எல்லாப் புகழும்... NFTEக்கே...
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று 31/05/2022
பணி நிறைவடைகிறது...
மனமும் நிறைவடைகிறது...
அருமைத்தலைவர் தோழர்
கடலூர் ஜெயராமன் அவர்கள் துவக்கி வைத்தார்
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக
தோழர்களின் அன்பு மழையும்....
வாழ்த்து மழையும்...
மாறி.. மாறி..
மாரி போல்.. மாரி மேல்
தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது...
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
என்றார் வள்ளுவர்...
அன்பிற்கும் அது வளர்க்கும் தோழமைக்கும்
ஈடு இணை இவ்வுலகில் இல்லை.
எல்லோருக்கும் நன்றி சொல்லும் நேரமிது...
சிந்தையில் நிறைந்த தந்தை தாய்க்கும்...
விந்தைகள் புரிந்த சங்கத்திற்கும் முதல் வணக்கம்...
தந்தையும் தாயுமாய் உடனிருந்து செதுக்கிய
அன்புத்தோழர் அய்யர் என்னும் வெங்கடேசன்...
முரட்டு அன்பால் என்னை நித்தமும் மூழ்கடித்த...
மூத்த சகோதரர் இராமநாதபுரம் சவுக்கத் அலி...
என் குறைகளையும் நிறைகளாகப் பார்த்து...
அளவு கடந்த அன்பு செலுத்திய
காரைக்குடி கருத்த முருகன்...
மூவரும் அமரராகி விட்டனர்...
ஆனாலும் நெஞ்சின் சோக அனல்
இன்றும் அணையவில்லை.
அவர்களுக்கு விழியோரம் கசிய வீர வணக்கம்...
தொழிலாளர் படும் துயரத்தை
தன் துயரமாகப் பார்க்க வேண்டும் என்ற
தொழிற்சங்க தாரக மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து
சங்கத்தில் மாவட்டச்செயலராகப் பிடித்து வைத்த
அருமைத்தோழர் ஆர்.கே., அவர்களுக்கு வணக்கம்.
அருமைத்தோழர்கள்
குப்தா, ஜெகன், விச்சாரே, கோலி,
சந்தேஷ்வர் சிங், இஸ்லாம் அகமது,
ஜெயபால், ரகு
முத்தியாலு, மாலி, ஆர்.வி., பட்டாபி,
சேது, ஜெயராமன்,
காமராஜ், நடராஜன், முரளி
என்று மாபெரும் தலைவர்களைக்
கொண்டது... கண்டது நமது இயக்கம்...
அகில இந்தியத் தலைவர்கள் முதல்...
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் முருகன் வரை...
அனைத்து சங்கப் பொறுப்பாளர்களுக்கும்
அன்பு வணக்கங்கள்...
ஓய்வு பெற்றாலும் ஓயமாட்டோம் என்று
தொடர்ந்து சங்கப்பணி செய்து வரும்
ஓய்வூதிய சங்கத்தலைவர்கள் தோழர்கள்
முருகன், நாகேஸ்வரன்,பூபதி வழிநடத்தும்
ஓய்வூதியர் சங்கத்தலைவர்களுக்கும்...
உள்ளன்போடு நேசித்து வரும்
ஓய்வூதியர் சங்கத்தோழர்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
உணவிட்டு... உணர்விட்டு எங்களை
தோழமையோடு வளர்த்த
அன்புத் தோழர் கணபதிராமனுக்கு வணக்கம்..
என் உடன் பயிற்சி எடுத்து...
சோகத்திலும்...சுகத்திலும்
தொடர்ந்து பங்கெடுத்த அன்புத்தோழர்கள்
அலமேலு,புவனேஸ்வரி, இராஜேஸ்வரி,தேன்மொழி,
சொக்கலிங்கம், முனியாண்டி,நாகராஜன்,
ஆகியோருக்கும் அன்பு வணக்கங்கள்...
அன்பு இளவல்களாக
என்னோடு என்றும் பயணிக்கும்
சுப்பிரமணி,லால்,ஜெயராமன்,ஆரோக்கியம், ஜேம்ஸ்,
காதர்பாட்சா, சுபேதார்,தமிழ்மாறன்,கார்த்திகா
மற்றும் அனைத்து தோழர்களுக்கும்
அன்பு வணக்கங்கள்...
1983ல் மணிக்கு 2 ரூபாய் 75 பைசா கூலி
என்ற கணக்கில் அன்றாடக்கூலியாய்
வருமானம் கொடுத்து வயிற்றுக்கு சோறிட்ட
தொலைத்தொடர்பு இலாக்கா...
இன்று மாதம் இருபதாயிரம் ரூபாய்
வருமான வரி கட்டும் அளவிற்கு...
பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு வணக்கம்...
தோழர்களே...
விடை பெறும் நேரமிது...
நாம் சாதியில் பின்தங்கி இருக்கலாம்...
பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கலாம்...
ஆனால் ஒருபோதும்...
அறிவிலும், திறமையிலும் பின்தங்கக்கூடாது...
என்று தந்தையார் அடிக்கடி கூறுவார்...
அறிவிலும், திறமையிலும்
எந்த அளவு என்பதை
அடுத்தவர்தான் கூற வேண்டும்..
ஆனால்...
கூடுதலாக என் வாழ்வில்
நான் ஏற்றுக்கொண்டது...
அறிவு.... திறமை...
அதோடு நேர்மை...
வாழ்நாள் முழுவதும்
நேர்மையாக இருக்கப் போராடியுள்ளேன்...
1983ல் காரைக்குடியில்...
தாயார் யாரிடமோ கடனாக வாங்கித் தந்த
100 ரூபாயுடன் பணியில் அமர்ந்தேன்...
இன்று 2022 மே மாதக்கடைசி
மதுரையில்...
என் வங்கி இருப்பைப் பார்த்தேன்.
105 ரூபாய் 68 பைசா என்று காட்டியது.
நேர்மையாக வாழ்ந்திருக்கின்றோம்
என்பதை 105.68 காட்டியது...
அந்த மனநிறைவோடு விடை பெறுகிறேன்...
அன்புடன்
வெ. மாரி
No comments:
Post a Comment