Wednesday, 31 March 2021

 வரவு எட்டணா... 

வரி பத்தணா...

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் தங்களது நான்காவது EX GRATIA பட்டுவாடா எப்போது நடக்கும் என்று ஏங்கியிருந்தார்கள். ஆனால் அது நடந்தவுடன் ஏன் நடந்தது என்று மனக்கவலையில் இருக்கின்றார்கள். காரணம் வருமான வரி. பெரும்பகுதி தோழர்களுக்கு 30 சத வருமான வரி பிடித்தம் நடந்துள்ளது. பல தோழர்கள் லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரி செலுத்தியுள்ளார்கள்.

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு அவர்களது சம்பளத்தை விட 25 சதம் கூடுதலாக EX GRATIA கொடுக்கப்பட்டது. தற்போது கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி என்ற கதையாய் 25 சதத்துடன் 5 சதம் கூடுதலாக சேர்த்து 30 சதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டு நிறைவுற்ற நிலையில் தோழர்கள் வருமான வரித்தாக்கல் செய்யும்போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

சென்ற நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய வருமானவரியில் 90 சதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் மிச்சமுள்ள வரியை உடனடியாகக் கட்ட வேண்டிய அவசியமில்லை. ஜூலை மாதம் வருமான வரித்தாக்கல் செய்யும்போது கட்டிக்கொள்ளலாம். 90 சதத்திற்கும் குறைவாக கட்டியிருந்தால் ஒரு சத வட்டி அபராதமாக கட்ட நேரிடும்.

வருமான வரியை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையிலும் செலுத்தலாம். பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் புதிய முறையைத் தேர்வு செய்யலாம். இதனால் அதிக பட்சம் 62 ஆயிரம் வரை சேமிக்கலாம். ஆனால் புதிய முறையில் எந்தவிதமான சலுகைகளும், கழிவுகளும் கிடையாது. எனவே தோழர்கள் கவனமாக எந்த முறை தங்களுக்கு சாதகம் என்று புரிந்து கொண்டு அந்த முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ரூ.12,25,000/= வரை மொத்த வருமானமும் 1,50,000 சேமிப்பும் செய்தவர்கள்  பழைய முறையைத் தேர்வு செய்யலாம்.

ரூ.12,25,000/=க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் சேமிப்பு ஒன்றரை லட்சம் செய்திருந்தாலும் கூட பழைய முறையில் கூடுதல் வரி விதிக்கப்படும். எனவே அவர்கள் புதிய முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

எந்தவித சேமிப்பும் செய்யாதவர்கள் 6 லட்சம் வரையிலும் பழைய முறையையும், 6 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் புதிய முறையையும் தேர்வு செய்ய வேண்டும்.

வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துபவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் பழைய முறையைத் தேர்வு செய்வது பலனளிக்கும். எனவே தோழர்கள் ஜூலை மாதம் வருமான வரித்தாக்கல் செய்யும்போது ஆலோசனை செய்து வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

விருப்ப ஓய்வில் சென்று SAMPANN மூலம் ஓய்வூதியம் பெறும் தோழர்களுக்கு CCA அலுவலகம் FORM 16 படிவத்தை வழங்கும். கடந்த ஆண்டு ஓய்வூதியம், EX GRATIA  மற்றும் வங்கிகளில் போடப்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டி ஆகியவை மொத்த வருமானத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

60 வயது  மற்றும் 80 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு வரிப்பிடித்தத்தில் சலுகை உண்டு. விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் பலருக்கு 60 வயது ஆகாவிட்டாலும் கூட அரசின் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்று ஓய்வூதியம் பெறுவதால் அவர்களையும் மூத்த குடிமக்கள் பிரிவில் சேர்ப்பதற்கு சங்கங்கள் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

வரி என்பது இந்த தேசத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு வரிக்குதிரை என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உழுதவன் கணக்குப் பார்த்தல் ஒன்றும் மிஞ்சாது என்பது பழமொழி....

விருப்ப ஓய்வில் சென்றவர்கள் கணக்குப் பார்த்தாலும் ஒன்றும் மிஞ்சாது என்பது அனுபவ மொழி.

Tuesday, 23 March 2021

 புகழஞ்சலிக் கூட்டம் 

தோழர் கடலூர் இரகு 

புகழஞ்சலிக் கூட்டம்

--------------------------------------------------

27/03/2021 – சனிக்கிழமை – மாலை 05 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

-------------------------------------------------

பங்கேற்பு : தோழர்கள்

ந. நாகேஸ்வரன் - AIBSNLPWA மாவட்டச்செயலர்

பெ. முருகன் - AIBSNLPWA மாவட்டத்தலைவர்

இரா. பூபதி - AIBSNLPWA மாவட்டப்பொருளர்

கா. செல்வராஜ்அஞ்சல் கணக்கு அதிகாரி ஓய்வு

பா. லால் பகதூர் - NFTE மாவட்டத்தலைவர்

வெ. மாரி - NFTE மாவட்டச்செயலர்

ம. ஆரோக்கியதாஸ் - NFTE கிளைச்செயலர்

மற்றும் முன்னணித் தோழர்கள்...

தோழர்களே... வாரீர்...

 மார்ச் – 23 – மாவீரர்கள் தினம் 

மார்ச் – 23

பகத்சிங்சுகதேவ்இராஜகுரு

நினைவு தினம்

 =========================

இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை....

எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை...

என்று புரட்சியாளர் பகத்சிங் சொன்னது போல்

அக்கப்போர்கள் காலமெல்லாம் தொடரவே செய்கின்றன...

மதவெறிக்கு எதிரான.... சாதிவெறிக்கு எதிரான...

வறுமைக்கு எதிரான... ஊழலுக்கு எதிரான...

போர்களைத் தொடர்ந்து செய்வோம்...

வீர இளைஞர் பகத்சிங் புகழ் பாடுவோம்...

==================================

புரட்சி என்பது வெடிகுண்டுகள்

துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல...

தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு

அதில் இடமில்லை...

புரட்சி என்பது ரத்தவெறி கொண்ட

மோதலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை...

புரட்சி என்பதன் மூலம்

அநீதியான இந்த சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்

என்பதே எங்கள் இலட்சியம்...

பகத்சிங்...

Monday, 22 March 2021

 கடலூரின் தல பதி... 


சொத்துக்களைத் தேடும் உலகில்...

செங்கொடி சொந்தங்களைத் தேடிய தோழர்...

இடுக்கண் களைதல் அவர் குணம்...

இடுக்கண் வருங்கால் நகுதல் அவர் மனம்...

தோழமைக்கு தோள்தந்த நெஞ்சம்....

நேர்மைக்கு என்றுமில்லை பஞ்சம்...

NFTE இயக்கத்தின் தளபதி....

கடலூர் மண்ணின் தல பதி...

தோழர் கடலூர் ரகு அவர்களின் மறைவிற்கு

செங்கொடி தாழ்த்திய அஞ்சலி...

Thursday, 18 March 2021

 கற்போம்... நிற்போம்... 

BSNL ஊழியர்களுக்கான இலாக்காத் தேர்வுகளை ONLINE என்னும் கணிணி வழியில் நடத்திட நிர்வாகம் உத்தேசித்துள்ளதாகவும், அது சம்பந்தமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறும் அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் BSNLEU சங்கங்களிடம் நிர்வாகம் 16/03/2021 அன்று கருத்து கேட்டிருந்தது.

ONLINE தேர்வு ஏற்புடையதல்ல என்று நமது NFTE சங்கமும் BSNLEU சங்கமும் நிர்வாகத்திற்கு பதில் அளித்துள்ளன. இப்போதெல்லாம் நிர்வாகம் சங்கங்களின் கருத்தைக் கேட்பதோடு சரி. அதனை அமுல்படுத்துவதில்லை. எனவே இலாக்காத் தேர்வு விவகாரத்தில் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதனைப்  பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது விருப்ப ஓய்விற்குப் பின் அதிகமாக தங்கிப்போன... தேங்கிப்போன கேடர் ATT கேடராகும். பெரும்பான்மையான தோழர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவர்கள். 50 வயதிற்கு உட்பட்டவர்களும், 50ஐத் தொட்டவர்களுமாக இருந்ததினாலும், அதிக சேவைக்காலம் இல்லாத காரணத்தினாலும் பல தோழர்கள் விருப்ப ஓய்வில் செல்ல இயலவில்லை. 

இதில் அதிகமான தோழர்கள் கல்வித்தகுதி குறைந்தவர்கள். SSLC என்னும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ATT தோழர்கள் TT கேடருக்கு தேர்வு எழுத முடியும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே TT தோழர்கள் JE கேடருக்குத் தேர்வு எழுத முடியும். ஆனால் தற்போது பணியில் உள்ள பல தோழர்கள் குறிப்பிட்ட கல்வித்தகுதி இல்லாதவர்கள். 

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ATT ஊழியர்களில் 2 பேர் மட்டுமே SSLC தகுதி உள்ளவர்கள். நாளை தேர்வு நடைபெற்றால் இரண்டே இரண்டு பேர் மட்டுமே காரைக்குடியில் விண்ணப்பிக்க முடியும். மதுரை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ATT தோழர்கள். ஐந்து பேர் கூட SSLC தகுதி உள்ளவர்களா? என்பது சந்தேகமே. எனவே தற்போது பணியில் உள்ள தோழர்கள் கட்டாயம் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டும். பல ஆயிரம் செலவழித்து ANDROID போனை உபயோகிக்கும் நமது தோழர்கள் சில நூறு செலவு செய்து சிரமம் பார்க்காமல் படித்து தங்களது கல்வித்தகுதியை உயர்த்த வேண்டும் என்ற சிந்தனை நமது தோழர்களுக்கு அறவே இல்லாதது வருத்தமானது. 

குறிப்பாக ATT தோழர்கள் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொண்டு அடுத்த கட்ட கேடரான TT கேடருக்குத் தங்களை உயர்நிலைப் படுத்தவில்லை என்றால் அவர்களது வருங்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். காரணம் E-OFFICE என்னும் மின்னணு அலுவலக நடைமுறையை ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நமது CMD அறிவுறுத்தியுள்ளார். கோப்புகளே இல்லாத அலுவலகம் என்பதுதான் நிர்வாகத்தின் இலக்காக உள்ளது. கோப்புகளே இல்லாவிட்டால் GROUP D கேடருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுகிறது. தற்போது சிலர் காவல் பணி செய்து வருகின்றனர். 

எனவே ATT கேடரில் உள்ள ஊழியர்களை உடனடியாக உயர்நிலைப்படுத்த வேண்டியது சங்கங்களின் கடமையாகும். மத்திய அரசில் MTS எனப்படும் பல்திறமை கேடர்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. நாம் GROUP Dக்களை ATT என்று பெயர் மாற்றம் செய்திருக்கின்றோம். ஆனால் அவர்களது சம்பளம் மற்றும் பதவி உயர்வு, தேக்கநிலை என எந்தப்பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

உடனடியாக ATT தோழர்கள் தங்களது கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 

கல்வி கரையில... கற்பவர் நாள் சில என்பது பழமொழி. கற்பதற்கு வயது காலம் நேரம் பொருட்டல்ல.

கற்போம்... நிற்போம்...

அண்ணல் அம்பேத்கார் இதைத்தான் நமக்கு அறிவுறுத்தினார்.

Friday, 12 March 2021

வங்கி... LIC ... ஆயுள்காப்பீடு 

வேலைநிறுத்தம்

இம்முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பொதுத்துறைகளை நாசம் செய்யும் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக வங்கிகள் தனியார் மயம்... LIC பங்கு விற்பனை, ஆயுள் காப்பீட்டுக்கழகங்கள் தனியார் மயம் என மிக மிக மோசமான விற்பனை அறிவிப்புக்கள் மட்டுமே இடம் பெற்றன. இந்திய தேசம் விடுதலை பெற்ற பின் இத்தகைய மோசமான ஆட்சியை.... அணுகுமுறையை மக்கள் கண்டதில்லை. எனவே வங்கி ஊழியர்களும்.... ஆயுள் காப்பீட்டு ஊழியர்களும்.... LIC ஊழியர்களும் போராட்டக்களம் காண்கிறார்கள்.

இந்த தேசத்தில் இப்போது உரிமைக்காக போராடுபவர்களுக்கு மதிப்பில்லை. எந்த போராட்டமாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதே தற்போதைய ஆட்சியாளர்களின் நடைமுறையாக உள்ளது. ஆயினும் போராடாமல் வாழ்வில்லை.... போராடாமல் உயர்வில்லை... போராடாமல் உய்வில்லை....

எனவே போராடும் வங்கி ஊழியர்கள்... LIC ஊழியர்கள் மற்றும் INSURANCE ஊழியர்களுக்கு  வாழ்த்துக்களை உரித்தாக்குவோம். தற்போதைய நிலையில் BSNL ஊழியர்களால் அது மட்டுமே சாத்தியமாகும்

Wednesday, 10 March 2021

 OLA உலகின் மாபெரும்

இருசக்கர வாகன தொழிற்சாலை

 

2400 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில்

தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் புகழ்பெற்ற OLA நிறுவனத்தின்

உலகின் மாபெரும் இருசக்கர வாகனத்தொழிற்சாலை

விரைவில் செயல்படவுள்ளது. 

கடந்த மாதம் அதன் கட்டுமானப்பணிகள் துவங்கி விட்டன.

உலகின் இருசக்கர வாகனத் தேவையில்

15 சதத்தை மேற்கண்ட தொழிற்சாலை

ஈடுகட்டும் என்று கூறப்படுகின்றது.

இங்கு தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்கள்

மின்சாரத்தில் இயங்கும் தன்மை கொண்டவை.

பெட்ரோல் விலை சதம் அடித்த நேரத்தில்

மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம்

மக்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்த தொழிற்சாலை பத்தாயிரம்  மனிதர்களுக்கும்,

மூவாயிரம் இயந்திர மனிதர்களுக்கும்

வேலை அளிக்கும் என்று கூறப்படுகின்றது.

மனிதவளம் மிக்க இந்தியாவில்

வயர் கொண்ட இயந்திர மனிதர்கள்

வயிறு கொண்ட மனிதர்களோடு

போட்டி போட ஆரம்பித்து விட்டன.

இயந்திர மனிதர்களுக்கு சங்கம் இல்லை...

சலிப்பு இல்லை... ஒருசாண் வயிறு இல்லை... 

உலகளாவிய தரத்தில் சகல விஷயங்களிலும்

தமிழகம் வெற்றிநடை போடுகிறது....

ஆனால் பாவம் ...

வயிறு கொண்ட மனிதர்கள்தான்

தளர் நடை போடுகின்றார்கள்...

தட்டுத்தடுமாறும் EXGRATIA  பட்டுவாடா

8 சத EXGRATIA  பட்டுவாடாவிற்கு 09/03/2021 அன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பின் பட்டுவாடா நடைபெறும் என்று BSNL நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பல மாநிலங்களில் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் நிறைவடையாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் நிலவுகிறது. 

மொத்தமுள்ள 78323 விருப்ப ஓய்வு ஊழியர்களில் இன்னும் 1234 ஊழியர்களுக்கு பல்வேறு காரணங்களால் பணிகள் முடிவடையவில்லை. தமிழகத்தில் இன்னும் 54 பேருக்கு கணக்கீடு முடிக்கப்படவில்லை. அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநிலத்தில் 310 பேருக்கு தேக்கம் நிலவுகிறது. 

சாதிச்சான்றிதழ் சரிபார்ப்பு, VIGILANCE சான்றிதழ், ஒழுங்கு நடவடிக்கைகள் என்று பல்வேறு காரணங்களால்  தேக்கம் நிலவுகின்றது. எனவே இன்று 10/03/2021 மாலை 05 மணிக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என DIRECTOR (HR) இயக்குநர் மனிதவளம் மாநில நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் 16/03/2021 முதல் வங்கி வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை. எனவே நாளை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் இந்த வாரம் பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் தாமதம் நேரலாம். 

EXGRATIA  பட்டுவாடா பிரச்சினையில் CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாலும் தொடர்ந்து மாநிலங்களில் தாமதம் நிலவத்தான் செய்கிறது. 

Saturday, 6 March 2021

மார்ச் – 8 - மகளிர் தினம்

சவால்களை எதிர்கொள்....

கனவைச் சுமப்பவள்..

கருவைச் சுமப்பவள்...

சுமைகளைத் தாங்கி...

சுகங்களைத் தாண்டி...

உலகைச் சுமக்கும்...

சுமைதாங்கிகளுக்கு..

வணக்கங்கள்... வாழ்த்துக்கள்...

-------------------------------------------------------------

மகளிர் தின சிறப்புக்கூட்டம்

08/03/2021 – திங்கள் – மாலை 05 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தோழியர்களே... தோழர்களே... வாரீர்...

Friday, 5 March 2021

 8 சத EX GRATIA பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது அவர்களது 8 சத EX GRATIA பட்டுவாடா என்னாச்சு?  என்பதுதான்.

ஓயாத அந்த வினாவிற்கு விடையளித்து BSNL நிர்வாகம் 

இன்று 05/03/2021 உத்திரவிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...

8 சத EX GRATIA பட்டுவாடாவிற்கான நிதி ஒதுக்கீடு DOTயில் இருந்து BSNLக்கு வந்துள்ளது. எனவே 10/03/2021க்குள் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்படும்.

EX GRATIA பட்டுவாடா PPO எனப்படும் ஓய்வூதிய உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி அடிப்படைச்சம்பளத்தின் LAST PAY DRAWN அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டு பட்டுவாடா செய்யப்படும். BSNLலில் பெற்ற கடைசி அடிப்படைச்சம்பளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. DOTயின் CCA அலுவலகம் அனுமதித்த LAST PAY DRAWN கடைசி அடிப்படைச்சம்பளம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் சிலருக்கு 

ஆண்டு உயர்வுத்தொகை, நாலுகட்டப்பதவி உயர்வு

மற்றும் ஏதேனும் சம்பளப்பிரச்சினைகள் இருந்தால்

அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட கடைசி அடிப்படைச்சம்பளம் 06/03/2021 மதியம் 12 மணிக்குள் DOTயின் CCA அலுவலகத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். நிலுவைப் பிடித்தங்கள் மற்றும் வருமான வரி பிடித்தம் இருந்தால் கட்டாயமாக  பட்டுவாடாவில் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

மேற்கண்ட பணிகள் 08/03/2021க்குள் முடிக்கப்பட வேண்டும். 

அதன் பின் BSNL  தலைமை அலுவலகத்தின் வங்கிப்பிரிவு 09/03/2021 அன்று மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்.

அதன் பின் பட்டுவாடா நடைபெறும் என்று உத்திரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தோழர்களே..

விருப்ப ஓய்வில் சென்ற பல தோழர்களுக்கு

கடைசி அடிப்படைச்சம்பளத்தில் குறைபாடுகள் உள்ளன.

குறிப்பாக RM கேடரில் இருந்து PM ஆன தோழர்களுக்கு

ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வெட்டப்பட்டது.

01/10/2000க்கு முன்பு DOT காலத்தில் பதவி உயர்வு பெற்று

01/10/2000க்கு பின் BSNL உருவான பின் ஆண்டு உயர்வுத்தொகைக்கு விருப்பம் கொடுத்தவர்களின் அடிப்படைச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பல தோழர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வு விடுபட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையில் இருந்தவர்கள் பலருக்கு அடிப்படைச்சம்பளம் சரி செய்யப்படவில்லை.

TTAவாக இருந்து JTO பதவி உயர்வு பெற்ற தோழர்கள் பலரின் அடிப்படைச்சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிர்வாகம் 24 மணி நேர கெடு விதித்து நாளைக்குள் இவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் குறைக்கப்பட்ட அடிப்படைச்சம்பளத்தின் அடிப்படையில் EX GRATIA பட்டுவாடா செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

இது பெரும் அநீதியாகும்.

மேலும் குடியிருப்பில் வசிக்கும் அல்லது காலி செய்த தோழர்கள் NO DUES சான்றிதழ் அளிக்க வேண்டும். இல்லையெனில் 8 சத பட்டுவாடா இல்லை எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவும் பெரும் அநீதியாகும்.

எந்த வித நிலுவைப் பிடித்தங்கள் இருந்தாலும்

ஒரு ஊழியருக்கு பணிக்கொடை அளிக்கும்போது

அதில் பிடித்தம் செய்து கொள்ளலாம்...

குடியிருப்பில் வசிப்போருக்கு 10 சதம்

பணிக்கொடையில் பிடித்தம் செய்யப்படும்  என்ற நடைமுறைகள்  இருந்த போதும் நிர்வாகம் விருப்ப ஓய்வில் சென்ற ஊழியருக்கு விரும்பத்தகாத கெடுபலன்களை அளிப்பது விரும்பத்தகுந்ததல்ல. 

குறைக்கப்பட்ட அடிப்படைச்சம்பளத்தில் EX GRATIA பெறும்  தோழர்கள் அதனை எதிர்த்துப் போராட வேண்டும். 

உழைத்த சம்பளம் நமது உரிமை.

Tuesday, 2 March 2021

 அலைக்கற்றை ஏலம்

கடந்த 2016ம் ஆண்டிற்குப் பின் தற்போது 01/03/2021 அன்று அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. அலைக்கற்றை ஏலத்தின் மூலம் ஏறத்தாழ 4லட்சம் கோடி வருமானம் என்பது அரசின் இலக்காகும். ஏலத்தில் JIO, AIR TEL மற்றும் VODOFONE IDEA  ஆகிய மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டன.

RELIANCE JIO ஏலத்தில் பங்கேற்க ரூ.10 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது. 

AIRTEL ரூ.3 ஆயிரம் கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது. 

VODOFONE IDEA  ரூ.475 கோடி விருப்பத்தொகை செலுத்தி உள்ளது.

ஏலம் எடுக்கும் நிறுவனம் ஏலத்தொகையை ஒரே தவணையில் செலுத்தலாம். அல்லது  25 சதவீத தொகையையோ 50 சதவீத தொகையையோ முதலில் செலுத்திவிட்டு மீதியை அதிகபட்சம்16 தவணைகளில் செலுத்தலாம்.

முதல் நாள் ஏலம் 77146 கோடி ரூபாய்க்கு விடப்பட்டது. அரசு தரப்பில் 45000 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 77ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

 4G அலைக்கற்றைக்கான போட்டி கடுமையாக இருந்தது. இன்னும் சில காலங்களில் அனைத்து வாடிக்கையாளர்களும் 4G சேவைக்கு மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும்..

விரைவில் இந்தியாவில் மலிவு விலையில் 4G மொபைல் போன் விற்பனைக்கு வர இருப்பதாலும் 4G அலைக்கற்றைக்கு கூடுதல் போட்டி காணப்பட்டது.

5G அலைக்கற்றைக்கான ஏலம் தற்போது இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விடப்பட்டுள்ள அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 2ஆண்டுகளுக்கு அலைக்கற்றையை மறுவிற்பனை செய்ய முடியாது.

இருபது ஆண்டுகளில்  4 புதிய அரசுகள் வரலாம். ஆனாலும் மற்றவர்களுக்கு வேலை வைக்காமல் இந்த அரசே அலைக்கற்றையை விற்பனை செய்து முடித்து விடும்.

அலைக்கற்றை பெறுவதற்கு நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்வதால் பெட்ரோல் டீசல் விலையைப் போல் தொலைத்தொடர்பு கட்டணங்களும் கூடுதலாக வாய்ப்புள்ளது.

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும் என்று கடந்த அக்டோபர் 2019ல் அரசு வெளியிட்ட அறிவிப்பு AIIMS மருத்துவமனை அறிவிப்புக்கள் போலவே அப்படியே உள்ளது. தனியாருக்கு அலைக்கற்றை முதல் அனைத்தையும் ஒதுக்கும் அரசு BSNL நிறுவனத்தை ஒதுக்கியே வைத்துள்ளது ஏற்புடையதல்ல.