Thursday 30 January 2020


வரலாறு  நினைவில் கொள்ளும்...
 

இன்னாது இனியார்ப்பிரிவு..
என்றார் வள்ளுவர்....

இந்திய தேசத்தின் மக்கள் சேவைக்காக..
இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக...
பல காலம்... பல்லாண்டு காலம்... 
தங்கள் வாழ்வை அளித்த... அழித்த...
பல்லாயிரம் தோழர்கள்
இன்று பணிநிறைவு பெறுகின்றார்கள்...

வாழ்நாள் முழுவதும்
இந்த நிறுவனத்தையே
நேசித்து... யோசித்து... சுவாசித்து
வாழ்ந்து வந்த தோழர்கள்...
இன்று விடை பெறுகின்றார்கள்...

தங்கள் சேவையால்
அரசுக்கு வருமானத்தை...
அள்ளிக் கொடுத்த தோழர்கள்...
வெறும் நினைவுகளோடு...
வெறும் கைகளோடு....
விடை பெறுகின்றார்கள்...

வக்கற்ற அரசும்...
திக்கற்ற நிறுவனமும்...
வெட்கித்தலை குனியட்டும்...

வீரர்களே... தோழர்களே....
நீங்கள் தலை நிமிர்ந்து செல்லுங்கள்...
BSNL உங்களால் தலை நிமிரும்...
வரலாறு உங்களை நினைவில் கொள்ளும்...
------------------------------------------

இன்று... புதிதாய்ப் பிறந்தோம்...


சென்றதினி மீளாது எப்போதும்..
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்...

இன்று...
புதிதாய்ப் பிறந்தோம் என்று
நீவிர் எண்ணமதைத்
திண்ணமுற..
இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி
இன்புற்றிருந்து வாழ்வீர்..
தீமையெலாம் அழிந்து போகும்...
திரும்பி வாரா...

மறவாதீர்....
மகாகவியின் வரிகளை....

Tuesday 28 January 2020


செ ய் தி க ள்

நிதி ஒதுக்கீடு
 நவம்பர் 2019 மாத வங்கிக்கடன் பிடித்தம், மின்கட்டணம் மற்றும் 
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்கான பரிசுப்பொருள் ஆகியவற்றுக்கான நிதி மாநில அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்டங்களுக்கு 
நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
 -----------------------------------------
GPF  வைப்புநிதி
 விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் GPF  வைப்புநிதி முழுமையாக DOTக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தாமதமாக செலுத்தியமைக்கான அபராத வட்டி செலுத்தப்படவில்லை. இருப்பினும் ஊழியர்களின் GPF உரிய வட்டியுடன் பட்டுவாடா செய்யப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  -----------------------------------------
ஓய்வூதியப்பங்களிப்பு
 விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களின் ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION இன்னும் DOTக்கு செலுத்தப்படாத நிலையில் ஓய்வூதியம் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நமது சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. ஓய்வூதியப்பங்களிப்பு செலுத்தவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட ஓய்வூதியப் பட்டுவாடாவில் தாமதம் ஏற்படாது என நிர்வாகம் நமது சங்கத்திடம் உறுதி அளித்துள்ளது.
  -----------------------------------------
சம்பளப்பட்டுவாடா
 BSNL எதிர்பார்த்துள்ள வங்கிக்கடன் இன்றுவரை வந்து சேராத காரணத்தால் சம்பளம் பட்டுவாடா செய்வது பற்றி உறுதியளிக்க  இயலவில்லை என்று நிர்வாகம் கைவிரித்துள்ளது.  ஆனாலும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளது. 
ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு தினங்கள் நாடுதழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெறுகின்றது. எனவே நாளை 30/01/2020 சம்பளம் பட்டுவாடா செய்யப்படாவிட்டால் 
பிப்ரவரி 3ந்தேதிக்குப் பின்புதான் ஏதேனும் நடைபெறும்.
  -----------------------------------------
வங்கிப்பிடித்தம் – அபராத வட்டி
வங்கிக்கடன், கூட்டுறவுக்கடன் மற்றும் ஆயுள் காப்பீட்டுப் பிடித்தங்கள் சரியான நேரத்தில் செலுத்தப்படாத காரணத்தால் ஊழியர்கள் தண்டமாக அபராத வட்டி கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுபற்றி பலமுறை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. நேற்றும் நமது சங்கம் இந்தப்பிரச்சினையை நிர்வாகத்திடம் அழுத்தமாக கூறியுள்ளது.

CMD தமிழக சுற்றுப்பயணம்

BSNL CMD திரு.பிரவின் குமார் புர்வார் அவர்கள் 
தமிழகத்தில் கோவைக்கு 08/02/2020 அன்று வருகை புரிகின்றார். 
WSCC எனப்படும் WIRELESS SERVICES CALL CENTRE – கம்பியில்லா சேவைகள் அழைப்பு மையத்திறப்புவிழாவில் கலந்து கொள்கின்றார்.

கோவை அருகில் உள்ள தொலைபேசி நிலையங்களுக்கு 
வருகை புரிந்து ஊழியர்களுடன் உரையாடுகின்றார். 
மாலை தொழிற்சங்கப்பிரதிநிதிகளை சந்திக்கின்றார். 

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களை மகிழ்வுடன் அனுப்புவோம் என்று CMD அவர்கள் உறுதி அளித்திருந்தார். குறைந்த பட்சம் அவர் தமிழகம் வருமுன்பே டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளங்கள் பட்டுவாடா செய்யப்பட்டு அனைத்து பிடித்தங்களும் 
உரிய அமைப்புகளுக்கு விரைவில் செலுத்தப்பட்டால் நன்று.

எங்கிட்டே மோதாதே...
Jio  நிறுவனம் 2020 புத்தாண்டையொட்டி புதிய சலுகையை 
PRE PAID வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது.

365 நாட்கள்... ஓராண்டுக்கு VALIDITY...
நாளொன்றுக்கு 1.5 GB DATA வசதி...
JIO to JIO இலவச குரல் அழைப்புக்கள் இலவசம்...
12000 நிமிடங்கள் மற்ற நிறுவன அழைப்புக்கள் இலவசம்...
நாளொன்றுக்கு 100 குறுந்தகவல்கள் இலவசம்...

பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக
JIOவின் 2020 திட்டம் தோற்றமளித்தது.

ஆனால் BSNL தற்போது அறிவித்துள்ள 1999 திட்டத்தில்...
யாரும் நம்ம கிட்டே நெருங்கவே முடியாது....

436 நாட்களுக்கு VALIDITY... 71 நாட்கள் கூடுதல் வசதி...
நாளொன்றுக்கு 3 GB DATA வசதி... JIOவைப்போல் இருமடங்கு...
மொத்தத்தில் 1308 GB DATA வசதி...
நாளொன்றுக்கு 250 நிமிடம் குரல் அழைப்புக்கள் இலவசம்...
மொத்தத்தில் 1,09,000 நிமிடங்கள் குரல் அழைப்புக்கள் இலவசம்...
நாளொன்றுக்கு 100 குறுந்தகவல்கள் இலவசம்...

இன்றைய அலைபேசி சந்தையில் இந்தியாவில்...
ஏன் உலகிலேயே இது போன்ற மிகவும் மலிவான
பயன்தரும் திட்டம் நடைமுறையில் இல்லை....

JIOவின் 2020 திட்டம் மட்டுமல்ல...
AIRTEL  அறிவித்த 2398 திட்டமும்..
VODOFONE  அறிவித்த 2399 திட்டமும்...
BSNL  அருகிலேயே வரமுடியாது

எனவே BSNL நிறுவனத்தின் 1999 திட்டத்தை..
மக்களிடம் எடுத்துச்செல்வோம்... 
மக்களிடம் எடுத்துச்சொல்வோம்...
இனிமேல் மக்கள் சேவையில்..
BSNLதான் என்னும் நிலை உருவாக்குவோம்...

Monday 27 January 2020


வாடிக்கையாளர் சேவை மையங்கள்
(மாவட்ட செயற்குழு தீர்மானங்கள்)

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 
12 வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் பிரிவு -1 வாடிக்கையாளர் சேவை மையமும் ஏனைய பகுதிகளில் மற்ற வகை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதுகுளத்தூர், திருவாடானை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய மையங்கள் ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் ஏனைய மையங்கள் நிரந்தர ஊழியர்களைக் கொண்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது விருப்ப ஓய்வு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மையங்களில் 
ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

BSNL நிர்வாகம் வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. 
BSNL ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள சேவை மையங்கள் மற்றும் தனியாருக்கு விடக்கூடிய சேவை மையங்களின் விவரங்கள் மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்கப்பட்டிருந்தன. ஆனால் மதுரை வணிகப்பகுதி நிர்வாகம் ஒட்டுமொத்த சேவை மையங்களையும் தனியாரிடம் விடும் மனநிலையில் உள்ளது. இது ஏற்புடையதல்ல. வாடிக்கையாளர் சேவை மையங்கள் நமது சேவையின் அடையாளங்கள். எனவே போதுமான ஊழியர்கள் உள்ள இடங்களில் நமது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஊழியர்கள் இல்லாத இடங்களைத் தனியாருக்குத் 
தாரைவார்ப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். 

 இராமநாதபுரத்தில் 26/01/2020 அன்று நடைபெற்ற 
NFTE மாவட்டச்செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தொடர்ந்து பணிபுரிய இளம் தோழர்கள் பணியில் உள்ளனர். மேற்கண்ட மையங்களில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இன்னும் 20 வருட சேவைக்காலம் உள்ளது. எனவே மதுரை வணிகப்பகுதி நிர்வாகம் மேற்கண்ட மூன்று இடங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களையும் BSNL ஊழியர்களைக் கொண்டு இயக்க வேண்டும். இதுபற்றி CHAMBER OF COMMERCE போன்ற அமைப்புகளிடமும்  தெரிவித்துள்ளோம். 
அவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிடுவதாக உறுதி கூறியுள்ளனர். தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் ஆதரவையும் நாம் பெறமுடியும்.

  எல்லாம் தனியார் மயம் என்பது ஏற்புடையதல்ல. 
FRANCHISEE என்பவர்கள் தேவதூதர்கள் அல்ல.
 வெறும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள்.  அவர்களை விட பலமடங்கு தரமான சேவையை நம்மால் தர முடியும். எனவே எல்லாம் தனியார் என்ற
 மனநிலையை நிர்வாகங்கள் கைவிட வேண்டும். 

மாநிலச்சங்கமும், மத்திய சங்கமும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்திடக் கேட்டுக்கொள்கின்றோம். மதுரை நிர்வாகம் 
நமது கோரிக்கையை ஏற்காவிட்டால் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றுபடுத்தி இது தொடர்பான இயக்கங்களுக்கு 
நாம் திட்டமிடல் வேண்டும்.
விருப்ப ஓய்வு பரிசு 


71வது குடியரசு தினத்தை முன்னிட்டு
71 நாட்கள் கூடுதல் சலுகையுடன்
365+71=436 நாட்களுக்கு
நாளொன்றுக்கு 3GB DATA வசதியுடன்
ரூ.1999/- திட்டம் BSNL 
நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
15/02/2020 வரை இந்த திட்டம் அமுலில் இருக்கும்.

மதுரை வணிகப்பகுதியில் 
விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்களுக்கு
 அவர்களது அலைபேசிக்கு மேற்கண்ட
மிகச்சிறந்த PREPAID திட்டம்
 சேமநலநிதி மூலம் பரிசாக அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Saturday 25 January 2020

குடியரசு தின வாழ்த்துக்கள் 
தொடர்புடைய படம்

26 january republic day 2020 images க்கான பட முடிவு

குடியுரிமை நிலைக்கட்டும்...
நல்ல குடியரசு மலரட்டும்...

அனைவருக்கும் 
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 
------------------------------------------------------------

கீழ்மையென்றும் வேண்டுவாய் போ.. போ.. போ..
பொய்யெலாம் மெய்யாக போற்றுவாய் போ.. போ.. போ..
ஜாதி நூறு சொல்லுவாய் போ.. போ.. போ.. 
நீதி நூறு சொல்லுவாய் போ.. போ.. போ..
காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ.. போ.. போ.. 
தீது செய்வதஞ்சிலாய் போ.. போ.. போ..
சோதிமிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ.. போ.. போ..
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ.. போ.. போ..
- மகாகவி பாரதி -

Friday 24 January 2020


விருப்ப ஓய்வு வழக்கு

விருப்ப ஓய்வுக்குத் தடை கோரி சென்னை CAT தீர்ப்பாயத்தில் 
சில தனிநபர் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கு 24/01/2020 அன்று விசாரணைக்கு வந்தது. டெல்லியில் இருந்து மனிதவள இயக்குநர் DIRECTOR(HR) சென்னை நீதிமன்றம் வந்திருந்தார். 
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விருப்ப ஓய்வுக்குத் தடையேதும் இல்லை என்றும் வரும் 26/02/2020 அன்று அடுத்த கட்ட
 விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

விருப்ப ஓய்வு எந்தவொரு ஊழியரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும்... எந்தவொரு ஊழியரையும் காயப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இடைக்காலத்தடை என்பது பொதுநலனுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் இடைக்காலத்தடை ஏதும் விதிக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

இதனிடையே டெல்லியில் வரும் 28/01/2020 அன்று மேலும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அந்த வழக்கிலும் அரசு மற்றும் BSNL நிர்வாகத்திற்கு எதிராகவோ, விருப்ப ஓய்வுக்குப் பாதகமாகவோ எந்தவித  தீர்ப்பும் வழங்கப்படாது என்றே தோன்றுகிறது. அதே நேரம் பணிக்கொடை மற்றும் COMMUTATION பட்டுவாடாவில் ஏதேனும் சாதகமான தீர்ப்பு சொல்ல வாய்ப்புள்ளது. 
வழக்குகள் பாதகம் செய்யுமா? பலன் தருமா?
 என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Thursday 23 January 2020

இ ர ங் க ல்

இராமநாதபுரம்  தொலைபேசி நிலையத்தில்
பணிபுரிந்த அருமைத்தோழர்.
P.சந்திரசேகரன் 
TT அவர்கள் 23/01/2020 அன்று 
உடல்நலக்குறைவால் மரணமுற்றார்.

விருப்ப ஓய்வில் செல்ல சில நாட்களே உள்ள நிலையில் 
அவரது மறைவு அதிர்ச்சி அளித்துள்ளது
காரைக்குடி மாவட்டத்தில் விருப்ப ஓய்வுக்கு 
விண்ணப்பித்தவர்களில்  இது இரண்டாவது மரணமாகும்

தோழர். சந்திரசேகரன் அவர்கள் மறைந்த தோழர் சவுக்கத் அலி அவர்களுக்கு பக்கபலமாகச் செயல்பட்டவர்
காரைக்குடியில் NFTE தோழர்கள் எட்டுப்பேர் மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தோழர் சந்திரசேகரனும் ஒருவர்

சங்கத்திற்காக இழப்புகளை சந்தித்தவர்
அவரது மறைவிற்கு நமது மனம் கசிந்த 
இரங்கலை உரித்தாக்குகின்றோம்

Wednesday 22 January 2020


நிர்வாகத்துடன் சந்திப்பு

BSNL நிர்வாகத்துடன் NFTE சங்கத்தின் அதிகாரப்பூர்வ சந்திப்பு 
FORMAL MEETING 21/01/2020 அன்று டெல்லியில் நடைபெற்றது. NFTE தலைவர்களுடன் SNATTA சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர். 
------------------------------------------
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

சம்பளப்பட்டுவாடா

ஜனவரி 30 அல்லது 31ம்தேதி சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். சங்க சந்தாப்பிடித்தம் உள்பட எல்லாவிதப்பிடித்தங்களும் பட்டுவாடா செய்யப்படும். நிர்வாகத்தின் குறிப்பில் SALARY PAYMENTS என்று மட்டுமே உள்ளது. டிசம்பர் மாதச்சம்பளமா? அல்லது டிசம்பர் மற்றும் ஜனவரியும் சேர்ந்தா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. 
எப்படியோ ஜனவரி 31ம்தேதி டிசம்பர் மாதச்சம்பளம் நிச்சயம். 
ஜனவரி மாதச்சம்பளத்தையும் சேர்த்துப் பெறுவது நமது லட்சியம்.

------------------------------------------

இலாக்காப் போட்டித்தேர்வுகள்

கடந்த 3 ஆண்டுகளாக TT, JE மற்றும் JAO கேடர்களுக்கான இலாக்காப்போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே மேற்கண்ட தேர்வுகளை உடனடியாக நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. வரும் மார்ச் மாதம் அறிவிப்பு செய்யப்படும் 
என நிர்வாகத்தரப்பில் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த JTO தேர்வில் தவறான கேள்விகளும் பாடத்திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. இதனால் மிகமிகக்குறைவான தோழர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மீண்டும் EXPERT COMMITTEE இடம் பரிசீலனை செய்ய உத்திரவிடுவதாக 
BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது.

------------------------------------------

விருப்ப ஓய்வு – VIGILANCE CLEARANCE

தனிப்பட்ட முறையில் வழக்குகள் நிலுவையில் உள்ள தோழர்களின் விருப்ப ஓய்வுக்கு  VIGILANCE CLEARANCE ஒப்புதல் அளிக்கப்படாது என VIGILANCE பிரிவு அறிவித்திருந்தது. இது நிர்வாகம் அறிவித்த BSNL விருப்ப ஓய்வு விதிகளுக்கு முரணானது என்பது  சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்தப்பிரச்சினை 27/01/2020 அன்று நடைபெறும் BSNL நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

------------------------------------------

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் கடன் பிடித்தங்கள்

வங்கிக்கடன் மற்றும் கூட்டுறவு சங்கக்கடன் ஆகியவை விருப்ப ஓய்வில் செல்பவர்களின் விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIAவில் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் தங்களுக்கு செலுத்தப்படாத பிடித்தங்களையும் கட்டப்படாத காலத்திற்கான அபராத வட்டியையும் சேர்த்து பிடித்தம் செய்திட நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளன.  கூட்டுறவு சங்கங்கள்  
மே மாதத்தில் இருந்து வராத பிடித்தங்களையும் சேர்த்து கணக்கில் காட்டியுள்ளன. மேலும் உறுப்பினர்களின் கணக்குகளை முடிக்காமல் அவர்களது ASSET சொத்துக்களை கடனில் இருந்து கழிக்காமல் தங்களுக்கு சேரவேண்டிய தொகையைக் கணக்கிட்டு அனுப்பியுள்ளன. இது முறையற்ற செயல். கூட்டுறவு சங்கங்களுக்கு எதிராக விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது.

------------------------------------------

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் ஓய்வூதியம்

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் ஓய்வூதியம்
 தாமதமாகும் சூழல் உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
தாமதம் உண்டாகும் என்பதை ஒத்துக்கொண்ட நிர்வாகம் 
தற்காலிக ஓய்வூதியம் வழங்கிட PROVISIONAL PENSION 
நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

------------------------------------------

ஓய்வூதியப்பலன்களின் உள்ள சந்தேகங்கள்

விருப்ப ஓய்வில் செல்பவர்களின் COMMUTATION மற்றும் பணிக்கொடை பற்றிய சந்தேகங்கள் போக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது பற்றிய DOT விளக்கம் 27/01/2020 அன்று வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும் ஓய்வூதிய ஆணையில் இது பற்றிய விவரக்குறிப்புகள் 
இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------

விருப்ப ஓய்வுக்குப் பிந்தைய நிலை

விருப்ப ஓய்வுக்குப்பின் BSNL சேவையை பராமரிப்பதில் உள்ள சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எனவே விருப்ப ஓய்வில் செல்பவர்களைத் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டது. இதுபற்றி விவாதித்து முடிவெடுப்பதாக நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

Tuesday 21 January 2020

மாவட்டச்செயற்குழு
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி
மாவட்டச்செயற்குழு

26/01/2020 – ஞாயிறு – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தலைமை
தோழர். பா.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்

ஆய்படு பொருள்

கிளைச்சங்கங்கள் சீரமைப்பு..
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்..
பணிமுடிப்பு பாராட்டு விழாக்கள்..
கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு...
பிப்ரவரி 9 – இராமேஸ்வரம் சிறப்புக்கூட்டம்...
VRS தோழர்களின் விடுபட்ட பதவி உயர்வுகள்...
AIBSNLPWA ஓய்வூதியர் சங்க அமைப்பை பலப்படுத்துதல்...
பல்வேறு தனியார்மய நடவடிக்கைகளை எதிர்கொள்ளுதல்..
வாய்ப்புள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களை நடத்துதல்...

கிளைச்செயலர்களும்... மாவட்டச்சங்க நிர்வாகிகளும்
தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்....

அன்புடன்...
   வெ. மாரி                இரா. இராமமூர்த்தி
மாவட்டச்செயலர்             கிளைச்செயலர்

ஒப்பந்த ஊழியர் வழக்கு

பத்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தொடுத்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நம்மைத் தொடர்ந்து TNTCWU சங்கமும் வழக்குத் தொடுத்திருந்தது.  இரு தரப்பிலும்  வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. பிப்ரவரி 15 தேதிக்குள் 30 சத சம்பளத்தைப் பட்டுவாடா செய்ய வேண்டுமென்று நீதிபதி உத்திரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை மார்ச் 06ந்தேதி நடைபெறும்.  மார்ச் 6 அன்று எவ்வளவு ஊதியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்துடன் வரவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார்.

ஒரு நிறுவனத்தை மூடினால் மட்டுமே அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிறுத்த முடியும். வேறு காரணங்களுக்காக நிறுத்த முனைந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகளை நிலுவையில்லாமல் பட்டுவாடா செய்த பின்பே நிறுத்த முடியும். எனவே நாம் தொடுத்த வழக்கின் மூலம் ஒப்பந்த ஊழியரின் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் பட்டுவாடா  ஆகியவற்றை நாம் உறுதிப்படுத்த இயலும்.

இதனிடையே புதிய ஒப்பந்த முறையில் நடைமுறைகள் மாறும்... குறைந்த பட்ச ஊதியம் என்பது கிடையாது.... பல்வேறு சலுகைகள் கிடையாது  என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதனை எதிர்த்தும் நாம் போராட வேண்டிய... வாதாட வேண்டிய கட்டாயம் உள்ளது. 

ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்வில் நமது முயற்சி தொடரும். ஒப்பந்த ஊழியர்கள் நம்பிக்கை இழக்காமல் இருந்திட கேட்டுக்கொள்கிறோம்.


SAMPANN – கடைசித் தேதி...

விருப்ப ஓய்வு விண்ணப்பங்கள் DOTயின் SAMPANN மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 70775 விண்ணப்பங்களில்  351 விண்ணப்பங்கள் மட்டுமே DOTயின் CCA அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

எனவே விண்ணப்பங்களை DOTக்கு அனுப்பும் பணியைத் 
துரிதப்படுத்தி 27/01/2020க்குள் முடித்திட 
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

உபயோகிப்பாளர்கள்  USER ID உருவாக்கம்
மற்றும் விண்ணப்பங்கள் புகைப்படங்கள்
பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி – 24/01/2020 என்றும்
மாவட்ட நிர்வாகங்கள் விண்ணப்பங்களை
DOTக்கு அனுப்ப வேண்டிய தேதி – 27/01/2020
என்றும் கூறப்பட்டுள்ளது.

மதுரை வணிகப்பகுதியில் விண்ணப்பங்கள் SAMPANNல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. சில தோழர்களின் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் எழுத்துப்பிழை காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட தோழர்கள் கவனமுடன் தங்களது விவரங்களை SAMPANNல் சரிபார்த்து ஏதேனும் பிழை இருப்பின் உடனடியாக சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Monday 20 January 2020


மக்கள் தலைவர்
 
ஜனவரி - 21
தோழர். லெனின் நினைவு தினம்

அரசு மற்றும் கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாகத் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தார்  தோழர். லெனின்.  பார்வையாளர்களை  தாமே  வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் 
உணர்ந்ததே  இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்க தனித்த தினம் குறித்து வைப்பார் தோழர். லெனின்குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும் மரத்தால் ஆன செருப்புகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் தோழர் லெனினைக் காண வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையில் வைத்து விட்டு பதட்டத்துடன் எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சிறிது நேரமே காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி  மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ  அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு  விருந்தினர்களை உட்கார வைத்தார் தோழர்...  நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!  என்று வயதான விவசாயிகளை அன்புடன் கூறுவார். ஒவ்வொருவரின் பெயரையும்  குடும்பப் பெயரையும் தந்தை பெயரையும் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் கேட்டறிந்த பின்பு எளிய மனப்பூர்வமான உரையாடலைத் தொடங்குவார்.
அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும் அவர்களிடம் இருக்கும் நிலம்  எத்தகையது என்றும்  கூட அவர் அறிந்திருந்தார்.

இன்று ஒரு சாதாரணக் கவுன்சிலரைக்கூட மக்கள் உடனடியாக சந்திக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் இருந்து விலகியவர்களாகி விட்டனர்.  
விலகியவர்கள்  விலக்கப்படுவார்கள்  என்பது வரலாறு. 

மக்களுக்காக வாழ்ந்து...
மக்களோடு வாழ்ந்த மறைந்த 
மக்கள் தலைவர்
தோழர் லெனின் புகழ் போற்றுவோம்.