Friday, 30 October 2020

 மாநிலம் தழுவிய தர்ணா


 
ஒப்பந்தத் தொழிலாளர்களின்  துயர் துடைக்க...

தோழர்களே... திரண்டு வாரீர்...

Tuesday, 27 October 2020

ஒப்பந்த ஊழியர் போராட்டம்







N F T E

தமிழ் மாநிலச்சங்கத்தின் அறைகூவலின்படி...

----------------------------------------------------------------------------

ஒப்பந்த ஊழியர்களுக்கு...

நியாயம் கேட்டு.... கூலி கேட்டு...

மாவட்டத்தலைநகர்களில்..

03/11/2020 – செவ்வாய்க்கிழமை...

மாநிலம் தழுவிய

மாபெரும் தர்ணா 

நிர்வாகமே...

  • ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் ஒப்பந்த ஊழியர் சம்பளத்தை உடனே வழங்கிடு....
  • சென்னை உயர்நீதிமன்ற உத்திரவை தவறாது அமுல்படுத்து...
  • டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துக் கூலியையும் வழங்கிடு....
  • ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்காதே.... BSNL சேவையை பாழாக்காதே....
  • OUTSOURCING என்னும் நடைமுறையில் BSNL சேவை சீரழிவதை தடுத்து நிறுத்து...
  • பழுதுகளை நீக்காமல்.... உரிய சாதனங்களை வழங்காமல்... சேவையை சீரழிக்கும் ஒப்பந்தகாரர்களின் குத்தகையை ரத்து செய்...
  • சிம் விற்கும் FRANCHISEE விற்பனையாளனிடம் பராமரிப்புச் சேவையைக் கொடுத்த தவறான நடைமுறையை நிறுத்து...
  • பாழாய்ப்போன FRANCHISEEயிடம் இருந்து... பாழாகிப்போகும் BSNL சேவையைக் காப்பாற்று...

 VIGILANCE AWARENESS WEEK

உலகில் உள்ள 198 நாடுகளில்

லஞ்ச ஊழல்கள் மலிந்த நாடுகள் பட்டியலில்

இந்தியா 80வது இடத்தில் உள்ளது...

நமக்கும் மேலே 79 யோக்கியர்கள்...

நாம் இடைப்பட்ட இடத்தில் இருக்கின்றோம்...

 -----------------------------------------------------------------

இந்திய தேசம்... 

அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை

விழிப்புணர்வு வாரம் கொண்டாடுகிறது.

அரசு அலுவலங்களில் காகிதங்களில் எழுதப்பட்ட

உறுதிமொழிகள் வாசிக்கப்படுகின்றன...

பின்பு காற்றில் பறக்க விடப்படுகின்றன...

இதுதான் காலம் காலமாக நாம் கொண்டாடும்...

VIGILANCE AWARENESS WEEK ஆகும்...

  -----------------------------------------------------------------

லஞ்சம் ...  திருட்டு பற்றிய எந்த ஒரு  நிகழ்வையும்

அதற்குரிய நிறுவனத்திற்கு தெரியபடுத்துவேன் என்பது

இன்றைய உறுதிமொழிகளில் ஒன்றாகும்...

எனவே நம்மைச் சுற்றி நடக்கும் திருட்டுக்களில்

ஒன்றையாவது இன்று வெளிஉலகிற்குத் தெரியப்படுத்துதல்

நமது கடமையாகும்.

  -----------------------------------------------------------------

இராமேஸ்வரம் தீவு....

தீர்த்தத்திற்கும்... திருட்டுக்கும் பெயர் போனது...

அங்குள்ள  POWER PLANTல் வைக்கப்பட்டிருந்த

பல ஆயிரம் மதிப்புள்ள காப்பர் சட்டங்கள் காணவில்லை....

வேலியே பயிரை மேய்ந்துள்ளது....

என்பதுதான் வேதனையான செய்தி...

இது ஒரு சோற்றுப்பதம்...

ஒரு பானைச்சோறு நம் கண் முன்னே உள்ளது...

இன்று VIGILANCE AWARENESS WEEK...

கடைப்பிடித்த நமது நிர்வாகம்...

காப்பர் சட்டம் திருட்டு விவகாரத்தில்

விறைப்பாக இருக்குமா? WEAK ஆக இருக்குமா ?

என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

Friday, 23 October 2020

RTI மூலம்  ஒப்பந்த ஊழியர் விவரங்கள் 

நமது NFTE சங்கத்தின் முன்னாள் மாவட்டச்செயலரும், 

இந்நாள் வழக்கறிஞரும்.... ஒப்பந்த ஊழியர்களுக்காக வழக்கு மன்றம் சென்று நியாயமான உத்திரவு பெறக் காரணமாக இருந்தவருமான தோழர் N.K. சீனுவாசன் அவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக ஒப்பந்த ஊழியர்கள் குறித்த பல விவரங்களை தமிழக தொலைத்தொடர்பு நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். 

புள்ளி விவரங்கள் மாவட்ட அளவில் அளிக்கப்பட வேண்டியவையாக இருப்பதால் உடனடியாகத் தேவையான தகவல்களை தோழர்.                              N.K. சீனுவாசன் அவர்களுக்குத் தெரிவிக்குமாறு வணிகப்பகுதி மாவட்ட நிர்வாகங்களை மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டுள்ள தகவல்கள்...

  • 01/01/2019... 30/09/2019... 01/04/2020 மற்றும் 31/8/2020 ஆகிய தேதிகளில் கேபிள் பராமரிப்பு பணி... காவல் பணி... காவல் பணியோடு இணைந்த ஏனைய பணிகள்... துப்புரவுப்பணி, HOUSE KEEPING பணிஆகிய பணிகளில் மாவட்ட வாரியாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் விவரம்.
  • 01/01/019 முதல் 31/03/2020 வரையிலும் அதன்பின் 31/08/2020 வரையிலும் ஒப்பந்தப் பணிசெய்த ஒப்பந்தக்காரர்களின் விவரங்கள்.
  • மாவட்ட வாரியாக ஒப்பந்த ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடாவைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர் மற்றும் பதவி விவரங்கள்.
  • ஒப்பந்த காலத்திற்கு முன்பே ஒப்பந்தத்தை ரத்து செய்த ஒப்பந்தகாரர்கள் விவரம்.
  • EPF மற்றும் ESI கட்டப்பட்ட விவரங்கள்.
  • தேதிவாரியாகக் குறைக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் விவரம்.

  • பட்டுவாடா செய்யப்படாமல் இருக்கும் சம்பளத்தொகை பற்றிய விவரம்.
நிர்வாகம் தரும் விவரங்களின் அடிப்படையில்

அடுத்த கட்டப்பணிகள் தொடரும்.

Tuesday, 20 October 2020

வருமான வரித்தாக்கல்

வருமான வரித்தாக்கல் செய்ய நவம்பர் 30 கடைசி நாளாகும்.

சென்ற ஆண்டுக்கான FORM-16 படிவம்

தமிழ்நாடு INTRANET இணையத்தில் கிடைக்கின்றது. 

FORM-16 படிவத்தில் உள்ள பல விவரங்கள் வருமான வரி இலாக்காவின் ITR படிவத்தில் இல்லை. FORM-16 படிவத்திலும் பல விவரங்கள் காட்டப்படவில்லை. சில விவரங்கள் முழுமையாய் இல்லை. வீட்டு வாடகை, வீட்டுக்கடன் வட்டித்தொகை, விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் வித்தியாசம் தென்படுகின்றன.  எனவே தோழர்கள் குறிப்பாக விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் வருமான வரி தாக்கல் செய்யும் போது கீழ்க்கண்டவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். 

பிப்ரவரி மாத ஓய்வூதியம்

விருப்ப ஓய்வு பெற்ற தோழர்கள் தங்களது பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை மொத்த வருமானத்துடன் சேர்த்துக் காண்பிக்க வேண்டும். மார்ச் மாத ஓய்வூதியம் ஏப்ரலில் பெறுவதால் அதனை அடுத்த ஆண்டிற்குத்தான் காண்பிக்க வேண்டும்.

EXGRATIA – தொகை

5 லட்சம் வரையிலும் EXGRATIA – தொகைக்கு வரிவிலக்கு உண்டு.

ITR படிவத்தில் B 1 (ii) Less : Allowance என்பதில் கூடுதல் வரிசை ADD செய்து அதில் Sec 10(10 C )  Amount received on Voluntary retirement என்ற வரிசையில் EXGRATIA – தொகையைப் பதிவிட வேண்டும். 

விடுப்புச்சம்பளம் – Leave Salary

DOT காலத்தில் சேமிக்கப்பட்ட விடுப்பிற்கான விடுப்புச்சம்பளத்திற்கு வருமான வரி இல்லை. BSNL காலத்தில் சேமிக்கப்பட்ட விடுப்புச்சம்பளத்திற்கு 3 லட்சம் வரையிலும் வரி இல்லை. அதற்கு மேல் உள்ள தொகைக்குத்தான் வரி உண்டு. சிலரது FORM-16 படிவத்தில்  விடுப்புச்சம்பளம் BSNL காலத்திற்கானது என்று தவறுதலாக காட்டப்பட்டுள்ளது. எனவே சரியான தொகையை விடுப்புச்சம்பளக் கணக்கில் காட்ட வேண்டும். இல்லையெனில் லட்சக்கணக்கில் வருமான வரி எகிறி விடும். கூடவே நமது ரத்த அழுத்தமும் எகிறி விடும். 

LTC தொகை

ஓய்வுக்கு முன் LTC சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு வருமான வரி இல்லை. எனவே அந்த தொகையை வரிவிலக்கில் காட்ட வேண்டும். 

வீட்டு வாடகை

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் வாடகைக்கு செலுத்திய தொகைக்கு வரிவிலக்கு பெறலாம். வீட்டு வாடகை செலுத்துபவர்கள் மறவாமல் அதனை வரிவிலக்கில் காட்ட வேண்டும்.

வீட்டுக்கடன்

வீட்டுக்கடன் பெற்றவர்கள் வட்டித்தொகையை தங்களது வங்கி அளித்த STATEMENTல் உள்ளவாறு B2. Type of House Property (v)ல் காட்ட வேண்டும். சிலரது FORM-16 படிவத்தில் இந்த தொகை குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.

இலாக்காவில் HBA கடன் பெற்றவர்களின் முழுத்தொகையும் விடுப்புச்சம்பளம் மற்றும் EXGRATIA – தொகையில் கழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த விவரங்கள் FORM-16 படிவத்தில் இல்லை. எனவே அத்தகைய தோழர்கள் உரிய இடத்தில் அந்த தொகையைக் காட்ட வேண்டும். 

சேமிப்பு – SAVINGS

சேமிப்பு 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் கணக்கில் காட்ட இயலும்.

1லட்சத்து 50 ஆயிரத்திற்கும் குறைவாக சேமிப்பு உள்ளவர்கள்

தங்களது குழந்தைகளுக்கு செலுத்திய கல்விக்கட்டணம், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது தனது பெயரிலோ செலுத்திய LIC மற்றும் PLI சேமிப்பைக் கணக்கில் காட்டலாம். 

தோழர்கள் உரிய முறையில் வருமான வரித்தாக்கல் செய்தால் ஏற்கனவே செலுத்திய வருமான வரி REFUND கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. 

மதுரைப் பகுதியில் வருமான வரித்தாக்கல் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகின்றது. 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை நமது தோழர்களே வசூல் செய்யும் வேடிக்கையும் நடந்து வருகின்றது. சில ஆடிட்டர்கள்  கூட 200 ரூபாயில் வருமானவரித்தாக்கல் செய்து கொடுக்கின்றனர்.

காரைக்குடி தோழர்கள் NFTE சங்க அலுவலகத்தில் 

தோழர்.ஜெகன் அவர்களை அணுகவும்.

மதுரையில் தோழர்கள் சுபேதார் அலிகான்,

 தமிழ்மாறன், மாரி போன்ற தோழர்களை அணுகவும்.

வெளியூர்த்தோழர்கள் தங்களது வருமானவரி எண்ணைத் தொலைபேசியில் தெரிவித்தாலே போதுமானது. 

நவம்பர் 30 வரையிலும் கால அவகாசம் இருப்பதால் தோழர்கள் நிதானமாக வருமான வரித்தாக்கல் செய்யவும்.

Monday, 19 October 2020

 வணிகப்பகுதி மறுசீரமைப்பு

தமிழகத்தில் 01/06/2020 முதல் பல்வேறு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வணிகப்பகுதிகள் உருவாக்கப்பட்டன. வணிகப்பகுதி உருவாக்கத்தில் பல்வேறு எதிர்க்குரல்கள் எழுந்தன. எனவே வணிகப்பகுதிகள்  மறுசீரமைக்கப்பட்டு உத்திரவுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வணிகப்பகுதி உருவாக்கம் 01/11/2020 முதல் அமுலாகும். அதற்கு முன்பாக புதிய வணிகப்பகுதி இணைப்பிற்கான அலுவலக நடைமுறைகள் மாற்றிமைக்கப்பட வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை வணிகப்பகுதி

காரைக்குடி மாவட்டம் மதுரை வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டிருந்தது. தற்போது விருதுநகர் மாவட்டம் தூத்துக்குடி வணிகப்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு மதுரையோடு இணைக்கப்படுகின்றது.  மதுரை, காரைக்குடி மற்றும் விருதுநகர் இணைந்து மதுரை வணிகப்பகுதியாக செயல்படும்.

திருநெல்வேலி வணிகப்பகுதி

திருநெல்வேலி மாவட்டம்  நாகர்கோவில் வணிகப்பகுதியோடு இணைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வணிகப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தனி வணிகப்பகுதியாக இருந்த தூத்துக்குடி தனது வணிகப்பகுதி என்னும் தகுதி இழந்து திருநெல்வேலியுடன் இணைக்கப்படுகின்றது.

நாகர்கோவில் வணிகப்பகுதி

நாகர்கோவில் வணிகப்பகுதியில் இருந்து திருநெல்வேலி பிரிக்கப்பட்டுள்ளதால் நாகர்கோவில் மாவட்டம் தனி வணிகப்பகுதியாக செயல்படும்.

வணிகப்பகுதி உருவாக்கத்தில் விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிருப்தி நிலவியது. தற்போது அவர்களது கோரிக்கை நிறைவேறியுள்ளது.  NFTE மத்திய சங்கத்திற்கு நன்றிகள் பல...

Friday, 16 October 2020

 ஒப்பந்த ஊழியர் வழக்கு

ஒப்பந்த ஊழியர்களுக்கு  தொடர்ந்து வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட  சம்பளத்தை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் TMTCLU ஒப்பந்த ஊழியர் சங்கம் வழக்கறிஞர் தோழர். N.K.சீனுவாசன் அவர்கள் மூலமாகத் தொடுத்திருந்த வழக்கில் பல்வேறு இடைக்காலத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்த போதும் BSNL நிர்வாகம் முறையாக தீர்ப்புக்களை மதித்து நடக்கவில்லை. 

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து துயரத்தை அனுபவித்து வந்த நிலையில் 16/10/2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம் சம்பளம் வழங்குவது பற்றி உத்திரவிட்டுள்ளது. 

அந்த உத்திரவின்படி...

ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் உடனடியாகக் கணக்கிடப்பட்டு மொத்த தொகையில்....

  • முதல் 25 சதம் 31/10/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.
  • அடுத்த 25 சதம் 20/11/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.
  • மிச்சமுள்ள 50 சதம் 20/12/2020க்குள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட தொகையை  BSNL நிறுவனம் தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தகாரர்களுக்கு பட்டுவாடா செய்யக்கூடாது.

மேற்கண்ட தொகை 

“CONTRACT WORKERS WAGE DUE W.P.Nos.34513 & 34570 of 2019”

என்ற கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

நவம்பர் 14 தீபாவளி பண்டிகை வருவதால் 31/10/2020க்குள் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏதேனும் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் BSNL நிறுவனம் முதல் 25 சத தொகையை செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பளப்பட்டுவாடா தொழிலாளர் ஆணையர் மூலமாக நடைபெறும். பட்டுவாடாவை எவ்வாறு ஊழியர்களுக்கு வழங்குவது என்பது பற்றி BSNL நிறுவனம் தொழிலாளர் ஆணையருடன் பேசி முடிவு செய்யும்.

வழக்கு 05/11/2020 அன்று 

மீண்டும் விசாரணைக்கு வரும்.

தோழர்களே...

இருள் சூழ்ந்து கிடந்த ஒப்பந்த ஊழியர்கள் சம்பளப் பிரச்சினையில் இப்போதுதான் வெளிச்சம் பரவத்தொடங்கியுள்ளது. தீபாவளிக்கு முன்பாக நிச்சயம் ஒப்பந்த ஊழியர்கள் கைகளில் அவர்கள் உழைத்த பணத்தின் ஒரு பகுதி கிடைக்கும் என்று நம்புவோம். இந்த ஆண்டிற்குள் ஒட்டுமொத்த ஊதியமும் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

ஒடுக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு

நீதிமன்றத்தின் மூலம்

நீதி கிடைத்திட... நியாயம் கிடைத்திட...

பாடுபட்ட TMTCLU சங்கத்திற்கும்...

அதன் பொதுச்செயலர் தோழர்.செல்வம் அவர்களுக்கும்...

வழக்கறிஞர் தோழர்.N.K.சீனுவாசன் அவர்களுக்கும்

நமது வாழ்த்துக்களும்... நன்றிகளும்... 

Thursday, 15 October 2020

 ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு 

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA  

01/10/2020 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

 

UNSKILLED WORKERS 

A பிரிவு நகரம்

ரூ.629/-லில் இருந்து ரூ.639/- ஆக உயர்வு

நாளொன்றுக்கு ரூ.10/- உயர்வு  

B பிரிவு நகரம் 

ரூ.525/-லில் இருந்து ரூ.534/ஆக உயர்வு

நாளொன்றுக்கு ரூ.9/- உயர்வு  

C  பிரிவு நகரம் 

ரூ.420/-லில் இருந்து ரூ.427/ஆக உயர்வு
நாளொன்றுக்கு ரூ.7/- உயர்வு 

 

தோழர்களே...

சம்பளமே இல்லாமல் விதியை நொந்து கிடக்கும்

ஒப்பந்த ஊழியர்களுக்கு விலைவாசிப்படி

உயர்வதால் என்ன பயன்?...

கைக்கெட்டாத கனி 

கசந்தால் என்ன? இனித்தால் என்ன?

Wednesday, 14 October 2020

BSNLன் சாபக்கேடு...

 ===============================================

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

 ===============================================

இராமேஸ்வரம் பகுதியில்...

BSNL சேவையைச் சீரழித்து வரும்...

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும்...

கறுப்பு வருமானத்தில் தங்கும் விடுதி கட்டும்...

கட்டுமானத்திற்கு இலாக்காப் பொருட்களைப் பயன்படுத்தும்...

கண்ணியமிக்க ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்தும்...

கடமை உணர்வுமிக்க இளநிலை அதிகாரிகளைக் காயப்படுத்தும்...

வாடிக்கையாளர்களை இழுத்தடிக்கும்... இழிவுபடுத்தும்...

ஒப்பந்த ஊழியர்களை சொந்த வேலைக்குப் பயன்படுத்தும்...

பினாமிகள் பெயரில் FTTH இணைப்பு கொடுக்கும்....

FTTH வாடிக்கையாளரிடம் கூடுதல் கொள்ளையடிக்கும்...

FTTH இணைப்பிற்காக BROAD BAND இணைப்புக்களை காலி செய்யும்...

குடியிருக்கும் பகுதியில் சமூக அத்துமீறல்களை மேற்கொள்ளும்..

காரியம் ஆக வேண்டுமென்றால் யாரையும் காக்காப் பிடிக்கும்...

அமாவாசைக்கு அமாவாசை பல சங்கம் மாறும்...

BSNLன் சாபக்கேடு...

இராமேஸ்வரம் துணைக்கோட்ட அதிகாரியின்...

ஊழியர் விரோதப் போக்கினை...

வாடிக்கையாளர் விரோதப் போக்கினை...

BSNL வளர்ச்சிக்கு எதிரான போக்கினை...

எதிர்த்துப் போராட்டக் களம் காண...

அனைத்து சங்க அவசரக்கூட்டம்

15/10/2020 – வியாழன் – மாலை 05 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்.

இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி

மற்றும் முதுகுளத்தூர் தோழர்கள்

அவசியம் கலந்து கொள்ளவும்...

Thursday, 8 October 2020

 ஒடுக்கப்பட்டோரின் உந்து சக்தி...

ஒடுக்கப்பட்ட மக்களின் உந்து சக்தியாய் விளங்கிய...

திரு. இராம்விலாஸ் பாஸ்வான் 

அவர்களின் மறைவிற்கு நமது அஞ்சலி....

-------------------------------------

திரு.பாஸ்வான்

அடிமட்ட மக்களின் தலைவனாகத் திகழ்ந்தார்....

DSP துணைக்கண்காணிப்பாளர் என்ற அரசுப்பதவியை

அடிமட்ட மக்களின் வாழ்வுக்காகத் துறந்தார்.....

சோசலிஸ்ட் அணியில் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்...

காங்கிரஸ் கால மிசா கொடுமையில் சிறைவாசம் சென்றார்...

அதே காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார்...

அடிமட்ட மக்களின் பிரதிநிதிகள்

அதிகார பீடங்களில் அமர்ந்திட வேண்டும் என்ற

நோக்கோடு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்...

அதனால்தான்

வி.பி.சிங்... தேவகவுடா... மன்மோகன்சிங்... வாஜ்பாய்.,. மோடி...

என அனைத்து அரசியல் அதிகார மையங்களிலும் இடம் பிடித்தார்...

இரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்று

அடிமட்ட மஸ்தூர்களின்

வாழ்வை மலரச்செய்வேன் என்று

உறுதி தந்தார்... ஆனாலும் தோல்வி கண்டார்...

BSNL என்னும் பொதுத்துறை உருவாக்கத்தின் போது

அமைச்சராக இருந்து பொதுத்துறையில் ஓய்வூதியம் என்னும்

வரலாற்று சிறப்புடைய ஒப்பந்தத்தை

தொழிற்சங்கங்களுடன் உருவாக்கினார்.

BSNL ஊழியர்கள் அனைவருக்கும்

இலவச தொலைபேசி என்பதை நடைமுறைப்படுத்தினார்...

அவரது மறைவு ஒடுக்கப்பட்டோருக்கு பெரும் இழப்பு...

Wednesday, 7 October 2020

 அண்ணல் காந்தி அவதாரதின விழா 

மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகத்தில் 02/10/2020 அன்று அண்ணல் காந்தி பிறந்த தின விழா நமது சங்கத்தால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் தோழர்.சுபேதார் அலிகான் மற்றும் தோழர்.மாரி ஆகியோர் மதுரையின்   மூத்த தியாகிகளோடு இணைந்து அஞ்சலி செலுத்தினர். 

தல்லாகுளம் தொலைபேசி  நிலைய வளாகத்தில் அமைந்துள்ள 1950ம் ஆண்டு அமைக்கப்பட்ட அண்ணல் காந்தி சிலைக்கு தூய்மைப்பணியாளர் தோழர் சுப்பிரமணி மாலையணிவித்தார். சிறந்த நாடக நடிகரும் பாடகருமான தோழர்.சாகுல் மிகவும் பரவசமான இசையஞ்சலி செலுத்தினார். எழுத்தாளர் சந்திரகாந்தன் மகாத்மா காந்தியின் ஆயுதங்களற்ற உலைகப் பற்றியும், அவரது கொள்கைகளின் இன்றைய அவசியம் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தார். 

மூத்த தோழர் சேது மற்றும்  மதுரை, விருதுநகர், காரைக்குடி தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் புகழ் பாடும் பணியில் என்றும் NFTE தன் பங்கினைச் செலுத்தும்.

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்


 பல ஆயிரம் தோழர்களின் வட்டிப்பணத்தில் உருவான

சென்னை கூட்டுறவு சங்கம்

ஒரு சிலரின் ஏகபோக சொத்தாக மாறிவிட்டது.

ஊழியர்களுக்கு சேரவேண்டிய பலனை கொடுக்காமல்..

கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை விற்று காசாக்குவதிலேயே குறியாக இருக்கும் கூட்டுறவு சங்க முறைகேடுகளைக் கண்டித்து

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

09/10/2020 – வெள்ளிக்கிழமையன்று

தமிழகம் தழுவிய 

ஆர்ப்பாட்டம்...

தோழர்களே... அணி திரள்வீர்...

Tuesday, 6 October 2020

 BSNL  வாடகைக்கு


விருப்ப ஓய்வில் பல ஆயிரம்  ஊழியர்களும் அதிகாரிகளும் விடைபெற்றுச்சென்ற பின்பு நமது பல அலுவலகங்கள் வெறிச்சோடி விட்டன. இந்த அலுவலகங்களை வாடகைக்கு விட்டு வருமானம்
 தேட BSNL நிர்வாகம் ஏற்கனவே முடிவெடுத்து
 நடவடிக்கையில் இறங்கி விட்டது. 

அதன் ஒரு பகுதியாக மத்திய புள்ளியியல் துறை NATIONAL STATISTICAL OFFICE இந்தியா முழுவதும் தனது அலுவலகங்களை BSNL அலுவலகங்களில் வாடகைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகைக்கு அணுகியுள்ளது.

 தற்போது 9 இடங்களில் வாடகை முடிவாகி விட்டது. தமிழகத்தில் திருச்சி, சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் புள்ளியியல் துறைக்கு நமது அலுவலகங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.  மதுரை பீபிகுளம் பகுதியில் அமைந்துள்ள பொதுமேலாளர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது தளம் ரூ.1,59,500/=மாத வாடகைக்கு  புள்ளியியல் துறைக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. ஒரு தொலைபேசி நிலைய வருமானத்தை விட வாடகையில் கூடுதல் வருமானம் கிடைக்கின்றது. 

BSNL நிறுவனத்தை வாடகைக்கு விடுவதோடு நிறுத்திக்கொண்டால் நலம். TO LET என்பதை FOR SALES என்று மாற்றாமல் இருந்தால் சரி.

Thursday, 1 October 2020

 ஏன் பிறந்தாய் மகானே... 

அக்டோபர் 2ல்...

எங்கள் தேசத்தில்...

ஏன் பிறந்தாய் மகானே....

விவசாயிகள் படும் வேதனையைப் பார்க்கவா?

தொழிலாளர் படும் துன்பங்களைக் கேட்கவா?

பெண்கள் படும் கொடுமைகளைப் பார்க்கவா?

மதம் பிடித்த மனிதர்களைக் காணவா?

வெறி பிடித்த வீணர்களைப் பார்க்கவா?


கொள்ளை போகும் தேசத்தைக் காணவா?

கொடுமை நிறைந்த காட்சிகளைப் பார்க்கவா?

எங்கள் தேசத்தில்...

ஏன் பிறந்தாய் மகானே?

 ------------------------------------------

அண்ணல் காந்தி பிறந்த தின விழா 

 02/10/2020 – வெள்ளி – காலை 9 மணி

தல்லாகுளம்  வாடிக்கையாளர் சேவை மையம் 

 மதுரை.

அண்ணல் காந்தி சிலைக்கு 

மாலை அணிவித்தல்

  ------------------------------------------

காலை 11 மணி

சிறப்பு சொற்பொழிவு

தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம்  

மனமகிழ் மன்றம் – மதுரை

ஏன் பிறந்தாய் மகானே? 

என்னும் தலைப்பில் சிறப்புரை

எழுத்தாளர் சந்திரகாந்தன்

மாநில உதவித்தலைவர் 

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்.

அண்ணல் புகழ் பாட...

அனைவரும் வருக...