Wednesday, 30 August 2017

தொடரட்டும்… தொழிலாளர் பணி…
தோழர்.அசோகராஜன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் காட்சி 
31/08/2017 பணிநிறைவு பெறும்
NFTE முன்னாள் மாநிலப்பொருளர்
NFTCL அகில இந்தியத்துணைத்தலைவர்..
புதுவை மண்ணின் முத்து
லைன்ஸ்டாப் சங்கத்தின் வித்து
செங்கொடி இயக்கத்தின் சொத்து
அருமைத்தோழர்...
K.அசோகராஜன்
 அவர்களின்...
இலாக்காப்பணி நிறைவுறட்டும்
இயக்கப்பணி என்றும் தொடரட்டும்...

அன்புடன் வாழ்த்தும்
NFTE – NFTCL
காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்
வாழ்த்து சொல்லிட... 9486106797
இரவு நேர இலவச அழைப்பு

BSNL வாடிக்கையாளர்களுக்கும்…
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது போல…
BSNLலில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்.. 
GROUP ‘B’ அதிகாரிகளுக்கும்...
இரவு நேர இலவச அழைப்பு வசதி 
அவர்களின் இல்லங்களில் உள்ள
 தொலைபேசிகளில் வழங்கப்படும் 
என CORPORATE அலுவலகம் 
29/08/2017 அன்று உத்திரவிட்டுள்ளது. 

மிக நீண்ட நாட்களாக எழுப்பப்பட்ட 
மேற்கண்ட கோரிக்கை அகில இந்திய JCMல்
 விவாதிக்கப்பட்டு முடிவுகள் 
மேற்கொள்ளப்பட்டு தற்போது  
உத்திரவிடப்பட்டுள்ளது. 
JCM ஊழியர் தரப்பிற்கு நமது நன்றிகள்..
வாழ்த்துக்கள்

இன்று 31/08/2017
காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும்

அருமைத்தோழியர்
S.அவயாம்பாள் OS

அன்புத்தோழர்கள்
V.விஜயநாதன் JAO
R.பாண்டி AO
M.முருகன் TT/PMK
ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்கிட
அன்போடு வாழ்த்துகின்றோம்

Tuesday, 29 August 2017

சமூக பாதுகாப்புத்திட்டம்
BSNL BENEVOLENT FUND

சமீபகாலமாக நமது துறையில் அகால மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 1500 ஊழியர்களும்,
 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் மரணத்தை தழுவுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அகால மரணங்களால் துன்பப்படும் குடும்பங்களுக்குத் தற்போதுள்ள ஆயுள் காப்பீட்டுத்திட்டத்தால்  முழுமையான நிவாரணம் அளிக்க இயலவில்லை. 
ஊழியர்களுக்கு ஒரு லட்சமும், அதிகாரிகளுக்கு 3லட்சம்/5லட்சம் ஆயுள் காப்பீடாக வழங்கப்படுகின்றது. இன்றைய பணமதிப்பில் ஒரு லட்சம் என்பது மிகக்குறைந்த தொகையாகும். 

எனவே BSNL அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் முழுக்க முழுக்க அவர்களது பங்களிப்பில் நமக்கு நாமே என்ற சுய நிதி ஆதார அடிப்படையில் BENEVOLENT FUND - உருவாக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே சங்கங்களிடம் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டிருந்தது.  தற்போது அதற்கான ஒரு முன்வரைவை நிர்வாகம் வெளியிட்டு ஊழியர்களிடமும், சங்கங்களிடமும் 04/09/2017க்குள் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தைப் பற்றி நாம் சிந்திக்கும் முன்பாக…
தற்போது LIC மூலமாக நடைமுறையில் உள்ள GSLIS என்னும்
ஆயுள் காப்பீட்டுத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களுக்கான ஒரு லட்சம் என்பது 5 லட்சமாகவும்.
அதிகாரிகளுக்கு 6லட்சம்/10 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும்.

மேலும் இந்த திட்டம் கருணை அடிப்படையிலான 
வேலைக்கு மாற்றா என்ற சந்தேகம் எழுகின்றது….
எனவே இந்த சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் வயது வரம்பின் அடிப்படையில் 4 பிரிவுகளாக
21 முதல் 40 வரை
40 முதல் 50 வரை
50 முதல் 55 வரை
55 முதல் 60 வரை என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவான 21 முதல் 40 வரை என்பதில் முழுக்க முழுக்க
BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

இவ்வாறு வயதை வைத்துப் பிரிப்பதற்குப் பதிலாக 
BSNL ஊழியர்கள்/DOT ஊழியர்கள் என பிரிக்கப்பட வேண்டும். ஏனெனில் DOT ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு. 
DCRG என்னும் பணிக்கொடை 20லட்சம் வரை உண்டு. 
ஆனால் BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 
குடும்ப ஓய்வூதியம் இல்லை. 
புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் 
அரசு ஓய்வூதியத்திற்கு இணையாக நிச்சயம் இருக்காது. 
மேலும் பணிக்கொடையின் அளவும் குறைந்த தொகையிலேயே உள்ளது. எனவே DOT ஊழியர்கள்/BSNL ஊழியர்கள் 
எனப்பிரிப்பதே சரியாக இருக்கும்.

55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு 7லட்சம் நலநிதியாகவும்…
21 முதல் 40 வரை உள்ள ஊழியர்களுக்கு 
14 லட்சம் நலநிதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

55 முதல் 60 வயது வரை உள்ள தோழர்களுக்குத்தான் 
குடும்ப பொறுப்புக்கள் கூடுதலாக இருக்கும்.
வயது முதிர்ந்த தாய்,தந்தையர்...
வயதுக்கு வந்த பெண்குழந்தைகள்...
வேலைவாய்ப்பு இல்லாத ஆண்பிள்ளைகள்...
இரத்த அழுத்தம், சர்க்கரை என நலிந்து போகும் தேகம்... 
அடிக்கடி உடல்நலம் கெடும் மனைவி...
ஊரைச்சுற்றிக் கடன்... 
என பலப்பல தொல்லைகள் துரத்தும் காலம் 55க்கு மேல்தான். 

தாமதத்திருமணம் LATE MARRIAGE செய்தவர்களுக்கு பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டிய காலமாகவும்...
அதன்பின் திருமணம் செய்து வைக்க வேண்டிய காலமாகவும் இருக்கும்.
எனவே 55 முதல் 60 வரையுள்ள ஊழியர்களுக்குத்தான கூடுதல் நலநிதி அளிக்கப்பட வேண்டும்.

மேலும் மாதந்தோறும் ரூ.500/600/700/800 
என்ற பங்களிப்பு கூடுதலான தொகையாகும். இந்த தொகையோ அல்லது ஒரு பகுதித்தொகையோ ஓய்வு பெறும்போது திருப்பிக்கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

ஊழியர்களுக்கு நல நிதி குறைந்த பட்சம் 7லட்சம் என்பதும்…
அதிகாரிகளுக்கு நலநிதி அதிகபட்சம் 40 லட்சம் என்பதும் ஏற்புடையதல்ல…

ஊழியர்களுக்கு 500 ரூபாய் பங்களிப்பாகவும்…
அதிகாரிகளுக்கு 1000 ரூபாய் பங்களிப்பாகவும் நிர்ணயம் செய்யலாம்…
ஊழியர்களுக்கு நலநிதி 30 லட்சம் எனவும்….
அதிகாரிகளுக்கு நலநிதி 40 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யலாம்…

இதில் பணிக்கொடை அளவைக் கழித்து விட்டு 
மீதமுள்ள பணைத்தை பட்டுவாடா செய்யலாம். 
உதாரணமாக மரணமுற்ற ஊழியர் குடும்பம்  
16 லட்சம் பணிக்கொடை பெற்றால் 
மீதமுள்ள 14 லட்சம் நலநிதியாக வழங்கலாம்.

நலநிதி திட்டம் என்பது 
நல்லதொரு நமக்கு நாமே திட்டம்
இந்த திட்டம்  ஊழியர்களால் 
முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் சங்கங்களால் விவாதிக்கப்பட்டு
முழுமைப் படுத்தப்பட வேண்டும். 

ஒருவார கால அவகாசம் அளித்து விட்டு 
கருத்துக் கேட்பது அவசரக்கோலமாகவே முடியும்.

எண்ணித்துணிக கருமம் 
என்பது வள்ளுவன் வாக்கு….

Sunday, 27 August 2017

 NFTE
மத்திய செயற்குழு

அக்டோபர் 12 & 13 - 2017
விஜயவாடா – ஆந்திர மாநிலம்

தலைமை
தோழர்.இஸ்லாம் அகமது
NFTE அகில இந்தியத்தலைவர்

ஆய்படு பொருள்


  • அமைப்பு நிலை
  • ஊழியர் பிரச்சினைகள்
  • 3வது ஊதிய மாற்றம்
  • போனஸ்
  • JCM கூட்டங்கள்
  • இயக்கத்தை வலுப்படுத்துதல்
  • நவம்பர் 2017 - அனைத்து சங்கப் போராட்டம்
  • பஞ்சாப் அகில இந்திய மாநாடு...
  • இதர பிரச்சினைகள் தலைவர் அனுமதியுடன்…

Friday, 25 August 2017

தீர்ந்தது... திறனுக்கேற்ற கூலி பிரச்சினை

ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற 
கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற நமது 
NFTCL சங்கத்தின்  கோரிக்கை தமிழகத்தைப்போலவே
 சென்னைத் தொலைபேசியிலும் அமுலுக்கு வந்துள்ளது. 

24/08/2017 அன்று சென்னைத் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இதற்கான 19/08/2017 தேதியிட்ட உத்திரவை சென்னைத் தொலைபேசி நிர்வாகம் DY.CLC அவர்களிடம் சமர்ப்பித்தது. 

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்திரவையொட்டியே சென்னைத்தொலைபேசியிலும் தொழிலாளர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிர்வாகத்தரப்பில் அனைத்துக் கோட்டங்களிலும் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஊழியர்களின் பணித்தன்மை கண்டறியப்பட்டு உத்திரவு  அமுல்படுத்தப்படும்.

சென்னைத்தொலைபேசி மாநில நிர்வாகத்திற்கும்...
மாநில நிர்வாகத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட 
திருமதி.ஹேமமாலினி DGM, 
திருமதி.சங்கரி, AGM ஆகியோருக்கும்...
நீண்ட நாள் பிரச்சினையைத் தீர்த்து வைத்த
 DY.CLC திரு.சீனுவாஸ் அவர்களுக்கும்... 
நமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக. 

தொழிலாளர் ஆணையரிடம் இப்பிரச்சினையை எழுப்பித் தீர்வு கண்ட
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களுக்கும்...
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் அவர்களுக்கும்...
NFTCL மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது வாழ்த்துக்கள். 
திறனுக்கேற்ற கூலி கைக்கெட்டியுள்ளது. 
இனி வாய்க்கு எட்ட வேண்டும். 
சம்பந்தப்பட்ட மாவட்ட, கோட்டச்செயலர்கள்
தங்கள் பகுதிகளில் மேற்கண்ட உத்திரவை அமுல்படுத்திட 
கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.

Wednesday, 23 August 2017

ஒப்பந்த ஊழியர் சம்பளப்பட்டுவாடா

நிதி ஒதுக்கீடு செய்யப்படாத  காரணத்தால் இந்த மாதம் 
ஒப்பந்த ஊழியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் தமிழகம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படவில்லை. ஒரிரு இடங்களில் மட்டுமே பட்டுவாடா நடந்துள்ளதாகத் தெரிகின்றது. 
சில ஒப்பந்தக்காரர்கள்  ஜூன் மாத சம்பளத்தைக் கூட இன்னும் பட்டுவாடா செய்யவில்லை. மல்லி செக்யூரிட்டி என்னும் ஒப்பந்தகாரர் ஜூன் மாதம் வெறும் 3000 ரூபாய் மட்டுமே பட்டுவாடா செய்தார். 

BSNL நிறுவனத்தில் தங்களது பில்கள் முறையாகப் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்பது அவர்களின் வருத்தமாகும். 
சில ஒப்பந்தகாரர்களுக்கு கோடிக்கணக்கில் பில்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். எனவே இந்த மாதம் எல்லா ஒப்பந்தகாரர்களும் ஒன்று சேர்ந்து BSNL பில்களை பட்டுவாடா செய்யாதவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப்பட்டுவாடா செய்வதில்லை என்ற நிலையை எடுத்துள்ளதாக தெரிகின்றது. 

இந்நிலையில் டெல்லியில் இருந்து நிதி ஒதுக்கீடு வந்துள்ளதாகவும்... இன்று 24/08/2017 நிலுவையில் உள்ள பில்கள் பட்டுவாடா செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை 25/08/2017 விடுமுறை தினம்… நாளை மறுநாள் நான்காம் சனிக்கிழமை வங்கி விடுமுறை. எனவே இன்று ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் பட்டுவாடா செய்யப்பட்டாலும் கூட திங்கள்கிழமை அன்றுதான் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ONLINE என்னும் நேரடிப் பட்டுவாடா நடைமுறையில் உள்ள இக்காலத்தில் ஒப்பந்தகாரர்கள் முயன்றால் 
இன்றே சம்பளம் பட்டுவாடா செய்யலாம்.

தோழர்களே…

ஒப்பந்த ஊழியர்களான அடிமட்ட ஊழியர்கள் தொடர்ந்து மாதாமாதம் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவது மிகவும் கொடுமையாகும். 
மாதம் முழுக்க வேலை செய்து விட்டு அடுத்த மாதம் முழுக்க சம்பளம் எப்போது வரும்? என்று ஏங்கி நிற்கும் நிலை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். உழைத்தவன் வியர்வை காயுமுன்னே கூலி கொடுக்கப்பட வேண்டும் என்பது அண்ணல் நபிகள் வாக்கு. உழைத்தவன் வியர்வையும் காய்ந்து விட்டது…. கூலியைக் கேட்டு அவனது தொண்டையும் காய்ந்து விட்டது. கூலி கிடைக்காமல் வயிறும் காய்ந்து விட்டது. இந்தக்கொடுமைகளைக் கண்டு 
நம் மனமும் காய்த்து விட்டது. அடிமட்டத் தொழிலாளிக்கு இழைக்கப்படும் இந்த அநீதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  

Saturday, 19 August 2017

தொடரட்டும்...அசோகராஜ்ஜியம்
தோழர்.அசோகராஜன் அவர்களுக்கு
 தோழர் முருகன் பொன்னாடை போர்த்தும் காட்சி 

புதுவை NFTE இயக்கத்தின் வித்து…
அகில இந்திய NFTCL இயக்கத்தின் சொத்து…

பணியில் இவனொரு கம்பித்துணைவன்…
பழக்கத்தில் மாறாத அன்புத்துணைவன்…
எங்கும்… எதிலும்… எண்ணித்துணிவான்….
NFTE காத்திட எதற்கும் துணிவான்…

இவன்…
தோழமைக்குத் தோள் கொடுக்கும் துணைவன்…
கொள்கையில்… கோட்பாட்டில் மாறாத தலைவன்…

இவன்…
மதி நிறைந்தவன்… மனம் நிறைந்தவன்…
மதியின் மனம் நிறைந்தவன்….
மதியோடு வாழ்க… 
மக்கள் மனம் நிறைந்து வாழ்க….

அடிமட்ட ஊழியரின் வாழ்வு மலர….
அசோகராஜ்ஜியம் மேலும் விரிந்து பரவட்டும்…

அன்புடன் வாழ்த்தும் ….
NFTE – NFTCL காரைக்குடி மாவட்ட சங்கங்கள்
--------------------------------------------------------------------------------------
பணி நிறைவு பாராட்டு விழா
22/08/2017 – செவ்வாய் – காலை 10 மணி
PMSSS அரங்கம் – புதுச்சேரி…

அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள்…
இயக்கத்தலைவர்கள்… 
முன்னணித்தோழர்கள் பங்கேற்பு…

தோழர்களே… வருக…
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 
வேலைநிறுத்தம்

160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது அஞ்சல்துறை. 
6 தலைமுறை ஊழியர்களைக் கண்டது நமது அஞ்சல்துறை. 
ஆனால் அஞ்சலில் இன்றும் அன்றாடக்கூலிகளாக 
தொழிலாளர்கள் தொடர்ந்து துன்புற்று வருகின்றனர். 
இந்திய தேசம் முழுவதும் ஏறத்தாழ 
1லட்சத்து 30 ஆயிரம் கிளை அஞ்சலங்கள் உள்ளன. 
நாட்டின் மக்கள்தொகையில் 80 சதத்திற்கும் அதிகமானோர் 
கிராமப்புற அஞ்சல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். 
தற்போது 2 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற ஊழியர்கள் 
GDS என்னும்  அடைமொழியோடு பணிபுரிந்து வருகின்றனர். 
இவர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கூடப் 
பணியில்லை என்பது கொடுமையிலும் கொடுமை
இவர்களுக்கு உரிய ஓய்வூதியம் இல்லை. 
நியாயமான பணிக்கொடை இல்லை. 
பணியும் நிரந்தரமில்லை... 

இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக...
நவம்பர் 2015ல் ஓய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் 
திரு. கமலேஷ் சந்திரா அவர்களின் 
தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது...
மேற்கண்ட குழுவின் அறிக்கையை  
உடனடியாக வெளியிடக்கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் ஏப்ரல் 2016ல் வேலை நிறுத்தம் செய்தது. 
உடனடியாக குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும்...
குழுவின் பரிந்துரைகள் சாதகமாக அமுல்படுத்தப்படும் எனவும் 
அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  
ஆனாலும் அந்தக்குழு தனது அறிக்கையை ஓராண்டு இடைவெளியில் நவம்பர் 2016ல்தான் சமர்ப்பித்தது. 
ஏறத்தாழ 10 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் குழுவின் பரிந்துரைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. 
அஞ்சல் நிர்வாகமும் அரசும் மோசமான நிலையையே எடுத்தது. 
உதாரணமாக பணிக்கொடையின் அளவை...
5 லட்சம் என குழு பரிந்துரை செய்திருந்தது..
ஆனால் நிர்வாகமும் அரசும் 1.5 லட்சமே தர முடியும் என கையை விரித்தன. எனவே வேறு வழியின்றி...
தோழர்.மகாதேவய்யா அவர்களின் தலைமையிலான 
AIGDSU – ALL INDIA GRAMEEN DAK SEVAKS UNION
சங்கம் தனது போராட்டத்தை துவக்கியுள்ளது. 

20/07/2017 அன்று நாடு முழுக்க 
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. 
ஆனால் நிர்வாகத்திடமும்... அரசிடமும்..எந்த அசைவுமில்லை. 
எனவே 16/08/2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் 
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏறத்தாழ 75 சதம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய 
NFPE சங்கம் இவர்களின் வேலைநிறுத்தத்தை
முறியடிக்க முயற்சிக்கின்றது. 
காரணம் தோழர்.மகாதேவய்யா 
இவர்களின் அணியில் இல்லை என்பதுதான்... 
எனவே தங்கள் அணி சார்ந்து ஒரு தனித்த சங்கம் ஆரம்பித்து ஊழியர்களை தங்கள் பக்கம் வளைக்க ஆரம்பித்துள்ளது NFPE சங்கம். 
நாடு முழுவதும் அஞ்சலக வாயில்களில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் மேற்கொண்டு முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். 
ஆனால் அஞ்சல் அலுவலகங்களுக்கு உள்ளே நிரந்தர ஊழியர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர். 
இத்தகைய காட்சியைக் காணும்போது 
நமது மனம் வேதனை கொள்கின்றது. 

இதனிடையே இலாக்கா அமைச்சருடன்
பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 
ஆயினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை...
எனவே போராட்டம் தொடர்கின்றது......
தன்னந்தனியாக தளராமல் போராடும் 
AIGDSU கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்திற்கு
நமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...
துரோகங்கள் என்றும் நிலைத்து நிற்காது…
போராட்டங்கள் என்றும் வீண்போகாது…
வாழ்க… கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம்…
 ================================================
கோரிக்கைகள்
மத்திய அரசே… தபால் இலாக்காவே….
  • கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலை வழங்கு...
  • கமலேஷ் சந்திரா குழு பரிந்துரைகளை அமுல்படுத்து…
  • டெல்லி மற்றும் சென்னை தீர்ப்பாய உத்திரவின்படி ஓய்வூதியம் வழங்கு…
  • இலக்குகளை TARGET நிறைவேற்றச்சொல்லி கொடுமை செய்யாதே…

Friday, 18 August 2017

இன்றைய உழைப்பு…
நாளைய தலைப்பு…
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி - திறனுக்கேற்ற கூலி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்ட நிகழ்வு ஒப்பந்த ஊழியர்களின் உரிமை மீட்பில் குறிப்பிடத்தக்க செயலாகும்.   NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்தது. BSNL நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------
இன்று 19/08/2017 – சனிக்கிழமை, 
சென்னை அண்ணாசாலை 
இணைப்பகத்திலே நடைபெறும் 
 தலைவர்களுக்கான பாராட்டு விழாவும்,
காலத்தால் அழியாத கல்வெட்டு திறப்பு விழாவும் 
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
மாவட்ட மாநாடு
நாகர்கோவில்
 மாவட்ட மாநாடு 
NFTE
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம்
நாகர்கோவில் மாவட்டம்
மாவட்ட மாநாடு
19/08/2017 – சனிக்கிழமை – நாகர்கோவில்.

நாகர்கோவில் மாவட்ட மாநாடு…
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்….

Thursday, 17 August 2017

வீரத்திருமகன்
ஆகஸ்ட்... 18
அருமைத்தலைவர் நேதாஜி
மறைக்கப்பட்ட நாள்
சுபாஷ் சந்திர போஸ்….
நீங்கள் இரத்தத்தைக் கொடுங்கள்…
நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகின்றேன்…
என்று முழங்கிய வீரத்திருமகன்…

ஆயுதம் ஏந்தாமல் விடுதலையை
அடைய முடியாது என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்…

எல்லாம் கிடைக்க வேண்டும்…
அல்லது ஒன்றுமே தேவையில்லை என முழங்கியவர்….
மகாகவி தாகூரால்...
நேதாஜி எனப் பட்டம் சூட்டப்பட்டவர்…

1938ம் ஆண்டு… நேதாஜி...
இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார்..
1939ல் இரண்டாம் முறையும் போட்டியிட்டார்…
நேதாஜியை விரும்பாத காந்திஜி...
அவருக்கு எதிராகப் போட்டியிட...
நேருவையும்... இராஜேந்திரபிரசாத்தையும்...வற்புறுத்தினார்...
ஆனால் அவர்கள் இருவரும்....
அவருக்கு எதிராகப் போட்டியிட மறுத்தனர்….
எனவே காந்தியடிகள் பட்டாபி சீத்தாராமையாவை
நேதாஜிக்கு எதிராக நிறுத்தினார்….
பட்டாபி சீத்தாராமையா தோல்வியுற்றார்….
பட்டாபியின் தோல்வியை தனது பெரும் இழப்பாக
கருதிய காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்….
இந்த நாடகங்களைக் கண்டு மனம் வெறுத்த
நேதாஜி காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறினார்…

1940ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார்…
1941ம் ஆண்டு சிறையிலிருந்து தப்பித்தார்…
ஆப்கானிஸ்தான் சென்றார்…..
அங்கிருந்து ரஷ்யா சென்றார்…
அங்கிருந்து ஜெர்மன் சென்றார்…
ஹிட்லரை சந்தித்தார்…
1941ல் சுதந்திர இந்திய மையம் தொடங்கினார்…
சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் தொடங்கினார்..
1943ல் சிங்கப்பூரில்….
இந்திய தேசிய சுதந்திரக் கொடியை ஏற்றினார்…
சுதந்திர இந்தியா என்று பிரகடனம் செய்தார்…

1944ல் இந்திய தேசிய இராணுவப்படைக்கு தலைமையேற்று
ஆங்கிலேயரைப் போர்க்களத்தில் சந்தித்தார்…
தோல்வி அடைந்த போதும் சோர்ந்து விடாமல் செயல்பட்டார்.
இந்தியாவை அடக்கி வைக்கும் ஆற்றல் எவருக்குமே இல்லை…
நமது தேசம் விடுதலை அடைந்தே தீரும்  என
1945 ஆகஸ்ட் 15 வானொலியில் வீர முழக்கம் செய்தார்….

அவரது தீர்க்க தரிசனம் மிகச்சரியாக நடந்தேறியது..
1947 ஆகஸ்ட் 15 நமது தேசம் விடுதலை அடைந்தது..
1945 ஆகஸ்ட் 18 விமானத்தில் பயணித்த போது…
பர்மோசா தீவுக்கருகே அவரது விமானம் விபத்துக்குள்ளாகி
நேதாஜி இறந்தார் என ஜப்பான் அரசு அறிவித்தது…
இன்று வரை அவரது மரணம் மர்மம் நிறைந்ததாகவே உள்ளது…
அவரது தியாகம் அளப்பரியது…. ஒப்பிட முடியாதது…
இரத்தம் சிந்தி இந்திய தேச விடுதலைக்குப் பாடுபட்ட
வீரத்திருமகன் நேதாஜியை என்றும் நினைவு கூர்வோம்…
வாழ்க. அவரது புகழ்…. வளர்க அவரது புகழ்…