Sunday, 19 November 2017

இருள் விலகும்...ஒளி பிறக்கும்…
தணலாய் தகித்த உணர்வுக்குரல் 

உணர்வாய் எழுந்த  உரிமைக்குரல் 

நவம்பர் 9..10..11 
நாட்டின் தலைநகரில்
நாலாதிசைகளிலும் இருந்து 
தொழிலாளர் வர்க்கம்  சாரைசாரையாய்
டெல்லி பாராளுமன்றம் முன்பாகத் திரண்டு
தங்களது கோரிக்கைகளுக்காக ஓங்கிக் குரல்கொடுத்தனர்.

டெல்லி தலைநகர் முழுவதும் செங்கொடிகள்...
காலுக்கு செருப்பு இன்றி… 
மேல்சட்டை கிழிசல்களாக…
கால்சட்டையோ அரைச்சட்டையாகத்
துப்புரவுத்தொழிலாளிகள் 
தோள்களில் செங்கொடி சுமந்து 
குறைந்தபட்சக் கூலி கேட்டு டெல்லித்தெருக்களிலே 
குரல் கொடுத்து வந்த காட்சி..
ஆட்சியாளர்களின் செவிட்டில் அறைந்த காட்சி..

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்
காலுக்கு செருப்பின்றி கால் வயிற்றுக்கு உணவின்றி
அடிமட்டத் தொழிலாளர்கள் அல்லல் படும் நிலை...

போராட்டக்களத்தின் மூன்றாம் நாள் பெண்கள்
பாராளுமன்ற வீதி முழுவதும் நிறைந்து
தங்கள் கோபத்தை கோஷங்களாய் எழுப்பினர்.

தோளிலே தொங்கும் பைகளின் சுமை… 
நெஞ்சிலே குடும்ப சுமை… 
பணிசெய்யும் இடத்தில் பலப் பல சுமை
இத்தனையும் தாங்கி 
தங்கள் கரம் உயர்த்தி சிரம் நிமிர்த்தி
பெண்கள் உரிமைக்குரல் எழுப்பிய காட்சி
காண்போர் உணர்வுகளை மேலும் உரமிக்கதாக மாற்றியது.

ஆனால் ஆளும் வர்க்கமோ… 
அதிகாரிகளோ யாருக்கும் கவலையில்லை...
ஏனெனில் இந்த தேசத்தில் யாருக்கும் வெட்கமில்லை.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான
பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தைப் படம் பிடிக்கவோ…
துயரங்களை எழுதவோ நேரமில்லை… மனமில்லை…
பாவம் அவர்களுக்கு நடிகைகளின் 
அந்தரங்கங்களை அலசவே பொழுது போதவில்லை….

தோழர்.மதிவாணன் அவர்கள் போராட்டக்களத்தின்
கடைசி நாளன்று பத்திரிக்கைகளின் இருட்டடிப்பை
விமர்சனம் செய்து தனது முகநூலில் வெளியிட்டார்.

கொஞ்சம் நஞ்சம் சுரணையுள்ள 
இந்து பத்திரிக்கையும் கூட..
தனது கடைசிப் பக்கத்திலே 
சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது.
சற்றே ஆறுதல் அடைந்தோம்.
ஆனால் அதற்கு பக்கத்திலேயே…
டெல்லியில் நவம்பர் 12 அன்று...
ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி 
என்று செய்தி வெளியிட்டு  
தொழிலாளர்களின் போராட்டத்தை விட
பெரிய படமாகவும் முக்கியச்செய்தியாகவும்  போட்டிருந்தார்கள்...

இந்த தேசத்திலே...
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட
பேரினமான தொழிலாளர் வர்க்கத்திற்கு இல்லை..
என்பது வெட்கத்திலும் வெட்கம்.

பாட்டாளிகளைப் பாராமுகம் பார்க்கும் பாரததேசம்
பரந்து கெடுக என்றே மனம் குமுறுகிறது….

ஆனாலும் 
கோடிக்கால் பூதமாக கோபத்தின் ரூபமாக
தொழிலாளர் வர்க்கம் திரண்ட காட்சி…
மாறும்… எல்லாம் மாறும் 
என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

மாறும் என்பது மாபெரும் தத்துவம்…
இவையெல்லாம் 
ஒருநாள் மாறும்… மாற்றப்படும்…
இருள் விலகும்.. ஒளி பிறக்கும்…
இதுவே…
டெல்லி போராட்டக்களம் தந்த செய்தி...நம்பிக்கை... 

1 comment:

 1. அடித்தட்டு, உழைக்கும் மக்களுக்கு எதிரான ஊடகங்களின் கேவலமான போக்கை, தன்மையை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி தோழரே!

  ஆனால் நம்மை நோக்கியும் இந்த ஊடகங்கள் திரும்பும். அதற்கான வேலையை நாம் இன்னும் முனைப்பாக செய்தால்....

  செய்கிறோமா!
  செய்கிறார்களா!!
  செய்வார்களா!

  ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் ஒற்றுமை நடக்க வேண்டுமே! அப்புறம் சங்கத்தில் தோழர்கள் ஒற்றுமை, ஒற்றுமைக்குள் ஒற்றுமை இதெல்லாம் வேறு நடக்க வேண்டும்.
  இதற்கு நாம் என்ன செய்வது?
  இது எங்கிருந்து துவங்குவது?

  இந்தக் குறள்தான் எனக்கு இப்போதைய நம்பிக்கை.
  அருவினை யென்ப உளவோ கருவியான்
  காலம் அற஧ந்து செயின்.
  தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

  ReplyDelete