடியது…
சாதிச்சான்றிதழ் போலியாகக் கொடுத்தார் என்று
குற்றம் சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார்…
மிக நீண்ட போராட்டத்தை அந்தோணிச்சாமி நடத்தினார்…
இறுதியில் வருவாய்த்துரைகள் அவரது சாதியை உறுதிப்படுத்தினர்…

பணிநீக்கம் செய்த BSNL நிறுவனம் உடனடியாக
அவரைப் பணிக்கு சேர்த்திட நீண்ட தயக்கம் காட்டியது…
டெல்லியில் இருந்து அவரை பணியில் அமர்த்திட 
DOT உத்திரவிட்டது…
DOT உத்திரவிட்ட பின்பும் கூட மாநில நிர்வாகத்திற்கு தயக்கம்…
இடைப்பட்ட நாட்களை என்ன செய்வது? என்ற வலுத்த சந்தேகம்…
மாநில நிர்வாகத்திற்கும்… மாநில சங்கத்திற்கும்…

இடையிடையே வெற்றி… வெற்றி என
தோழர்.அந்தோணிச்சாமியைப் பற்றி 
Wattsapp பெருமிதம் கொண்டது…
ஆனாலும் அந்தோணிச்சாமி தெருவிலேதான் நின்றார்…
காரைக்காலில் தோழர்.PN.பெருமாள் அவர்களை சந்தித்தபோது…
ஒரு ஒடுக்கப்பட்ட ஊழியன் தெருவில் நிற்கும் நிலை கண்டு…
ஒடுக்கப்பட்டோரின் அமைப்பு அமைதி காப்பது சரியா?
என அவரிடம் கேள்வி எழுப்பினோம்..
நியாயம் உணர்ந்த அவர்...
ஆவண செய்கின்றோம் என உறுதி சொன்னார்…

இறுதியில்… பிப்ரவரி 11 காரைக்குடியில்…
தோழர்.C.K.மதிவாணன் அவர்களை...
அந்தோணிச்சாமி NFTCL மாநாட்டில் சந்தித்தார்…
மனம் தளரவேண்டாம்… 
நிச்சயம் பணியில் அமர்த்துவோம் என
தோழர். மதிவாணன் உறுதி சொன்னார்…

தோழர்.அந்தோணிச்சாமி குடும்பத்தோடு சென்று
மாநில நிர்வாகத்திடம் தனது நிலையை முறையிட்டார்…

இதோ… இன்று 27/02/2017
தோழர்.அந்தோணிச்சாமியை பணி அமர்த்தச் சொல்லி
DOT உத்திரவிட்டதை மாநில நிர்வாகம் வழிமொழிந்துள்ளது…
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப்பின்
தோழர்.அந்தோணிச்சாமி 28/02/2017 பணியில் சேர்கிறார்…
இடைப்பட்ட காலம் முழுமையும் 
பணியாகக் கருதப்படும் என
DOT உத்திரவிட்டுள்ளது…

நன்றி சொல்ல நமக்கு வார்த்தைகள் இல்லை…
தோழர்.இஸ்லாம்…
தோழர்.C.சிங்..
தோழர்.C.K.மதிவாணன்…
டெல்லி DOT நிர்வாகம்…
தமிழக மாநில நிர்வாகம்…
என உறுதுணை செய்து உதவி புரிந்த
அனைவருக்கும் நமது இதயப்பூர்வ நன்றிகள்…

எல்லாவற்றிற்கும் மேலாக…
நாம் பெயர் சொல்ல விழையவில்லை…
டெல்லியில் DOT SANCHAR பவனில்…
அதிகாரிகளாகப் பணிபுரியும்…
அன்புச்சகோதரர்களுக்கு…
மனிதநேயமிக்க நமது தோழர்களுக்கு…
இரக்கத்தை வெளிப்படுத்திய
ஈர இதயங்களுக்கு 
நமது நெஞ்சு நிறை நன்றிகள்…
தனியொருவனுக்கு உணவில்லையேல்…
ஜெகத்தினை அழித்திட வேண்டாம்…
நம்மால் இயன்றதை...உள்ள சுத்தியோடு..
உண்மையாகச் செய்தாலே போதுமானது…
ஆண்டுக்கணக்கில் பாடுகள் பல பட்டாலும்..
அசையா இதயத்தோடு துன்பங்களைத் தாங்கி
மீண்டும் பணியில் அமரும்…

தோழர்.அந்தோணிச்சாமிக்கு நமது வாழ்த்துக்கள்…

Sunday 26 February 2017

வாழ்க... வளமுடன்..

28/02/2017 அன்று
பணியில் இருந்து நிறைவு பெறும்

காரைக்குடியில் 
களைதீர்க்கழகத்தைக் கட்டிக்காத்த 
தோழர். S.சுவாமிநாதன்
PA to GM – காரைக்குடி

தொழில்நுட்ப செம்மையராக 
அமைதிப்பணி செய்த
தோழர்.M.சிகாமணி
JE – தேவகோட்டை

கம்பித்துணைவனாக 
கண்ணியமிக்க பணி செய்த
தோழர். A.முத்துச்சாமி
TT – பரமக்குடி

முகவையில் முத்தான பணி செய்த
தோழர்.M.சாத்தையா
TT – இராமநாதபுரம்

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Thursday 23 February 2017

AITUC – NFTCL கையெழுத்து இயக்கம் 

சமவேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்தக்கோரி….
காரைக்குடி NFTCL மாநில மாநாட்டில் துவக்கப்பட்ட
கையெழுத்து இயக்கத்தின் தொடர் இயக்க

சிறப்புக்கூட்டம்….

26/02/2017 – ஞாயிறு – காலை 10 மணி
பூமாலை வணிக வளாகம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் – காரைக்குடி

பங்கேற்பு : தோழர்கள்
S.முருகன் – NFTCL மாவட்டத்தலைவர்
B.முருகன் – NFTCL மாவட்டச்செயலர்
V.மாரி     – NFTCL மாநில செயல்தலைவர்
S.கண்ணன் – AITUC நகரச்செயலர்
PL.இராமச்சந்திரன் – AITUC உள்ளாட்சி துணைப்பொதுச்செயலர்
K.இரவி - AITUC துணைப்பொதுச்செயலர் 


தோழர்களே… வருக…
மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்

இன்று 24/02/2017  வேலூரில் 
AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தின் 
மாநில மாநாடு துவங்குகிறது.

சிவராத்திரி தினத்தில்…
சிவக்குமார் தலைமையில்…
சீரோடும்… சிலிர்ப்போடும் மாநாடு..
சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறோம்…

Wednesday 22 February 2017

தாமதப்படுத்தப்படும் தலமட்டக்குழு 

 ஜூலை 2016ல் பரமக்குடியில் நடைபெற்ற
 மாவட்ட மாநாட்டு முடிவின்படி கீழ்க்கண்ட தோழர்கள் 
காரைக்குடி JCM உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

v.மாரி – AO - மாவட்டச்செயலர் – காரைக்குடி
N.பாலமுருகன் – JE - கிளைச்செயலர் – தேவகோட்டை
B.முருகன் – TT - கிளைச்செயலர் – சிவகங்கை
G.தங்கராஜ் – TT - கிளைச்செயலர் – இராமநாதபுரம்
A.தமிழரசன் – TT - கிளைச்செயலர் – பரமக்குடி

காரைக்குடி மாவட்டத்தில் TEPU, SEWA BSNL போன்ற கூட்டணிச்சங்கங்களும் இல்லை. எனவே 5 இடங்களிலும் NFTE உறுப்பினர்களே நியமனம் செய்யப்பட்டனர். ஏறத்தாழ ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் ஒப்புதல் பெறப்பட்ட நியமனப்பட்டியல் நிர்வாகத்திற்கு இன்னும் அனுப்பப்படவில்லை.


தமிழ்மாநிலச்சங்கம் அணிசார்ந்த சங்கமாக
 ஆகிப்போன கொடுமையால் இந்த தாமதம் வேண்டுமென்றே உருவாக்கப்படுவதாகவே நம்ப வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் தூத்துக்குடிக்கு நேர்ந்த நிலையையும் 
நாம் இப்போது  ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. 

சேலத்தில் மார்ச் 4 அன்று நடைபெறவுள்ள மாநில செயற்குழுவிற்கு முன்பாக காரைக்குடி JCM உறுப்பினர்கள் பட்டியல் அங்கீகரிக்கப்படாவிட்டால் மாநில செயற்குழுவில் பங்கேற்பது பற்றி காரைக்குடி மாவட்டச்சங்கம் பரிசீலிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கோக்கு... மாக்கே... தொலைந்து போ..

கோக்கு மாக்கு செய்யப்பிறந்ததுதான்…
அமெரிக்காவின் கோக்கும் பெப்சியும்…

கிளுகிளு திரையில் நடிப்பவனும்
கிரிக்கெட் மட்டை அடிப்பவனும்…
குடித்து குடித்து… நடித்து நடித்து..
கிறுக்காக்கினர் நாட்டு மக்களை..
கிறுகிறுக்க வைத்தனர்.. இளைஞர்களை…

தேசம்... 
கோக்கையும் பெப்சியையும் குடித்தது…
கோக்கும் பெப்சியும்…
கோதாவரியை...தாமிரபரணியைக் குடித்தது…

காலம் கனிந்தது…
காளை எழுந்தது…
காலை புலர்ந்தது…
வாடிவாசல் திறந்திட…
கோடிக்கைகள் கூடின…
கோபக்குரல் எழுப்பின…
வாடிவாசலும் திறந்தது…
தன்மான வாசலும் திறந்தது…

தன்னாட்டு பெருமை கண்டான்…
தமிழன்….
பன்னாட்டு சுரண்டல் எதிர்த்தான்…
கோக்கு மாக்கு பானத்தின் மீது
கோபக்கணல் தொடுத்தான்…
மானங்கெடுக்கும் பானத்தின் மீது
தடை என்னும் பாணத்தைத் தொடுத்தான்…

போலி பானத்தை விற்கமாட்டோம்…
சுய மானத்தை விற்கமாட்டோம்…
என மானமுடன் அறைகூவினான்…

NFTCL மாநில மாநாட்டில்…
மார்ச் முதல் தேதி…முதல்..
கோக்கு மாக்கு பானத்தை விற்கமாட்டோம்..
குரல் கொடுத்தார் நம் வெள்ளையனும்….

இன்றே 75 சதம் விற்பனை சரிவு…
கோக்கு குடிப்பவன் இன்று பேக்கு…
கவர்ச்சி பானம் கக்கூஸ் பானமாகிப்போனது…
வாணிபக் கொள்ளையனுக்குப் பாடம் சொன்ன
வணிகர்சங்க வெள்ளையனுக்கு வாழ்த்துக்கள்…

ஆண்டாண்டு காலமாக…
பன்னாட்டு சுரண்டல் பற்றி…
விடிய விடியக் கூவினான்…
செங்கொடித்தோழன்…
இன்றுதான் விடிந்துள்ளது…
தமிழ் வானம் சிவந்துள்ளது…

Tuesday 21 February 2017

கூட்டு ஆலோசனைக்குழு

உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் முடிந்து ஏறத்தாழ
 ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்னும் கூட்டு ஆலோசனைக்குழுக்கள் எங்குமே கூட்டப்படவில்லை. 

காரைக்குடி மாவட்ட மாநாடு ஜூலை 2016ல் நடந்து முடிந்தபின்பு அப்போதைய மாநிலச்செயலர் தோழர்.பட்டாபிக்கு 
காரைக்குடி மாவட்டத்தின் JCM உறுப்பினர் பரிந்துரையை சிந்தாதிரிப்பேட்டை அலுவலக முகவரிக்கு அனுப்பியிருந்தோம். 
ஏனோ இன்றுவரை மத்திய சங்கத்திலிருந்து 
JCM நியமனப்பட்டியல் அங்கீகரிக்கப்பட்டு  வரவில்லை.

இதனிடையே தேசிய கவுன்சில் மட்டுமே 
மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 BSNLEU சங்கத்தின் 9 உறுப்பினர்களும் நிரப்பப்பட்டுள்ள நிலையில் NFTE சங்கத்திற்கு இரண்டு உறுப்பினர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 5 உறுப்பினர்களைக்கூட நம்மால் நிரப்ப இயலவில்லை.  

JCM தலைவராக சென்ற முறை தோழர்.இஸ்லாம் அகமது செயல்பட்டார். இம்முறை தோழர்.சந்தேஷ்வர்சிங்தான் 
தலைவரென்று BSNL நிர்வாகமே சொல்லிவிட்டது.

என்னதான் நடக்கிறது NFTEயில்?
 என சாதாரண உறுப்பினர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். மைக் மயக்கத்திலும்… கருத்தரங்குகளிலும், கைதட்டல் ஓசையிலும் தலைவர்கள் காலத்தைக் கடத்துவதாகவே தோன்றுகிறது.

இதோ எதிரே காத்திருக்கிறது அடுத்த சரிபார்ப்புத்தேர்தல்…
வங்கிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

BSNL ஊழியர்களுக்கு கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி 
ஆகியவை புரிந்துணர்வு அடிப்படையில் கடன்கள் வழங்கி வந்தன. 
இந்த ஒப்பந்தம் 31/12/2016 வரை அமுலில் இருந்தன. 

தற்போது கனரா வங்கி மட்டுமே புரிந்துணர்வை இரண்டு ஆண்டுகளுக்குப் புதுப்பித்துள்ளது. கனரா வங்கியின் புரிந்துணர்வு 01/01/2017 முதல் 31/12/2018 வரை அமுலில் இருக்கும்.

ஆனால் UNION BANK OF INDIA இன்னும் 
கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வை புதுப்பிக்கவில்லை. 
ஆனால் இலாக்காப் பரிவர்த்தனைக்கான புரிந்துணர்வைப் புதுப்பித்துள்ளது. இதைப் புரியாமல் புரிந்து கொண்ட  
சிலர் புரிந்துணர்வு புதுப்பிக்கப்பட்டதாக  
புரியாத உணர்வோடு செய்திகளைப் பரப்பினர்.

தற்போது தோழர்கள் கடன் வாங்க 

கனரா வங்கிக்கு மட்டுமே வாங்க...

Sunday 19 February 2017

மார்ச் 23 ...  மதுரை நோக்கி வாரீர்..

மார்ச்  - 23
மாபெரும் தியாகி 
பகத்சிங் நினைவு தினத்தில்..

மதுரையில்... 
NFTE - NFTCL  சங்கங்களின் 
முத்திரைத் திருவிழா...

மதுரைக்கு சித்திரைத் திருவிழா...
நமக்கு இது முத்திரைத்திருவிழா...
தோழர்களே...  தயாராவீர்...

Friday 17 February 2017

தூய்மையும்… பொய்மையும்…

நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பதவிக்கு வந்த பின்பு
விளக்கமாற்றைக் கையில் எடுக்காத VIPகளே கிடையாது.
நாடாள்பவர்கள் நாளும் பொழுதும் குப்பையைப் பொறுக்குகிறார்கள்.

அரசியல்வாதிகள், நடிகர்கள், முதலாளிகள் என தேசமே
தெருக்கூட்டும் திருப்பணியில் மூழ்கியுள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பது தேசத்தின் அவமானம் என
தெருவெங்கும் கவர்ச்சி விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கிறது…

இந்திய தேசத்தின் கிராமங்கள் வறுமையின் அடையாளங்கள்…
அங்கே உணவுக்கு வழியில்லை… உறங்கவும் இடமில்லை…
ஆனாலும் கழிப்பறை அவசியம் கட்டவேண்டுமென…
கட்டாயப்படுத்தப்படுகின்றனர் கிராமத்து அப்பாவிகள்…

கழிப்பறை கட்டுவதற்கு முன்பணமாக 2000 உடனே தரப்படும்…
கழிப்பறை கட்டி முடித்த 3 மாதங்களுக்குள் 12000 தரப்படும் என
கனிவோடு மக்களுக்கு அரசு கவர்ச்சியான உத்திரவாதம் தந்தது…

ஆண்டவனை நம்பாமல்… ஆள்பவர்களை நம்பாமல்…
அப்பாவி மக்கள் இந்த தேசத்தில் வாழ முடியுமா?

இப்படித்தான் அரசை நம்பி
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டி என்னும் சிற்றூரில்…
பாகிரதி கண்டே என்னும் பாவப்பட்ட மனிதன்…
கடன் வாங்கி கழிப்பறை கட்டினான்…
பாகிரதி கண்டே மட்டுமல்ல
பாக்கி இருந்த 126 வீட்டுக்காரர்களும்…
கடன்பட்டு கழிப்பறை கட்டினர்…

கட்டி முடித்து 3 மாதங்கள் கழித்து
அரசிடம் உதவித்தொகையைக் கேட்டனர்…
கழிப்பறை கட்டிய காசைக் கேட்டவர்களுக்கு
மலத்தை விட மோசமான வார்த்தைகள் பரிசாயின…
சிலரை அதிகாரிகள் அடித்து விரட்டினர்…
சிலரை மிரட்டி விரட்டினர்…

பாவப்பட்ட ஆண்டி கிராம மக்கள்
ஐந்து வட்டிக்கு வாங்கி தங்கள் இல்லங்களில்
கழிப்பறையைக் கட்டினர்…
ஒவ்வொருவருக்கும் ஏறத்தாழ இருபது ஆயிரம் செலவு…
ஆண்டுக்கு வட்டி மட்டும் ரூபாய் 12 ஆயிரம் கட்ட வேண்டும்…
வட்டியையும் கட்ட முடியவில்லை…
அரசிடம் இருந்து சொன்னபடி உதவியும் கிட்டவில்லை…
வேறு வழியின்றி கிராமத்தைக் காலி செய்து விட்டு
உத்திரப்பிரதேசத்திற்கு செங்கல் செய்யும் வேலைக்கு
பாகிரதி கண்டே தன் குடும்பத்தினருடன் சென்று விட்டார்…

சமீபத்தில் ஜோக்கர் என்னும் தமிழ்ப்படம்..
இத்தகைய கழிவறைச் சம்பவத்தைப் படமாக்கியிருந்தது….
அந்த திரைப்படம் உண்மைதான் என்பதை
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆண்டி கிராம நிகழ்ச்சி நிருபித்துள்ளது…

ஆண்டி என்ற பெயருள்ள கிராம மக்கள்…
அரசினால் உண்மையிலேயே ஆண்டிகளாகிவிட்டனர்…

தூய்மை இந்தியா திட்டத்திற்கு செய்யப்படும் விளம்பரப்பணத்தை
மக்களுக்கு கொடுத்தாலே போதும்….
வீடு தோறும் கழிப்பறை கட்டப்படும்…

வாய்மையே வெல்லும் என்றார் மகாத்மா காந்தி…
தூய்மையே வெல்லும் என்கிறார் பரமாத்மா மோடி…
பொய்மையே வெல்லும் என்கிறார் பாவாத்மா பாகிரதி கண்டே…
வாழ்க தூய்மை இந்தியா…