Monday, 30 March 2020

பணி நிறைவு வாழ்த்துக்கள்
-------------------------------
உலக ஊரடங்கு காலத்தில்…
காரைக்குடி மாவட்டத்தில்…
இன்று 31/03/2020 
பணி நிறைவு பெறும்..

திருக்குவளை பிறந்த…
அருமைத்தோழர்..
S.முருகானந்தம்
 TT/கீழசெவல்பட்டி 
அவர்களின் பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்…

Saturday, 28 March 2020

செய்திகள்


EX-GRATIA பட்டுவாடா
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு முதல் தவணை EX-GRATIA 
ருட்கொடை பட்டுவாடா செய்வதற்காக BSNL  நிறுவனத்திற்கு 
DOT  ரூ.4196/=கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்கண்ட நிதியினை 31/03/2020க்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என DOT த்திரவிட்டுள்ளது. எனவே EX-GRATIA பட்டுவாடா 31/03/2020க்குள் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. EX-GRATIA தொகை ஓய்வு பெற்ற ஊழியர்கள் 
கடைசியாக சம்பளம் வாங்கிய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 

5லட்சம் வரை வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் எனவும் 
5 லட்சத்தில் இருந்து 10லட்சம் வரை 20சத வரியும்,
 10லட்சத்திற்கு மேல் 30சத வரியும் பிடித்தம் செய்யப்படும் என்றும் 
BSNL நிர்வாகம் தனது 26/03/2020 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
----------------------------------------------------------------

விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம்
இம்மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. 
எனவே ஏப்ரல் மாதம் விடுப்புச்சம்பளப் பட்டுவாடா நடைபெறும்.
----------------------------------------------------------------

பணியில் உள்ள ஊழியர்களின் சம்பளம்...

ஒரு வழியாகப் பணியில் உள்ள ஊழியர்களின் பிப்ரவரி மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. கடந்த பிப்ரவரி 2019ல் ஆரம்பித்த தாமதச் சம்பளப்பட்டுவாடாப் பிரச்சினை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. 

இனி மார்ச் மாதச்சம்பளம் மட்டுமே பாக்கி. 
உலகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டு இந்திய தேசம் முழுமையும் முடக்கப்பட்டுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவையில் அரசுத்துறை மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே மார்ச் மாதச்சம்பளம் 
மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ பட்டுவாடா நடைபெறலாம்.
----------------------------------------------------------------

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம்

ஓராண்டு காலமாக உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்னும் சம்பளப்பட்டுவாடா நடைபெறவில்லை. 
நீதிமன்றம் மூன்று மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்று கூறியும் கூட ஒரு மாதச்சம்பளமே பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்பால் தேசம் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இன்றி இருப்பதால் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலையைப் பறிக்க கூடாது எனவும், 
பணியற்ற 21 நாட்களும் வேலை நாட்களாகக் கருதப்பட வேண்டும் எனவும் அரசு உத்திரவிட்டுள்ளது. எனவே BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கிட வேண்டும், 21நாள் கதவடைப்புக்காலம் பணிக்காலமாக கருதப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் அடிமட்ட ஊழியர்களான  
ஒப்பந்த ஊழியர்களுக்கு BSNL நிறுவனம் உதவவில்லை என்றால் 
இந்த நிறுவனம் அழிந்து ஒழிந்து போகட்டும்....
----------------------------------------------------------------

மார்ச் மாதம் ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியம்...

நாடு முழுவதும் கதவடைப்பு நடைபெற்று வருவதால் இம்மாதம் ஓய்வு பெறும் ஊழியர்களின் ஓய்வூதியப்பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவுகிறது. 
எனவே மார்ச் மாதம் ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு 
தற்காலிக ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Monday, 23 March 2020


மார்ச் – 23 - பகத்சிங் நினைவு நாள்...


23-03- 1931

பகத்சிங்... சுகதேவ்... இராஜகுரு...
இந்திய தேசத்து இளைஞர்கள் மூவர்...
இந்திய தேசவிடுதலைக்காக...
இன்னுயிர் நீத்த நாள்....
தூக்குக்கயிறும்...
துக்கம் கொண்ட நாள்..

அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது...
இந்த மண் நம்முடையதாக இருக்கும்...
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்...
இன்குலாப் ஜிந்தாபாத்... இன்குலாப் ஜிந்தாபாத்..
இதுவே அந்த இளைஞர்கள் எழுப்பிய முழக்கம்...

20-03-2020
அக்சய் குமார்... வினய் சர்மா...
பவன் குப்தா... முகேஷ் சிங்...
நான்கு இளைஞர்கள்...
நிர்பயா என்னும் அப்பாவி பெண்ணை
பாலியல் வன்கொடுமையில்
பாழாக்கிய குற்றத்திற்காக
நாக்குத் தள்ள தூக்கு கயிற்றில்
தொங்க விடப்பட்டனர்...

இதே மார்ச் மாதம்...
அடிமை இந்தியாவில்...
அன்றைய இளைஞர்கள்...
தாய் நாட்டு விடுதலைக்காக
தூக்கு கயிற்றை முத்தமிட்டனர்...

அதே மார்ச் மாதம்...
சுதந்திர இந்தியாவில்....
இன்றைய இளைஞர்கள்
அப்பாவிப் பெண்ணை மானபங்கம் செய்து 
கொலை என்னும் கொடுமை செய்து....
மரணம் என்னும் கடுமையில் வீழ்ந்தனர்..

அன்று....
தூக்குக் கயிறு...
வீர இளைஞர்களின் உயிர் பறித்து...
துக்கம் கொண்டது...

இன்று...
வீணர்களின் உயிர் குடித்து...
வெட்கம் கொண்டது...

எங்கே செல்கிறது நாடு?
எங்கே செல்கின்றனர் நம் இளைஞர்கள்?

Friday, 20 March 2020


CMDயுடன் சந்திப்பு

18/03/2020 அன்று BSNL CMDயுடன் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சந்திப்பு நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
--------------------------------------------------
பிப்ரவரி மாதச்சம்பளம்
மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் 
சம்பளப்  பட்டுவாடா நடைபெறும். ஜூன் மாதம் முதல் 
சம்பளப்பட்டுவாடா முறைப்படுத்தப்படும்.
--------------------------------------------------
விருப்ப ஓய்வு பலன்கள்
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 78569 ஊழியர்களில் நாடுமுழுவதும்
199 பேர் விருப்ப ஓய்வுக்கு முன்னரே உயிர்நீத்துள்ளனர். 
1767 ஊழியர்களது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் இன்னும்  DOTக்கு அனுப்பப்படவில்லை.  இதுவரையிலும் 26370 ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. விடுப்புச்சம்பளப் பட்டுவாடாவிற்கான செலவு ரூ.5200/=கோடியாகும்.
 அருட்கொடை எனப்படும் EX-GRATIA பட்டுவாடா
 மார்ச் 30 அல்லது 31ம் தேதி நடைபெறும்.
--------------------------------------------------
4G சேவை
மே 2020ல் 4G அலைக்கற்றை BSNLக்கு ஒதுக்கப்படும்.  
தற்போது 40ஆயிரம் 3G BTS கோபுரங்கள்  4G சேவைக்கு உயர்நிலைப்படுத்தப்பட தயாராக உள்ளன.
ஏற்கனவே BTS ஒப்பந்ததாரர்களுக்கு 2000 கோடி ரூபாய் பில்கள் பாக்கி உள்ளன. மேலும் BTS உயர்நிலைப்படுத்த BTS ஒன்றுக்குப் 
பல லட்சம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டும்.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு  செய்யப்பட்ட பின்பு
 4G உபயோகம் செய்யாவிட்டாலும் கூடநாளொன்றுக்கு 
5.5 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்.
மேற்கண்ட செலவுகளை சந்திக்கும் நிலையில் BSNL இல்லை.
எனவே இன்றைய சூழலில்  4G சேவையை உடனடியாகத் 
துவக்கும் நிலையில் BSNL இல்லை.
மார்ச் 2021ல்தான் BSNL 4G சேவையைத் துவக்கும்.
 --------------------------------------------------
BSNL செயல்பாடு
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் BSNL கூடுதல் இணைப்புக்களைக் கொடுத்துள்ளது. 8 சதம் அளவிற்கு வருவாய் உயர்வு காணப்பட்டுள்ளது. சிறப்பான FTTH சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கான
பணிகள் வேகமாக  நடைபெற்று வருகின்றன.
 --------------------------------------------------
சொத்துக்கள் விற்பனை
BSNL நிறுவனத்திற்கு 40ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் 
தனது சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே முதற்கட்டமாக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 11 சொத்துக்கள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.  சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்த சொத்துக்களை வாங்கிடத் தயாராக உள்ளன.
--------------------------------------------------
BSNL மற்றும் MTNL இணைப்பு
BSNL மற்றும் MTNL நிறுவங்கள் விரைவில் இணைக்கப்படும். இவற்றை இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
--------------------------------------------------
கடன் உத்தரவாதம்
BSNL தனது வளர்ச்சிப்பணிகளுக்காக 8500 கோடி அளவில் கடன்பெறுவதற்கான கடன் உத்திரவாதம் மத்திய அரசால் ஏப்ரல் 2020ல் வெளியிடப்படும். இந்த கடன் பத்திரங்களுக்கு 7.5 சத வட்டி கிடைக்கும்.

Tuesday, 17 March 2020

கூட்டுறவு சங்கப்பிடித்தம்

விடுப்புச்சம்பளம் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக கூட்டுறவு சங்கங்களிடமிருந்து ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட வேண்டிய நிலுவைத்தொகை கோரப்பட்டுள்ளது. இதனிடையே விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கான கூட்டுறவு சங்கப்பிடித்தம் தற்போது 
அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 

சென்னைக்கூட்டுறவு சங்கம் தனது ஊழியர்களின் ASSET சொத்துக்கணக்கை அவர்களது கடனில் இருந்து கழித்துக்கொண்டு நிகரக்கடன் தொகையை மட்டுமே நிர்வாகத்திற்கு அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. ஆனால் மதுரை கூட்டுறவு சங்கம் விருப்ப ஒய்வில் சென்ற ஊழியர்களின் ASSET எனப்படும் சொத்துத் தொகையை கடனில் இருந்து கழிக்க முடியாது என்றும் மொத்தக் கடன் தொகையையும் நிர்வாகத்திடம் பிடித்தம் செய்திடக் கோருவோம்
 என்றும் கண்மூடித்தனமாக கூறிவந்தது. 

எனவே 17/03/2020 அன்று மதுரைக் கூட்டுறவு சங்க அதிகாரிகளை 
BSNLEU மற்றும் NFTE சங்கத்தோழர்கள் கூட்டாக சென்று சந்தித்தனர். உறுப்பினர்களின் கடன் தொகையில் இருந்து அவர்களது ASSET தொகை கழிக்கப்பட வேண்டும் என உறுதிபடக் கோரிக்கை எழுப்பினர். இறுதியில் மதுரைக் கூட்டுறவு சங்க நிர்வாகம் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும்... தங்களது மேல்மட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு நடைமுறைப்படுத்துவதாகவும் சங்கப்பிரதிநிதிகளிடம் உறுதி அளித்துள்ளது.

இது சம்பந்தமாக வெள்ளிக்கிழமை மீண்டும் அவர்களை சந்திப்பதாக ஊழியர் தரப்பு கூறியுள்ளது. பலகாலம் தங்களது உழைப்பைக் கடனுக்காக செலுத்தி கூட்டுறவு சங்கத்தை வளர்த்த தோழர்கள் 
அதில் இருந்து விடைபெறும் போது அவர்களுக்கான பங்கை
 அவர்களுக்கான உரிமைத்தொகையை முறையாகக் கணக்கிட்டு 
அவர்களது  கடன் கணக்கை முடிப்பதுதான் சரியான நடைமுறையாகும்.
மதுரைக்கூட்டுறவு சங்கம் உரிய முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.

Monday, 16 March 2020


BSNL... MTNL... விற்பனைக்கு அல்ல...

BSNL மற்றும் MTNL நிறுவனங்கள்
தனியாருக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது...

மேலும் BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் 
பங்கு விற்பனை என்பதுவும் கிடையாது என்று

தொலைத்தொடர்பு இலாக்கா துணை அமைச்சர்
திரு.சஞ்சய் தாத்ரே நாடாளுமன்ற மேலவையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் MP திரு.மனஸ் ரஞ்சன் புனியா எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக ஊழியர்களின் சம்பளம் பட்டுவாடா செய்வதில் தாமதம் நிலவுவதாகவும், விரைவில் இவை சரிசெய்யப்படும் 
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

என் கடன் பொதுத்துறை விற்பனையே...
என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய BJP   அரசு...
AIR INDIA, LIC, BPCL போன்ற நிறுவனங்களில் பங்கு விற்பனைக்கும் தனியார் நுழைவுக்கும் அறிவிப்பு செய்த அரசு
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தனியாருக்கு விடப்படாது 
என்று அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

BSNL நிறுவனம் தற்போதைய BJP அரசின் காலத்தில்
அமரர்.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த நேரத்தில் உருவாக்கப்பட்டது. எனவே தங்களது நல்லாட்சி நாயகன் உருவாக்கிய பொதுத்துறையைக் காக்க வேண்டியது BJP அரசின் கடமையாகும்.

எப்படியோ..  பாரத தேசத்தின் பாரம்பரியமிக்க
 தொலைத்தொடர்பு நிறுவனமான
BSNL மக்கள் சொத்தாக தொடர்வது மகிழ்ச்சியே...

Thursday, 12 March 2020


செ ய் தி க ள்

வைப்புநிதி பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் வைப்புநிதி பட்டுவாடா பெரும்பகுதி முடிந்து விட்டது. இதில் DOTயின் பங்கு பாராட்டுக்குரியது. இன்னும் சில தோழர்களுக்குப் பட்டுவாடா நடைபெறவில்லை. மாவட்ட அலுவலகங்களில் நடந்த ஒருசில குளறுபடிகளால் இன்னும் சிலருக்குத் தேக்கநிலை நிலவுகிறது. உதாரணமாக வங்கி IFSC குறியீட்டு எண்ணைக் குறிப்பிடுவதில் குழப்பம். ஆங்கில எழுத்தான O என்பதை 0 ZERO என்றும் ZERO என்பதை O என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் சிலருக்கு பட்டுவாடாவில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வைப்புநிதி விண்ணப்பத்துடன் வேறு ஒரு ஊழியரின் வங்கிக் காசோலை மற்றும்  MANDATE இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறு சிறு தவறுகளால் பட்டுவாடாவில் ஒரு சிலருக்கு மட்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் பட்டுவாடா செய்து முடிக்கப்படும் என்று DOT  அலுவலக செய்திகள் கூறுகின்றன.
------------------------------------
CMD அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் சந்திப்பு

விருப்ப ஓய்விற்குப் பிந்தைய நிலைமை பற்றியும், BSNL மறுசீரமைப்பு பற்றியும் விவாதிக்க அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான NFTE, BSNLEU, AIBSNLEA மற்றும் SNEA சங்கங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 18/03/2020 புதன்கிழமை மாலை கூட்டம் நடைபெறும்.
------------------------------------
விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின் விடுப்புச்சம்பளம் பட்டுவாடா
செய்வதற்கானப் பணிகள் வெகுவிரைவாக நடைபெற்று வருகின்றன.
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியரின் கடைசி மாத அடிப்படைச்சம்பளத்தைக் கணக்கிட்டுத்தான் விடுப்புச்சம்பளம் வழங்கப்படுகின்றது. எனவே ஊழியர்களின் அடிப்படைச்சம்பள விவரத்தை DOTயிடம் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
இந்தப்பணி 16/03/2020க்குள் முடிக்கப்பட வேண்டும் 
என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மதுரை போன்ற இடங்களில் ஜனவரி இறுதியில் வெளியிடப்பட்ட நான்கு கட்டப்பதவி உயர்வு  இன்னும் கணக்கில் கொள்ளப்படவில்லை. பழைய சம்பளமே தொடருகின்றது.

மேலும் DOT காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு,
BSNL காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு 
ஆகியவை முறையாக கணக்கில் கொள்ளப்படவில்லை. 
DOT  காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பிற்கு வருமான வரி இல்லை. BSNL காலத்தில் சேர்க்கப்பட விடுப்பிற்கு வரிப்பிடித்தம் உண்டு. 

மதுரையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வில் சென்ற தோழர்.N.N.பாஸ்கரன் AO அவர்களுக்கு DOT காலத்தில் சேர்க்கப்பட்ட விடுப்பு BSNL கால விடுப்பாகத் தவறுதலாக கணக்கில் கொள்ளப்பட்டதால் ஏராள வரிப்பிடித்தம் வருகின்றது. இது போன்ற குளறுபடிகள் விடுப்புச்சம்பளப் பட்டுவாடாவிற்கு முன்பு சரிசெய்யப்பட வேண்டும். தோழர்கள் விழிப்புடன் தங்களது கணக்குகளைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
------------------------------------
கூட்டுறவு சங்கப்பிடித்தம்

கடைசியாக... ஒருவழியாக....  விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் கூட்டுறவு சங்கப்பிடித்தம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் விரைந்து செயல்பட்டு கணக்குகளை முடித்து பிடித்தம் செய்ய வேண்டிய தொகையை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல் உறுப்பினர்களின் சொத்து ASSET  கடன் தொகையில் கழித்துக்கொள்ளப்பட வேண்டும். இதனை எந்தவொரு கூட்டுறவு சங்கமும் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் போராட்டக்களம் இறங்குவோம் என்பதை
 உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊதியமல்லால் ஓய்வூதியம் இல்லை...

BSNLலில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
தற்போது ஓய்வூதிய உயர்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ஓய்வூதிய உயர்வு என்பது ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்புதான் பரிசீலிக்கப்படும். எனவே பணியில் உள்ள ஊழியர்களின் 
ஊதிய மாற்றம் நிகழ்ந்த பின்புதான்
ஓய்வு பெற்றவர்களின் அடிப்படைச்சம்பளம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் 
என்று 11/03/2020 அன்று நாடாளுமன்றத்தில்
இலாக்கா இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்தப்படுமா?
என்று மக்களவையில் நாடளுமன்ற உறுப்பினர் திரு. P.C.மோகன் அவர்கள் கேட்ட கேள்விக்கு  இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

இலாக்கா அமைச்சரும் கூட இதையே நமது
ஓய்வூதியர் நலச்சங்கத் தலைவர்களிடம்
நேரில் சந்தித்த போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய மாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம் இல்லை.
லாபம் இல்லாமல் ஊதிய மாற்றம் இல்லை.
வருமானம் இல்லாமல் லாபம் இல்லை.
தரமான சேவைகளை அளிக்காமல் வருமானம் இல்லை.
போதிய ஊழியர்கள் இல்லாமல் தரமான சேவைகள் இல்லை...
என்று இது விக்கிரமாதித்தன் கதையாக கடைசி வரை நீளும்....

பல தோழர்கள் தங்கள் வாழ்நாளில் ஓய்வூதிய மாற்றத்தைக்
காணாமலே வானுலகம் சென்று விடுவார்கள்.

பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் எப்போது?
என்பது கண்ணுக்குத் தென்படாத  நிலையே நிலவுகிறது.

எனவே... ஓய்வூதிய உயர்வு கேட்டு
வழக்கு மன்றம் செல்லலாமா? வேண்டாமா? என்று
ஓய்வூதியர்கள் அமைப்புக்களில்...
பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே EXTRA INCREMENT உள்பட
ஏராள வழக்குகள் அகலிகையாக காத்துக்கிடக்கின்றன...

மாதாமாதம் சம்பளத்திற்கே அல்லாடும்
பணியில் உள்ள BSNL ஊழியர்கள்...
தற்போது சம்பள மாற்றம் என்ற கோரிக்கையை
முன்வைத்துப் போராட இயலாத சூழல் நிலவுகிறது...

சம்பள மாற்றம் உடனடியாக சாத்தியம் இல்லை...
எனவே விலைவாசிப்படி இணைப்பு IDA MERGER என்பதை
நாம் வலியுறுத்திப் பெறவேண்டும் என்று
சில அமைப்புக்கள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் அனைத்து
ஊழியர் சங்கங்களும்...
அதிகாரிகள் சங்கங்களும்...
ஓய்வூதியர் அமைப்புக்களும்...
ஒன்றுபட்டு சிந்தித்து...
ஓரணியில் செயல்பட்டால் மட்டுமே...
உருப்படியாக ஏதேனும் செய்ய முடியும்...
ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு...

Tuesday, 10 March 2020


மனங்கவர் மகளிர் தினவிழா
மதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில்
மகளிர்தின விழா வெகுசிறப்புடன் 10/03/2020 அன்று நடைபெற்றது.
DGM திருமதி.ரோசலின்  ராஜகுமாரி அவர்கள் தலைமையில்...
முதன்மைப்பொதுமேலாளர் மற்றும் 
அனைத்து துணைப்பொதுமேலாளர்கள் முன்னிலையில் 
மகளிர்தின விழா சிறப்புற நடைபெற்றது.
காரைக்குடி மற்றும் மதுரைப் பகுதி தோழியர்கள் 
திரளாகக் கலந்து கொண்டனர். 

தோழியர். மகேஸ்வரி அவர்கள் நிகழ்ச்சியை 
தொகுத்து வழங்கினார்.
திருமதி.உமா AGM அவர்கள் தலைமையில் 
தோழியர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
தோழியர். பத்மாவதி அவர்கள் தோழர்கள் தோழியர்களுக்கான 
விளையாட்டுக்களைச் சுவைபட நடத்தினார்.

மதுரை மாநகரில் சிறந்த சமூக சேவை
 புரிந்ததற்கான விருது வழங்கப்பட்ட
முதன்மைப்பொதுமேலாளர் திருமதி.எஸ்தர் ராஜம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தோழியர்கள் மகிழ்ந்தனர்.

ஓரங்க நாடகம், உணர்ச்சிமிகு பாடல்கள், 
இனிய கானங்கள், மகிழ்ச்சிமிகு உரைகள் என
 மதுரையில் மகளிர்தின விழா 
மிகவும் மகிழ்வுடன் நடைபெற்றது. 
பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Monday, 9 March 2020


வ ர வே ற் பு  வி ழா 

AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கம்
காரைக்குடி கிளை
---------------------------------
புதிய உறுப்பினர்கள் வரவேற்பு விழா
---------------------------------
14/03/2020 – சனிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
---------------------------------
தலைமை : தோழர். பாண்டித்துரை  
AIBSNLPWA கிளைத்தலைவர்

பங்கேற்பு : தோழர்கள்

S. ஜெயச்சந்திரன்
AIBSNLPWA மாநில துணைத்தலைவர்

P. முருகன்
AIBSNLPWA மாவட்டத்தலைவர்

N. நாகேஸ்வரன்
AIBSNLPWA  மாவட்டச்செயலர்

V. மாரி
NFTE மாவட்டச்செயலர்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களே...
விருப்பமுடன் வருக...
உங்கள் நலம் காக்கும் AIBSNLPWA
நலச்சங்கத்தில் இணைந்திடுவீர்...
நலம் பெறுவீர்... வளம் பெறுவீர்...

அனைவரையும் அன்புடன் அழைக்கும்...
K. சுந்தரராஜன்
AIBSNLPWAகிளைச்செயலர்