Wednesday 31 March 2021

 வரவு எட்டணா... 

வரி பத்தணா...

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் தங்களது நான்காவது EX GRATIA பட்டுவாடா எப்போது நடக்கும் என்று ஏங்கியிருந்தார்கள். ஆனால் அது நடந்தவுடன் ஏன் நடந்தது என்று மனக்கவலையில் இருக்கின்றார்கள். காரணம் வருமான வரி. பெரும்பகுதி தோழர்களுக்கு 30 சத வருமான வரி பிடித்தம் நடந்துள்ளது. பல தோழர்கள் லட்சத்திற்கும் அதிகமாக வருமான வரி செலுத்தியுள்ளார்கள்.

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு அவர்களது சம்பளத்தை விட 25 சதம் கூடுதலாக EX GRATIA கொடுக்கப்பட்டது. தற்போது கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி என்ற கதையாய் 25 சதத்துடன் 5 சதம் கூடுதலாக சேர்த்து 30 சதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டு நிறைவுற்ற நிலையில் தோழர்கள் வருமான வரித்தாக்கல் செய்யும்போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

சென்ற நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய வருமானவரியில் 90 சதம் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் மிச்சமுள்ள வரியை உடனடியாகக் கட்ட வேண்டிய அவசியமில்லை. ஜூலை மாதம் வருமான வரித்தாக்கல் செய்யும்போது கட்டிக்கொள்ளலாம். 90 சதத்திற்கும் குறைவாக கட்டியிருந்தால் ஒரு சத வட்டி அபராதமாக கட்ட நேரிடும்.

வருமான வரியை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையிலும் செலுத்தலாம். பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் புதிய முறையைத் தேர்வு செய்யலாம். இதனால் அதிக பட்சம் 62 ஆயிரம் வரை சேமிக்கலாம். ஆனால் புதிய முறையில் எந்தவிதமான சலுகைகளும், கழிவுகளும் கிடையாது. எனவே தோழர்கள் கவனமாக எந்த முறை தங்களுக்கு சாதகம் என்று புரிந்து கொண்டு அந்த முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ரூ.12,25,000/= வரை மொத்த வருமானமும் 1,50,000 சேமிப்பும் செய்தவர்கள்  பழைய முறையைத் தேர்வு செய்யலாம்.

ரூ.12,25,000/=க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் சேமிப்பு ஒன்றரை லட்சம் செய்திருந்தாலும் கூட பழைய முறையில் கூடுதல் வரி விதிக்கப்படும். எனவே அவர்கள் புதிய முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

எந்தவித சேமிப்பும் செய்யாதவர்கள் 6 லட்சம் வரையிலும் பழைய முறையையும், 6 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் புதிய முறையையும் தேர்வு செய்ய வேண்டும்.

வீட்டுக்கடனுக்கு வட்டி செலுத்துபவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் பழைய முறையைத் தேர்வு செய்வது பலனளிக்கும். எனவே தோழர்கள் ஜூலை மாதம் வருமான வரித்தாக்கல் செய்யும்போது ஆலோசனை செய்து வரித்தாக்கல் செய்ய வேண்டும்.

விருப்ப ஓய்வில் சென்று SAMPANN மூலம் ஓய்வூதியம் பெறும் தோழர்களுக்கு CCA அலுவலகம் FORM 16 படிவத்தை வழங்கும். கடந்த ஆண்டு ஓய்வூதியம், EX GRATIA  மற்றும் வங்கிகளில் போடப்பட்ட வைப்புத் தொகைக்கான வட்டி ஆகியவை மொத்த வருமானத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

60 வயது  மற்றும் 80 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கு வரிப்பிடித்தத்தில் சலுகை உண்டு. விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் பலருக்கு 60 வயது ஆகாவிட்டாலும் கூட அரசின் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்று ஓய்வூதியம் பெறுவதால் அவர்களையும் மூத்த குடிமக்கள் பிரிவில் சேர்ப்பதற்கு சங்கங்கள் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

வரி என்பது இந்த தேசத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

இந்தியாவின் தேசிய விலங்கு வரிக்குதிரை என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உழுதவன் கணக்குப் பார்த்தல் ஒன்றும் மிஞ்சாது என்பது பழமொழி....

விருப்ப ஓய்வில் சென்றவர்கள் கணக்குப் பார்த்தாலும் ஒன்றும் மிஞ்சாது என்பது அனுபவ மொழி.

No comments:

Post a Comment