Sunday, 29 May 2022

 பணி நிறைவு என்னும்

விடுதலை... 

தோழர்களே...

நாளை 31/05/2022 செவ்வாய்க்கிழமை...

மத்திய அரசின் பொதுத்துறைப் பணியில் இருந்து

பணி நிறைவு என்னும் விடுதலை தரப்படுகின்றது.

மனம்  அவ்வாறுதான் உணர்கிறது.


தொடக்கம் என்று ஒன்றிருந்தால்

முடிவு என்று ஒன்றிருக்கும்.

எனவே பணி நிறைவு என்பது

ஒரு  தொடங்கப்பட்ட

அத்தியாயத்தின் முடிவே. 


24/11/1983 அன்று...

NFPTE சம்மேளன தினத்தன்று

குறுநேரப்பணி எழுத்தர் என்னும்

அன்றாடக்கூலியாய்

காரைக்குடி தொலைபேசிக் கோட்ட

வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில்

தபால் தந்தி இலாக்கா பணி செய்ய வாய்ப்பளித்தது. 

1984ம் ஆண்டு...

மேல் படிப்பிற்காக சோவியத் ரஷ்யா

செல்லும் வாய்ப்பு வந்தது.

இராமநாதபுரம் பகுதியின் மாபெரும்

பொதுவுடைமை இயக்கத்தலைவர்

தோழர். மங்களசாமி அவர்கள்

நேரில் வந்து அழைத்துப் பேசினார்.

உனது குடும்ப நிலை

நன்றாகவே எனக்குத் தெரியும்.

தந்தையை இழந்த நிலையில்...

தபால் தந்தி இலாக்கா

வாழ்வதற்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

அது அன்றாடக்கூலியாக இருக்கலாம்.

ஆனாலும் உனது குடும்பத்திற்கு

உன்னால் உணவளிக்க முடிகிறது.

சோவியத் ரஷ்யா சென்று படித்துத் திரும்பினால்

உன்னுடைய உணவிற்கே நீ திண்டாட வேண்டும்.

தபால் தந்தி இலாக்காவில்

நமது சங்கம் வலுவாக உள்ளது.

அங்கே ஜெகன் என்னும் நமது தோழர் இருக்கின்றார்.

நிச்சயம் சங்கம் உன் போன்றவர்களைக் கைவிடாது.

எனவே சோவியத் ரஷ்யா செல்லும் முடிவைக் கைவிடு

என்று அன்போடும் அழுத்தமோடும் கூறினார்.

 

மூத்தோர் சொல் கேட்பது என்பது

உதிரத்தில் ஊறிய பண்பு என்பதால்

அவரது அறிவுரையை ஏற்று

தபால் தந்தியில் பயணம் தொடர்ந்தது. 

இரண்டரை ஆண்டுகாலம் ஆனபின்பு

01/05/1986...

மாபெரும் மேதின நூற்றாண்டு தினத்தில்...

அன்றாடக்கூலிகளாக அனுதினமும்...

அல்லல்பட்டுக்கொண்டிருந்த தோழர்கள்

மத்திய அரசின் நிரந்தர ஊழியர்களானோம்.

சங்கம் சாதித்தது....

 

இராமநாதபுரம் கிளைப்பொருளராக...

காரைக்குடி கோட்ட அலுவலக செயலராக...

வெகுவிரைவில் கோட்டச் செயலராக...

சங்கத்தில் பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. 

தொழிலாளருக்காக உரிமையைக் கோரும்போது

அதிகாரிகள் சட்டம் என்றும் விதிகள் என்றும்

சட்டாம்பிள்ளைத்தனம் செய்தனர்.

சட்டமும், விதியும்

எல்லோருக்கும் பொதுவானது.

தொழிலாளரை அடக்க

அதை அதிகாரிகள் பயன்படுத்துகின்றார்கள்...

நமது முன்னோர்கள்

போராடிப் பெற்ற உரிமையை

தொழிலாளர்கள் அடைவதற்கு

அதே சட்டங்களை மேற்கோள் காட்டி

நாம் போராட வேண்டும் என்ற உண்மை புரிந்தது.

விதிப்புத்தகங்களை விலைக்கு வாங்கினோம்...

விதி யாரை விட்டது.... 


1994...

இளநிலை கணக்கு அதிகாரியாகத்

தேர்வில் வெற்றி கிட்டியது.

குஜராத், விருதுநகர், காரைக்குடி...

என்று தொடர்ந்த பயணம்

2022ல்...

மதுரையில் நிறைவு பெறுகின்றது.

 

அளவு கடந்த அன்பால்...

பணிநிறைவு பாராட்டு விழா நடத்திட

தோழர்கள் வலியுறுத்தி வந்தனர்.

மனம் உறுதியாக மறுதலிக்கிறது... 

சங்கப்பணத்தில்...

மாலை... மரியாதை என்பதை

உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை...


எனவே தோழர்கள்

அதீத அன்பால்...

அளவு கடந்த உரிமையால்...

வறண்டு போன வைகைக்கு சொந்தமான

மதுரைக்கு வந்து அல்லல் படவேண்டாம். 

பணிநிறைவு என்னும்

விடுதலை அடைந்த பின்பு

நாம் நேரில் சந்திப்போம்...

நிறையப் பேசுவோம்...

தொடர்ந்து செயல்படுவோம்... 

இடம் பெயர்ந்த வாழ்த்து எதற்கு?

நாமெல்லாம் இடதுசாரிகள்.... எனவே

இருக்கும் இடமிருந்தே வாழ்த்துங்கள்...

வலம் வந்து வாழ்த்த வேண்டாம்... 

எனவேதான் ஒருநாள் முன்னதாக

இந்த அன்பு வேண்டுகோள்...

 

அன்புடன்

வெ.மாரி

3 comments:

  1. Mari my best wishes healthy happy retirement life

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்...

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete