Monday 14 August 2017

விதியோடு ஒரு ஒப்பந்தம்
nehru independence day speech க்கான பட முடிவு
TRYST WITH DESTINY

பல வருடங்களுக்கு முன்னர்
நாம் விதியைக் குறித்த நேரத்தில் சந்திப்பதாக
ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம்.
இதோஅந்த நேரம் வந்து விட்டது.
உலகம் உறங்கிக் கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
ஒரு தேசம் விழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நொடிப்பொழுது
வரலாற்றில் மிக அரிதானது….
ஒரு வரலாறு முடிவுக்கு வருகின்றது
ஒரு புதிய வரலாறு உருவாகின்றது….
ஒடுக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா
இன்று மௌனம் கலைக்கிறது.
நீண்ட போராட்டத்தின் முடிவில்
வரலாற்றின் உதயத்தின்போது..
இந்தியத் தாய் தன்னுடைய முடிவில்லாத
தேடலைத் தொடங்கி யிருக்கிறாள்...
இன்று நாம் கொண்டாடும் வெற்றிகள்
ஒரு படிக்கல்தான்
வாய்ப்புகளுக்கான ஒரு திறவுகோல்தான்
மிகப் பெரிய வெற்றிகளும் சாதனைகளும்
நமக்காகக் காத்திருக்கின்றன. ..
இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளவும்..
எதிர்காலம் நமக்கு அளிக்கவிருக்கும்
சவால்களைச் சந்திக்கவும்
நாம் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறோமா?
புத்திசாலிகளாக இருக்கிறோமா?
என்பதுதான் இப்போதைய கேள்வி….
இந்தியாவுக்கு சேவைசெய்வது என்பது
துயரத்தில் வாடும் கோடிக்கணக்கான
மக்களுக்கு சேவை செய்வதுதான்...
அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது
அறியாமை இருளை அகற்றுவது
நோயற்ற வாழ்வை அளிப்பது
ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது
அனைவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது

இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம்
இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த
தேசப்பிதாவை நோக்கித்தான் முதலில் செல்கிறது.
இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு
இலக்கணமாகத் திகழும் அவர்
சுதந்திர தீபத்தையேற்றிநம்மைச் சுற்றியிருந்த
அடிமை இருளைப் போக்கினார்
அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும்
அருகதையற்ற சீடர்களாக
அவர் போதித்த உண்மைகளிலிருந்து
நாம் விலகிச் சென்றோம். ..
ஆனால்நாம் மட்டும் அல்ல
இனி வரும் தலைமுறைகளும்
இந்தியாவின் அரும்புதல்வரான
அவருடைய போதனைகளைத்
தங்களுடைய இதயங்களிலே
பொறித்து வைத்துக் கொள்ளவேண்டும்
நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த
மிகப் பெரிய மகானின் லட்சியமே
ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும்
நீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அது நம்முடைய சக்திக்கு
அப்பாற்பட்ட தாக இருக்கலாம்
கண்ணீர் இருக்கும்வரை
துயரங்கள் தொடரும்வரை
நம்முடைய பணிகள் முற்றுப்பெறாது...
எனவே
கடினமாக உழைக்க வேண்டும்
பாடுபட வேண்டும்
நம்முடைய கனவுகள் நனவுகளாக வேண்டும்
அந்தக் கனவுகள் இந்தியாவுக்காக மட்டுமல்ல
அவை உலகத்துக்காகவும்கூட...
இந்த தேசத்தின் சேவைக்காக
நாம் நம்மை
மீண்டும் பிணைத்துக்கொள்வோம்..
இப் புனிதமான நேரத்தில்
இந்திய மக்களாகிய நாம்
மனித குலத்துக்குச் சேவை செய்ய
நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்….
நமக்காக மட்டுமல்லஉலகத்துக்காகவும்...
நாம் நம்மை அர்ப்பணிப்போம்
இந்த நாட்டின் மிகப்பெரும்..
நல்ல உள்ளங்களின்  நோக்கம்..
எல்லா மக்களின் கண்ணீரை துடைப்பதே ஆகும்
அது நடக்கும் வரை நம் பணி ஓயாது !
ஜெய் ஹிந்த்!
==============================================
நமது தேசம் 14.08.1947 அன்று
நள்ளிரவில் சுதந்திரம் அடைந்த போது
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்
விதியோடு ஒரு ஒப்பந்தம்
TRYST WITH DESTINY என்ற தலைப்பில்
ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது
இதோநாடு விடுதலை அடைந்து
71 ஆண்டுகள் ஆகிவிட்டன….
நேருவின் கனவுகள்
கனவுகளாகவே போய்விட்டன….
விழித்தெழுந்த ஒரு தேசம்….
இதோ மீண்டும் வீழ்ந்து விட்டது
வீழ்வேனென்று நினைத்தாயோ?
என பாரதி அன்று பாடினான்
இந்திய தேசமே
வீழ்ந்திடாதேவிழித்தெழு….
கண்ணீரைத்துடைத்திடு
கனவுகளைநனவுகளாக்கு
உன் ஆன்மாவின் மவுனம் கலைத்திடு


அனைவருக்கும் 
விடுதலைத் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment